என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • மலர்களாலும், ஆபரணங்களாலும் அலங்காரத்துடன் அம்மன் காட்சியளித்தார்.
    • தீபாராதனை காண்பிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நேற்று ஆடி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீ நாகம்மா கோவிலில் சிறப்பு பூஜைகளும் கூழ் வார்த்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்.

    ஓசூர் சின்ன எலசகிரி காமராஜர் நகர் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ நாகம்மா கோவில் உள்ளது. இங்கு ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமை தினங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் நேற்று ஆடி மாதம மூன்றாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நாகம்மா கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

    முன்னதாக மூலவர் நாகம்மாவுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு மலர்களாலும், ஆபரணங்களாலும் அலங்காரத்துடன் அம்மன் காட்சியளித்தார். பின்னர் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு கூழ் படைத்து வழிபட்டனர்.

    தொடர்ந்து நாகம்மாவுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் குழந்தைகள் முதல் பெண்கள் பெரியவர்கள் என திரளான பக்தர்கள் வந்திருந்து அம்மனுக்கு கூழ் வார்த்து நேர்த்திக்கடன் செலுத்தி பிரசாதம் பெற்றுச் சென்றனர்.

    • 17 வயது சிறுவன் தனது மோட்டார் சைக்கிளை ரோட்டின் வழியில் நிறுத்தினார்.
    • 8 பேரை கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனபள்ளி அருகே கோணேகவுண்டனூர் ஜெயின்நகரைச் சேர்ந்தவர் முனியப்பன். இவரது மகன் சூர்யா (வயது18). இவர் சம்பவத்தன்று சிந்தகப்பள்ளி-நாரகப்பள்ளியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு தனது மோட்டார் சைக்கிளில் வந்தார்.

    கோவிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது சிந்தகப்பள்ளி அருகே வரும்போது அதேபகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் தனது மோட்டார் சைக்கிளை ரோட்டின் வழியில் நிறுத்தினார்.

    இதுகுறித்து சூர்யா அந்த சிறுவனிடம் தட்டிகேட்டார். அப்போது இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், சிறுவனின் தரப்பினரைச் சேர்ந்த வேலன் என்கிற வேலு (40), வேணுகோபால் (31), அப்பு என்கிற விஜய் ஆகியோர் சூர்யாவை தாக்கினர்.

    இதுகுறித்து சூர்யா மகாராஜா கடை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வேலன், வேணுகோபால் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

    இதேபோன்று 17 வயது சிறுவன் கொடுத்த புகாரின் பேரில் சூர்யா மற்றும் அவரது தரப்பினரைச் சேர்ந்த பிரசாந்த் (24), சம்பத் (48), முனியப்பன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இருதரப்பினர் மோதல் காரணமாக 8 பேரை கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
    • 16-ம் தேதி வரை விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்படும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    2023-24 ம் நிதியாண்டில் நாடு முழுவதும் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், சீர்மரபின பழங்குடியினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த 30 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 3093 மாணவ, மாணவியர்களுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் (மாணவ, மாணவியர்கள்) பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். https://yet.nta.ac.in என்ற இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள பள்ளிகளில் 9 அல்லது 11-ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்க வேண்டும். 9 மற்றும் 10 வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சம் ரூ.75 ஆயிரம் வரையிலும், 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரையிலும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். தேசிய தேர்வு முகமை நடத்தும் PM-YASASVI நுழைவுத் தேர்வில் பெற்ற தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இத்தேர்விற்கு வருகிற ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதிக்குள் மேற்காணும் இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், வருகிற ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்படும். எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, கல்வி உதவித்தொகை பெற்று பயனடைய கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார்.

    • அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, வளையல் அலங்காரம் செய்யப்பட்டது.
    • பக்தர்கள் அம்மனுக்கு கூழ் ஊற்றி வேண்டுதல் நிறைவேற்றினர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி பகுதியில் மூன்றாவது ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடப்பது வழக்கம். அதன்படி, நேற்று மூன்றாம் ஆடி வெள்ளி என்பதால், கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பெரிய மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, வளையல் அலங்காரம் செய்யப்பட்டது.

