என் மலர்
கிருஷ்ணகிரி
- அரிசி ஆலை, மாவு மில்களில் சோதனையிட்டனர்.
- மில் உரிமையாளர் ராஜாவை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கோவை மண்டல உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி தமிழக - கர்நாடக மாநில எல்லையில் அத்திப்பள்ளி சாலையில் அமைந்துள்ள டி.வி.எஸ்., சோதனை சாவடியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் காய்கறி வண்டிகளிலும் ரேஷன் அரிசி கடத்துவதாக வந்த புகாரையடுத்து அந்த வாகனங்களையும் சோதனையிட்டார்.
சேலம் உட்கோட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் விவகானந்தன், சப்&இன்ஸ்பெக்டர்கள் தென்னரசு, முரளி ஆகியோர் நேற்று காவேரிப்பட்டணம் பகுதிகளில் அரிசி ஆலை, மாவு மில்களில் சோதனையிட்டனர். இதில் சவூளூர் கூட்டு ரோடு அருகில் உள்ள ராஜா என்கிற நிப்பட்ராஜா (வயது 50) என்பவருக்கு சொந்தமான மாவுமில்லில் பதுக்கப்பட்டிருந்த, 38 ரேஷன் அரிசி மூட்டைகள் மற்றும், 10 கோதுமை மூட்டைகள் மற்றும், 59 மூட்டையில் இருந்த அரிசி மாவு உள்ளிட்டவைகளை கைப்பற்றி, மில் உரிமையாளர் ராஜாவை கைது செய்தனர். அதேபோல குண்டலப்பட்டியை சேர்ந்த சங்கர் (48) என்பவரது மாவுமில்லில் இருந்த, 150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு அவரையும் போலீசார் கைது செய்தனர்.
- மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது.
- ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை என பல்வேறு இடங்களில் நடக்கிறது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:&
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நாளை (ஞாயிற்றுக்கிழமை) 1,300 மையங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது.
காலை, 7 மணி முதல் மாலை, 7 மணி வரை நடக்கும் முகாமில், இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள், இரண்டாவது தவணை செலுத்திக்கொள்ள வேண்டியவர்கள் பயனடையும் வகையில் தடுப்பூசி முகாம் காலை ஒரு இடத்திலும், மாலை வேறு இடத்திலும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள வார்டு பகுதிகள், ஊராட்சி மற்றும் கிராம பகுதிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை என பல்வேறு இடங்களில் நடக்கிறது.
இந்த வாய்ப்பினை பொது மக்கள் அனைவரும் பயன்படுத்தி கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். இதில், 12 வயத்திற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மேலும் பூஸ்டர் டோஸ் செலுத்த வேண்டியவர்களும் பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
- கிருஷ்ணகிரி நோக்கி வந்த கார் ஒன்று மோதி நின்றது.
- சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியாயினர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட பர்கூர் அருகில் உள்ள சின்னபர்கூர் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீசன்(38). இவர் கிருஷ்ணகிரி சென்னை தேசிய நெடுங்சாலையில் பர்கூர் அடுத்த அங்கிநாயனப்பள்ளி அருகே உள்ள மேல்கொட்டாய் பகுதியில் டீ கடை நடத்தி வருகிறார்.
இவரது நண்பர்களாக சின்னபர்கூர் ரோடு பகுதியை சேர்ந்த பாக்யராஜ்(40), பர்கூர் கோவிந்தசெட்டி தெருவை சேர்ந்த சுஜீத்குமார்(39), நேரு நகரை சேர்ந்த கண்டவீரவேல்(35) ஆகியோர் மாலை நேரத்தில் ஜெகதீசன் டீ கடைக்கு சென்று, அங்கிருந்து கிருஷ்ணகிரி சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரம் நடைபயிற்சி மேற்கொள்வதை வழக்க மாக வைத்திருந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று மாலை 5.30 மணியளவில் இவர்கள் 4 பேரும் கிருஷ்ணகிரி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அங்கிநாயனப்பள்ளி பஸ் ஸ்டாப் அருகில் நடந்து சென்று கொண்டி ருந்துள்ளனர். அப்போது வேலூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்த கார் ஒன்று தறிகெட்டு ஓடி, நடைபயிற்சி மேற்கொண்டிருந்த இவர்கள் 4 பேர் மீதும் மோதி, சாலையோரம் உள்ள பள்ளத்தில் நின்றது. இதில் பாக்யராஜ், சுஜீத்குமார், கண்டவீரவேல் ஆகியோர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியாயினர்.
