என் மலர்tooltip icon

    நீலகிரி

    • நடுவட்டம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
    • இந்த விபத்தில் கார் பலத்த சேதம் அடைந்தது.

    கூடலூர் :

    நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு ஊட்டி நோக்கி மலைப்பாதையில் கார் ஒன்று சென்றது. அப்போது நடுவட்டம் அரசு தேயிலை தோட்டம் அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. பின்னர் சாலையோரம் வைத்து இருந்த அரசு தேயிலை தோட்ட கழகத்துக்கு சொந்தமான இரும்பு வரவேற்பு மைய கூடாரம் மீது மோதியது. தொடர்ந்து தேயிலை தோட்டத்துக்குள் பாய்ந்து சுமார் 150 அடி ஆழ பள்ளத்தில் உருண்டு கவிழ்ந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதை கண்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து, காரில் இருந்த பெண் உள்பட 2 பேரை லேசான காயங்களுடன் மீட்டனர்.இதுகுறித்து தகவல் அறிந்த நடுவட்டம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கூடலூரை சேர்ந்த நான்சி உள்பட 2 பேர் என்பது தெரிய வந்தது. இந்த விபத்தில் கார் பலத்த சேதம் அடைந்தது.

    • தேயிலை தோட்டத்தில் ஏராளமான காட்டெருமைகள் கூட்டமாக நின்றிருந்தன.
    • காட்டெருமை திடீரென ராஜசேகரை நோக்கி ஓடி வந்து தாக்கியது.

    குன்னூர்,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கிளன்டெல் எஸ்டேட் உள்ளது. இங்கு வசித்து வருபவர் ராஜசேகர்(62). இவர் தேயிலை தோட்டத்தில் பிளம்பராக வேலை பார்த்து வருகிறார். இன்று காலை இவர் வழக்கம்போல் வேலைக்கு புறப்பட்டார். அப்போது செல்லும் வழியில் ஏராளமான காட்டெருமைகள் கூட்டமாக நின்றிருந்தன.

    அதில் ஒரு காட்டெருமை திடீரென ராஜசேகரை நோக்கி ஓடி வந்து தாக்கியது. இதில் அவர் வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறியது. வலி தாங்க முடியாத அவர் அலறி சத்தம் போட்டார். அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • கேத்ரின் நீர்வீழ்ச்சி, முதுமலை புலிகள் காப்பகம் என பல்வேறு சுற்றுலா தலங்கள் நிறைந்து காணப்படுகிறது.
    • சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கோடைவிழாக்களும் நடத்தப்படும்.

    கோத்தகிரி,

    நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலைசிகரம், கோத்தகிரி நேரு பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, லேம்ஸ்ராக் காட்சி முனை, கேத்ரின் நீர்வீழ்ச்சி, முதுமலை புலிகள் காப்பகம் என பல்வேறு சுற்றுலா தலங்கள் நிறைந்து காணப்படுகிறது.

    சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும், இங்கு நிலவும் சிதோஷ்ண நிலை மற்றும் நீலகிரியின் இயற்கை அழகினை ரசிக்கவும் தினந்தோறும் நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருப்பர். குறிப்பாக கோடை காலங்களான ஏப்ரல், மே மாதத்தில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கோடைவிழாக்களும் நடத்தப்படும்.

    தற்போது நீலகிரியில் 2-ம் சுற்றுலா சீசன் துவங்க இருப்பதாலும், தொடர்ந்து பண்டிகை விடுமுறைகள் வரவிருப்பதாலும் தோட்டக்கலத்துறை சார்பில் பூங்காக்களில் பராமரிப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோத்தகிரி நேரு பூங்காவில் மதில் சுவர் மற்றும் நடைபாதை பராமரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

    மேலும் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு வண்ண மலர்களின் நாற்றுகள் நடவும் பணியும் நடைபெற்று வருகிறது.

