என் மலர்
நீலகிரி
- மஞ்சூர் பஜார் பகுதியில் திலிப்குமார் என்பவரது கடையை பலமுறை கரடி உடைத்து பொருட்களை சூறையாடி சென்றது
- கரடியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மஞ்சூர்,
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சமீபகாலமாக கரடி ஒன்று நடமாடி வருகிறது.
பகல் நேரங்களில் அருகில் உள்ள தேயிலை தோட்டங்களில் பதுங்கியிருக்கும் கரடிகள், இரவு நேரத்தில் உணவு தேடி குடியிருப்பு மற்றும் கடை வீதிகளில் நடமாடுவது வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில், இரவு மஞ்சூர் பஜார் பகுதியில் உலா வந்த கரடி, அரசு தொடக்கப்பள்ளி வளாகத்திற்குள் புகுந்தது. தொடர்ந்து அங்கன்வாடி மையத்தை ஒட்டி அமைந்திருந்த சமையல் அறையின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்தது.
தொடர்ந்து மற்றொரு கதவையும் உடைத்தெறிந்த கரடி, அங்கு வைக்கப்பட்டிருந்த சமையல் எண்ணையை குடித்துவிட்டு பொருட்களையும் கீழே தள்ளி சூறையாடி சென்றது.
பஜாரின் மையப்பகுதியில் உள்ள அரசு பள்ளிக்குள் கரடி புகுந்து பொருட்களை சூறையாடி சென்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து, தகவல் அறிந்த வனத்துறையினர் பள்ளிக்கு சென்று பார்வை யிட்டு ஆசிரியர்களிடம் விசாரித்து சென்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பும் மஞ்சூர் பஜார் பகுதியை சேர்ந்த திலிப்குமார் என்பவரது கடையை பலமுறை கரடி உடைத்து பொருட்களை சூறையாடி சென்றது குறிப்பிடத்தக்கது
இடையில் ஓரிரு நாட்கள் கரடியின் நடமாட்டம் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் பஜார் பகுதியில் நடமாடி வருவதுடன் அட்டகாசத்திலும் ஈடுபடு வது வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, அட்டகாசம் செய்து வரும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கால்நடைகளுக்கு இலவசமாக தாது உப்பு கலவைகள் அளிக்கப்பட்டது.
- நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இய்ககுனர், கூட்டுறவு சார்பதிவாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஊட்டி,
69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நீலகிரி மாவட்டத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. வார விழாவின் 2-ம் நாளான நேற்று கூட்டுறவு சந்தைப்படுத்துதல், நுகர்வோர், பதனிடுதல் மற்றும் மதிப்பு கூட்டுதல் என்ற மைய கருத்தின் அடிப்படையில் மசினகுடி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் சார்பில் மசினகுடி கிராமத்தில் சரக துணைப்பதிவாளர் மது தலைமையில் இலவச கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.
முகாமில் ஆவின் கால்நடை மருத்துவர்கள் சிவசங்கர் மற்றும் டேவிட் மோகன் குழுவினர்கள் கால்நடைகளுக்கு பூச்சி மருந்து, குடற்புழு நீக்கம், சினை பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல், மலட்டுத்தன்மை நீக்குதல் போன்ற சிகிச்சைகள் கால்நடைகளுக்கு அளிக்கப்பட்டது. கால்நடைகளுக்கு இலவசமாக தாது உப்பு கலவைகள் அளிக்கப்பட்டது.
ஆவின் பொதுமேலாளர் வெங்கடாசலம், நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இய்ககுனர் அய்யனார், கூட்டுறவு சார்பதிவாளர் பிரேமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 தி.மு.க. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. குற்றச்சாட்டு.
- ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட, மண்டல், அணி பிரிவு பொறுப்பாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஊட்டி,
ஆவின் பால் விலை உயா்வைக் கண்டித்து ஊட்டி, தலைக்குந்தா, மஞ்சூா், கூடலூா், குன்னூா், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் பா.ஜ.க.வினர் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஊட்டி ஏ.டி.சி. திடலில் நடந்த ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டத் தலைவா் மோகன்ராஜ் தலைமை தாங்கி பேசினார்.
