search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற  அழைப்பு
    X

    பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற அழைப்பு

    • மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
    • 16-ம் தேதி வரை விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்படும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    2023-24 ம் நிதியாண்டில் நாடு முழுவதும் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், சீர்மரபின பழங்குடியினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த 30 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 3093 மாணவ, மாணவியர்களுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் (மாணவ, மாணவியர்கள்) பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். https://yet.nta.ac.in என்ற இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள பள்ளிகளில் 9 அல்லது 11-ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்க வேண்டும். 9 மற்றும் 10 வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சம் ரூ.75 ஆயிரம் வரையிலும், 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரையிலும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். தேசிய தேர்வு முகமை நடத்தும் PM-YASASVI நுழைவுத் தேர்வில் பெற்ற தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இத்தேர்விற்கு வருகிற ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதிக்குள் மேற்காணும் இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், வருகிற ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்படும். எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, கல்வி உதவித்தொகை பெற்று பயனடைய கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×