என் மலர்
கிருஷ்ணகிரி
- சிபி தனது முகநூல் பக்கத்தில் திவ்யாவை பற்றி ஆபாசமாக சித்தரித்து பதிவு செய்துள்ளார்.
- அதிர்ச்சியடைந்த திவ்யா கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டணம் அடுத்துள்ள பொன்மலைநகர் பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி திவ்யா (வயது 28).
இவர் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்த போது மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகேயுள்ள கருவலூர் பகுதியை சேர்ந்த சிபி (28) என்ற வாலிபர் உடன் படித்துள்ளார்.
இந்நிலையில் சிபி தனது முகநூல் பக்கத்தில் திவ்யாவை பற்றி ஆபாசமாக சித்தரித்து பதிவு செய்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த திவ்யா கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிபியை கைது செய்தனர்.
- மருத்துவக்கல்லூரிக்கு தேர்வாகி பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
- பாரத் கல்வி குழுமங்களின் நிறுவனர் மணி, நினைவு பரிசு மற்றும் பரிசுத்தொகை வழங்கினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகியில் சேலம் மெயின் ரோட்டில் உள்ள பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்த இந்திரா என்ற மாணவி பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தஞ்சை ஒரத்தநாடு கால்நடை மருத்துவக்கல்லூரிக்கு தேர்வாகி பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
சாதனை படைத்த மாணவிக்கு பாரத் கல்வி குழுமங்களின் நிறுவனர் மணி, நினைவு பரிசு மற்றும் பரிசுத்தொகை வழங்கினார்.
அவர் பேசும் போது கால்நடை மருத்துவ படிப்பில் நன்றாக படித்து மாணவியின் விருப்பத்திற்கு ஏற்றவாறு எதிர்காலத்தில் மாவட்ட கலெக்டர் ஆகி பெற்றோருக்கும் படித்த பள்ளிக்கும் பெருமை சேர்த்திட வேண்டும் என கூறினார்.
மேலும் மாணவி கால்நடை மருத்துவ படிப்பில் இடம் பெற உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள், ஆசிரியைகளை வாழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் பாரத் கல்வி குழுமங்களின் தாளாளர் கிருஷ்ணவேணி மணி, பள்ளியின் முதல்வர் விஜயகுமார், துணை முதல்வர் நஷீர்பாஷா ஆகியோர் பாராட்டினார்கள்.
- விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
- 14 வயதிற்குட்பட்ட பிரிவிலும், 17வயதிற்குட்பட்ட பிரிவிலும் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி வருவாய் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையே யான கைப்பந்து போட்டிகள் கிருஷ்ணகிரியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் 9 மண்டலங்கள் கலந்து கொண்டன. இதில் ஓசூர் காமராஜ் காலனியில் உள்ள அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 14 வயதிற்குட்பட்ட பிரிவிலும், 17வயதிற்குட்பட்ட பிரிவிலும் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளை, ஓசூர் மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா பாராட்டி வாழ்த்தினார். மேலும், இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று, பள்ளிக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
ஓசூர் மாநகர தி.மு.க.அவைத் தலைவர் செந்தில் குமார் மற்றும் பயிற்சி யாளர்கள் தாயுமானவன், மாணிக்கவாசகம் ஆகியோர் உடன் இருந்தனர்.
- திருமணம் கிருஷ்ணகிரி தேவராஜ் மகாலில் நேற்று காலை நடைபெற்றது.
- எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சோக்காடி ராஜன்-கிருஷ்ணகிரி ஒன்றிய குழு தலைவர் ஆர். அம்சா ராஜன் தம்பதியரின் மகன் ஆர். நவீன்குமாருக்கும், கிருஷ்ணகிரி போகனப்பள்ளி தொழில் அதிபர் பி.மணி என்கிற கணேசன் - ராஜி தம்பதியரின் மகள் எம்.ஜி. பைரவிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
இவர்களின் திருமணம் கிருஷ்ணகிரி தேவராஜ் மகாலில் நேற்று காலை நடைபெற்றது. முன்னதாக திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடந்தது. இந்த விழாவில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
மணமக்கள் ஆர்.நவீன்குமார்-எம்.ஜி. பைரவி, தமிழக முன்னாள் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் காலில் விழுந்து ஆசி பெற்றனர். இந்த விழாவில் அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ., கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் மு.தம்பிதுரை எம்.பி., முன்னாள் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், வீரமணி, முல்லைவேந்தன், மாவட்ட செயலாளர்கள் அசோக்குமார் எம்.எல்.ஏ. (கிருஷ்ணகிரி கிழக்கு), பாலகிருஷ்ணரெட்டி (கிருஷ்ணகிரி மேற்கு), ஊத்தங்கரை தமிழ்செல்வம் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முனிவெங்கடப்பன், சி.வி.ராஜேந்திரன், மனோரஞ்சிதம் நாகராஜ், முன்னாள் மாவட்ட செயலாளர் தென்னரசு, நகர செயலாளர் கேசவன், முன்னாள் நகராட்சி தலைவர் கே.ஆர்.சி.தங்கமுத்து மற்றும் அ.தி.மு.க. பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
- முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
- மின்வாரிய அலுவலர்கள் ஊழியர்கள் பொதுமக்கள் என பலர் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பனங்காட்டூர் துணை மின் நிலையத்தில் போச்சம்பள்ளி சுற்றுவட்டார பொதுமக்களின் எதிர்கால மின் தேவையை கருத்தில் கொண்டு ரூ.2 கோடியே 9 லட்சத்து 64 ஆயிரம் திட்ட மதிப்பீட்டில் கூடுதல் திறன் கொண்ட மின் மாற்றியை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் புளியம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.ஆர்.ரங்கநாதன், ஜிங்கல் கதிரம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி சிவசங்கர் மற்றும் பனங்காட்டூர் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் ஸ்டாலின் மற்றும் மின்வாரிய அலுவலர்கள் ஊழியர்கள் பொதுமக்கள் என பலர் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.
- 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
- 4 மாணவர்களுக்கு மட்டும் பலத்த காயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாரதியார் நகரில் மாநகராட்சி அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த நேற்று மாலை பள்ளி முடிந்து மாணவர்கள் வீட்டுக்கு செல்ல தயாரான போது, திடீரென 1- ம் வகுப்பறையில் மேற்கூரையில் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து பொல, பொல என தரையில் கொட்டியது.
இதில் வகுப்பறையில் இருந்த மாணவர்கள் மீதும் சிமெண்ட் பூச்சு விழுந்ததால் லேசான காயம் ஏற்பட்டது. 4 மாணவர்களுக்கு மட்டும் பலத்த காயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். மற்ற மாணவர்களை பெற்றோர் வீடுகளுக்கு அழைத்து சென்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மகேஸ்வரி, ஓசூர் கல்வி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் முனிராஜ் ஆகியோர் பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- ஸ்ரீநகரேஸ்வர் சுவாமிக்கு அன்னாபிஷேகம் நிகழ்ச்சி நடந்தது.
- அன்னாபிஷேகத்திற்கு வைக்கப்பட உணவை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது
காவேரிப்பட்டணம்.
காவேரிபட்டினம் தென்பெண்ணை ஆற்றில் ஓரம் அமைந்துள்ள ஆரிய வைசிய சமூகத்தினரின் ஸ்ரீ நகரேஸ்வரர் ஆலயத்தில் பாலாஜி ஜூவல்லரி அறங்காவலர் ரமேஷ் குடும்பத்தினர் சார்பில் ஸ்ரீநகரேஸ்வர் சுவாமிக்கு அன்னாபிஷேகம் நிகழ்ச்சி நடந்தது.
அதேபோல் காவேரிபட்டி னம் சக்தி விநாயகர் ஆலயம் அருகில் உள்ள விஸ்வகர்மா சமூகத்தினர் சார்பில் காமாட்சி அம்மன் கோவிலில் உள்ள ஏகாம்பர ஈஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது
கோட்டை ஜல கண்டேஸ்வ ரர் கோவிலில் அமைந்துள்ள ஜலகண்டேஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடந்தது சுமார் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அன்னாபிஷேகத்தில் கலந்து கொண்டு அருள் பெற்றனர்.
பன்னீர்செல்வம் தெருவில் உள்ள சுகவனேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் வெகு சிறப்பாக நடந்தது , அனைத்து கோவில்களிலும் ஈஸ்வரனை சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டு அன்னாபிஷேகத்திற்கு வைக்கப்பட உணவை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது.
- புதிய நூலகத்தை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினரும் மதியழகன் திறந்து வைத்தார்.
- பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
காவேரிப்பட்டினம்.
