search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு 4 நாளில் அறுவை சிகிச்சை- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
    X

    அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு 4 நாளில் அறுவை சிகிச்சை- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

    • கோர்ட்டு அனுமதியை தொடர்ந்து நேற்று இரவு முதல் காவேரி மருத்துவமனையில் அமைச்சர் செந்தில்பாலாஜி சிகிச்சை பெற்று வருகிறார்.
    • செந்தில்பாலாஜிக்கு ரத்தத்தை மெலிதாக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி சொந்த செலவில் விரும்பும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற கோர்ட்டு அனுமதித்தது.

    இந்த நிலையில் இன்று கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் இதுபற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:-

    கோர்ட்டு அனுமதியை தொடர்ந்து நேற்று இரவு முதல் காவேரி மருத்துவமனையில் அமைச்சர் செந்தில்பாலாஜி சிகிச்சை பெற்று வருகிறார்.

    அவருக்கு உடனடியாக செய்ய வேண்டிய சிகிச்சை தொடர்பான நடவடிக்கைகளை மருத்துவர்கள் எடுத்துள்ளார்கள். ரத்தத்தை மெலிதாக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சிகிச்சை இரண்டு அல்லது மூன்று நாட்கள் நடைபெறும். அதன் பிறகு தான் ஆபரேசன் செய்ய முடியும். இல்லாவிட்டால் அதிக அளவில் ரத்தம் வெளியேறி விடும். எனவே ஆபரேசன் நடைபெற இன்னும் 4 அல்லது 5 நாட்கள் ஆகலாம் என்றார்.

    பின்னர் அவரிடம் எய்ம்ஸ் மருத்துவ குழு வருவதாக கூறப்படுவது பற்றி கேட்டதற்கு கோர்ட்டில் வக்கீல் இளங்கோ தாராளமாக எய்ம்ஸ் மருத்துவ குழு வந்து பரிசோதித்து கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளார். தாராளமாக அவர்களும் வந்து பரிசோதிக்கட்டும் என்றார்.

    இந்த நிலையில் செந்தில் பாலாஜி உடல்நிலை குறித்து இன்று மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

    மூத்த டாக்டர் ஏ.ஆர்.ரகுராம் தலைமையிலான எங்கள் நிபுணர்கள் குழு அவரை பரிசோதித்தது.

    ஆரம்ப கால 'கரோனரி ஆர்டரி பைபாஸ் கிராப்ட்' அறுவை சிகிச்சைக்கு ஆலோசனை வழங்கிய அறுவை சிகிச்சை நிபுணர், அவர் மயக்க மருந்துக்கான உடற்தகுதியை மதிப்பிடுவதற்கு மேலும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு மதிப்பீட்டின் அடிப்படையில் அறுவை சிகிச்சைக்கு திட்டமிடப்படும்.

    தற்போது இதய கண்காணிப்புடன் ஐ.சி.யூ.வில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×