என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே நடந்த ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் தம்பி போலீசில் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே அந்திவாடி பகுதியில்   உதயகுமார் என்ற ரியல் எஸ்டேட் அதிபர் .இவர் நேற்றுமுன்தினம் மர்ம கும்பலால்  வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து மத்திகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் அவரது தம்பி சரவணன் (வயது29) என்பவர் மத்திகிரி போலீஸ் நிலையத்தில், ஒரு புகார்  மனு அளித்துள்ளார். அதில் தனது அண்ணன் உதயகுமாரை, அந்திவாடி கிராமத்தை சேர்ந்த முனி எல்லப்பா என்பவரது  மகன் நாகராஜ் அறிவுரையின்படி அதே பகுதியை சேர்ந்த  முரளி மற்றும்  வேணு ஆகியோர் முன் விரோத காரணமாக வெட்டிக் கொலை செய்துள்ளனர்.

    கொலை நடந்த இடத்தில் நான் ஓடி வந்து பார்த்த போது முரளி மற்றும் வேணு ஆகியோர் நாகராஜ் வீட்டிற்கு பக்கம் ஓடி ஒளிந்துகொண்டனர்.

    இவர்கள் 3 பேரையும் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு  அந்த புகாரில் சரவணன் குறிப்பிட்டுள்ளார்..

    அதன்பேரில் தலை மறைவாக உள்ள 3 பேரையும் மத்திகிரி  போலீசார் தேடி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே மோட்டர் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலியானார்.
    கிருஷ்ணகிரி:

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்டார் வட்டம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி(வயது 44). கூலி தொழிலாளி. 

    இவர் கடந்த மாதம் 28-ந்தேதி தனது மோட்டார் சைக்கிளில் பர்கூர் & ஜெகதேவி சாலையில் உள்ள அக்ர ஹாரம் பகுதியில் சென்று கொண்டிருந்துள்ளார். 

    அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். 

    இது குறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலியானார்.
    தருமபுரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்துள்ள கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது35). இவர் தேங்காய் உரிக்கும் தொழிலாளி.

    இந்த நிலையில் நேற்று அரசம்பட்டியில் தேங்காய் உரித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது ஓலைப்பட்டி கூட்டு ரோடு அருகே வந்த போது எதிரே வந்த பைக் எதிர்பாராதவிதமாக கோவிந்தராஜ் மீது மோதியது. 

    இதில் படுகாயம் அடைந்த கோவிந்தராஜை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை கோவிந்தராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து கல்லாவி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை ஆலயத்தில் சாம்பல் பூசும் திருநாள் சிறப்பு திருப்பலி நடந்தது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி நடந்த தவக்காலத்திற்கான சாம்பல் பூசும் திருநாள் சிறப்பு திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

    ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்படுகின்ற தவக்காலத்தின் துவக்க நாளாக, சாம்பல் புதன் உள்ளது. இந்த நாளில் நடத்தப்படுகின்ற சிறப்பு திருபலி பூஜையில், கிறிஸ்தவர்கள் அனைவரும் பங்குபெற்று தங்களுடைய நெற்றியில் சாம்பலை, சிலுவை அடையாளமாக வைத்துக்கொண்டு தவநாட்களை அனுஷ்டிக்க துவங்குகிறார்கள்.

    அதன்படி, நேற்று கிருஷ்ணகிரி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள தூய பாத்திமா அன்னை திருத்தலத்தில், தவக்காலத்திற்கான சாம்பல் புதன் திருநாள் சிறப்பு திருபலி நடந்தது. இந்த சிறப்பு திருப்பலியை, திருத்தல பங்குத்தந்தை அருட்திரு.இசையாஸ் அவர்கள் முன்னின்று நடத்தினார். 

    இதில் அனைத்து கிறிஸ்தவ மக்களும் கலந்துக்கொண்டு தங்களுடைய நெற்றியில் சாம்பலை வைத்துக் கொண்டு, தங்களுடைய தவமுயற்சிகளை துவங் கினார்கள். தவக்காலத்தை அனுஷ்டிப்பவர்கள் அசைவ உணவுகள், போதை பொருட்களை தவிர்த்து சுத்த போஜனம் கடைபிடிக்க வேண்டும் எனவும், தங்களிடம் உள்ள தீய பழக்கங்களை களைவதற்கு இந்த தவநாட்களை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டனர். 

    இதே போல் சுண்டம்பட்டி, எலத்தகிரி, புஷ்பகிரி, கந்திகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிறிஸ்துவ அலயங்களில் தவக்கால சாம்புல் புதன் சிறப்பு திருப்பலிகள் நடந்தது.