    • மாவட்டம் முழுவதும் அதிரடியாக கஞ்சா மற்றும் புகையிலை தடுப்பு வேட்டை நடைபெற்று வருகிறது.
    • கஞ்சா புகைத்தலால் ஏற்படும் தீமை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

    கோத்தகிரி,

    நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆசிஷ்ராவத் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் அதிரடியாக கஞ்சா மற்றும் புகையிலை தடுப்பு வேட்டை நடைபெற்று வருகிறது. கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் இரவு பகலாக கஞ்சா மற்றும் புகையிலை விற்பவர்களை கண்டறிந்து அதிரடியாக கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

    இது போன்ற நடவடிக்கையால் கோத்தகிரி பகுதியில் முன்பு இருந்ததை விட கஞ்சா மற்றும் புகையிலை பழக்கம் வெகுவாக குறைந்துள்ளது. கஞ்சா புகைத்தலால் ஏற்படும் தீமை குறித்தும், எதிர்கால இளைஞர்களின் வாழக்கை எவ்வாறு சீரழிகிறது என்பது பற்றிய விழிப்புணர்வை கோத்தகிரி பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்களிடையே உதவி காவல் ஆய்வாளர் சேகர் வழங்கினார். மேலும் கஞ்சாவை பயன்படுத்தமாட்டோம் என்ற உறுதிமொழியை அவர்களை ஏற்க வைத்தார். இதே போன்று கோத்தகிரி குஞ்சப்பனை பகுதியிலும் போலீசாரால் விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.

    • மரபியல் பல்வகைமை கண்காட்சி விவசாயிகள் மேளாவினை கலெக்டர் அம்ரித் குத்துவிளக்கேற்றி ெதாடங்கி வைத்தார்.
    • நீலகிரி மாவட்டத்தில் 200 வகையான மருத்துவ பயிர்கள் உள்ளன.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், ஊட்டி சேரிங்கிராஸ் தோட்டக்கலைத்துறை வளாகத்தில், தோட்டக்க லைத்துறை சார்பில், மரபியல் பல்வகைமை கண்காட்சி விவசாயிகள் மேளாவினை கலெக்டர் அம்ரித் குத்துவிளக்கேற்றி ெதாடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகம் முழுவதும் பாரம்பரியப் பயிர்களை மீட்டெடுக்கும் முயற்சியாக முன்னோர் செய்த இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில், மரபியல் பல்வகைமை கண்காட்சி விவசாயிகள் மேளா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    அதனடிப்படையில் இன்றைய தினம் மாவட்ட அளவில் அட்மா திட்டத்தின் கீழ் மரபியல் பல்வகைமை என்ற தலைப்பில் கிசான் மேளா மற்றும் பாரதிய பிரகிருதிக் கிரிஷி பத்தாதி) திட்டத்தின் கீழ் மூலிகை பூச்சி விரட்டி மற்றும் திரவ ஊட்டச்சத்து தயாரிப்பு பற்றிய செயல்விளக்கம் மற்றும், இயற்கை விவசாய முறைகளை பின்பற்றி பாரம்பரிய ரகங்களை பயிரிடுவது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    நீலகிரி மாவட்டத்தில் பாரம்பரிய வகை காய்கறிகள், பழங்கள், மருத்துவ தாவரங்கள், பூக்கள் மற்றும் மசாலாப் பொருட்களை பூர்வீகமாக கொண்டு அதிலிருந்து மேம்படுத்தப்பட்ட ரகங்கள் உருவாக்கப்படுகின்றன. மேலும், நீலகிரி மாவட்டத்தில் 200 வகையான மருத்துவ பயிர்கள், 175 வகையான ஆர்கிட் மலர்கள், 75 வகையான பூக்கும் மரங்கள் உட்பட 3,700 வகையான தாவரங்கள் நிறைந்த உயர்கோளம் ஆகும்.

    பாரம்பரிய மருத்துவ செடிகள், சிறுதானியங்கள், பயறு வகைகள் அதிக அளவில் பயிரிடப்பட்டு வந்தன. பிற்காலத்தில் தோட்டப்பயிர்கள் மற்றும் வீரியரக காய்கறி பயிர்கள் அதிக அளவில் பயிரிடப்பட்டதின் விளைவாக நீலகிரி மாவட்டத்தின் சிறப்பு மிக்க பாரம்பரிய பயிர்கள் அழியும் நிலையில் உள்ளன. இதனை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அரசு இது போன்ற திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.மேலும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் என்னென்ன என்பதனை விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

    விவசாயிகள் பயிரிடும் பயிர்களை அதிக லாபத்திற்கு விற்பதற்காக வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை அலுவலர்கள் தேவையான ஆலோசனைகளை வழங்க வேண்டும். இந்த மரபணு கண்காட்சியினை மாவட்டம் முழுவதிலும் இருந்து 180 விவசாயிகளும், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தை சேர்ந்த 60 மாணவர்களும் கண்டு களிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்ப ட்டுள்ளது. மூலிகை பூச்சி விரட்டி மற்றும் திரவ ஊட்டச்சது குறித்த செயல் விளக்க மேளாவில் 31 கிராமங்கள் மற்றும் மாநில தோட்டக்கலை பண்ணை களிலிருந்து 466 விவசாயிகளும் கலந்து கொண்டனர்.

    இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதன் மூலம் விவசாயிகளுக்கும், மாணவ, மாணவிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே விவசாயிகள் மண்ணிற்கு ஏற்ற பயிர்களை அதிக அளவில் விளைவித்து அனைவரும் பயன் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அதனை தொடர்ந்து, பாரம்பரிய மூலிகை மருத்துவம் தேசிய அளவிலான தன்வந்திரி சான்றிதழ் பெற்ற காளியம்மாள் என்பவர் மாவட்ட கலெக்டரிடம் சான்றிதழை காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.

    நிகழ்ச்சியில் தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் (பொ) ஷிபிலா மேரி, துணை இயக்குநர் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஜாயிலின் ஷோபியா, ஊட்டி தாசில்தார் ராஜசேகர் மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • குட்ஷெப்பா்டு சா்வதேச பள்ளியின் 46-வது நிறுவனா் தின விழா கொண்டாடப்பட்டது.
    • பள்ளி மாணவா்களின் அணிவகுப்பு, குதிரையேற்றம், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    ஊட்டி,

    ஊட்டியில் உள்ள குட்ஷெப்பா்டு சா்வதேச பள்ளியின் 46-வது நிறுவனா் தின விழா கொண்டாடப்பட்டது.

    இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியின் கமாண்டன்ட் லெப்டினென்ட் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ் பங்கேற்றாா். விருந்தினராக கலந்து கொண்ட நமீதா வாட்ஸ் மாணவா்களுக்கு கோப்பை மற்றும் பரிசுகளை வழங்கினாா்.

    தொடர்ந்து பள்ளி மாணவா்களின் அணிவகுப்பு, குதிரையேற்றம், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இது அனைவரையும் மிகவும் கவர்ந்தது. இதில் பள்ளியின் இணை நிறுவனா் எல்சம்மா தாமஸ், பள்ளியின் தலைவா் ஜேக்கப் தாமஸ், மூத்த துணைத் தலைவா் சாரா ஜேக்கப், முதல்வா் ஷீலா அலெக்சாண்டா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    • 3 பிரிவுகளில் நடந்த இந்த ேபாட்டி நடந்தது.
    • 30 பள்ளிகளை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    அரவேணு,

    தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் ஒன்றிய அளவிலான துளிர் ஜந்தர்மந்தர் அறிவியல் வினாடி வினா போட்டி கோத்தகிரி ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்றது. இதில் 30 பள்ளிகளை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவுக்கு கோத்தகிரி அரிமா சங்கத்தலைவர் பரமேஸ்வரன் தலைமை தாங்கினார். அரிமா சங்க செயலர் ரெட்டி அனைவரையும் வரவேற்றார். ஆசிரியப்பயிற்சி நிறுவனத்தின் உதவி முதல்வர் ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முன்னாள் மாவட்ட தொடக்கப்பள்ளி அலுவலர் கே.எம்.பெள்ளி வாழ்த்துரை வழங்கினார்.

    நெஸ்ட் அறக்கட்டளையின் செயலர் ராமதாஸ், பொரங்காடு சீமை நல சங்கத்தின் செயலர் ஓய்வு பெற்ற ஆசிரியர் போஜன் ஆசிரியர் குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

    3 பிரிவுகளில் நடந்த இந்த ேபாட்டியில் அரவேணு, கேர்கெம்பை உயர்நிலைப்பள்ளிகள், ஹில்போர்ட் மெட்ரிக் மேனிலைப்பள்ளி, கோத்தகிரி அரசு மேனிலைப்பள்ளி, ஆகிய பள்ளிகள் முதலிடத்தையும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கேர்பெட்டா, கிரிஈஸ்வரா மெட்ரிக் பள்ளி கக்குச்சி, பாண்டியின் நினைவு மேனிலைப்பள்ளி, புனித அந்தோணியார் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 2-ம் இடத்தையும் பிடித்தனர்.

    கிரீன்வேலி மெட்ரிக் மேனிலைப்பள்ளி, ஒரசோலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் மூன்றாமிடத்தையும் பெற்றனர். இந்த போட்டியில் முதல் 2 இடங்களைப்பிடித்த அணிகள் வருகிற 29-ந் தேதி ஊட்டியில் நடைபெற உள்ள மாவட்ட அளவிலான போட்டியில் பங்கு பெற தகுதி பெற்றுள்ளனர். முடிவில் பொருளாளர் பிரகாஸ் நன்றி கூறினார். 

    • ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
    • நீலகிரி மாவட்டம் முழுவதும் 175 பேர் கைது செய்யப்பட்டனர்.

    ஊட்டி,

    சென்னையில் அனுமதியின்றி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

    நீலகிரியிலும் சாலைமறியல் ஆர்ப்பாட்டம் நடந்தது. நீலகிரி மாவட்ட அ.தி.மு.க சார்பில் ஊட்டி காபி ஹவுஸ் சதுக்கத்தில் அ.தி.மு.க மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத் தலைமையில் நிர்வாகிகள், தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதில் முன்னாள் மாவட்ட செயலாளர் பாலநந்தகுமார், பாசறை மாவட்ட செயலாளர் அக்கீம்பாபு, ஒன்றிய செயலாளர்கள் கடநாடுகுமார், பேரட்டிராஜி, நொண்டிமேடு கார்த்திக், ஒ.சி.எஸ்.ஜெயராமன், நகர மன்ற உறுப்பினர்கள் லயோலோ குமார், துர்காஜெயலட்சுமி, கிளை செயலாளர் பிரபுதுர்கா, சார்பணி செயலாளர்கள், கிளைகழக செயலாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.மறியலில் ஈடுபட்ட 12 பெண்கள் உள்பட 60 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கோத்தகிரி பஸ் நிலையத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. சாந்திராமு தலைமையில் சாலைமறியல் போராட்டம் நடந்தது. இதில் கோத்தகிரி மேற்கு ஒன்றியம் கம்பட்டிகுமார், கிழக்கு ஒன்றியம் தப்பகம்பை கிருஷ்ணன் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 36 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கூடலூர் பழையபஸ் நிலையத்தில் உ ள்ள காந்தி சிலை முன்பு அ.தி.மு.க. நகர செயலாளர் சையத் அனூப்கான் தலைமையில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பந்தலூரில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 28 பேர், மஞ்சூரில் 15 பேர் மசினகுடியில் 11 பேர் உள்பட நீலகிரி மாவட்டம் முழுவதும் 175 பேர் கைது செய்யப்பட்டனர்.

    • அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் சார்பில் தீபாவளி பரிசளிப்பு விழா நடந்தது.
    • ஏழை, எளிய மக்கள் என மொத்தம் 50 பேருக்கு சேலை மற்றும் இனிப்பு, 10 மளிகை பொருட்கள் தீபாவளி பரிசாக வழங்கினார்.

    ஊட்டி,

    மக்களுக்காக அறக்கட்டளை மற்றும் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் சார்பில் தீபாவளி பரிசளிப்பு விழா நடந்தது. ஜாம்பவான் ஜெரால்ட், உலிக்கல் சண்முகம், சரவணன், ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் என்ற மாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மேல் கவ்வட்டி பகுதியை சேர்ந்த ஏழை, எளிய மக்கள் என மொத்தம் 50 பேருக்கு சேலை மற்றும் இனிப்பு, 10 மளிகை பொருட்கள் தீபாவளி பரிசாக வழங்கினார்.

    அப்போது பேசிய அவர் அனைவரும் நம்மால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்ய வேண்டும். அதை தொடர்ந்து செய்ய வேண்டும் என்றார்

    ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் துரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மக்களுக்காக அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் உலிகல் சண்முகம் நன்றி கூறினார். லவ்டேல் தினேஷ் நவாஸ், சித்தராஜ், நவீன்,சந்தீப், ஹக்கீம், விஷால் மூர்த்தி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். 

    • முன்கள பணியாளா்களுக்கு பல ஆண்டுகளாக தீபாவளி போனஸ் வழங்கப்படாமல் இருந்து வந்தது.
    • முன்களப் பணியாளா்களுக்கு போனஸ் தொகையினை வழங்கப்பட்டது.

    ஊட்டி,

    ஊட்டி நகராட்சியில் பணியாற்றி வரும் ஒப்பந்த முன்கள பணியாளா்களுக்கு பல ஆண்டுகளாக தீபாவளி போனஸ் வழங்கப்படாமல் இருந்து வந்தது.

    இந்நிலையில், ஒப்பந்த முன்கள பணியாளா்களுக்கு போனஸ் வழங்கப்பட்டது. நகா்மன்ற தலைவா் வாணீஸ்வரி முன்களப் பணியாளா்களுக்கு போனஸ் தொகையினை வழங்கி தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தாா்.

