என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    அரக்கோணத்தில் நகை கடை உரிமையாளரை தாக்கி 14 பவுன் நகை, ரூ.50 ஆயிரத்தை கொள்ளையர்கள் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    அரக்கோணம்:

    அரக்கோணம் காந்தி ரோட்டில் நகை கடை நடத்தி வருபவர் பவுன்குமார் (வயது 46). இவர் நேற்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டி கொண்டு அருகில் உள்ள வீட்டிற்கு நடந்து. சென்று கொண்டிருந்தார். 

    அப்போது சாலையை கடப்பதற்காக நின்று கொண்டு இருந்தார். அவ்வழியாக ஹெல்மெட் அணிந்து பைக்கில் வந்த கொள்ளையர்கள் பவுன்குமாரை பைக்கில் இடித்து கீழே தள்ளினர்.

    இதில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது பவுன்குமார் கையில் இருந்த பையை பறித்து கொண்டு  மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். 

    கொள்ளையர்கள் பறித்து சென்ற பையில் 15 பவுன் தங்க நகை மற்றும் ரூ.50 ஆயிரம், கடையின் சாவி ஆகியவை  இருந்தது.

    இச்சம்பவம் குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து தப்பி ஓடிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
    அரக்கோணம் அருகே கார் மோதியதில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

    அரக்கோணம்:

    அரக்கோணம் காலிவாரி கண்டிகையை சேர்ந்தவர் வினோத் குமார் (வயது 28). கூலி வேலை செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த இவரது நணபர் சதீஷ்குமார் இருவரும் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் திருவள்ளூர் நோக்கி எஃகு நகர் அருகே சென்று கொண்டிருந்தனர். 

    அப்போது பின்னால் வந்த கார் இவர்கள் பைக்மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. கார் பலமாக மோதியதில் மோட்டார் சைக்கிளில் இருந்த தூக்கி வீசப்பட்டதில் வினோத்குமார் பலத்த காயமடைந்து பரிதாபமாக இறந்தார். 

    அரக்கோணம் டவுன் போலீசார் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். 

    இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி நிற்காமல் சென்ற கார் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராணிப்பேட்டையில் மயான கொள்ளை திருவிழா வெகு விமரிசையாக நடந்தது.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் மயான கொள்ளை திருவிழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    ராணிப்பேட்டை பாலாற்றில் வருடம்தோறும் மாசி மாதம் அமாவாசை அன்று நடைபெறும் மயானக் கொள்ளை திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

    விழாவையொட்டி பக்தர்கள் பாலாற்றில் இருந்து புனித நீர் எடுத்து வந்தனர். தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை காரை, அம்மன் கோயில் தெரு, பழைய அஞ்சலக வீதி, பிஞ்சி, முக்கியம்மன் கோவில் பகுதி உட்பட பல பகுதியில் அம்மன் கோயில்களில் இருந்து கொடி மரங்கள் பாலாற்றுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு பூஜை செய்து கொடியேற்றப்பட்டது. 

    இதையடுத்து நேற்று மாலை மயான கொள்ளை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட தேரில் அங்காளபரமேஸ்வரி அம்மன் ஊர்வலமாக புறப்பட்டு பாலாற்றங்கரை வந்தடைந்தது. பல இளைஞர்கள் காப்புக்கட்டி விரதம் இருந்து முதுகில் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். 

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாலாற்றில் கூடி அங்காள பரமேஸ்வரி அம்மனை வழிபட்டு தரிசனம் செய்தனர். 

    திருவிழாவையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் மேற்பார்வையில் டிஎஸ்பி பிரபு தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    பனப்பாக்கம் அருகே அரசுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு இடங்களை கலெக்டர் திடீரென ஆய்வு செய்தார்.
    நெமிலி:

    காவேரிப்பாக்கம் யூனியன் சிறுவளையம் பஞ்சாயதத்துக்கு உட்பட்ட லட்சுமிபுரம் பகுதியில் உள்ள நிலத்தின் வழியாக செல்லும் பாட்டை புறம்போக்கு மற்றும் ஏரி, கால்வாய் புறம்போக்கு நிலங்களை அதே பகுதியை சேர்ந்த சிலர் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக தலைமை செயலாளர் இறையன்புக்கு புகார் சென்றுள்ளது.

