என் மலர்
கிருஷ்ணகிரி
- ஜவ்வாது காப்புகாட்டில் மானை வேட்டையாடி அதன் இறைச்சியை எடுத்து வந்த நபர்களை பிடித்து விசாரித்தனர்.
- இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட காப்புகாடு பகுதியில், மான் வேட்டையாடிய இருவரை வனத்துறையினர் செவ்வாய்கிழமை கைது செய்தனர்.
இதில் திருப்பத்தூர் மாவட்ட வன அலுவலர் நாகா சதீஷ் கிடிஜாலா உத்தரவின் பேரில், சிங்காரப்பேட்டை வனச்சரக அலுவலர் ரமேஷ், வணவர்கள் முருகன், கோவிந்தன், ராமமூர்த்தி, வனகாப்பாளர்கள் அர்ஜுன், பிரதீப், அரவிந் ஆகியோர் அடங்கிய குழுவினர் ரோந்து சென்றனர். அப்போது. ஜவ்வாது காப்புகாட்டில் மானை வேட்டையாடி அதன் இறைச்சியை எடுத்து வந்த நபர்களை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் திருப்பத்தூர் மாவட்டம் கலர்பதி பகுதியைச் சேர்ந்த ரவி(30). அதே பகுதியை சேர்ந்த பழனி(40). ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தப்பி ஓடிய கிருஷ்ணகிரி மாவட்டம் வெள்ளக்குட்டை பகுதி சேர்ந்த அருண் என்பவரை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
- விவசாயி மணியை அணுகி, வழிவிட்டதற்கு பத்திரத்தில் எழுதித்தர வேண்டும் என கூறி மணியை கட்டாயப்படுத்தியுள்ளதாக தெரிகிறது.
- இது சம்மந்தமாக மணி போச்சம்பள்ளி மின்வாரிய உதவி செயற் பொறியாளர் கார்த்திகேயனிடம் புகார் அளித்தார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பந்தரவள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மணி (வயது30). விவசாயியான இவர் தனக்கு சொந்தமான சுமார் மூன்றரை ஏக்கர் நிலத்தில் மா மரம் வைத்து விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலத்தில் கடந்த ஆண்டு ஆழ்துளை கிணறு போட்டுள்ளார்.
அதில் விவசாயத்திற்கு தேவையான நீர் கிடைக்கப்பெற்றதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். மின்வசதி இல்லாத நிலத்திற்கு மின்சாரம் கேட்டு விண்ணப்பித்திருந்தார். அதனடிப்படையில் மின்கம்பி இழுக்க முயற்சித்தபோது பக்கத்து விவசாயியான கண்ணன் 10 அடி வழிப்பாதை கொடுக்க நிபந்தனை விதித்தார்.
அதற்கு சம்மதித்து வழிபாதை அமைக்கப்பட்ட பிறகு கடந்த 10 நாட்களுக்கு முன்பு மின்சாரம் கொடுக்கப்பட்டது. மின்சா ரம் கொடுக்கப்பட்டதும் மின்மோட்டார் கொண்டு விவசாயம் துவக்கிய விவசாயிக்கு திடீரென பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
ஜிங்கல்கதிரம்பட்டி ஊராட்சியை சேர்ந்த கவுன்சிலர் அய்யப்பன் என்பவர் விவசாயி மணியை அணுகி, வழிவிட்டதற்கு பத்திரத்தில் எழுதித்தர வேண்டும் என கூறி மணியை கட்டாயப்படுத்தியுள்ளதாக தெரிகிறது.
இதை மணி மறுத்ததை அடுத்து ஆத்திரமடைந்த கவுன்சிலர் அய்யப்பன் நேற்று போச்சம்பள்ளி சுற்று வட்டாரப் பகுதிகளில் மின் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் தடை செய்யப்பட்டிருந்ததை தனக்கு சாதகமாக்கி உயர் மின்னழுத்த மின் கம்பத்தில் ஏணியை வைத்து ஏறி விவசாய நிலத்திற்கு செல்லும் மின் இணைப்பு வயரை துண்டித்ததுடன், மின் வயர் மற்றும் கம்பத்தில் இருந்த கிளாம்புகள் அனைத்தையும் எடுத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இது சம்மந்தமாக மணி போச்சம்பள்ளி மின்வாரிய உதவி செயற் பொறியாளர் கார்த்திகேயனிடம் புகார் அளித்தார். இதையடுத்து கார்த்திகேயன் போச்சம்பள்ளி போலீசில் கவுன்சிலர் அய்யப்பன் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போச்சம்பள்ளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயனிடம் கேட்டபோது, உயர் மின் அழுத்த மின் கம்பத்தில் ஏறி அதிலிருந்த மின் இணைப்பை துண்டித்ததுடன், தளவாடப் பொருட்களை எடுத்துச் சென்றதாக கூறி கவுன்சிலர் அய்யப்பன் மீது போச்சம்பள்ளி போலீசில் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார்.