    இதில், ஊட்டி நகா்மன்ற துணைத் தலைவா் ரவிகுமாா், ஆணையா் காந்திராஜ், ஊட்டி நகர திமுக செயலாளா் ஜாா்ஜ், கவுன்சிலர்கள் ரமேஷ், ரவி, நாகமணி, விஷ்ணு, கஜேந்திரன், புஷ்பராஜ், ராஜா மற்றும் முன்கள பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • சாந்தி பிரியாக ஊட்டியில் பதுங்கி இருப்பதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • போலீசார் விரைந்து சென்று, சாந்தி பிரியாவை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

    இந்த நிறுவனத்தின் மேலாளராக சாந்திபிரியா(34) என்பவர் பணியாற்றி வந்தார். அவருடன் நகை மதிப்பீட்டாளராக ராஜூ(32), கேசியராக நந்தினி(30), கம்ப்யூட்டர் ஆப்ரேட்டராக விஜயகுமார்(30) பணியாற்றி வந்தனர்.

    இந்த நிலையில் இவர்கள் அனைவரும் சேர்ந்து, கடந்த 2021 மார்ச் 9-ந்தேதி முதல் 2021 செப்டம்பர் 1-ந்தேதி வரையிலான கால கட்டத்தில் இந்த நிறுவனத்தில் உள்ள 81 வாடிக்கையாளர்களின் கடன் கணக்குகளிலிருந்து ஒரிஜனல் தங்க நகைகளை எடுத்து விட்டு, அதற்கு மாற்றாக போலி நகைகளை வைத்துள்ளனர்.

    அதில் 43 பாக்கெட்டுகளில் இருந்த அசல் நகைகளை ஏற்கனவே உள்ள வேறு வாடிக்கையாளர்களின் பெயர்களில் போலியான ஆவணங்களை தயாரித்து, அடகு வைத்து 98 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளனர்.

    இது தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து தனியார் நிறுவனம் சார்பில் ஊட்டியில் உள்ள மாவட்ட குற்ற பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    அதன்பேரில் குற்றப்பிரிவு போலீசார் மேலாளர் சாந்தி பிரியா, நகை மதிப்பீட்டாளர் ராஜூ, கேசியர் நந்தினி, கம்ப்யூட்டர் ஆபரேட்டர் விஜயகுமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    மேலும் அவர்களை பிடிப்பதற்கு தனிப்படையும் அமைக்கப்பட்டது. இதற்கிடையே தனிப்படை போலீசார் கடந்த ஜனவரி மாதம் இந்த சம்பவத்தில் தொடர்புடைய நகை மதிப்பீட்டாளர் ராஜூ, கேஷியர் நந்தினி, கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் விஜயகுமார் ஆகியோரை கைது செய்தனர்.

    இவர்கள் கைது செய்யப்பட்டதை அறிந்ததும் மேலாளர் சாந்தி பிரியா தலைமறைவாகி விட்டார். மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அம்சவேணி தலைமையிலான தனிப்படை போலீசார் சாந்தி பிரியாவை கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் சாந்திபிரியாக ஊட்டியில் பதுங்கி இருப்பதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் விரைந்து சென்று, சாந்திபிரியாவை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    மோசடி வழக்கில் கைதான சாந்திபிரியாவின் தந்தை மஞ்சூர் அருகே உள்ள பிக்கட்டி பேரூராட்சி தி.மு.க. செயலாளராக உள்ளார்.

    • விழிப்புணர்வு கூட்டம் இத்தலாரில் உள்ள சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    மஞ்சூர்,

    மஞ்சூர் காவல்துறை சார்பில், கஞ்சா இல்லாத கிராமம் மற்றும் போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் இத்தலாரில் உள்ள சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. இதற்கு மஞ்சூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், எமரால்டு சப்-இன்ஸ்பெக்டர் ஆறுச்சாமி ஆகியோர் தலைமை தாங்கினர். கூட்டத்தில் கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இத்தலார் ஊர் தலைவர் சுரேஷ், இத்தலார் ஊராட்சி மன்ற தலைவர் பந்தையன், ஊட்டி ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் உமாராஜன் மற்றும் சுற்றுவட்டார ஊர் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். முடிவில் போதை ஒழிப்பு உறுதிமொழியை பொதுமக்கள் எடுத்தனர்.

    ×