    இதனையடுத்து புகாரின் உண்மைத் தன்மையை ஆராய ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேற்று லட்சுமிபுரம் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அரசுக்கு சொந்தமான நிலங்களை தனிநபர் யாராவது ஆக்கிரமிப்பு செய்துள்ளார்களா? என்று வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். 

    அப்போது சர்வேயரை கொண்டு அளவீடு செய்து உடனடியாக தனக்கு அறிக்கை அளிக்குமாறு வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    அப்போது டிஆர்ஓ முகம்மது அஸ்லம், நெமிலி தாசில்தார் ரவி, மண்டல துணை தாசில்தார் மகாலட்சுமி, வருவாய் ஆய்வாளர் மருதாச்சலம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
    ராணிப்பேட்டை மாவட்டத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு 392 குடியிருப்புகளுக்கு நிலம் கையகப்படுத்த கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த திருமலைச்சேரி, சோளிங்கர் தாலுக்கா பாணாவரம் ஆகிய இடங்களில் இலங்கை தமிழர் குடியிருப்புகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை புனரமைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. 

    கூட்டத்திற்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி பேசியதாவது: வாலாஜா தாலுக்கா திருமலைச்சேரி ஊராட்சியில் 292 குடும்பங்களும், சோளிங்கர் தாலுகா பாணாவரம் ஊராட்சியில் 90 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ஏற்கனவே வழங்கப்பட்ட மின் இணைப்பு கம்பிகள் பல இடங்களில் பழுதடைந்துள்ளது. அனைத்துக் குடியிருப்புகளிலும் கழிப்பறை கட்டமைப்புகள் பழுதடைந்துள்ளதையும் சீர் செய்திட நிதி வரப்பெற்றுள்ளது. 

    இப்பணிகளை மேற்கொள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் பொதுப்பணித்துறை இணைந்து தேவைப்படும் திட்ட அறிக்கையை தயார் செய்து பணிகளை முடிக்க வேண்டும். பாணாவரம் குடியிருப்பில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்க தேவைப்படும் நிதியை முறையாக பயன்படுத்தி பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். 

    தமிழக முதல்வர் அறிவித்த புதிய குடியிருப்புகள் திட்டத்தில் 392 வீடுகள் ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றுள்ளது.அதற்கான நிலம் எடுப்பு பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசினார். 

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முஹம்மத் அஸ்லம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், புலம்பெயர்ந்த இலங்கை வாழ் தமிழர் மறுவாழ்வு துறை தாசில்தார் பாக்கியநாதன், பொதுப்பணித்துறை உதவி செயற் பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    நெமிலி அருகே பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    நெமிலி:

    காஞ்சிபுரம் மாவட்டம் தாமல் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மகன் ரவிச்சந்திரன் (32). தனியார் பஸ் டிரைவராக ஆற்காட்டில் வேலை செய்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று பிற்பகல் 2 மணிக்கு ஆற்காடு பஸ்ஸ்டாண்டில் இருந்து 55 பயணிகளை ஏற்றிக்கொண்டு காஞ்சிபுரம் நோக்கி பஸசை ஓட்டி சென்றார்.

    காவேரிப்பாக்கம் அருகே பஸ் வந்தபோது பஸ்ஸின் முன்னால் அவளுர் கிராமத்தை சேர்ந்த சந்தானம் என்பவரின் மகன் கோபி (19). பைக்கில் சென்றார். 

    அப்போது ரவிச்சந்திரன் ஹாரன் அடித்துள்ளார். அதில் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இந்நிலையில் அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி உள்ளனர்.

    மேலும் பஸ் பெரும்புலிப்பாக்கம் அருகே சென்றபோது கோபி பஸ்ஸை மடக்கி மறைத்து வைத்திருந்த காலி மதுபாட்டில்களை எடுத்து பஸ் கண்ணாடி மீது எறிந்துள்ளார். 

    இதில் பஸ் கண்ணாடி சுக்கு நூறாக உடைந்து உள்ளே இருந்த கண்டக்டர் மற்றும் பயணிகள் காயமடைந்தனர்.இதுகுறித்து ரவிச்சந்திரன் அவளூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். 