    கிருஷ்ணகிரி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பொங்கல் வைத்து பெண்கள் வழிபாடு நடத்தினர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி பழையபேட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் மகா சிவராத்திரி திருவிழழ நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று மகா சிவராத்திரியை முன்னிட்டு, காலை அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டு, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

    மாலை 6 மணிக்கு  அங்குரார்ப்பணம், முளைப்பாரி எடுத்தல், யாகசாலை பிரவேசம், அக்னிமுகம், மகா கணபதி ஹோமம், அஷ்ட திக்பாலகர் பரிவார பூஜையுடன், 100க்கும் மேற்பட்ட பெண்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து, படையலிட்டு வழிபட்டனர்.

    இதே போல், நேற்று மஹா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, கிருஷ்ணகிரி பழையபேட்டை கவீஸ்வரர் கோயிலில், மாலை 6 மணிக்கு சிறப்பு யாகத்துடன் பூஜைகள் நடந்தது. 

    காவேரிப்பட்டணம் பூங்காவனத்தம்மன் கோயில், பன்னீர் செல்வம் தெரு அங்காளம்மன் கோயில், திம்மாபுரம் அங்காளம்மன் கோயில் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து ஈஸ்வரன் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. நாளை காலை சூலம் போடுதல் நிகழ்ச்சியும், அம்மன் மயான சூறைக்கு புறப்படுதலும் நடைபெற உள்ளது.
    கிருஷ்ணகிரி மகராஜ கடை அருகே அரசு பள்ளி விடுதி சமையலர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    ருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜகடை அடுத்த சிந்தகம்பள்ளி கிராமத்தை சேர்ந்த முனிராஜ் (வயது35) என்பவர் ஊத்தங்கரை அரசு பள்ளி விடுதியில் சமையலராக, பணியாற்றி வந்தார். 
    -
    இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே குடும்ப தகராறில் இருவரும் பிரிந்து தனித்தனியாக வசித்து வந்தனர். இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட முனிராஜ், நேற்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மகாராஜகடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 5 புதிய 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் 5 புதிய 108 ஆம்புலன்ஸ் வாகனங் களை மாவட்டகலெக்டர் டாக்டர் ஜெயசந்திரபானுரெட்டி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதுகுறித்து கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி கூறிய தாவது:

    கிருஷ்ணகிரி மாவட் டத்தில் இதுவரை மக்கள் சேவைக்காக 2 பச்சிளம் குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை வாகனம், 3 வெண்டிலேட்டர், டிபிரிலேட்டர் (மேம்படுத் தப்பட்ட அவசர சிகிச்சை உயிர் காக்கும் கருவிகள்) உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்ட வாகனம் மற்றும் 1 இருசக்கர வாகனம் உள்ளிட்ட 108 ஆம்புலன்ஸ்  வாகனங்கள் 30 இயக்கப்பட்டு வருகிறது. மேலும், நேற்று புதியதாக வரப்பெற்ற 5 வாகனங்கள் என மொத்தம் 35 ஆம்புலன்ஸ் வாகனங்கள் பொதுமக்களின் சேவைக்காக பயன்படுத்தப்படும்.

    புதியதாக வரப்பெற்ற 5 ஆம்புலன்ஸ் வாகனங்கள் சிங்காரப்பேட்டை, காரப்பட்டு, ஆலப்பட்டி, பாகலூர் மற்றும் கெலமங்கலம் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலை யங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு மக்களின் சேவைக்காக இயக்கப்பட உள்ளது. 

    இனிவரும் காலங்களில் விபத்து, தாய்சேய் நலம் மற்றும் அவசர சிகிச்சைக்காக பொதுமக்கள் தங்குதடையின்றி முழுமையாக 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில், இணை இயக்குநர் (நலப்பணிகள்)  பரமசிவன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்)  கோவிந்தன், 108 வாகன ஒருங்கிணைப்பாளர்கள் ராமன்கனி,  டைட்டஸ்,  வினோத் மற்றும் கிருஷ்ணகிரி வட்டாட்சியர் சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.

    ஊத்தங்கரை அருகே வனவிலங்குகளை வேட்டையாட சென்ற வாலிபர்கள், போலீசாரை பார்த்ததும் தப்பிவிட்டனர். அவர்கள் விட்டுச்சென்ற நாட்டுத்துப்பாக்கி&செல்போனை வைத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மூங்கிலேரி கிராமம் முதல் மண்ணாடிப்பட்டு செல்லும் சாலையில் நேற்று இரவு ஊத்தங்கரை சப்& இன்ஸ்பெக்டர் குட்டியப்பன்  தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

     அப்போது மூங்கிலேரி அடுத்த மண்ணாடிப்பட்டி காப்பு காட்டு சாலையோரம் செல்லும் போது, 2 மோட்டார் சைக்கிளில் 4 வாலிபர்கள் வந்தனர்.

    அவர்கள் வழியில் போலீசார் நிற்பதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டு விட்டு 4 வாலிபர்களும் தப்பி ஓடி விட்டனர்.

