என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • பசுமாடு கடா கன்றுகுட்டியை ஈன்றது.
    • அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த கோட்டானூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (62).

    விவசாயியான இவர் தனது விவசாய நிலத்தில் கொட்டகை அமைத்து அதில் இரண்டு பசு மாடுகளை வைத்து பராமரித்து வருகிறார்.

    இந்நிலையில் பசுமாடு கடா கன்றுகுட்டியை ஈன்றது. குட்டி வெளியேறி சில நிமிடங்களில் உயிரிழந்தது. இதையடுத்து பசு மீண்டும் பிரசவ வலியால் துடித்தது.

    மீண்டும் ஒரு கடா கன்று குட்டியை ஈன்றது. இக்கன்றுகுட்டிக்கு இரண்டு தலைகள் இருந்ததால் அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.

    பின்னர் சில நிமிடங்களில் அந்த குட்டியும் உயிரிழந்தது. இரண்டு தலையுடன் கூடிய கன்று குட்டியை அக்கம்பக்கத்தினர் ஆர்வத்துடன் வந்து பார்த்துவிட்டு சென்றனர். பின்னர் இரு கன்றுகளையும் அடக்கம் செய்தனர்.

    • ஆதார் விவரங்கள் சரிபார்த்து செய்வது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • புதுப்பித்தால் மட்டுமே ஊக்கத்தொகை தொடர்ந்து கிடைத்திடும்.

    ராயக்கோட்டை,

    கெலமங்கலம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) ஜான்லூர்து சேவியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பிரதம மந்திரி கிஷான் கவுரவ நிதி திட்டத்தின் கீழ் நிலமுள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம், வேளாண் இடுபொருட்கள் வாங்குதல் மற்றும் வேளாண்மை தொடர்பான செலவினங்கள் மேற்கொள்ள ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் கெலமங்கலம் வட்டாரத்தில் 15 ஆயிரத்து 828 விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.

    இதுவரை இந்த திட்டத்தில் பதிவு செய்த தேதியின் அடிப்படையில், விவசாயிகளுக்கு 11 தவணை வரை ஊக்கத்தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது விவசாயிகள் 12-வது தவணை தொகை பெறுவதற்கு ஆதார் விவரங்கள் சரிபார்த்து செய்வது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பிரதம மந்திரி கிஷான் கவுரவநிதி திட்டத்தின் கீழ் இதுவரை கெலமங்கலம் வட்டாரத்தில் 7 ஆயிரத்து 414 விவசாயிகள் மட்டுமே ஆன்லைன் பதிவு மூலம் புதுப்பித்துள்ளனர். மீதமுள்ள 8 ஆயிரத்து 414 விவசாயிகள் வருகிற 31-ந் தேதிக்குள் இ.கே.ஒய்.சி முறையில் ஆன்லைன் பதிவு மூலம் புதுப்பித்தால் மட்டுமே தொடர்ந்து ஊக்கத்தொகை கிடைக்கும்.

    பிரதம மந்திரி கவுரவ நிதி திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் அனைவரும் ஆன்லைன் பதிவு மூலம் புதுப்பித்திட தங்களது ஆதார் அட்டையுடன் இ&சேவை

    மையத்தையோ அல்லது தபால் அலுவலகத்தையோ அணுகி, தங்களது விரல் ரேகை மூலம் பதிவு செய்து புதுப்பித்து கொள்ள வேண்டும். இந்த முறையில் பாரத பிரதமரின் கவுரவ நிதி திட்ட விவசாயி கள் தங்கள் ஆதார் எண் விவரங்களை வருகிற 31-ந் தேதிக்குள் பதிவேற்றம் செய்து புதுப்பித்தால் மட்டுமே ஊக்கத்தொகை தொடர்ந்து கிடைத்திடும் என்பதை தெரி வித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது.
    • அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மாரண்டப்பள்ளி ஊராட்சியை சேர்ந்த மைதாண்டப்பள்ளியில் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாம் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.

    முகாமில் 53 பயனாளிகளுக்கு சமுக நலபாதுகாப்பு, உழவர் பாதுகாப்பு, உட்பிரிவு பட்டா மாறுதல், பட்டா மாறுதல், வேளாண்மை துறை , தோட்டகலை துறை, புதிய குடும்ப அட்டை உள்பட ரூ.6 லட்சத்து 31 ஆயிரத்து 780 செலவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    ஒசூர் வருவாய் கோட்டாட்சியர் தேன்மொழி, சூளகிரி வட்டாட்சியர் அனிதா, ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை சிவராஜ் மற்றும் வருவாய் அலுவலர் ரமேஷ் , கிராம அலுவலர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • காற்றில் பறந்து சென்ற மேற்கூரையை சீரமைத்து தர வேண்டும்.
    • மழை நீர் படுவதால் சுவற்றில் மின்சாரம் தாக்கும் நிலையும் உள்ளது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதூர் புங்கனை கிராமத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையம் சுமார் 25 குழந்தைகளுடன் நடத்தப்பட்டு வருகிறது.