அவர் கூறுகையில் ஆவின் பால் தமிழகத்தின் சமவெளி பகுதிகளில் 12 ரூபாயும், நீலகிரி மாவட்டத்தில் 16 ரூபாயும் விலை கூட்டப்பட்டுள்ளது. ஏற்கெனவே சொத்து வரி, மின்சார கட்டணம், உயா்த்தப்பட்டுள்ளது. தி.மு.க. தோ்தலின்போது வாக்குறுதி அளித்த இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 என்பது உள்ளிட்ட பெரும்பாலான வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்றாா்.
இதேபோல ஊட்டி வடக்கு மண்டல் சார்பாக தலைகுந்தாவில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிறப்பு விருந்தினராக மாவட்டத் துணைத் தலைவர் பாப்பண்ணன், மண்டல தலைவர் ஜெகதீஷ், எஸ்.டி. அணி மாவட்ட தலைவர் வினோத்குமார், விவசாய அணி மாவட்ட தலைவர் சஞ்சய், ஐடி பிரிவு மாவட்ட தலைவர் பாபு, இளைஞரணி துணைத் தலைவர் பிரம்மயோகன், வடக்கு மண்டல பொதுச்செயலாளர் நவநீதன், சிவ கணேஷ், சிவ நாகு, எஸ்டி அணி துணைத் தலைவர் ராமலிங்கன், விவசாய அணி துணைத் தலைவர் வினோதன், ரவி, சபிதா, போஜன், கணேஷ், ராஜேஷ், தேவராஜ், பாபு, யுவராஜ், ரஞ்சித் குமார், பாபு, லோகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
உதகை மேற்கு ஒன்றிய பாஜக சார்பில் எல்லநல்லி பஜாரில் மண்டல் தலைவர் ராஜ்குமார் மற்றும் மேற்கு ஒன்றிய சமூக ஊடக பிரிவு தலைவர் சந்தோஷ் குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட பொதுச் செயலாளர் பரமேஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார. இதில் மாவட்ட, மண்டல், அணி பிரிவு பொறுப்பாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- மசினகுடியில் பகுதியில் கரடிகள் நடமாட்டம் அதிகம் உள்ளது.
- பாதுகாப்பு உபகரணங்களுடன் வனப்பகுதிக்குள் சென்று கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.
கூடலூர்:
நீலகிரி மாவட்டம் முதுமலையில் உள்ள புலிகள் காப்பகத்தில் ஏராளமான புலிகள், யானைகள், கரடிகள் உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன.
இங்கு ஆண்டுக்கு இருமுறை வனவிலங்கு கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். பருவமழைக்கு முன்னரும், மழை ஓய்ந்த பின்னரும் என கணக்கெடுப்பு நடத்தப்படும்.
இந்த ஆண்டு பருவமழைக்கு பிந்தைய கணக்கெடுப்பு பணி இன்று தொடங்கியது. 100-க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர். அவர்கள் பாதுகாப்பு உபகரணங்களுடன் வனப்பகுதிக்குள் சென்று கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.
இன்று தொடங்கிய இந்த பணி வருகிற 20-ந் தேதி வரை நடைபெற உள்ளது. மசினகுடியில் பகுதியில் கரடிகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இதனால் அங்கு கணக்கெடுப்புக்காக சென்ற வன ஊழியர்கள் பாதுகாப்புக்காக கையில் தீப்பந்தங்களை ஏந்தி சென்றனர்.