- பர்கூர் காவல் துணை கண்காணிப்பாளர் மனோகரன் தலைமையில் கஞ்சா தடுப்பு விழிப்புணர்வு நடைபெற்றது.
- நூலகங்களுக்கு சென்று புத்தக வாசிப்பை தொடர்ந்து படிக்க சொல்லுங்கள்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள ஜிங்கல்கதிரம்பட்டி ஊராட்சி பனங்காட்டூர் பகுதியில் பர்கூர் காவல் துணை கண்காணிப்பாளர் மனோகரன் தலைமையில் கஞ்சா தடுப்பு விழிப்புணர்வு நடைபெற்றது.
இவ்விழிப்புணர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் கஞ்சா பயன்படுத்துவத்துவதாலும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், செயல் விளக்கம் அளித்து அறிவுரை வழங்கினார்.
அதனை தொடர்ந்து ஜிங்கல்கதிரம்பட்டி ஊராட்சியில் கஞ்சா செடிகளை வளர்க்காமல், அதை விற்பனை செய்யாமலும் மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்யாத ஊராட்சி என கண்டறிந்து ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி சிவசங்கரனுக்கும், துணைத் தலைவர் விஸ்வநாதன் ஆகியோருக்கு சால்வை அணிவித்தும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
தொடர்ந்து காவல் துணை கண்காணிப்பாளர் மனோகரன் பொதுமக்களிடையே பேசும் போது மக்களாகிய நாம் அனைவரும் நாட்டு நடப்பு நிகழ்வுகளை அன்றாடம் தெரிந்து கொள்ள வேண்டும்.
இதில் குறிப்பாக பள்ளி குழந்தைகளை நாளிதழ் படிக்க செய்யுங்கள். நூலகங்களுக்கு சென்று புத்தக வாசிப்பை தொடர்ந்து படிக்க சொல்லுங்கள். உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை பொதுக்களிடம் வழங்கி விழிப்புணர்வு ஏற்பித்தினார்.
இக் கூட்டத்தில் போச்சம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபாவதி, எஸ்.ஐ.க்கள் குமார், சுதாகர் மற்றும் போலீசார் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- நேற்று மீண்டும் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.
- போகும் வழியிலேயே மூச்சுதிணறல் ஏற்பட்டு வெண்மதி பரிதாபமாக உயிரிழந்தார்
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்துள்ள குருவிநாயனப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் திருமால். இவரது மனைவி வெண்மதி (வயது38). 8 மாத கர்ப்பிணியான இவருக்கு மூச்சுதிணறல் பிரச்சினை இருந்து வந்தது.
இதனால் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதையடுத்து நேற்று மீண்டும் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.
இதனால் அவரை குடும்பத்தினர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர். அப்போது போகும் வழியிலேயே மூச்சுதிணறல் ஏற்பட்டு வெண்மதி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்குபதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மறுநாள் கழித்து பார்த்த போது குழந்தை பேச்சு மூச்சு இன்றி காணப்பட்டது.
- பதறி போன தாய் உடனே அருகில் உள்ள தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள தேர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் முனுபர் (வயது26). இவரது மனைவிக்கு ஆயிஷா என்கிற 2 மாத கைக்குழந்தை உள்ளது.
இந்த நிலையில் நேற்று பால் குடித்து விட்டு குழந்தையை படுக்க வைத்தனர். பின்னர் மறுநாள் கழித்து பார்த்த போது குழந்தை பேச்சு மூச்சு இன்றி காணப்பட்டது.
இதனால் பதறி போன தாய் உடனே அருகில் உள்ள தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் தாய் தனது குழந்தை உடலை பார்த்து கதறி அழுதார்.
இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 3 யானைகள், கிருஷ்ணகிரி அருகே சோக்காடி பகுதியில் முகாமிட்டிருந்தன.
- வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி,
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி வனப்பகுதியில் இருந்து வந்த 3 யானைகள், கிருஷ்ணகிரி அருகே சோக்காடி பகுதியில் முகாமிட்டிருந்தன. அந்த யானைகளை கடந்த 9-ந் தேதி வெங்கிலிகானப்பள்ளி வனப்பகுதிக்கு வனத்துறையினர் விரட்ட முயன்றனர்.ஆனால் விரட்ட முடியவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு துடுகனஅள்ளி வழியாக ஆலப்பட்டி மலைப்பகுதிக்கு யானைகளை விரட்டினார்கள்.
3 யானைகளும் நேற்று காலை ஆலப்பட்டி மலைப்பகுதியில் இருந்து இறங்கி சொக்கம்பட்டி காப்பு காட்டில் தஞ்சம் அடைந்தன. அந்த யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
- ஒற்றை யானை தாக்கியது. சிகிச்சை பலனின்றி இறந்தார்.
- இழப்பீட்டுத் தொகையாக ரூ.50 ஆயிரம் காசோலையை வழங்கினார்கள்.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள சாத்தனக்கல்லை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 70).
இவர் ராயக்கோட்டை வனச்சரகம் ஊடேதுர்கம் காப்புக் காட்டில் கடந்த 4-ந் தேதி மாலை கிருஷ்ணன் காட்டை ஒட்டியுள்ள நிலத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார்.
அவரை அவ்வழியாக வந்த ஒற்றை யானை தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த கிருஷ்ணனை தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக 5-ந் தேதி தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை மேற்கொண்ட நிலையில், நேற்று முன்தினம் மாலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதையடுத்து, தருமபுரி மண்டல வனப்பாதுகாவலர் பெரியசாமியின் அறிவுரையின்படி, ஓசூர் வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனியின் உத்தரவின்பேரில், ராயக்கோட்டை வனச்சரகர் பார்த்தசாரதியின் தலைமையில், ஊடேதுர்கம் பிரிவு வனவர் வரதராஜன், மேற்கு பீட் வனக்காப்பாளர் ராம்குமார் ஆகியோர் நேற்று கிருஷ்ணனனின் வீட்டிற்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.
மேலும் அவரது மனைவி சித்தம்மாவிடம் முதல் கட்ட இழப்பீட்டுத் தொகையாக ரூ.50 ஆயிரம் காசோலையை வழங்கினார்கள்.
- காப்பீடு தொகை 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை வழங்கவில்லை.
- காப்பீடு நிறுவனத்தில் ஜப்தி நடவடிக்கையை மேற்கொண்டனர்.
ஓசூர்,
ஓசூரை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா (வயது 62). இவர் கடந்த 2001 -ம் ஆண்டு இருசக்கர வாகனத்தில் சென்றபோது லாரி மோதி விபத்தில் சிக்கினார். இதில் படுகாயமடைந்த அவருக்கு ஓசூரில் இயங்கி வரும் ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனம் காப்பீடு தொகை 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை வழங்கவில்லை என தெரிகிறது.
இதனை எதிர்த்து அவர் ஓசூர் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு கடந்த 2001 முதல் 2018- ம் ஆண்டு வரை நடைபெற்றது. ஆனாலும் அவருக்கு காப்பீடு தொகை வழங்கப்படவில்லை. அதனை தொடர்ந்து கிருஷ்ணப்பா கடந்த 2018 -ம் ஆண்டு காப்பீடு தொகையை வழங்காததால் காப்பீடு நிறுவனத்தில் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ள ஓசூர் சார்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தற்போது இந்த வழக்கில் காப்பீட்டு தொகையை வழங்காத காப்பீட்டு நிறுவனத்தில் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ள நீதிமன்றம்உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, கோர்ட் ஊழியர்கள், கிருஷ்ணப்பாவின் வக்கீல்கள் மற்றும், அவர்களின் உதவியாளர்கள் அடங்கிய குழு, ஓசூர்- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இயங்கி வரும் அந்த காப்பீடு நிறுவனத்தில் ஜப்தி நடவடிக்கையை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த கணினிகள், மேசைகள், நாற்காலிகள், பீரோக்கள் மற்றும் காற்றாடிகள் ஆகியவற்றை அவர்கள் பறிமுதல் செய்தனர்.