    இங்கு காற்றில் பறந்து சென்ற மேற்கூரையை சீரமைத்து தர வேண்டும் எனக் கூறி ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கும், வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் மனு அளித்தும் இதுவரை சீரமைத்து தரப்படவில்லை.

    பச்சிளம் குழந்தைகள் கொளுத்தும் வெயிலிலும், மழையிலும், மேற்கூரை இல்லாத அங்கன்வாடி மையத்தில் சுவற்றின் ஓரம் அஞ்சி நடுங்கி படிக்கும் அவலம் ஏற்படுள்ளதாக கூறப்பட்டுகிறது.மழைக்காலங்களில் மின் மீட்டர் பொருத்தியுள்ள பகுதியில் மழை நீர் படுவதால் சுவற்றில் மின்சாரம் தாக்கும் நிலையும் உள்ளது.

    மேலும் குழந்தைகளுக்கு சமைக்கக்கூடிய அரிசி பருப்பு, உப்பு போன்றவைகளும் மழையால் நனைந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் மழைநீர் தேங்கி இருப்பதால் தரையில் அமர்ந்து படிக்க முடியாத நிலையும் உள்ளது.

    இதனால் அங்கன்வாடி மையத்தை உடனடியாக சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    இது தொடர்பாக ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்பு கொண்டபோது உடனடியாக குழந்தைகளை மாற்று கட்டிடத்திற்கு மாற்றுவதாகவும், விரைவில் புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.

    • இலவச ஆடுகள் வழங்கும் விழா ஜெக்கேரி ஊராட்சி சின்னட்டி அருகே நடந்தது.
    • 100 சதவிதமானியத்தில் வெள்ளாடுகள், செம்மறியாடுகள் வழங்கினார்.

    ராயக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஒன்றியத்தில் உள்ள 28 ஊராட்சிகளில் மொத்தம் 100 பயனாளிகளுக்கு இலவச ஆடுகள் வழங்கும் விழா ஜெக்கேரி ஊராட்சி சின்னட்டி அருகே நடந்தது. நிகழ்ச்சிக்கு மண்டல இணை இயக்குனர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். உதவி இயக்குனர் இளவரசன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

    இதில் சிறப்பு விருந்தினராக தளி சட்டமன்ற உறுப்பினர் டி.ராமச்சந்திரன் கலந்துகொண்டு ஏழ்மை நிலையில் உள்ள விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண் பயனாளிகளுக்கு 100 சதவிதமானியத்தில் வெள்ளாடுகள், செம்மறியாடுகள் வழங்கினார்.

    அவர் பேசும்போது பெண்களை தொழில்முனைவோராக உருவாக்க அரசு திட்டம் வகுத்து செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் கெலமங்கலம் பேரூராட்சி தலைவர் கே.பி.தேவராஜ், கால்நடை மருத்துவர்கள் ரவிசந்திரன், மாதேஷ், வெங்கட் சுப்பிரமணி,தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சின்னராஜ், ஸ்ரீதர்,சி.பி.ஐ. ஜெயராமன், ஊராட்சி மன்றத் தலைவர் ஜெக்கேரி ராஜேஷ்குமார் உட்பட ஊராட்சி தலைவர்கள், கவுன்சிலர்கள், கால்நடை துறை அதிகாரிகள் கலந்துகொண்டார்கள்.

    • மாடியிலிருந்து கீழே விழுந்து இறந்து கிடந்தார்.
    • வீடுகளில் புகுந்து திருடுவதையே தொழிலாக வைத்திருந்துள்ளார்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே நேற்று அதிகாலை சுமார் 18 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மின்கம்பியில் உரசி ஒரு வீட்டின் மாடியிலிருந்து கீழே விழுந்து இறந்து கிடந்தார்.

    இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் இறந்து கிடந்த வாலிபர் சூளகிரி பகுதியை சேர்ந்த பாட்ஷா என்பவரது மகன் மன்சூர் (வயது 18) என்பது தெரிய வந்தது. இவர் அருகேயுள்ள மாது என்பவரது வீட்டு மாடியிலிருந்து விழுந்து இறந்திருந்தார். இவர் எதற்காக அந்த வீட்டு மாடியில் ஏறினார்? என்று போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது. மன்சூர் வீடுகளில் புகுந்து திருடுவதையே தொழிலாக வைத்திருந்துள்ளார். அவ்வாறு மாது என்பவரின் வீட்டில் திருட சென்றபோது அவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.