- நீலகிரி மாவட்ட சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
- பெயா் மாற்று சான்று வழங்க ஜெயலட்சுமி ரூ.1, 800 லஞ்சம் கேட்டுள்ளாா்
நீலகிரி,
மஞ்சூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சிவகுமாா். இவா் கடந்த 2008ல் புதிதாக வாங்கிய தொழிலாளா் இல்லத்துக்கு பெயா் மாற்றம் செய்ய விண்ணப்பித்து, பெயா் மாற்று சான்று பெற கீழ்குந்தா நகர பஞ்சாயத்து அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றிய ஜெயலட்சுமி என்பவரை அனுகியுள்ளாா்.
பெயா் மாற்று சான்று வழங்க ஜெயலட்சுமி ரூ.1, 800 லஞ்சம் கேட்டுள்ளாா்.
இது குறித்து நீலகிரி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அதிகாரிகளிடம் சிவகுமாா் புகாா் அளித்தாா். அதிகாரிகளின் அறிவுறுத்தலின்பேரில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை ஜெயலட்சுமியிடம், சிவகுமாா் வழங்கினாா்.
அப்போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு போலீஸாா், லஞ்சம் பெற்ற ஜெயலட்சுமியை பிடித்தனா். இந்த வழக்கு நீலகிரி மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.
விசாரணை முடிவில் ஜெயலட்சுமி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
- விதிகளை மீறி இயங்கியதால் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
- 7 மீட்டா் உயரத்துக்கு மேல் கட்டிடம் கட்ட அனுமதி இல்லை உள்ளிட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், பேரிடா்கள் ஏற்படுவதைக் கருத்தில் கொண்டும் மாஸ்டா் பிளான் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
அதன்படி, வீட்டுக்கு என்று அனுமதி பெற்று தங்கும் விடுதி மற்றும் வணிக கட்டிடங்களாக மாற்றக் கூடாது, குடியிருப்புப் பகுதிகளில் தங்கும் விடுதிகள், வணிக கட்டிடங்கள், உணவகங்கள் கட்டக்கூடாது. 7 மீட்டா் உயரத்துக்கு மேல் கட்டிடம் கட்ட அனுமதி இல்லை உள்ளிட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.இந்த விதிகளைப் பின்பற்றாத கட்டிடங்களைக் கணக்கெடுத்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, ஆணையா் காந்திராஜன் உத்தரவின்பேரில் நகராட்சி கட்டிட ஆய்வாளா் மீனாட்சி மற்றும் நகராட்சிப் பணியாளா்கள் ஆய்வு செய்து விதிமுறைகளை மீறியதாக ஆல்ப்ஸ் ஹவுஸ் சாலையில் உள்ள பிரபல தனியாா் ஓட்டல், அப்பா் பஜாரில் ஒரு கட்டிடத்தில் இயங்கிய பேக்கரி மற்றும் கோத்தகிரி சாலையில் ஒரு கட்டிடம் என 3 கட்டிடங்களில் இயங்கிய 12 கடைகளுக்கு 'சீல்' வைத்தனா்
- ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்தே இந்த கேக் தயாரிப்பு விழா நடந்து வருகிறது.
- 25-வது ஆண்டாக ஜெம் பார்க் ஹோட்டலில் கேக் மிக்சிங் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஊட்டி
ஊட்டியில் உள்ள அனைத்து நட்சத்திர ஓட்டல்களிலும் கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் விழா ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் நடத்தப்படும்.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்தே இந்த கேக் தயாரிப்பு விழா நடந்து வருகிறது. இந்த விழாவில் சம்பந்தப்பட்ட ஓட்டல் ஊழியர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து இந்த கேக்கை தயாரிப்பார்கள்.
மைதா மாவுடன் உலர் திராட்சை, செர்ரி, வால்நட், பாதாம், பிஸ்தா உள்பட 30-க்கும் மேற்பட்ட பொருட்கள் ஒன்றாக கலக்கப்படும். அதனுடன் ரம், ஒயின் உள்ளிட்ட மது வகைகளும் கேக் கலவையுடன் ஒன்றாக கலக்கப்படும்.