ஆவத்தவாடி கிராமத்தில் மாவட்ட ஊராட்சி குழு மாநில நிதிக்குழுவின் கீழ் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை மற்றும் பேருந்து பயனியர் நிழற்கூடம் அமைக்கும் பணி, தட்ர அள்ளி ஊராட்சி சோபனூர் கிராமத்தில் தமிழ்நாடு கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 37.93 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தும் ,மாவட்ட ஊராட்சி குழு மாநில நிதிக்குழுவின் கீழ் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நூலகத்தை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினரும் மதியழகன் திறந்து வைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்ட அவை தலைவர் நாகராஜ் , மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம்.வெங்கடேசன், மாவட்ட துணை செயலாளர் கோவிந்தசாமி, பொருளாளர் கதிரவன், தலைமை செயற்குழு கிருபாகரன், பொதுக்குழு உறுப்பினர் அஸ்லாம், ஒன்றிய செயலாளர் மகேந்திரன், நாகரசம்பட்டி பேரூராட்சி தலைவர் தம்பிதுரை , மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் வித்தியா சங்கர், காவேரிபட்டினம் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில், மாவட்ட நூலக அலுவலர் தனலட்சுமி, நூலகர் சாந்தலட்சுமி, ஊராட்சி மன்ற தலைவர்கள் ரமேஷ் பெருமாள், துணைத் தலைவர்கள் வடிவேல் ,முரளி, கவுன்சிலர் பத்மினி சேகர், வடிவேல் ,சுரேஷ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஸ்ரீதர் ,அண்ணாமலை, கிளை செயலாளர்கள் நாகபூஷணம், பாஸ் ( எ)நாராயணசாமி ,சேகர், மூர்த்தி, கேட் மணி, பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- ரூ.3 கோடியே 35 லட்சத்து 81 ஆயிரம் மதிப்பில் மின்மாற்றிகளின் திறன் உயர்த்தப்பட்டுள்ளது.
- காணொளி காட்சி மூலம் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
பர்கூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் மற்றும் போச்சம்பள்ளி துணை மின் நிலையங்களில் ரூ.3 கோடியே 35 லட்சத்து 81 ஆயிரம் மதிப்பில் மின்மாற்றிகளின் திறன் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் செயல்பாடுகளை நேற்று சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொளி காட்சி மூலம் முதல்&அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து பர்கூர் துணை நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி, செல்லகுமார் எம்.பி, மதியழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் குத்து விளக்கேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு களை வழங்கினார்கள்.
விழாவில் கலெக்டர் பேசியதாவது:-
பொதுமக்கள், விவசாயி கள் பயன்பெறும் வகையில் மின்சாரத்துறையில் பல்வேறு புதிய திட்டங்களை, முதல்&அமைச்சர் மு.க. ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். அதன்படி, பர்கூர் துணை மின் நிலையத்தில் குறைந்த மின் அழுத்த மற்றும் கூடுதல் மின் பளு குறைப்பாட்டை சரி செய்ய ரூ.1 கோடியே 26 லட்சத்து 41 ஆயிரம் மதிப்பில் 10 எம்.வி.ஏ. திறன் மின்மாற்றியை, 16 எம்.வி.ஏ. ஆக உயர்த்தப்பட்டு தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது.
இதன் மூலம் பர்கூர் பேரூராட்சி, மாதேப்பள்ளி, குருவிநாயனப்பள்ளி, ஒப்பதவாடி, எமக்கல்நத்தம், காரகுப்பம் அதன் சுற்றியுள்ள கிராமங்கள் பயன்பெறும். இதே போல் போச்சம்பள்ளி துணை நிலையத்திலும் ரூ.2 கோடியே 9 லட்சத்து 4 ஆயிரம் மதிப்பில் 16 எம்.வி.ஏ. திறன் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் போச்சம்பள்ளி வடமாண்டப்பட்டி, வயலூர் அதன் சுற்றுவட்டார கிராமங்கள் பயன் பெறும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் ஏஞ்சலா சகாயமேரி, செயற்பொறியாளர்கள் இந்திரா, முத்துசாமி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், தி.மு.க. மாவட்ட அவைத் தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், முன்னாள் எம்.பி. சுகவனம், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம் வெங்கடேசன், பர்கூர் பேரூராட்சி தலைவர் சந்தோஷ்குமார், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ராஜேந்திரன், பர்கூர் தாசில்தார் பன்னீர்செல்வி, ஊராட்சி மன்ற தலைவர்கள் உமாராணி கோவிந்தராஜ், சாந்தமூர்த்தி, கவுன்சிலர் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கிருஷ்ணகிரி,
ஆண்டுதோறும் தமிழ் மாதத்தில் ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய பவுர்ணமியில் சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். வருடத்தின் ஒரு முறை இந்த வழிபாட்டை செய்வதின் மூலம் வாழ்க்கையில் உள்ள அனைத்து பிரச்சி னைகளிலும் விடுபடலாம் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது.