    • 2 காட்டு யானைகள் தமிழக வனப் பகுதிக்கு வந்துள்ளன.
    • மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    வேப்பனப்பள்ளி

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள சிகரளபள்ளி சுற்றுவட்டார வன பகுதிகளில் கடந்த 3 மாதமாக மூன்று காட்டு யானைகள் முகாமிட்டிருந்தன.

    இந்த காட்டு யானைகளை சில நாட்களுக்கு கர்நாடக வனப்பகுதிக்கு தமிழக வனத்துறையினர் விரட்டி அடித்தனர். இந்த நிலையில் கர்நாடக வனப்பகுதியில் இருந்து 2 காட்டு யானைகள் தமிழக வனப் பகுதிக்கு வந்துள்ளன.

    சின்னதாமன்டரப்பள்ளி கிராம வனப்பகுதியில் 2 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் வனப்பகுதியை ஒட்டியுள்ள சின்னதமன்றபள்ளி, திம்மசந்திரம், கொங்கனப்பள்ளி, பூதிமுட்லு, கே.கொத்தூர், தோட்டகணவாய், சிகரமாகனபள்ளி ஆகிய கிராம மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் இரவு நேரங்களில் வனப்பகுதிக்கு வரவேண்டாம் எனவும் விளை நிலைகளில் தங்க வேண்டாம் என்றும் ஆடு, மாடு மேய்ப்பவர்கள் யாரும் வனப்பகுதி வர வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் அந்த காட்டு யானைகளை தீவிரமாக கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் தமிழக வனத்துறை சார்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • தீ விபத்து அதிகாலையில் நடந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
    • பட்டாசு கடை உரிமையாளர் வடிவேலு சிவகாசிக்கு சென்றுள்ளதால் தீ பற்றி எரிந்த கடையில் நாசமான பட்டாசுகளின் மதிப்பு தெரியவில்லை.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், பெங்களூரு-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை அருகே வைஷ்னவி நகர் பிரதான சாலையில் நிரந்தர மற்றும் தற்காலிக பட்டாசு கடைகள் இயங்கி வருகின்றன.

    இந்நிலையில், இந்த பகுதியில் வடிவேல் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடையும், உள்ளது. இவர் வேலூர் மாவட்டத்தில் உரிமம் பெற்று இங்கு வந்து கடை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. வேலூர் மாவட்ட உரிமம் என்றால் சுமார் 1500 கிலோ வரை இருப்பு வைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த கடையில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அதிகாலை 4 மணி அளவில் ஏற்பட்ட இந்த திடீர் தீ விபத்தால் கடை முழுவதும் பட்டாசுகள் வெடித்து புகைமூட்டமாக காணப்பட்டது. அப்போது அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் பார்த்து உடனடியாக ஓசூர் மாநகராட்சி தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. இதையடுத்து ராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மேலும் மூன்று தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு சுமார் 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் எரிந்து கொண்டிருந்த பட்டாசு கடையை சுற்றிலும் அதிகமான குடியிருப்புகள் மற்றும் உணவகங்கள், தேநீர் கடைகள், தனியார் மருத்துவமனை என அமைந்துள்ளது.

    இந்த பகுதி எப்போதும் அதிக அளவில் மக்கள் கூடும் இடமாக உள்ளது. இந்த தீ விபத்து அதிகாலையில் நடந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    இந்த பட்டாசு கடை உரிமையாளர் வடிவேலு சிவகாசிக்கு சென்றுள்ளதால் தீ பற்றி எரிந்த கடையில் நாசமான பட்டாசுகளின் மதிப்பு தெரியவில்லை.

    பட்டாசு கடை உரிமையாளர் வந்த பிறகு தான் வெடித்து சிதறிய பட்டாசுகளின் முழுமையான மதிப்பு தெரியவரும். இருப்பினும், சேதமதிப்பு பல லட்ச ரூபாய் அளவில் இருக்கும் என தெரிகிறது.

    முதற்கட்ட விசாரணையில் மின்கசிவின் காரணத்தால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

    இந்த விபத்து காரணமாக ஓசூர் டி.எஸ்.பி. அரவிந்த் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் மேற்கொண்டு இருபுறமும் சாலைகளில் தடுப்புகள் அமைத்து பொதுமக்களை அனுமதிக்காமல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வாகனங்களை மாற்று பாதையில் திருப்பி அனுப்பி வைத்தனர்.