பிறகு இந்த கலவையை குறைந்தது ஒரு மாதத்துக்காவது பாதுகாப்பாக வைத்து பின், கேக் தயாரிக்கப்படும். எவ்வளவுக்கு எவ்வளவு இந்த பொருட்கள் ஊறி வருகிறதோ அந்த அளவுக்கு கேக்கின் ருசியும் அதிகமாகும். இது கிறிஸ்துமஸ் விழாவுக்காகவே தயாரிக்கப்படும் கேக் என்பதால் இதற்கான விழா எப்போதுமே எல்லா நட்சத்திர ஓட்டல்களிலும் வெகு சிறப்பாக நடைபெறும்
அதன்படி 25-வது ஆண்டாக ஜெம் பார்க் ஹோட்டலில் கேக் மிக்சிங் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஓட்டலின் இருப்பிட இயக்குநர், சுரேஷ்நாயர் உணவு மேலாளர் பிரதீப்குமார், சிறப்பு செப் சுரேந்திரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஓட்டலின் முக்கிய வாடிக்கையாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இது குறித்து இருப்பிட இயக்குநர் சுரேஷ்நாயர், உணவு மேலாளர் பிரதீப்குமார் ஆகியோர் கூறியதாவது:-
தற்போது நடைபெறும் இந்நிகழ்ச்சியில் சுமார் 60 கிலோ எடையிலான முந்திரி, உலர் திராட்சை, அத்திப் பழம், பேரீச்சம் பழம், பாதாம், பிஸ்தா உள்ளிட்ட 30 வகை பருப்புகளுடன், 7 வகையான மது, அன்னாசிப்பூ, இலவங்கம், ஜாதிக்காய் உள்ளிட்ட மருத்துவ மூலிகைகளும் சேர்த்து கலக்கப்பட்டு, மூடிவைக்கப்பட்ட மரக்குடுவையில் 30 நாள்களுக்கு இருட்டறை யில் வைக்கப்படும். இதை அவ்வப்போது திறந்து கிளறியும் வைக்க வேண்டும்.
30 நாள்களுக்குப் பின்னர் இந்தக் கலவை யுடன் மைதா, முட்டை, நெய், தேன் உள்ளிட்டவற்றை சேர்த்து கேக் தயாரிக்க ப்படும். அப்போது 120 கிலோ எடையிலான கேக் கிடைக்கும். இது கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னர் விருந்தினர்களுக்கு வினியோகிக்கப்படும்.
ஐரோப்பியர்கள் தொடக்க காலத்தில் கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும்போது மது வகைகளை மட்டுமே அதிக அளவில் பயன்படுத்தினர். ஆனால், அவர்கள் இந்தியாவுக்குள் வந்த பின்னர்தான் இந்திய மசாலாப் பொருள்க ளையும் சேர்த்து கேக் தயாரிக்க ஆரம்பித்தனர். தற்போது ஐரோப்பிய நாடுகளில் இத்தகைய கேக் வகைகளே பிரதான இடத்தில் உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதேபோல ஊட்டியில் உள்ள பல்வேறு நட்சத்திர ஓட்டல்களிலும் கேக் மிக்சிங் நிகழ்ச்சி நடந்து வருகிறது.
- உரிய விலை கிடைக்குமா? என விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
- மழையால் தேயிலை உள்பட அனைத்து விவசாய பணிகளும் பாதிக்கப்பட்டது.
கூடலூர்
கூடலூர் பகுதியில் கடந்த சில மாதங்களாக தென்மேற்கு பருவமழை இடைவிடாமல் பெய்தது. இதன் காரணமாக தேயிலை உள்பட அனைத்து விவசாய பணிகளும் பாதிக்கப்பட்டது. மேலும் அதிக கனமழையால் பச்சை தேயிலை விளைச்சலும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக தொழிற்சாலைகளுக்கு பச்சை தேயிலை வரத்து குறைந்தது. இதற்கு ஏற்ப போதிய விலையும் கிடைக்காததால் பராமரிப்பு செலவினங்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலைக்கு சிறு விவசாயிகள் தள்ளப்பட்டனர்.
