என் மலர்
பெரம்பலூர்
- தூய்மை குறித்த விழிப்புணர்வு பிரசாரம் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடத்தப்பட்டு வருகிறது
- கலெக்டர்,நகர்மன்ற தலைவர், ஆணையர்உள்ளிட்டோர் பங்கேற்பு
பெரம்பலூர்,
பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்தில் நகரங்களில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் என்னும் தலைப்பில் நகரப் பகுதிகளை தூய்மையாக வைத்துக் கொள்வது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. தூய்மையான சுற்றுச்சூழலை உறுதி செய்யும் பொருட்டு அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளில் பெருமளவிலான மக்கள் பங்கேற்புடன் ஒவ்வொரு மாதமும் 2 மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் தன்னார்வ அமைப்புகள், குடியிருப்போர் நலச் சங்கங்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் தீவிர தூய்மைப்பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், ஒவ்வொரு மாதமும் 3-வது புதன்கிழமைகளில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் தூய்மை குறித்த விழிப்புணர்வு பிரசாரம் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் இந்த உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமையில் நகர்மன்ற தலைவர் அம்பிகா ராஜேந்திரன், நகராட்சி ஆணையர் ராதா மற்றும் நகர்மன்ற கவுன்சிலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், துப்புரவு பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலர் சங்க கூட்டத்தில் தீர்மானம்
- 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்கிட கோரிக்கை
பெரம்பலூர்,
தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலர் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட கிளை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் முத்துசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் மருதமுத்து, மாவட்ட பொருளாளர் ஆதிசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டாக்டர் கோசிபா, ஓய்வு பெற்ற அலுவலர்களின் கோரிக்கைகளை விளக்கி பேசினார். கூட்டத்தில், 70 வயதான ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியத்தை அனுமதித்து வழங்க வேண்டும். கடந்த 3 ஆண்டுகளாக முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண்டர் மற்றும் ஈட்டிய விடுப்பு ஊதியத்தை உடனடியாக வழங்க அரசாணை பிறப்பிக்க வேண்டும். கடந்த 13 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை திட்டத்தை தொடங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரியலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வரும் ஆய்வகத்தை, புதிய கட்டிடத்துக்கு மாற்ற அரியலூர் மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசு 1.1.2023 முதல் 4 சதவீத அகவிலைப் படியை நிலுவையுடன் வழங்கியது போல, தமிழக அரசும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தலைமை நிலைய செயலாளர் மணி வரவேற்றார். முடிவில் மகளிரணி தலைவி வசந்தா நன்றி கூறினார்.
- 7500 உறுப்பினர்களை சேர்க்க முடிவு
- எம்எல்ஏ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
குன்னம்,
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் உடன்பிறப்புகளால் இணைவோம் என்ற புதிய உறுப்பினர்கள் சேர்க்கை பணி அடைக்கம்பட்டி ஊராட்சியில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான சோமு மதியழகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளரும், மாநில விவசாய அணி செயலாளருமான அன்னியூர் சிவா, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், மாநில மருத்துவர் அணி துணை செயலாளர் டாக்டர் வல்லபன், மாவட்ட துணை செயலாளர் பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆலத்தூர் மேற்கு ஒன்றியத்தில் உள்ள 50 பூத்துகளில் ஒரு பூத்துக்கு 150 புதிய உறுப்பினர்கள் வீதம், மொத்தம் மேற்கு ஒன்றியத்தில் 7500 தி.மு.க. புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஒன்றிய இளைஞரணி அருண், கிளை செயலாளர்கள் மாரிமுத்து, லோகநாதன், சிறு வயலூர் ராஜலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பெரம்பலூர், ேவப்பூர், அசூர் கிராமத்தில் நடைபெற்றது
- போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் தெற்கு ஒன்றியம், அசூர் கிராமத்தில் தி.மு.க. புதிய உறுப்பினர்கள் சேர்க்கை பணியினை போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளர் பா.துரைசாமி, மாநில மருத்துவ அணி துணை அமைப்பாளர் டாக்டர் செ.வல்லபன், பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ்.அண்ணாதுரை, பட்டுச்செல்வி ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் சன்.சம்பத், டாக்டர் செ.செங்குட்டுவன், ஒன்றிய கழக செயலாளர்கள் சி.ராஜேந்திரன், தி.மதியழகன், ஒன்றிய தலைவர் பிரபா செல்லப்பிள்ளை, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் டாக்டர் அ.கருணாநிதி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ரமேஷ் ராஜேந்திரன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் பாளை.மணிவண்ணன், அசூர் கிளைக் கழக செயலாளர் ந.செல்லப்பிள்ளை, மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் கு.க.அன்பழகன், மாவட்ட கலை இலக்கிய பேரவை துணை அமைப்பாளர் அசூர் ந.முத்துச்செல்வன், வேப்பூர் தெற்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் மா.பிரபாகரன், அசூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி முருகேசன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வி.ரவி, குன்னம் ஒன்றிய குழு உறுப்பினர் உமா சந்தோஷ்குமார், தேவா, தர்மராஜ், முத்துவேல் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- பெரம்பலூர் மாவட்ட போலீசாருக்கு மலையேறும் பயிற்சி அளிக்கபட்டது
- கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்தார்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரியும் காவல்துறையினருக்கு பணிகளுக்கு இடையில் அவர்களது உடலுக்கும் மனதிற்கு உற்சாகம் அளிக்கும் வகையில் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ஷ்யாம்ளா தேவி மேற்கொண்டு வருகின்றார். அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரியும் காவல்துறையினருக்கு மலையேற்ற பயிற்சி பெரம்பலூர் அருகே எளம்பலூர் கிராமத்தில் உள்ள பிரம்மரிஷி மலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ஷ்யாம்ளா தேவி தலைமையில் நடைப்பெற்றது.