    இதே போல், ராசுவீதி துளுக்காணி மாரியம்மன் கோவில், ஜோதி விநாயகர் கோவில் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோவில், பழையபேட்டை நேதாஜி சாலையில் உள்ள சமயபுரத்து மாரியம்மன் கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வளையல் அலங்காரத்தில் அருள் பாலித்தனர்.

    மேலும், ஜக்கப்பன் நகரில் உள்ள ராஜகாளியம்மன் கோவில், அக்ரஹாரம் அம்பா பவானி கோவில் மற்றும் ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் உள்ள பெரியமாரியம்மன் கோவிலில், மேல்சோமார்பேட்டை ஸ்ரீயோகமாயா பிடாரி முண்டக கன்னி அம்மன் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    வெள்ளியையொட்டி பக்தர்கள் அம்மனுக்கு கூழ் ஊற்றி வேண்டுதல் நிறைவேற்றினர். இதே போல், மாவட்டம் முழுவதும் உள்ள அம்மன் கோயில்களில் நேற்று காலை சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உச்சநீதி மன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
    • காங்கிரசார் பட்டாசு வெடித்து , இனிப்பு வழங்கியும் மகிழ்ந்தனர்.

    ஓசூர்,

    அவதூறு வழக்கில், ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு தண்டனையை, உச்சநீதி மன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

    இதனை கொண்டாடும் வகையில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், ஓசூரில் காங்கிரசார் நேற்று பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் மகிழ்ந்தனர்.

    ஓசூர் எம்.ஜி.ரோட்டில் உள்ள காந்தி சிலையருகிலும், பஸ் நிலையத்திலும் நடந்த நிகழ்ச்சிகளுக்கு மேற்கு மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை தாங்கி காந்தி சிலைக்கு மாலையணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

    மாவட்ட பொருளாளர் மாதேஷ், மாநகர தலைவர் தியாகராஜன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட துணைத் தலைவர்கள் சிவப்ப ரெட்டி, கீர்த்தி கணேஷ் மகிளா காங்கிரஸ் தலைவி சரோஜா மற்றும் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

    • மாணவர் சேர்க்கை மேற்கொள்ள வருகிற 16-ந் தேதி வரை கால அவகாசம் நீட்டித்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    • புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 கூடுதலாக உதவி தொகை கிடைக்கும்.

    கிருஷ்ணகிரி,  

    ஓசூர் மற்றும் தேன்கனிக்கோட்டை அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் வருகிற 16ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் மற்றும் தேன்கனிக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் ஆகஸ்ட் 2023-24-ம் ஆண்டு காலியாக உள்ள தொழிற்பிரிவுகளுக்கு மாணவர் நேரடி சேர்க்கை மேற்கொள்ள கடந்த 1-ந் தேதி முதல் வருகிற 16-ந் தேதி வரை கால அவகாசம் நீட்டித்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    மேற்காணும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயில விரும்பும் பயிற்சியாளர்கள் தங்களது அசல் கல்வி சான்றிதழ்களுடன் வருகிற 16-ந் தேதிக்குள் நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி நேரடி சேர்க்கையில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    பயிற்சி காலத்தின் போது பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.750 உதவித்தொகையாக வழங்கப்படும். இதை தவிர விலையில்லா பாடப்புத்தகம், வரைபட கருவிகள், மடிகணினி, சீருடை, மிதிவண்டி, பேருந்து பயண அட்டை, ஷு ஆகியவை வழங்கப்படும். அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 கூடுதலாக உதவி தொகை கிடைக்கும்.

    ஆண் பயிற்சியாளர்களுக்கு விடுதி வசதி உண்டு. பெண் பயிற்சியாளர்களுக்கு அருகில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரி விடுதியில் தங்குவதற்கு பரிந்துரை செய்யப்படும். மேலும், பயிற்சி முடித்து செல்லும் பயிற்சியாளர்களுக்கு 100 சதவீதம் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படுகிறது.

