என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின் இணைப்பை துண்டித்த கவுன்சிலர்"

    • விவசாயி மணியை அணுகி, வழிவிட்டதற்கு பத்திரத்தில் எழுதித்தர வேண்டும் என கூறி மணியை கட்டாயப்படுத்தியுள்ளதாக தெரிகிறது.
    • இது சம்மந்தமாக மணி போச்சம்பள்ளி மின்வாரிய உதவி செயற் பொறியாளர் கார்த்திகேயனிடம் புகார் அளித்தார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பந்தரவள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மணி (வயது30). விவசாயியான இவர் தனக்கு சொந்தமான சுமார் மூன்றரை ஏக்கர் நிலத்தில் மா மரம் வைத்து விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலத்தில் கடந்த ஆண்டு ஆழ்துளை கிணறு போட்டுள்ளார்.

    அதில் விவசாயத்திற்கு தேவையான நீர் கிடைக்கப்பெற்றதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். மின்வசதி இல்லாத நிலத்திற்கு மின்சாரம் கேட்டு விண்ணப்பித்திருந்தார். அதனடிப்படையில் மின்கம்பி இழுக்க முயற்சித்தபோது பக்கத்து விவசாயியான கண்ணன் 10 அடி வழிப்பாதை கொடுக்க நிபந்தனை விதித்தார்.

    அதற்கு சம்மதித்து வழிபாதை அமைக்கப்பட்ட பிறகு கடந்த 10 நாட்களுக்கு முன்பு மின்சாரம் கொடுக்கப்பட்டது. மின்சா ரம் கொடுக்கப்பட்டதும் மின்மோட்டார் கொண்டு விவசாயம் துவக்கிய விவசாயிக்கு திடீரென பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

    ஜிங்கல்கதிரம்பட்டி ஊராட்சியை சேர்ந்த கவுன்சிலர் அய்யப்பன் என்பவர் விவசாயி மணியை அணுகி, வழிவிட்டதற்கு பத்திரத்தில் எழுதித்தர வேண்டும் என கூறி மணியை கட்டாயப்படுத்தியுள்ளதாக தெரிகிறது.

    இதை மணி மறுத்ததை அடுத்து ஆத்திரமடைந்த கவுன்சிலர் அய்யப்பன் நேற்று போச்சம்பள்ளி சுற்று வட்டாரப் பகுதிகளில் மின் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் தடை செய்யப்பட்டிருந்ததை தனக்கு சாதகமாக்கி உயர் மின்னழுத்த மின் கம்பத்தில் ஏணியை வைத்து ஏறி விவசாய நிலத்திற்கு செல்லும் மின் இணைப்பு வயரை துண்டித்ததுடன், மின் வயர் மற்றும் கம்பத்தில் இருந்த கிளாம்புகள் அனைத்தையும் எடுத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

    இது சம்மந்தமாக மணி போச்சம்பள்ளி மின்வாரிய உதவி செயற் பொறியாளர் கார்த்திகேயனிடம் புகார் அளித்தார். இதையடுத்து கார்த்திகேயன் போச்சம்பள்ளி போலீசில் கவுன்சிலர் அய்யப்பன் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போச்சம்பள்ளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இதுகுறித்து உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயனிடம் கேட்டபோது, உயர் மின் அழுத்த மின் கம்பத்தில் ஏறி அதிலிருந்த மின் இணைப்பை துண்டித்ததுடன், தளவாடப் பொருட்களை எடுத்துச் சென்றதாக கூறி கவுன்சிலர் அய்யப்பன் மீது போச்சம்பள்ளி போலீசில் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார்.

    ×