இந்த பயிற்சியில் சிறப்பு விருந்தினராக மாவட்ட கலெக்டர் கற்பகம் கலந்து கொண்டு மாவட்ட காவல்துறையினரோடு இணைந்து மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டார்கள். பயிற்சியில் பெரம்பலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்ட் மதியழகன் (தலைமையிடம்), பெரம்பலூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் பழனிச்சாமி (பயிற்சி), துணைக் காவல் கண்காணிப்பாளர் மதுமதி, காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் ஊர்க்காவல்படையினர் என சுமார் 200 பேர் கலந்து கொண்டனர்.
பின்னர் மலை அடிவாரத்தில் உள்ள கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து அன்னை சித்தர் ராஜகுமார் குருஜியின் சமாதிக்கு சென்றனர். அப்போது மாதாஜி ரோகிணி ராஜகுமார், தவயோகி தவசிநாதன் ஆகியோர் உடன் சென்றனர். இந்நிகழ்ச்சியின் போது மகா சித்தர்கள் அறக்கட்டளையின் சார்பாக அனைவருக்கும் தேநீர் மற்றும் வேற்கடலை, சுண்டல் பிரசாதம் வழங்கப்பட்டது.
- தீப்பிடித்து 3 வீடுகள் சாம்பல் ஆகின
- போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள பிம்பலூரை சேர்ந்தவர்கள் மாரிமுத்து (வயது 62), கருப்பாயி (69), சின்னமுத்து(68) ஆகியோரின் கூரை வீடுகள் அருகருகே உள்ளன. இந்நிலையில் நேற்று மதியம் திடீரென மாரிமுத்துவின் வீட்டில் தீப்பிடித்து மள மளவென எரிய தொடங்கியது. இந்த தீ பரவி கருப்பாயி மற்றும் சின்னமுத்து ஆகியோரின் வீடுகளிலும் பரவியது. இதில் 3 வீடுகளும் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து தகவல் அறிந்து பெரம்பலூர் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இந்த தீ விபத்தில் 3 பேரின் வீடுகளில் இருந்த பல ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்பிலான வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து சாம்பலானது. இந்த சம்பவம் தொடர்பாக வி.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரசு இசைப்பள்ளியில் தமிழிசை விழா நடைபெற்றது
- ழாவிற்கு கலை பண்பாட்டுத்துறை உதவி இயக்குனர் நீலமேகம் தலைமை வகித்தார்
பெரம்பலூர்
பெரம்பலூரில் கலை பண்பாட்டுத்துறை, மண்டல கலை பண்பாட்டுமையம், மாவட்ட அரசு இசைப்பள்ளியில் தமிழிசை விழா நடந்தது. விழாவிற்கு கலை பண்பாட்டுத்துறை உதவி இயக்குனர் நீலமேகம் தலைமை வகித்து தமிழிசை விழாவை தொடங்கி வைத்து பேசினார். இதில் குமாரவயலூர் திருஞானசம்பந்த ஓதுவார் குழுவினரின் தேவார, திருவாசக குரலிசை நிகழ்ச்சியும், அய்யாமலை செல்வம் குழுவினரின் நாதசுர தவில் இசை நிகழ்ச்சியும் நடந்தன. மேலும் நெடுமறம் முத்தழகு, ஸ்ரீரங்கம் லெட்சுமிநாராயணன் குழுவினரின் தமிழிசை நிகழ்ச்சியும் நடந்தன. இதில் பள்ளி மாணவ, மாணவிகள், இசை ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் பாரதி வரவேற்றார். முடிவில் தேவார ஆசிரியர் நடராஜன் நன்றி கூறினார்.
- விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த முடிவு செய்துள்ளனர்
- கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பெரம்பலூர்
பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தமிழ் மாணிக்கம் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் கலையரசன், மன்னர்மன்னன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக விவசாய அணி மாநில செயலாளர் வீரசெங்கோலன் கலந்துகொண்டு பேசினார்.
