என் மலர்
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி அருகே குடும்ப தகராறில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அடுத்த செம்படமுத்தூர் காலனியை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் சரத்குமார் (வயது 26).
இந்த நிலையில் இவருக்கும், மனைவிக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு வந்தது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சரத்குமார், வீட்டில் வைத்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி அடுத்த பர்கூர் அருகே குடும்ப தகராறில் மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி அடுத்த பர்கூர் அருகே கொட்டாவூர் கிராமத்தை சேர்ந்தவர் விவேகானந்தன். இவரது மனைவி அனிதா (வயது 29). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கணவன்& மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் மனமுடைந்த அனிதா, நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரியில் பெண்ணை தாக்கிய பெயிண்டரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி முருகன் நகரை சேர்ந்தவர் முருகேசன்,. இவரது மனைவி வள்ளி (வயது 42).
அதே பகுதியை சேர்ந்தவர் வசந்தகுமார் (வயது24), பெயிண்டர்.
இந்த நிலையில் வள்ளி குடும்பத்துக்கும், வசந்தகுமார் குடும்பத்துக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று வசந்தகுமார், வள்ளியிடம் தகராறு செய்து வாக்குவாதம் செய்தார். அப்போது ஆத்திரத்தில் அவர் வள்ளியை தகாத வார்த்தையால் பேசி மிரட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பெயிண்டர் வசந்தகுமாரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம ஓசூரில் தி.மு.க. நிர்வாகியின் ஓட்டல் காவலாளி கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சந்திராம்பிகை ஏரிக்கரையில் ஒரு ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலை கிருஷ்ணகிரியை சேர்ந்த தி.மு.க. நிர்வாகி கடலரசு மூர்த்தி நடத்தி வருகிறார்.
இவரது ஓட்டலில் திருவண்ணாமலை மாவட்டம் போளூரை சேர்ந்த தாமோதரன் (வயது 60) என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தாமோதரன், ஓட்டலில் படுத்து தூங்கினார். அப்போது நள்ளிரவில், ஓட்டலின் மேற் கூரை பிரித்து உள்ளே நுழைந்த மர்ம கும்பல், கல்லாவில் இருந்த ரூ.17 ஆயிரத்தை திருடினர்.
அப்போது சத்தம் கேட்டு தாமோதரன் விழித்து வந்து பார்த்தார். அங்கு மர்ம கும்பல் திருடுவதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் சத்தம் போட்டார். உடனே சுதாரித்து கொண்ட மர்ம கும்பல், தாமோதரனை தாக்கி அவரது கழுத்தில் கத்தியால் குத்தினர். இதில் அவர் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதற்கிடையே நேற்று காலை ஓட்டலுக்கு வந்த ஊழியர்கள், தாமோதரன் கொலை செய்யப்பட்டு கிடப்பதையும், பணம் திருட்டு போய் இருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே இதுபற்றி ஓசூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதைத்தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி, ஏ.டி.எஸ்.பி. ராஜூ மற்றும் ஓசூர் டவுன் போலீசார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
கொலை நடந்த இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும் அங்கிருந்த சிசிடிவி காமிரா காட்சிகளில் பதிவாகியிருந்த காட்சிகளை வைத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். தனிப்படை போலீசார், ஓசூர் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மற்றும் பெங்களூரு பகுதிக்கும் விரைந்துள்ளனர்.
கொலையாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் விரைவில் மர்ம கும்பலை பிடித்து கைது செய்து விடுவோம் என்று போலீசார் தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிரானைட் கற்கள் கடத்திய லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள எம்.பள்ளத்தூர் பகுதியில் லாரியில் அனுமதியின்றி கற்கள் கடத்து வதாக பர்கூர் தாசில்தார் அலுவலகத்திற்கு புகார் வந்தது. அந்த புகாரின் பேரில் தாசில்தார் பிரதாப் தலைமையில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அனுமதியின்றி கிரானைட் கற்கள் கடத்தி வந்த லாரியை மறித்து சோதனை செய்தனர். அதில் அனுமதியின்றி கிரானைட் கற்கள் கடத்தியது தெரியவந்தது. உடனே லாரியை ஓட்டி வந்த ஜெகதேவி அடுத்துள்ள சின்னபனகமுட்லு பகுதியை சேர்ந்த லட்சுமணன் (வயது23) என்பவரை பிடித்து மத்தூர் போலீசில் ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக மத்தூர் போலீசார் லட்சுமணனை கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த புள்ளிமான் மீட்கப்பட்டது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அருகே உள்ளது பூசாரிப்பட்டி. இங்கு அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து புள்ளிமான் ஒன்று நேற்று மாலை தண்ணீர் தேடி ஊருக்குள் வந்தது.
அப்போது புள்ளி மானை கவனித்த நாய்கள் அதை விரட்டியது. இதில் புள்ளி மான் காயம் அடைந்தது. இதை கவனித்த பொதுமக்கள் நாய்களிடம் இருந்து புள்ளிமானை மீட்டனர்.