    இந்த தீ விபத்து காரணமாக, அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


    • விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை வீட்டு வாசலில் நிறுத்தியிலிருந்துள்ளார்.
    • மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தார்.

    கிருஷ்ணகிரி,

    ஓசூர் சிப்காட் அருகேயுள்ள காமராஜ்நகர் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 22). இவர் தனது விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை வீட்டு வாசலில் நிறுத்தியிலிருந்துள்ளார்.

    நேற்று காலை பார்த்தபோது அந்த வண்டியை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து ஓசூர் சிப்காட் போலீசில் பார்த்திபன் புகார் தந்தார்.

    அதன் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பட்டு வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தார். அப்போது பார்த்திபனின் இருசக்கர வாகனத்தை திருடியது திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த நரேஷ்குமார். அவனது கூட்டாளிகளான ஆந்திர மாநிலம் குப்பத்தை சேர்ந்த நந்திகேசன்,ஓசூர் சிப்காட் பகுதியை சேர்ந்த விக்னேஷ் ஆகியோர்தான் என்பது தெரியவந்தது.

    அவர்களை கைது செய்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தார். கைதான 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • வீட்டு மனைகள், விளை நிலங்களிலும் மழை நீர் சூழ்ந்துள்ளது.
    • சூளகிரி -பேரிகை சாலையில் கழிவு நீர் கால்வாய் இல்லாததால் மழை நீர் ஓடி சாலை சேதமடைகிறது.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டாரங்களில் சில நாட்களாக மாலை வேலைகளில் மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதியில் உள்ள விளை நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதியில் மழை நீர் தேங்கி வருகிறது.

    நேற்று மாலை முதல் விடிய விடிய நல்ல மழை பெய்ததால் சூளகிரி-பேரிகை சாலை பகுதியில் உள்ள கே.கே.நகர் பகுதியிலும் குடியிருப்பு முன் பகுதி ஓரமாக உள்ள நர்சரி, வீட்டு மனைகள், விளை நிலங்களிலும் மழை நீர் சூழ்ந்துள்ளது.

    சூளகிரி -பேரிகை சாலையில் கழிவு நீர் கால்வாய் இல்லாததால் மழை நீர் ஓடி சாலை சேதமடைகிறது. இந்த சாலையில் கழிவு நீர் கால்வாய் உடனே கழிவு நீர் கால்வாய் கட்டவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    • வீட்டை விட்டு கோபித்துக்கொண்டு வெளியே சென்றவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    ஓசூர் அருகேயுள்ள பாகலூர் பகுதியை சேர்ந்தவர் உமேஷ் (வயது 30). இவர் குடும்ப தகராறு காரணமாக வீட்டை விட்டு கோபித்துக்கொண்டு வெளியே சென்றவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை.

    இதுகுறித்து அவரது சகோதரி மம்தா தந்த புகாரின்பேரில் பாகலூர் போலீசார் வழக்கு பதிந்து மாயமான உமேஷை தேடி வருகின்றனர்.

    • சுமார் 6 மணி முதல் 8 மணி வரை பலத்த மழை கொட்டி தீர்த்தது.
    • நாடுவணபள்ளி கிராமத்தில் பெய்த கனமழையால் இப்பகுதியில் தண்ணீர் செல்ல முடியாமல் தெருக்களில் தேங்கி நின்றது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை சுமார் 6 மணி முதல் 8 மணி வரை பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

    இந்த நிலையில் தொடர் கனமழை பெய்து வந்ததால் வேப்பனப்பள்ளியில் இருந்து ஆந்திர மாநிலம் குடிப்பள்ளி செல்லும் சாலையில் வேப்பனப்பள்ளி ஊராட்சி தொடக்கப்பள்ளி முன்பு தரை மேம்பாலத்தின் கீழ் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் செல்ல முடியாமல் தேங்கி நின்றது.

    இதனால் இப்பகுதியில் சாலையில் இடுப்பளவு தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் குடிப்பள்ளி வேப்பனபள்ளி சாலையில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக சாலையில் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றது.

    இதனால் இப்பகுதியில் கடுமையான போக்குவரத்து வசதி ஏற்பட்டது. பின்பு அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் சிலர் சாலையில் தேங்கி நின்ற அடைப்பு ஏற்பட்டு இருந்ததையடுத்து மாற்றுவழிகள் தண்ணீர் செல்வதற்கு வழி செய்த பின்பு 2 மணி நேரத்திற்கு மேல் பின்பு தண்ணீர் படிப்படியாக குறைந்தது.