    சப் இன்ஸ்பெக்டர் சேகர், சீனிவாசன் உள்ளிட்ட போலீசார் வழக்கு பதிவு செய்து கோபியை கைது செய்தனர்.
    ராணிப்பேட்டை நகராட்சியில் பதவி ஏற்காமல் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 4 பேர் புறக்கணித்தனர்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் மேல்விஷாரம், ஆற்காடு, ராணிப்பேட்டை,வாலாஜாப் பேட்டை, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய 6 நகராட்சிகளுக்கும் தக்கோலம், நெமிலி, பனப்பாக்கம், காவேரிப் பாக்கம், அம்மூர்,கலவை, திமிரி,விளாப்பாக்கம் ஆகிய 8 பேரூராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ம் தேதி நடந்தது. 

    இதில் பதிவான வாக்குகள் கடந்த 22-ம் தேதி எண்ணப்பட்டது. இதில் வெற்றிபெற்ற கவுன்சிலர்கள் இன்று அந்தந்த நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் பதிவு ஏற்பு விழா நடைபெற்றது. 

    அதன்படி அரக்கோணம் நகராட்சியில்-36 கவுன்சிலர்கள், சோளிங்கர் நகராட்சியில் -27 கவுன்சிலர்கள், வாலாஜாப்பேட்டை நகராட்சியில்-24 கவுன்சிலர்கள், ராணிப் பேட்டை நகராட்சியில் -30 கவுன்சிலர்கள், ஆற்காடு நகராட்சியில் - 30 கவுன்சிலர்கள், மேல்விஷாரம் நகராட்சியில் - 21 கவுன்சிலர்கள் என மொத்தம் 168 கவுன்சிலர்களும், 8 பேரூராட்சிகளில் 120 கவுன்சிலர்கள் என மொத்தம் 288 கவுன்சிலர்கள் இன்று பதவி ஏற்றனர்.

    இந்நிலையில் ராணிப்பேட்டை நகராட்சியில் 30 வார்டுகளுகளில் வெற்றி பெற்ற திமுக 23, அதிமுக 4, விடுதலை சிறுத்தை 2, சுயேட்சை 1  கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழா இன்று ராணிப்பேட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. 

    இதில் முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி உருவ படம் மேடையில் வைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிமுக கவுன்சிலர்கள் 4 பேர் நாங்கள் மேடையில் ஏறமாட்டோம் கீழேயே பதவியேற்றுக் கொள்கிறோம் என்றனர். அதற்கு அனுமதி அளிக்காததால் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பதவியேற்காமல் புறக்கணித்து சென்றனர்.
     பின்னர் கமிஷ்னர் அறைக்கு சென்று பதவியேற்று கொண்டனர்.
    தி.மு.க பிரமுகர் வீட்டில் வருமான வரி சோதனை நடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு கண்ணமங்கலம் கூட்ரோடு பகுதியை சேர்ந்தவர் ஏ.வி.சாரதி. அ.தி.மு.க. வர்த்தகப் பிரிவு மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்த இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தி.மு.க.வில் இணைந்தார்.

    ஏ.வி.சாரதி சிமெண்ட் ஏஜென்சி உள்ளிட்ட பல்வேறு தொழில் செய்து வருகிறார். மேலும் ஆணைமல்லூர் கிராமத்தில் கல்குவாரி ஒன்றும் நடத்தி வருகிறார்.

    சமீபத்தில் இவர் தனது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடினார்.

    இந்த நிலையில் இன்று காலை 8 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆற்காடு, கண்ணமங்கலம் கூட்ரோட்டில் உள்ள ஏ.வி. சாரதியின் வீடு மற்றும் அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர்.

    10 பேர் கொண்ட குழுவினர் 3 பிரிவாக சோதனை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல அவருக்குச் சொந்தமான கல்குவாரியில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    சோதனை நடந்த போது வீட்டிற்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. பல்வேறு ஆவணங்களை வருமான வரிதுறை அதிகாரிகள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தி.மு.க பிரமுகர் வீட்டில் வருமான வரி சோதனை நடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதையும் படியுங்கள்... பெட்ரோல் விலையை உயர்த்தினால் காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தும்- ராகுல்காந்தி அறிவிப்பு

    ராணிப்பேட்டை மயான கொள்ளை விழாவில் அன்னதானம், இசைக் கச்சேரிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் கலெக்டர்ர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் மயானக்கொள்ளை திருவிழா பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. 

    இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் தீபா சத்யன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். 

    இதில், மயானக்கொள்ளை திருவிழாவில் ஏற்கெனவே எடுக்கப்பட்ட முடிவுகளின்படி பாதுகாப்பு மற்றும் இதர துறைகளின் பங்களிப்பு பணியை செய்து முடிக்க வேண்டும். விழா நாளில் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் அறிவுரை வழங்கினார். 

    திருப்பத்தூர் மாவட்டத்தில் நகரப் பகுதிகள் மற்றும் கிராமப் பகுதிகளில் நாளை மயான கொள்ளை நடக்கிறது. இந்த விழாவிற்கு போலீசார் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். பல்வேறு இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். 

    மயானக்கொள்ளை திருவிழாவில் கட்டுப் பாடுகளை கடைபிடிக்க வேண்டும். அத்துமீறலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    நெமிலி பா.ம.க. வேட்பாளர் கடத்தப்பட்டதாக உறவினர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த காவேரிபுரம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர் (52).இவர் நெமிலி நகர பாமக செயலாளராக கடந்த 15 வருடங்களாக இருந்து வருகிறார்.

    சமீபத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நெமிலி பேரூராட்சி 3 வது வார்டில் பாமக சார்பில் போட்டியிட்டு கவுன்சிலராக வெற்றி பெற்றார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பழநி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றதாக கூறப்படுகிறது. 

    இந்நிலையில் பாமக பிரமுகர்கள் தங்கள் கட்சியை சேர்ந்த சந்திரசேகரை சிலர் கடத்தி விட்டதாக அரக்கோணம் டிஎஸ்பி புகழேந்தி கணேஷிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்தனர். 

    இந்நிலையில் நெமிலி சப் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசார் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சந்திரசேகரை மீட்டுள்ளனர். 

    ஆனால் இதுவரை சந்திரசேகர் வீடு திரும்பவில்லை.இதனால் சந்திரசேகர் மனைவி செல்வி (42).தனது கணவரை போலீசார் மறைத்து வைத்துள்ளனர் என்று ராணிப்பேட்டை எஸ்பி அலுவலகம் மற்றும் அரக்கோணம் டிஎஸ்பி அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளார். 

    ஆனால் இதுவரை சந்திரசேகர் வீடு திரும்பாததால் அவரது மனைவி செல்வி மன உளைச்சலுக்கு ஆளாகி உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த சந்திரசேகர் மகன்கள் மோகன்ராஜ் (25). குணா (23). மற்றும் 3 வந்து வார்டு பொதுமக்கள் உடனடியாக சந்திரசேகரை போலீசார் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நெமிலி பஸ்ஸ்டாண்டில் பந்தல் அமைத்து சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். 

    அப்போது அரக்கோணம் டிஎஸ்பி புகழேந்தி கணேஷ், நெமிலி தாசில்தார் ரவி, நெமிலி போலிசார் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
    மகா சிவராத்திரியையொட்டி ஆற்காடு சுற்றியுள்ள 7 சிவன் கோவிலில் இன்று பக்தர்கள் குவிந்தனர்.
    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு நகரை சுற்றி அத்தி (ஆர்) மரங்கள் நிறைந்திருந்த காரணத்தால் ஆர்க்காடு (அத்தி + காடு) என்னும் பெயரினைப் பெற்று பின்னர் ஆற்காடு என அழைக்கப்பட்டதாக வர லாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

    இவ்வூரினைச்சுற்றி ‘ஷடாரண்யம்‘ எனப்படும் ஆறு வனங்கள் இருந்தன. என்றும், அருகிலுள்ள காஞ்சி மாநகரில் பங்குனி உத்திரத்தின் போது நடந்த ஏகாம்பர நாதர் ஏலவார் குழலி யம்மை திருமணக் கோலத்தை காண வந்த முனிவர்களும், ஆறு ஆளுக்கொருவராக இவ் வனங்களில் தங்கி அருந் தவம் புரிந்ததாகவும், அவர்கள் ஈசனை லிங்க வடிவில் செய்ததாகவும் புராண வரலாறு கூறுகிறது.