கூட்டத்தில் வரும் 14ம்தேதி அம்பேத்கரின் 132-வது பிறந்தநாளை முன்னிட்டு சமத்துவ நாளாக கொண்டாடி ஜனநாயகம் காப்போம் என்ற வாசகங்களுடன் விடுதலை சிறுத்தைகளின் அணிவகுப்பு ஊர்வலம் நடத்தி அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது, 16ம் தேதி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரத்ததானம் முகாம் நடத்துவது. மே மாதம் 5ம் தேதி அரியலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள கட்சியின் மாநில வணிகர் அணி மாநாட்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் திரளாக கலந்துகொள்வது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதில் சட்டமன்ற தொகுதி செயலாளர் ரத்தினவேல், மாவட்ட செய்தி தொடர்பாளர்கள் வக்கீல் ஸ்டாலின், உதயகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் வரும் 11ம்தேதி நடைபெறுகிறது.
- மின்நுகர்வோர்கள் கலந்துகொண்டு தங்களது குறைகளை மனுக்களை அளித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்
பெரம்பலூர்
பெரம்பலூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் வரும் 11ம்தேதி மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து மின்வாரிய செயற்பொறியாளர் அசோக்குமார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், பெரம்பலூர் கோட்டத்திற்குட்பட்ட மின்நுகர்வோர்களின் குறை தீர்க்கும் பொருட்டு குறைதீர் நாள் கூட்டம் பெரம்பலூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் வரும் 11ம்தேதி காலை 11மணி முதல் மதியம் 1 மணிவரை நடைபெறுகிறது.கூட்டத்திற்கு மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அம்பிகா தலைமை வகித்து மின்நுகர்வோர்களிடம் மனுக்களை பெறுகிறார். எனவே இந்த கூட்டத்தில் பெரம்பலூர் கோட்டத்திற்குட்பட்ட மின்நுகர்வோர்கள் கலந்துகொண்டு தங்களது குறைகளை மனுக்களை அளித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
- வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்
- ஆய்வகத்தில் இருந்து விவசாயிகளுக்கு வழங்கப்படும் பொருட்கள் என்னென்ன என்பது குறித்து விரிவாக கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.
பெரம்பலூர்
பெரம்பலூர் நகரப் பகுதியில் வேளாண் துறையின் கீழ் இயங்கும் உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் பயிர்களை தாக்கும் நோய்கள் மற்றும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளான மெட்டாரைசியம் அனிசோபிலே, டீரைகோடெர்மா விரிடி, சூடோமோனாஸ் ப்ளுரசன்ஸ் மற்றும் ட்ரைகோகெரம்மா கைலோனிஸ் போன்றவை உற்பத்தி செய்யும் முறை மற்றும் பயிர்களில் அவை பயன்படுத்தப்படும் முறை குறித்து மாவட்ட கலெக்டர் கற்பகம் வேளாண்மை அலுவலரிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து ஆய்வகங்களில் உள்ள கருவிகளை பார்வையிட்டார். மேலும் விதை பரிசோதனை நிலையத்தை பார்வையிட்டு, அங்கு பணிபுரியும் வேளாண் அலுவலர்களிடம் பல்வேறு வகையான விதை முளைப்பு திறன் கண்டறியும் பரிசோதனைகள் குறித்தும், விதை பரிசோதனை மேற்கொள்ளப்படும் செய்முறைகள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும் விதை முளைப்பு திறன் பரிசோதனை அறையினை பார்வையிட்ட கலெக்டர் அங்கு பயன்படுத்தப்படும் கருவிகள், விதை பரிசோதனைக்காக மேற்கொள்ளப்படும் தொழில்நுட்ப முறைகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும், இந்த உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம் விவசாயிகளுக்கு எந்த அளவில் பயனுள்ளதாக அமைந்துள்ளது, இந்த ஆய்வகத்தில் இருந்து விவசாயிகளுக்கு வழங்கப்படும் பொருட்கள் என்னென்ன என்பது குறித்து விரிவாக கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்டம், அரணாரை கிராமத்தில் தோட்டக்கலைத் துறையின் மூலம் மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டம் 2022-23-ன் கீழ் சரவணன் என்ற பயனாளிக்கு காளான் வளர்ப்பு குடில் அமைக்க ரூ.50,000 மானியமாக வழங்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ள காளான் வளர்ப்பு குடிலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, அரசின் சார்பில் வழங்கப்பட்ட மானியத்தொகை உதவியாக இருந்ததா? என்றும், காளான் வளர்ப்பு லாபகரமான தொழிலாக உள்ளதா? என்றும் விவசாயியிடம்கேட்டறிந்த கலெக்டர் காளான் வளர்ப்பு தொழிலை மேலும் பெருக்கி ஒரு தொழில்முனைவோராக உயர அரசின் திட்டங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்தார். அப்போது வேளாண்மை துறை அதிகாரிகள் உள்பட பலர் உடனிருந்தனர்.
- முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, பாடாலூர் கிராமத்தை சேர்ந்தவர் மதுரைவீரன் (வயது 70). விவசாயியான இவர் தனது வயலில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து பாடாலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மதுரைவீரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பஸ் நிறுத்தத்தில் இறந்து கிடந்தவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், மங்களமேட்டை அடுத்த தேவையூர் கிராமத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நேற்று மதியம் அடையாளம் தெரியாத சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து மங்களமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.