    இடுப்பளவு தண்ணீர் தேங்கி நின்றதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த சென்றதால் இப்பகுதியில் கடுமையான போக்குவரத்து ஏற்பட்டது.

    இந்த நிலையில் நாடுவணபள்ளி கிராமத்தில் பெய்த கனமழையால் இப்பகுதியில் தண்ணீர் செல்ல முடியாமல் தெருக்களில் தேங்கி நின்றது.

    தொடர்ந்து கனமழை பெய்து வந்த நிலையில் 20-க்கு மேற்பட்ட வீடுகளில் மழைநீர் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் தங்கள் உடைமைகளை எடுத்து கொள்ள முடியாமல் இரவு முழுவதும் தூங்க முடியாமல் அவதிப்பட்டனர்.

    மேலும் சிலர் வீடுகளில் மழை நீர் புகுந்ததால் வீடுகளை பூட்டிவிட்டு ஒரு நேர வீடுகளுக்கு சென்று உள்ளனர். காலையில் ஊர் மக்கள் தகவல் தெரிவித்த பின்பு வேப்பனப்பள்ளி தி.மு.க. ஒன்றியச் செயலாளராக ரகுநாத் மற்றும் பள்ளி ஒன்றிய குழு தலைவர் சரோஜினி பரசுராமன், ஒன்றிய குழு உறுப்பினர் நரசிம்மன் மற்றும் நிர்வாகிகள் கௌரிசங்கர் வந்து நேரில் பார்வையிட்டு பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார்.

    தளி, தேன்கனிக்கோட்டை, தளி, அஞ்செட்டி வனப் பகுதிகளில் இருந்து உருவாகும் சின்னாறு தருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி, மாரண்டஅள்ளி, பாலக்கோடு உள்ளிட்ட பகுதிகள் வழியாக ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் கலக்கிறது.

    தொடர்ந்து ஆண்டுதோறும் மூன்று முறை வெள்ள பெருக்கெடுத்து, ஆறாக பரந்து விரிந்து வரும் சின்னாறு, சுமார் 50 அடி உயரத்திலிருந்து, நல்லூர் ஊராட்சியில் தொல்லேகாது என்ற இடத்தில் நீர்வீழ்ச்சியாக கொட்டுகிறது.

    சின்ன ஆறாக பறந்து வரும் நீரானது. இந்த இடத்தில் பாறைகளுக்கிடையில் இரண்டாக பிரிந்து இடது வலது புற காதுகளில் இருந்து தண்ணீர் வெளியேறும் வகையில் தோற்றமளிக்கிறது.

    இதனால் இந்த இடத்திற்கு தொல்லேக்காது நீர்வீழ்ச்சி என்று பெயர் ஏற்பட்டது. மேலும் இந்த ஆற்றங்கரை பகுதியில் பிரசித்தி பெற்ற பெருமாள் மற்றும் ஈஸ்வரன் கோயில் அமைந்துள்ளதால் பல்வேறு பகுதியிலிருந்து மக்கள் புனித நீராடவும், ஈமச்சடங்கிற்காகவும், சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர்.

    தொடர்ந்து ஆண்டுதோறும் வற்றாத நீர்வீழ்ச்சியாக சின்ன ஆற்றில் கொட்டிக் கொண்டிருந்தது. கடந்த சில மாதங்களாக நீர்வரத்து இல்லாமல் தொல்லேக் காது நீர்வீழ்ச்சி தண்ணீரின்றி வறண்டு காணப்பட்டு வந்தது.

    தற்போது மழை தீவிரம் அடைந்ததால், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனி க்கோட்டை, தளி, அஞ்செட்டி உள்ளிட்ட வனப் பகுதிகளிலும் பெட்டமுகிலாலம் மலைப் பகுதிகளில் நல்ல மழை பெய்ததால், தற்பொழுது சின்னாறு அணை நிரம்பி, உபரிநீர் திறக்கப்ப ட்டுள்ளது.

    இதனால் சின்னாற்றில் தண்ணீர் அதிகரித்து வர தொடங்கி யுள்ளது. இந்த நீர்வீழ்ச்சியில் இரண்டு பக்கமும் அருவி கொட்டுகிறது. இதனால் இந்த அருவியில் குளிப்பதற்கு தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கி ன்றனர். கடந்த 8 மாதத்திற்கு பிறகு தொல்லேக்காது நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரித்து ள்ளதால், இப்பகுதிகளில் உள்ள மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து ள்ளனர்.

    ×