அன்னத்தால் சாமிக்கு நடைபெறும் அன்னாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஈஸ்வரன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
கிருஷ்ணகிரி மலை அடிவாரத்தில் உள்ள கவீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேக நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜைகளும், தொடர்ந்து அன்னாபிஷேகமும் நடந்தது. அன்னாபி ஷேகத்தில் கவீஸ்வரர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
கிருஷ்ணகிரி பழைய பேட்டை சோமேஸ்வரர் கோவிலில் ஐப்பசி பவுர்ணமியையொட்டி அன்னாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். வேப்பனப்பள்ளி ஒன்றியம் ஆவல்நத்தம் காசிஸ்வர பசவேஸ்வர சிவகுமார சாமி கோவிலில் ஐப்பசி பவுர்ணமியையொட்டி அன்னாபிஷேகம் நடந்தது.
கிருஷ்ணகிரி போலீஸ் குடியிருப்பில் உள்ள முத்து விநாயகர் துர்க்கையம்மன் கோவிலில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு காய்கறிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதே போல மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள், அன்னாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- லஞ்ச ஒழிப்பு நிகழ்ச்சியை பள்ளி தலைமை ஆசிரியர் மூத்தே கவுடா தலைமையில் நடத்தினர்.
- விழிப்புணர்வு மற்றும் வரை பட போட்டி நடத்தி பரிசுகள் வழங்கினார்.
சூளகிரி,
சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசன் சார்பில் பள்ளி மாணவர்களிடம் லஞ்ச ஒழிப்பு நிகழ்ச்சியை பள்ளி தலைமை ஆசிரியர் மூத்தே கவுடா தலைமையில் நடத்தினர்.
சிறப்பு விருந்தினராக ஹிந்துஸ்தான் நிறுவன மேலாளர் ராமகிருஷ்ணன் லஞ்ச ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு மற்றும் வரை பட போட்டி நடத்தி பரிசுகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பி.டி.ஏ. நிர்வாகிகள் சேகர், ஜெபஸ்ரின் மற்றும் ஆசிரியர்கள் கோவிந்தராஜ், முகமது அலி, செல்வம், கனேசன் , ரங்கநாயகி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- ரூ.8 லட்சத்து 90 ஆயிரத்து 500 நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
- அரசு கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி பயன் பெறலாம்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ண கிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேளாண் விவசாயிகளின் கால்நடைகளை பாதுகாத்திடும் வகையில் தமிழக அரசின் 2022&23&ம் ஆண்டிற்கான தேசிய கால்நடை காப்பீடு திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 1,900 கால்நடைகளுக்கு காப்பீடு செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு ரூ.8 லட்சத்து 90 ஆயிரத்து 500 நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
காப்பீடு செய்யும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு அரசு மானியமாக காப்பீடு சந்தா தொகையில் 70 சதவீத மானியமும், பொதுப்பிரிவினர்களுக்கு 50 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.
காப்பீடு செய்யப்படும் கால்நடைகளுக்கு காது வில்லைகள் பொறுத்தப்பட்டு புகைப்படம் எடுக்கப்படும். காப்பீடு செய்த கால்நடைகள் இறக்க நேரிட்டால் கால்நடை உதவி மருத்துவரால் இறந்த கால்நடையை பிரேத பரிசோதனை செய்து அதற்கான சான்றிதழ் உடன் காப்பீட்டு நிறுவனத்தில் ஒப்படைத்து காப்பீட்டு தொகையை பெற்றுக் கொள்ளலாம்.
எனவே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விருப்பம் உள்ள கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகள் தங்களுடைய கால்நடைகளை அரசு மானியத்துடன் கூடிய காப்பீடு செய்ய அருகில் உள்ள அரசு கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