    இதையடுத்து போலீசார், அந்த 2 மோட்டார் சைக்கிள்களையும் சோதனை செய்தனர். அப்போது ஒரு நாட்டு துப்பாக்கி, மற்றும் முகத்துக்கு பொருத்தும் டார்ச், 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

    தப்பி ஓடிய 4 வாலிபர்களும் யார்?, அவர்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என்று தெரிய வில்லை? இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

    4 வாலிபர்களும், வனப்பகுதிக்குள் சென்று வனவிலங்குகளை வேட்டையாடி வருபவர்கள் என்று போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் காட்டுக்கு செல்லும் வழியில் போலீசாரை பார்த்ததும் மிரண்டு போய் நாட்டுதுப்பாக்கி, செல்போன்கள், 2 மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு தப்பி ஓடியது தெரிய வந்தது.

    இதுகுறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம்  ஊத்தங்கரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே பிளஸ்&1 மாணவன் மாயம் மாயமாகி உள்ளார்.
    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் ஹரிமனாத் (வயது16). இவர் அப்பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். 

    இந்த நிலையில் ஹரிமனாத் கடந்த மாதம் 5-ந்தேதி அன்று மதியம் வீட்டை வீட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இது குறித்து மாணவனின் தந்தை சக்திவேல் போச்சம் பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி வழக்கு பதிவு செய்து மாயமான பள்ளி மாணவன் ஹரிமனாத்தை தேடி வருகிறார்.
    ஓசூரில் கார் டிரைவர் குத்திக்கொலை செய்யப்பட்டார்.
    ஓசூர்:

    ஓசூர் அருகே அந்திவாடியை சேர்ந்த நாகராஜ் என்பவரது மகன் உதயகுமார் (வயது32). இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    இந்தநிலையில், நேற்று நள்ளிரவு அந்திவாடியில் ஒதுக்குப்புறமான பகுதியில், சிலருடன் மது அருந்தியதாக கூறப்படுகிறது. 

    அப்போது ஏற்பட்ட தகராறில், உதயகுமாரை கத்தியால் குத்திவிட்டு, அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதில், உதயகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

    இது குறித்து தகவல் அறிந்த மத்திகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முன்வி ரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும், உதயகுமார் மீது, மத்திகிரி காவல்நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன என்பதும், இவர் ஓசூரை சேர்ந்த பிரபல ரவுடி கஜா என்பவரின் நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
    ஓசூரில் ஒட்டல் காவலாளி கெலையில் கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
    ஓசூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 60). இவர், ஆவலபள்ளியில் உள்ள மகள் செல்வி வீட்டில் தங்கி ஓசூர் கமர்சியல் சாலை பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். கடந்த 25-ந்தேதி ஓட்டலின் மேற்கூரையை பிரித்து உள்ளே புகுந்த கொள்ளை கும்பல் கல்லாப்பெட்டியில் திருட முயன்றது. 

    இதையறிந்த தாமோதரன் சத்தம் போட்டதால் அந்த நபர்கள் கத்தியால் காவலாளியை சரமாரியாக குத்திக்கொலை செய்தனர். பின்னர் அவர்கள்  ஓட்டல் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.17 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர். இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில் கொள்ளையர்களை பிடிக்க ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு (கலால்) சிவலிங்கம் தலைமையில், ஓசூர் டவுன், ஓசூர் அட்கோ, சூளகிரி, தேன்கனிக்கோட்டை, மகாராஜகடை மற்றும் மத்தூர் ஆகிய 6 போலீஸ் நிலையங்களை சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி உத்தரவிட்டார். அதன்பேரில் தனிப்படை போலீசார் ஓசூர் சுற்றுவட்டாரத்திலும் மற்றும் பெங்களூரு பகுதியிலும் கொள்ளை கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரி விருவிழா நடைபெற்றது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி பழையபேட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மகா சிவாரத்திரி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி நேற்று காலை ஹோமவிதான புன்யாஹ வாசனம், துவாஜா ரோஹணம், கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகளுடன் கோயில் வளாகத்தில் கொடி ஏற்றப்பட்டது. 


    கோவில் திருப்பணி பணியாளர்களுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு அங்குரார்ப்பணம், முளைப்பாரி எடுத்தல், யாகசாலை பிரவேசம், அக்னிமுகம், மகா கணபதி ஹோமம், அஷ்ட திக்பாலகர் பரிவார பூஜையுடன் அம்மனுக்கு பொங்கல் வைக்கப்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு பொங்கல் வைத்து படையலிட்டு வழிபட்டனர். இன்று (1ம் தேதி) மஹா சிவராத்திரியும், நாளை (2ம் தேதி) சூலம் போடுதல் நிகழ்ச்சியும், அம்மன் மயான சூறைக்கு புறப்படுதல் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

    ×