பின்னர் அவர்கள் கிருஷ்ணகிரி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் வனத்துறையினரும், கால்நடை மருத்துவர்களும் வந்தனர். பின்னர் காயம் அடைந்த புள்ளி மானுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் புள்ளிமான் வனப்பகுதியில் விடப்பட்டது.
கிருஷ்ணகிரி மாட்டத்தில் மோட்டார் சைக்கிள் மீது கார்மோதி வாலிபர் பலினயார்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், நாகரசம்பட்டி அடுத்துள்ள வேடர்தட்டக்கல் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் சரவணன் (வயது24). இவர் நேற்று காவேரிப்பட்டணத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது வேலம்பட்டி என்ற இடத்தில் செல்லும் போது அந்த வழியாக எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே சரவணன் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்தி விட்டு கார் டிரைவர் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த நாகரசம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் பலியான சரவணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காவேரிப்பட்டணம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்பூர் அருகே குழந்தைகள், கணவன் இறந்த சோகத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆம்பூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் லோகேஸ்வரன். சென்னையில் உள்ள ஒரு ஐஸ்கிரீம் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
இவருடைய மனைவி மீனாட்சி. இவர்களது மகன் ஜஸ்வந்த் (வயது8). மகள் ஹரிபிரிதா (6). கள்ளூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்தனர். மீனாட்சியின் தாய்வீடு திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள கடாம்பூர் கிராமத்தில் உள்ளது.
கடந்த விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு மீனாட்சி தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் ஊத்தங்கரையில் இருந்து குடும்பத்தோடு கடாம்பூர் கிராமத்திற்கு வந்தார்.
கடந்த செப்டம்பர் மாதம் 10-ந்தேதி காலை லோகேஸ்வரன் தனது 2 குழந்தைகளுடன் கைலாசகிரி மலைக்கு சென்றார். அங்குள்ள மலையில் குழந்தைகளுடன் லோகேஸ்வரன் செல்போனில் போட்டோ எடுத்தார்.
தந்தையுடன் இருந்த குழந்தைகள் ஆர்ப்பரிப்புடன் மலை பகுதியில் நின்று போட்டோ எடுக்குமாறு கூறினர். குழந்தைகளின் ஆசையை நிறைவேற்ற பல்வேறு கோணங்களில் அவர்களை படம்பிடித்தார்.
பின்னர் அங்குள்ள சுப்பிரமணியசாமி கோவில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்றார். அந்த நேரத்தில் குழந்தைகள் ஜஸ்வந்த், ஹரிப்ரியா இருவரும் தவறி குளத்தில் விழுந்தனர்.
நீச்சல் தெரியாததால் குளத்தில் இருவரும் தத்தளித்தனர். அவர்களை லோகேஸ்வரன் காப்பாற்ற முயன்றார். ஆனால் முடியவில்லை. குழந்தைகள் இருவரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
குழந்தைகள் பலியான சோகத்தில் துக்கம் தாங்காமல் அன்று இரவு லோகேஸ்வரனும், மீனாட்சியும் அழுது துடித்தனர்.
குழந்தைகள் இல்லாமல் உயிர் வாழ மனம் இல்லாததால் லோகேஸ்வரன் தற்கொலை செய்ய முடிவு செய்தார். மறுநாள் வாணியம்பாடிக்கு சென்று பூச்சி மருந்து வாங்கி வந்தார்.
பின்னர் அவரது மனைவியை அழைத்துக்கொண்டு ஆம்பூர் ரெயில் நிலையத்திற்கு வந்தார். அங்கு வைத்து குளிர்பானத்தில் பூச்சி மருந்து கலந்து லோகேஸ்வரன் குடித்தார். இதனை கண்ட மீனாட்சியும் அந்த விஷத்தை குடிக்க முயன்றார். ஆனால் லோகேஸ்வரன் அதனை தட்டி விட்டார்.
என்னையும், குழந்தைகளையும் அடக்கம் செய்து விட்டு அதற்குப் பிறகு நீ ஏதாவது செய்து கொள் எனக் கூறினார். இதனால் பதறிப்போன மீனாட்சி அலறி கூச்சலிட்டார். அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் லோகேஸ்வரனை ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
கணவர், குழந்தைகளை இழந்த வேதனையுடன் கடந்த 6 மாதமாக மீனாட்சி வாழ்ந்து வந்தார். கணவன், குழந்தைகள் இல்லாமல் வெறுமனே வாழ்ந்து வந்த வாழ்க்கை அவரை வாட்டியது. இதனால் மன உளைச்சலில் இருந்த மீனாட்சி நேற்று மதியம் கடாம்பூரில் தன் தாய் சுமதி வீட்டில் மின்விசிறியில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உமராபாத் போலீசார் பிணத்தை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குழந்தைகள் கணவனும் இறந்த துக்கத்தில் அடுத்த 6 மாதத்தில் மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே சின்னாறு அணையில் மூழ்கி மீன் பிடி தொழிலாளி பலியானார்.
சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே போகிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி (வயது 60). மீன்பிடி தொழிலாளி.
இவர் நேற்று இரவில் சின்னாறு அணையில் மீன் பிடிப்பதற்காக சென்றார். அப்போது லாரி டியூப்பில் ஏறி நீரில் சென்று மீன்களை பிடித்து கொண்டிருந்தார்.
இதில் திடீரென அவர் தண்ணீரில் மூழ்கினார். நீச்சல் தெரியாததால் துரைசாமி, தண்ணீரில் மூழ்கி பலியானார்.
இந்த நிலையில் காலை வரை துரைசாமி, வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து துரைசாமி, சின்னாறு அணையில் மூழ்கி பலியானது தெரிய வந்தது.
பின்னர் சூளகிரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் பரிசலில் மூலம் சென்று துரைசாமி உடலை மீட்டனர்.
இதுகுறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் துரைசாமி உடலை பிரேத பரிசோதனைக்காக சூளகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மீன்பிடி தொழிலாளி, சின்னாறு அணையில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சூளகிரி அருகே இன்று ஓடும் லாரியில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் டிரைவர் உயிர் தப்பினார்.
சூளகிரி:
ஒசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சூளகிரி அருகே கோபசந்திரம் என்ற இடத்தில் இன்று அதிகாலை 4-. 30 மணி அளவில் அட்டை பாரம் ஏற்றிய லாரி சென்று கொண்டிருந்தது.
லாரியை கர்நாடகா மாநிலம் ரேச்சூர் சேர்ந்த பங்காளியப்பா (வயது 55) என்பவர் ஓட்டி வந்தார்.
அப்போது திடீரென ஓடும் லாரியில் தீப்பிடித்தது. தீ குபுகுபு என்று பிடித்து புகையுடன் வந்ததால் சாலையில் வாகனங்களில் சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே டிரைவர் பங்காளியப்பாவிடம் தெரிவித்தார்.
இதை அறிந்த அவர் லாரியை சாலையோரமாக நிறுத்தினார். பின்னர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.
அதன் பேரில் விரைந்துதீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இருப்பினும் லாரியில் இருந்த அட்டைகள் பாதிக்கு மேல் எரிந்து சேதமானது.
இதுகுறித்து சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊத்தங்கரை அருகே டிராக்டரில் மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள காரபட்டு பகுதியில் மணல் கடத்துவதாக ஊத்தங்கரை போலீசாருக்கு வந்த தகவலின் பேரில் சப்& இன்ஸ்பெக்டர் பால கிருஷ்ணன் மற்றும் போலீஸார் காரப்பட்டு மற்றும் பாம்பாறு ஆற்று படுக்கை அருகே ரோந்து சென்று சோதனை செய்ததில் டிராக்டரில் மூட்டை கட்டி மணல் கடத்துவது தெரிய வந்தது.
மணல் கடத்தி கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் காரப்பட்டு பகுதியை சேர்ந்த செல்வம் (வயது 39) என தெரிய வந்தது.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மணல் கடத்திய செல்வத்தை கைது செய்தனர். மேலும் மணலுடன் டிராக்டரை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
ஓசூர் மாநகராட்சியின் துணை மேயர் பதவியை கைப்பற்ற, ராகுலை சந்தித்து பேச காங்கிரஸ் நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி தேர்தலில், தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 3 வார்டுகளில் போட்டியிட்டு, 1 வார்டை கைப்பற்றி உள்ளது. இந்தநிலையில், துணை மேயர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு விட்டுத் தருமாறு, முன்னாள் எம்.எல்.ஏ.கோபிநாத் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தி வருவதாக செய்திகள் பர பரப்பாக அடிபடுகின்றன.
ஓசூர் மாநகராட்சி துணை மேயர் பதவியை, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் கவுன்சிலரும், தற்போது 33-வது வார்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள் ளவருமான இந்தி ராணிக்கு வழங்கவேண்டும் என்று முன்னாள் ஓசூர் எம்.எல்.ஏ.கோபிநாத் தலைமையில் கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் , நாளை (28-ந்தேதி) சென்னைக்கு வரும் ராகுல் காந்தியை, கோபிநாத் தலைமையில் நேரில் சந்தித்து, துணை மேயர் கோரிக்கையை ராகுல் காந்தியின் கவனத்திற்கு கொண்டு செல்ல கட்சி நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். இந்த பதவியை கேட்டு காங்கிரஸ் கட்சி வலியுறுத்துவதால், துணை மேயர் கனவில் உள்ள தி.மு.க.கவுன்சிலர்கள் கலக்கம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.
ஓசூர் மாநகராட்சி துணை மேயர் பதவியை காங்கிரஸ் தட்டிச்செல்லுமா அல்லது தி.மு.க.வே அந்த பதவியில் அமருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.