    இதனால் Ôஆறு காடுகள் ‘என்னும் பொருள் ஆற்காடு என்னும் பெயர் உண்டாயிற்று. ஆற்காட்டின் தென்கரையில் இப்போது புதுப்பாடி என்றழைக்கப்படும் ஊரில் சூத வனமும். (மாமரம்), வேப்பூர் என்னும் ஊரில் நிம்பவனமும் (வேப்பமரம்), மேல்வி ஷாரத்தில் விஷ விருட்ச வனமும் (எட்டிமரம்), ஆற்காடு பாலாற்றின் வடகரையில் நவ்லாக் என்னுமிடத்தில் ஒன்பது வகை மரங்கள் ஒருங்கே யான வனமும், வன்னி வேடு என்ற இடத்தில் சமீ வனமும் (வன்னி மரம்) அந்த நாட்களில் இருந்ததாகவும் கூறப்ப டுகிறது. 

    பாலாற்றில் பரத்வாஜர், வசிஸ்டர், வால் மீகி, காசியப்பர், அத்திரி, அகத்தியர் ஆகிய ஆறு முனிவர்களும் அமர்ந்து சிவபெருமானை பூஜித்து தவம் புரிந்தார்கள் என் றும் புராணங்கள் கூறுகிறது.

    அவர்கள் பூஜித்த லிங்கத்தை சுற்றி பின்னர் அழகிய திருக்கோவில்கள் கட்டப்பட்டு தொடர்ந்து பூஜைகளும், விழாக்க ளும் நடந்து வருகிறது. ஆற்காட்டை சுற்றியுள்ள ஆறு வனங்களிலும் கோவில் கொண்டுள்ள இறைவனை, அழகிய சிவலிங்க வடிவில் தரி சிப்பது மட்டற்ற மகிழ்ச் சியை ஏற்படுத்துவதாகும்.

    ஆற்காடு பாலாற்றின் தென் கரையில் வேப்பூரில் ஸ்ரீவசிஷ்டே ஸ்வரர் கோவில், மேல் விஷாரத்தில் ஸ்ரீ வால்மீ கீஸ்வரர் கோவில், புதுப்பாடியில் ஸ்ரீ பரத் வாஜ் ஈஸ்வரர் கோவில், பாலாற்றின் வடகரையில் குடிமல்லூர் கிராமத்தில் ஸ்ரீ அத்திரி ஈஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

    இதுதவிர, வன்னி வேடு கிராமத்தில் ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோவில், அவரக்கரையில் ஸ்ரீ காசிஈஸ்வரர் திருக்கோயில்களோடு, அவரைக்கரை செல்லும் வழியில் உள்ள காரை கிராமத்தில் ஸ்ரீ கவுதம ஈஸ்வரர் கோவில், தென் பாலாற்றங்கரை சன்னி யாசி மடத்தில் உள்ள ஸ்ரீ அருணாச்சலேசுவரர் கோவில் ஆகியவற்றை சிவராத்திரி தினமான இன்று (1&ந் தேதி) செவ் வாய்க்கிழமை ஒருங்கே தரிசித்தால் கைலாயம் சென்ற பலனைப் பெற லாம் என்பது நம்பிக்கை.

    இதனால் இந்த சிவன் கோவில்களில் இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. இன்று இரவு முழுவதும் இந்த கோவில்களில் பூஜைகள் நடக்கிறது. 7 கோவில்களில் இன்று ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    ஆற்காட்டில் தேனீக்கள் கொட்டியதால் டேங்க் ஆப்ரேட்டர் பரிதாபமாக இறந்தார்.
    ஆற்காடு:

    ஆற்காடு மாசாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அன்பு (வயது 50). இவர் ஆற்காடு நகராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவராக வேலை செய்து வந்துள்ளார். 

    இந்தநிலையில் நேற்று மதியம் அன்பு மற்றும் அவருடன் வேலை செய்யும் தினகரன், சீனிவாசன் ஆகிய 3 பேரும் ஆற்காடு பூபதி நகர் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை சுத்தம் செய்வதற்காக சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த தேனீக்கள் 3 பேரையும் சரமாரியாக கொட்டியுள்ளது.

    உடனடியாக அவர்களை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அன்பு பரிதாபமாக உயிரிழந்தார். தினகரன் மற்றும் சீனிவாசன் ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    இது குறித்த புகாரின் பேரில் ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×