அப்போது, சம்பந்தப்பட்ட காப்பீடு நிறுவனத்தினர் 2 நாட்களில் பாதிக்கப்பட்டவருக்கு காப்பீடு பணத்தை தருவதாக உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இரு தரப்பினரும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு காணப்பட்டது.
- பெண்களுக்கான சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம்.
- தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 12 நாட்கள் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இணைந்து நடத்தும் பெண்களுக்கான சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம், கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் வருகிற 15-ந் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.
இப்பணியிடங்கள் முழுமையாக பெண் மனுதாரர்களுக்கு மட்டுமே பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதியாக 2020, 2021 மற்றும் 2022 கல்வியாண்டில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயது முதல் 20 வயது உள்ள பெண்கள், உடற்தகுதியாக உயரம் 150 சென்டி மீட்டரும், எடை 40 கிலோ இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 12 நாட்கள் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
மாத சம்பளமாக ரூ.16,557-ம், உணவு, தங்கும் இடம் மற்றும் போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படும். இதில், எஸ்.சி., எஸ்.டி. மனுதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இத்தகுதியுடைய பணிதேடுபவர்கள் தங்களுடைய 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச்சான்றிதழ், ஆதார் அட்டை உள்ளிட்டவை அசல் மற்றும் நகல்களுடன் இம்முகாமில் கலந்துகொண்டு பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உழவர் நலத்துறை சார்பில் உள்ளூர் பயிர் ரகங்களுக்கான கண்காட்சி நடைபெற உள்ளது.
- உணவு மேளா, விவசாயிகள் பயிற்சி மற்றும் செயல் விளக்கங்கள் நடைபெற உள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) சண்முகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உள்ளூர் ரகம் மற்றும் பதிக்கேற்ற சிறந்த ரகங்களை உருவாக்கும் நோக்கத்தில் மாவட்டந்தோறும் ஆண்டுக்கு 3 முறை உள்ளூர் பயிர் ரகங்களுக்கான கண்காட்சியினை விவசாயிகள் பயன்பெறும் வகையில் நடத்திட தமிழக முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த பையூரில் உள்ள தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வருகிற 16-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாவட்ட வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில் உள்ளூர் பயிர் ரகங்களுக்கான கண்காட்சி நடைபெற உள்ளது.
இந்த கண்காட்சியில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்கள் பகுதி பாரம்பரிய உள்ளூர் ரகங்களை காட்சிப்படுத்தலாம்.
இதில் வேளாண்மை பல்கலைக் கழகத்தில் வெளியிடப்பட்ட பயிர் ரகங்களும் காட்சிப்படுத்தப்படும். மேலும், இந்த கண்காட்சியில் விவசாயி கள்-விஞ்ஞானிகள் கலந்துரையாடல், பாரம்பரிய உணவு மேளா, விவசாயிகள் பயிற்சி மற்றும் செயல் விளக்கங்கள் நடைபெற உள்ளது.
எனவே, கிருஷ்ணகிரி மாவட்ட விவசாய பெருமக்கள் தங்களிடம் உள்ள உள்ளூர் ரகங்களை காட்சிப்படுத்தலாம் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வாசல் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம திருடர்களை தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி தாலுகா பையனபள்ளி விநாயகர் நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி சத்யா. இவர்கள் கடந்த மாத இறுதியில் வீட்டை பூட்டிவிட்டு சத்யாவின் பெற்றோர் ஊருக்கு சென்றுள்ளனர்.
ஊரிலிருந்து திரும்பி வந்து பார்த்தபோது வாசல் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு வைக்கப் பட்டிருந்த 5 பவுன் தங்க நகை திருடு போயிருந்தது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம திருடர்களை தேடி வருகின்றனர்.
- மனம் உடைந்து தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.
- குடியால் ஏற்பட்ட குடும்ப தகராறில் தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் பகுதியை சேர்ந்த மூக்கண்டப்பள்ளி காந்திநகரில் வசித்து வந்தவர் செல்வம் (வயது 38).ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.
இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. அதனால் மனைவியுடன் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படும். இதேபோல நேற்று ஏற்பட்ட தகராறில் செல்வம் மனம் உடைந்து தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.இந்த சம்பவம் குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதேபோல கிருஷ்ணகிரி டவுன் பழையபேட்டை பகுதியை சேர்ந்த அருண்குமார் (29) என்ற கட்டிட மேஸ்திரியும் குடியால் ஏற்பட்ட குடும்ப தகராறில் மனம் உடைந்து தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