படுகாயம் அடைந்த ஜெகதீசனை அங்கிருந்த வர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவரும் வழி யிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த பர்கூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிரிழந்த 3 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் நடத்திய விசாரணையில், விபத்தை ஏற்படுத்திய காரை ஓசூர் மூக்காண்டப்பள்ளியை சேர்ந்த தணிகைமலை(40) என்பவர் ஓட்டி வந்ததும், அவர் பெங்களூர் ஏர்போர்ட்டிற்கு வந்தவர்களை அழைத்து வர வேலூரில் இருந்து சென்றதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து தணிகை வேலை கைது செய்த போலீசார், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த பாக்யராஜ் உள்ளிட்ட 4 பேரும் எப்போதுமே ஒன்றாகவே நடைப்பயிற்சி செல்வார்களாம்.இந்த கோர விபத்து சாவிலும் அவர்களை ஒன்றாக மரணிக்க வைத்துவிட்டது என்று அவர்களது உறவினர்கள் சோகத்துடன் தெரிவிக்கின்றனர்.
- ஒரு வாரமாக முகாமிட்டு தீவிர சோதனை நடத்தி வருகிறார்.
- தப்பியோடிய லாரி டிரைவர் பர்கத்தை தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக ரேஷன் அரிசி அதிகளவில் கடத்தப்படுவதாக வந்த புகாரையடுத்து உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி., ஆபாஸ்குமார் உத்தரவுப்படி போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி கிருஷ்ணகிரி பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக முகாமிட்டு தீவிர சோதனை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த, ஜூலை, 12-ந் தேதி ஓசூர் - பாகலூர் சாலை, ஜி.மங்கலம் அருகே லாரியில், 50 கிலோ அளவிலான, 600 மூட்டைகளில் கடத்திய, 30 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதில், காரிமங்கலத்தை சேர்ந்த சபீர் (வயது 38), பிலால் (32) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய லாரி டிரைவர் பர்கத்தை தேடி வருகின்றனர்.
இதில் தொடர் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் சபீரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டுபாலாஜி பரிந்துரைத்தார். இதையடுத்து சபீரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ஜெய சந்திரபானு ரெட்டி உத்தரவிட்டார். குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சபீர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் கூறுகையில், தொடர் ரேஷன் கடத்தலில் ஈடுபடும் மேலும் சிலரும் விரைவில் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உள்ளதாக தெரிவித்தனர்.
- இணை மானிய திட்ட பயிற்சி நடந்தது.
- தொழில் முனைவோருக்கு உறு துணையாக இருக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் இணை மானிய திட்ட பயிற்சி நேற்று நடந்தது. இதை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தொடங்கி வைத்து பேசியதாவது: -
மாவட்டத்தில் பர்கூர், காவேரிப்பட்டணம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய ஒன்றியங்களில் உலக வங்கி நிதியுதவியுடன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் ஊராட்சி பகுதிகளில் தொழில் முனைவோர்களை உருவாக்கி வருகிறது.
வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் வழங்கப்படும் இணை மானிய திட்டத்தினை ஊரகப் பகுதிகளில் உள்ள தொழில்முனை வோர்களுக்கு வங்கி கடன் வழங்கி, ஊரக பகுதிகளில் வேலை வாய்ப்பு பெருக்கிட வங்கியாளர்கள் தொழில் முனைவோருக்கு உறு துணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பயிற்சியில் மாவட்ட செயல் அலுவலர் தமிழ்மாறன், நபார்டு உதவி பொது மேலாளர் ஜெய்பிரகாஷ், முன்னோடி வங்கி மேலாளர் மகேந்திரன், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் பிரசன்ன பாலமுருகன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அமீர்பாஷா, தாட்கோ பொது மேலாளர் யுவராஜ் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் செயல் அலுவலர்கள் பிரதீப்குமார், ஜெய்குமார், சிவலிங்கம், முத்துகுமார் மற்றும் இளம் வல்லுனர் ஆனந்த், திட்ட பணியாளர்கள் மற்றும் வங்கியாளர்கள் கலந்து கொண்டனர்.
- கடந்த 24-ந்தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
- சிகிச்சை பலனின்றி வெங்கடேஷ் நேற்று இரவு உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் சரகம் ரெயில்வே காலனி பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மகன் பிரகாஷ் (வயது 23). குடும்ப தகராறில் மனமுடைந்த பிரகாஷ் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து பிரகாஷின் மனைவி வள்ளி தந்த புகாரின்பேரில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல காவேரிப்பட்டினம் போலீஸ் சரகம் ஏ .ராஜகுட்டை பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் (19) என்ற வாலிபர் தீராத தலைவலியால் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகாமல் கடந்த 24-ந்தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கடேஷ் நேற்று இரவு உயிரிழந்தார். இதுகுறித்து காவேரிப்பட்டினம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
- பாண்டவர்களின் மூத்தவரான தர்மருக்கு பட்டாபிஷே முடிசூட்டு விழாவும் நடைபெற்றன.