    எனவே, தகுதியுள்ள அனைத்து மாணவ, மாணவிகளும் ஓசூர் மற்றும் தேன்கனிக்கோட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் விவரங்களுக்கு துணை இயக்குனர், முதல்வர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், ஓசூர் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 30 மேஜைகளில், 90 பணியாளர்கள் ஈடுபட்டனர்.
    • பழுதடைந்த எந்திரங்கள், பெங்களூருக்கு காவல்துறை பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட உள்ளது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக மின்னணு வாக்கு பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு பெட்டக அறை வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் முதல் நிலை சரி பார்க்கும் பணிகள், மாவட்ட தேர்தல் அலுவலர் கே.எம்.சரயு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    வருகிற 2024-ல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு பயன்படுத்தக்கூடிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் எந்திரங்கள், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரக் கிடங்கில் வைக்கப்பட்டுள்ளன.

    இந்த எந்திரங்களை சரிபார்க்கும் முதற்கட்ட பணி கடந்த மாதம் ஜூலை 4-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடைபெற்றது. இதனை தொடர்ந்து சரிபார்க்கப்பட்ட எந்திரங்கள் எவ்வாறு செயல்படுகிறது என்பதை பரிசோதிப்பதற்கான முதற்கட்ட மாதிரி வாக்குப்பதிவு 2 நாட்கள் நடந்தது. இதற்காக 5 சதவீத எந்திரங்கள் தேர்வு செய்யப்பட்டன.

    இதில் ஒரு சதவீத எந்திரங்களில் 1200 வாக்குகளும், 2 சதவீத எந்திரங்களில் 1000 வாக்குகளும், 2 சதவீத எந்திரங்களில் 500 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டன. இதற்காக 30 மேஜைகளில், 90 பணியாளர்கள் ஈடுபட்டனர். இந்த பணிகள் நிறைவு பெற்றவுடன் முதல் நிலை சரிபார்ப்பு பணியில் சரிவர செயல்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு, மாவட்ட வருவாய் அலுவலர், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. மேலும், முதல் நிலை சரிபார்ப்பில், பழுதடைந்த எந்திரங்கள், பெங்களூருவில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திற்கு காவல்துறை பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட உள்ளது, இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின் போது தேர்தல் தனி தாசில்தார் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • இவர்களுக்குள் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.
    • மனமுடைந்து காணப்பட்ட பிரித்திதேவி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் டவுன் ஓம்சாந்திநகரை சேர்ந்தவர் பிரித்திதேவி (வயது27), ரத்தோர் சாம்ஷா ஆகிய இருவரும் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் இவர்களுக்குள் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதில் மனமுடைந்து காணப்பட்ட பிரித்திதேவி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுபோதையில் அருகில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் குளித்தார்.
    • அப்போது நீரில் முழ்கி அவர் உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்து உள்ள தியாகரசன பள்ளி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா. கூலி தொழிலாளியான இவர் நேற்று மதுபோதையில் அருகில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் குளித்தார்.

    அப்போது நீரில் முழ்கி அவர் உயிரிழந்தார். இது குறித்து உத்தனப்பள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சீனிவாசனை, அவர்கள் 4 பேரும் சேர்ந்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து பொன்வண்ணனை கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது35). வசந்த்நகரை சேர்ந்த பொன்வண்ணன், பவித்ரன், மாதேஸ், சீனிவாசன். இவர்களுக்கும், சேகருக்கும் இடையே நிலப்பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் நேற்று சீனிவாசனை, அவர்கள் 4 பேரும் சேர்ந்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.

    இதில் படுகாயம் அடைந்த சேகர் ஓசூர் அட்கோ போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பொன்வண்ணனை கைது செய்தனர்.

    • காய்கறி விதைகள் இலவசமாக வழங்கும் முகாமை கலெக்டர் கே.எம்.சரயு தொடங்கி வைத்தார்.
    • காய்கறி விதைகளை, தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தோட்டக்கலைத்துறை சார்பில் அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று பொதுமக்கள், விவசாயிகளுக்கு ஆடிப்பட்ட காய்கறி விதைகள் இலவசமாக வழங்கும் முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு தொடங்கி வைத்தார். தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் பூபதி முன்னிலை வகித்தார்.