இதனால் பெரும்பாலான தோட்டங்கள் பராமரிப்பின்றி கைவிடப்பட்டது. இதனால் தொழிலாளர்களும் வேலை இழந்தனர். சில இடங்களில் சொற்ப வருவாயை கொண்டு விவசாயிகள் தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் மட்டும் வழங்கி வந்தனர்.
இதனிடையே போதிய சூரிய வெளிச்சம் இல்லாததால் தேயிலை செடிகள் கொப்புள நோய் தாக்குதலுக்கு உள்ளானது. இதனால் மகசூல் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக மழை இல்லாமல் பகலில் கடும் வெயில் காணப்பட்டது. தொடர்ந்து இரவில் பனிப்பொழிவு நிகழ்ந்தது. இருப்பினும் தேயிலை விளைச்சல் எதிர்பார்த்த வகையில் இல்லாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்தநிலையில் கடந்த 3 நாட்களாக கூடலூர் பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக செடிகளில் பச்சை தேயிலை மகசூல் பரவலாக அதிகரித்து உள்ளது. நேற்று மிதமான வெயில் தென்பட்டது. மழை மற்றும் வெயில் என இருந்ததால் தேயிலைச் செடிகளுக்கு ஏற்ற காலநிலை நிலவுகிறது. இதனால் பச்சை தேயிலை விளைச்சல் இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அதற்கு ஏற்ப தேயிலைக்கு நியாயமான விலை கிடைக்குமா? என விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்
- சாலையோரம் உள்ள மண் ஈரப்பதமாக காணப்படுகிறது.
- குன்னூர் பகுதியில் பரவலாக பெய்து வருகிறது.
ஊட்டி
ஊட்டியில் பலத்த மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் சாலையோரம் உள்ள மண் ஈரப்பதமாக காணப்படுகிறது. இதனால் காற்று வீசும்போது மரங்கள் விழுந்து வருகின்றன. இந்தநிலையில் நேற்று ஊட்டி அருகே சோலூர் டன்சான்டேல் சாலையில் ராட்சத மரம் முறிந்து விழுந்தது.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த ஊட்டி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மின்வாள் மூலம் மரத்தை துண்டு, துண்டாக வெட்டி அகற்றினர். 3 மணி நேரத்துக்கு பின்னர் போக்குவரத்து சீரானது. ஊட்டி-மஞ்சூர் சாலையில் மரம் விழுந்தது. இதனை தீயணைப்பு வீரர்கள் அப்புறப்படுத்தினர். ஊட்டியில் மழை குறைந்தது. குன்னூர் பகுதியில் பரவலாக பெய்து வருகிறது. எனவே, குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை உள்ளிட்ட மலைப்பாதையில் வரும் வாகனங்கள் மரங்களுக்கு அடியில் நிறுத்த வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். நேற்று மழை குறைந்ததால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது.
- போக்குவரத்து விதிமுறைகள் குறித்து போலீசார் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- விதிமுறைகளை பின்பற்றவில்லை எனில் அபராதம் விதிக்கப்படும்
கூடலூர்
கூடலூர் தாலுகா தேவர்சோலையில் போக்குவரத்து விதிமுறைகளை வாகன ஓட்டிகள் முறையாக பின்பற்ற கோரி போலீசார் மற்றும் தன்னார்வ அமைப்பினர் சார்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதற்கு போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் குமார் தலைமை தாங்கினார். தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வரும் நபர்களை பிடித்தனர்.
தொடர்ந்து குறைந்த விலைக்கு வழங்கி ஹெல்மெட் அணிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் வரும் நாட்களில் விதிமுறைகளை பின்பற்றவில்லை எனில் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்தனர். இதுபோல் ஏராளமானவர்களை பிடித்து அறிவுறுத்தினர். இதில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாமணி உள்ளிட்ட போலீசார் மற்றும் தன்னார்வ அமைப்பினர் கலந்துகொண்டனர்.