- ஊர் பொதுமக்கள் சார்பாக காலை முதல் மாலை வரை சிறப்பு அன்னதானமும் நடைபெற்றது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள களர் பதி பகுதியில் 30 நாட்களாக நடைபெற்ற மஹாபாரத சொற்பொழிவு நிறைவு நாளை முன்னிட்டு 500-க்கும் மேற்பட்ட பெண்கள் செவ்வாடையணிந்து ஊர்வலமாக சென்று முனியப்பன் கோவில் வளாகத்தில் இருந்து ஊரின் முக்கிய வீதி வழியாக கேரளா செண்டை மேள தாளம் முழங்க பால் குடம் சுமந்து திரவுபதியம்மன் கோவிலுக்கு சென்றனர்.
அங்கு சிவகுருக்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு பாலாபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பாண்டவர்களின் மூத்தவரான தர்மருக்கு பட்டாபிஷே முடிசூட்டு விழாவும் நடைபெற்றன.
இவ்விழாவில் திரவுபதியம்மனை ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இத்துடன் ஊர் பொதுமக்கள் சார்பாக காலை முதல் மாலை வரை சிறப்பு அன்னதானமும் நடைபெற்றது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா கோவிந்தராஜ், ஊர் மூப்பர் சீனிவாசன், ஊர் நாய்க்கர் கணேசன், ஊர் கவுண்டர் அண்ணாமலை, களர்பதி ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயந்தி புகழேந்தி, துணைத் தலைவர் தமிழ்செல்வி கருணாநிதி மற்றும் ஊர் பொதுக்கள் ஒருங்கிணைந்து செய்தனர்.
- அணையின் பிரதான 3 மதகுகள் மற்றும் 3 சிறிய மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
- தரைப்பாலத்தை மூழ்கடித்தப்படி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதே போல கர்நாடகாவிலும் பலத்த மழை பெய்து வருவதால் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இன்று அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 209 கனஅடி நீர் வந்தது. அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 2 ஆயிரத்து 20 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.
அணையின் முழு கொள்ளளவு 44.28 அடி ஆகும். தற்போது அணையில் நீர் இருப்பு 42.64 அடியாக உள்ளது.
அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால், தாழ்வான பகுதிகளிலும், கரையோரத்திலும் மற்றும் அணையை சுற்றியுள்ள பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வருவாய்த்துறையினர் ஒலிபெருக்கி மூலம் அபாய எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கெலவரப்பள்ளி அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றின் வழியாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு வரக்கூடிய நீரின் அளவும் படிப்படியாக அதிகரித்து வருகிறது.
இன்று காலை 6 மணி அளவில் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரத்து 735 கனஅடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 7 ஆயிரத்து 549 கனஅடி வீதம் தண்ணீர்திறக்கப்பட்டது.
இந்த நிலையில் நீர்மட்டம் 52 அடியை எட்டி அணை நிரம்பியது. இதையடுத்து அணையில் இருந்து வினாடிக்கு 7,549 கன அடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டது.
அணையின் பிரதான 3 மதகுகள் மற்றும் 3 சிறிய மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால், அணை பூங்காவிற்கு செல்லும் தரைப்பாலத்தை மூழ்கடித்தப்படி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.
உபரிநீர் திறப்பால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் தென் பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. யாரும் ஆற்றை கடக்கவோ, குளிக்கவோ கூடாது என்று பொதுப்பணித்துறையினர், வருவாய் துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
- ரூ.50 ஆயிரம் கடனுக்கு வட்டி சேர்த்து ரூ.1 லட்சம் தரவேண்டும் என்று அருளை தொந்தரவு செய்துள்ளார்.
- மோட்டார்சைக்கிளையும் பறித்து சென்று விட்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் போலீஸ் சரகம் பெரமலூர் பகுதியை சேர்ந்தவர் அருள் (வயது 35). இவர் தங்கவேல் மற்றும் அவரது மகன் துரை ஆகியோரிடம் ரூ,50 ஆயிரம் கடனாக வாங்கியுள்ளார்.