    பொதுமக்கள், விவசாயிகளுக்கு ஆடிப்பட்ட விதை தொகுப்பை வழங்கி கலெக்டர் பேசியதாவது:-

    மாவட்டத்தில் ஆடிப்பட்டத்தை முன்னிட்டு தோட்டக்கலைத்துறை மூலம் 5 ஆயிரம் ஆடிப்பட்ட காய்கறி விதைத் தொகுப்புகள் இலவசமாக வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஆடிப்பட்டத்தில் காய்கறி விதைத்து, தை மாதம் அறுவடை செய்யலாம், பயிர்களுக்கு தேவையான சூரிய ஒளி, பிராணவாயு, நல்ல மழை கிடைக்கும்.

    கோடைக்காலங்களில் இறுகி மண், ஆனி மழையில் தளர்ந்து காணப்படும். மண்ணின் ஈரப்பதத்தில் நுண்ணுயிர்கள், மண் புழு, நல்ல பாக்டீரியாக்கள் உருவாக தொடங்கும். இதனால் மண் செழிப்பதோடு விதைத்த பிறகு பயிர்களும் செழித்து அறுவடையை ஊக்குவிக்கிறது. பூச்சிகள் மற்றும் நோய்களின் தாக்கம் குறைவாக இருக்கும்.

    ஆடி மாதம், அவரை, கத்திரி, தக்காளி, மிளகாய், பாகற்க்காய், சுரைக்காய், பூசணிக்காய், முள்ளங்கி, வெண்டை, கொத்தவரை, பீர்க்கங்காய், கீரை, புடலங்காய், சாம்பல் பூசணி, முருங்கை உள்ளிட்டவை விதைக்கலாம். இந்த வகையான காய்கறி விதைகள், தற்போது இலவசமாக வழங்கப்படும் தொகுப்பில் உள்ளன. இதனை விவசாயிகள், வீட்டு காய்கறித்தோட்டம் அமைக்க விரும்பும் பொதுமக்கள் தொடர்புடைய தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார். 

    • ஓசூர் 43-வது வார்டு பகுதியில் மேயர் எஸ்.ஏ. சத்யா ஆய்வு செய்தார்.
    • குடிநீர் வசதிகளை சரியான முறையில் செய்து கொடுக்க வேண்டும் என அறிவுத்தினார்.

    ஓசூர், 

    ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட 43-வது வார்டில் ரூ. 2 கோடியே 50 லட்சம் மதிப்பிலும், 44 -வது வார்டில் 2.20 கோடி ரூபாய் மதிப்பிலும் மண் சாலையை தார் சாலையாக்கும் திட்டம் மற்றும் நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், மொத்தம் 4 கோடியே 70 லட்ச ரூபாய் மதிப்பில் தார் சாலைகள் மற்றும் சிமெண்ட் சாலைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

    ஓசூர் மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் தொடங்கப்பட உள்ளதால், அந்த பணிகள் மேற்கொள்ளப்படாத இடங்களில் மட்டும் சாக்கடை கால்வாய், மழை நீர் வடிகால் மற்றும் போர்வெல் அமைத்து கொடுக்கும் பணியும் நடந்து வருகிறது.

    இந்நிலையில் 43-வது வார்டுக்குட்பட்ட தீபம் நகர், தின்னூர், காவிரி நகர், வி.ஐ.பி., நகர், காமராஜ் காலனி மற்றும் 44-வது வார்டுக்குட்பட்ட அபிராமி கார்டன் கர்ணூர், பழைய மத்திகிரி, ஆகிய பகுதிகளில் மாநகராட்சி ஆணையாளர் சினேகா,பொறியாளர் ராஜேந்திரன் ஆகியோருடன் சென்று மாநகராட்சி மேயர் எஸ்.ஏ. சத்யா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது, அந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சாலைகள் தரம், அதன் உயரம், அகலம் குறித்து, சத்யா ஆய்வு செய்தார். மேலும் மக்களுக்கு தேவையான குடிநீர் வசதிகளை சரியான முறையில் செய்து கொடுக்க வேண்டும் எனவும் மாநகராட்சி அலுவலர்களுக்கு அவர் அறிவுத்தினார்.

    இந்த ஆய்வின் போது துணை மேயர் ஆனந்தய்யா, கவுன்சிலர் மஞ்சுளா முனிராஜ், உள்பட பலர் உடன் இருந்தனர்.

    ×