- மழை பாதிப்பை பார்வையிட்ட அமைச்சர் பொதுமக்களிடம் குறைகள் கேட்டறிந்தார்.
- மழையினால் பாதிப்புகள் ஏற்ப்பட்டால் உடனே சம்மந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொள்ளவேண்டும்
கோத்தகிரி,
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களாக மழையின் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டது. இதனால் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவுகள், மிளிதேன் அரசு உயர்நிலைப்பள்ளி தடுப்புச்சுவர் சேதம், ஓம்நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் ஏற்பட்டுள்ள விரிசல் ஆகியவற்றை அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது தொடர்ந்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மழையின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மக்கள் தங்களை கவனமுடன் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். ஏதேனும் மழையினால் பாதிப்புகள் ஏற்ப்பட்டால் உடனே சம்மந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொள்ளவேண்டும் என கூறினார். இந்த மழைபாதிப்புகள் குறித்த ஆய்வின் போது கோத்தகிரி வருவாய் வட்டாட்சியர் காயத்ரி, கோத்தகிரி ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன், அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் கோத்தகிரி அரசு பள்ளியில் வாக்காளர் அடையாள அட்டை திருத்தும் பணி நடைபெற்றதையும் அவர் பார்வையிட்டார்.
- பைக்காரா, கல்லட்டி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
- ஊட்டி, மஞ்சூர், குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
ஊட்டி,
நீலகிரி ஊட்டி, தொடர் மழை எதிரொலியாக நீலகிரியில் உள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது
நீலகிரி மாவட்டத்தில் நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கியது. தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது.
குறிப்பாக ஊட்டி, மஞ்சூர், குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பதிவாகி வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. வனப்பகுதிகளில் இருந்து தண்ணீர் பெருக்கெடுத்து அணைகளில் சேகரமாகி வருகிறது.
இதனால் அணைகளின் நீர்மட்டம் கிடு, கிடு வென உயர்ந்து வருகிறது. தற்போது தொடர் மழை பெய்வதால் சில அணைகள் நிரம்பும் தருவாயில் ரம்மியமாக காட்சி அளிக்கிறது. நீலகிரியில் மின்வாரியம் கட்டுப்பாட்டில், 13 அணைகள் உள்ளன. தற்போது 90 சதவீதம் வரை தண்ணீர் இருப்பு உள்ளது.
பைக்காரா அணையின் மொத்த கொள்ளளவான 100 அடியில், நீர்மட்டம் 88 அடியாகவும், 210 அடி கொள்ளளவு கொண்ட அப்பர்பவானி அணையின் நீர்மட்டம் 190 அடியாகவும், போர்த்திமந்து அணையின் மொத்த கொள்ளளவான 130 அடியில், நீர்மட்டம் 115 அடி ஆகவும், 171 அடி கொள்ளளவு கொண்ட அவலாஞ்சி அணையின் நீர்மட்டம் 162 அடி ஆகவும் உயர்ந்தது.
எமரால்டு அணையின் மொத்த கொள்ளளவான 184 அடியில் தற்போது நீர்மட்டம் 174 அடி, கெத்தை அணையின் மொத்த கொள்ளளவு 156 அடியில் நீர்மட்டம் 154 அடியாக அதிகரித்து உள்ளது. 18 அடி கொள்ளளவு கொண்ட முக்குறுத்தி அணையின் நீர்மட்டம் 16 அடியாகவும், காமராஜ் சாகர் அணையின் கொள்ளளவான 49 அடியில் 42 அடியாகவும், 89 அடி கொள்ளளவு கொண்ட பார்சன்ஸ்வேலி அணையின் நீர்மட்டம் 88 அடியாகவும், கிளன்மார்கன் அணையின் கொள்ளளவான 33 அடியில் 26 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது.
அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளதால், நிரம்பும் பட்சத்தில் பாதுகாப்பு கருத்தி உபரிநீர் வெளியேற்றப்படும். தொடர் மழையால் பைக்காரா மற்றும் கல்லட்டி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.