அந்த பணத்தை கடந்த 2017-ல் ரூ.30 ஆயிரம் மற்றும் 2022-ல் ரூ.20 ஆயிரம் என்று 2 தவணையில் திருப்பிக்கொடுத்துள்ளார். ஆனால் ரூ.50 ஆயிரம் கடனுக்கு வட்டி சேர்த்து ரூ.1 லட்சம் தரவேண்டும் என்று அருளை தொந்தரவு செய்ததுடன் அவரது மோட்டார்சைக்கிளையும் பறித்து சென்று விட்டனராம்.
இது குறித்து அருள் தந்த புகாரின்பேரில் மத்தூர் போலீசார் கந்து வட்டி தடை சட்டப்படி தங்கவேல், துரை 2பேர் மீதும் வழக்கு பதிந்து துரையை கைது செய்தனர்.
- கஞ்சா விற்றபோது போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
- சுமார் 1,500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடியாக கஞ்சா விற்பனை குறித்து சோதனை மேற்கொண்டனர். கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் சரகம் கிருஷ்ணசாமி தெரு பகுதியை சேர்ந்த சுதர்சன் (வயது 22) என்பவர் பாப்பாரப்பட்டி பகுதியில் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர் ரோந்து சென்றபோது கஞ்சா விற்று சிக்கினார்.
கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் சரகம் பெருமாள் நகர் பகுதியில் ஏசாஸ் (36) என்பவர் கஞ்சா விற்றுக்கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டார். தலைப்பள்ளி பகுதியில் ஸ்ரீதர்(23) என்பவர் கஞ்சா விற்று பிடிபட்டார்.
காவேரிப்பட்டினம் போலீஸ் சரகம் தென்பெண்ணை ஆற்று பகுதியில் சரத்குமார் (24) என்பவர் கஞ்சா விற்றபோது கைது செய்யப்பட்டார். இதேபோல பர்கூர் போலீஸ் சரகம் கொடியூரில் நாகராஜ்(62) என்பவர் கஞ்சா விற்றபோது போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இவர்களிடமிருந்து சுமார் 1,500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
- கல்லூரி மாணவர் மாயமாகிவிட்டதாக அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் செய்தனர்.
- தோப்பு ஒன்றில் பூச்சிமருந்தை குடித்துவிட்டு கோவிந்தன் இறந்து கிடந்தார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகேயுள்ள தொகரப்பள்ளி ஆடாளம் பகுதியை சேர்ந்த கோவிந்தன் (வயது 18) என்ற கல்லூரி மாணவர் மாயமாகிவிட்டதாக அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் செய்தனர்.
அதன் பேரில் போலீசார் அவரை தேடிவந்த நிலையில் அதே பகுதியில் உள்ள தோப்பு ஒன்றில் பூச்சிமருந்தை குடித்துவிட்டு கோவிந்தன் தற்கொலை செய்துகொண்டு பிணமாக கிடந்தது தெரியவந்தது.
அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார் அவர் தற்கொலை செய்துகொண்டது ஏன் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
- இந்த மாநிலங்களின் எல்லையருகே இருப்பதால், இங்கும் வரலட்சுமி நோன்பு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
- கலசம் வைத்தும் பூக்களால் அலங்கரித்தும், பூஜை பொருட்களை வைத்தும் வழிபாடு நடத்தினர்.
ஓசூர்,
சுமங்கலிப்பெண்கள் சிறப்பாக கொண்டாடும் வரலட்சுமி நோன்பு இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, பெண்கள் விரதம் இருந்து பண்டிகையை கொண்டாடினார்கள்.
வரலட்சுமி பண்டிகையை, கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலத்தில் பெண்கள் விமரிசையாக கொண்டாடுவது வழக்கம்.
கிருஷ்ணகிரி மாவட்டம், இந்த மாநிலங்களின் எல்லையருகே இருப்பதால், இங்கும் வரலட்சுமி நோன்பு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
பண்டிகையையொட்டி, பெண்கள் வீடுகளை அலங்கரித்து, வாசலில் மாவிலை தோரணம் கட்டி அலங்கரித்தனர்.
தொடர்ந்து பூஜை அறையில் வரலட்சுமி அம்மனை அலங்கரித்து வைத்து, கலசம் வைத்தும் பூக்களால் அலங்கரித்தும், பூஜை பொருட்களை வைத்தும் வழிபாடு நடத்தினர்.
மேலும், சுமங்கலி பெண்களை வீட்டிற்கு அழைத்து மஞ்சள்,குங்குமம், பழம், தேங்காய் ஆகிய தாம்பூல பொருட்களையும் மற்றும் துணியையும் வழங்கி மகிழ்ந்தனர்.






