என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • புதிய திட்டங்கள், அரசின் நல திட்ட உதவிகள் வழங்கியது தொடர்பாக புகைப்படங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.
    • இதை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம் மோரமடுகு ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடந்தது. இதில் முதல்-அமைச்சர் தொடங்கி வைத்த அரசின் புதிய திட்டங்கள், அரசின் நல திட்ட உதவிகள் வழங்கியது தொடர்பாக புகைப்படங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.

    இதில் அரசின் சிறப்பு திட்டங்களான மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் திட்டம், இல்லம் தேடி கல்வி திட்டம், முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம், புதுமைப்பெண் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்கள் தொடர்பான புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தது. இதை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

    • சீமை கருவேலம் மரங்கள் மீண்டும் அடர்ந்தும், படர்ந்தும் காணப்படுகிறது.
    • பொதுமக்களின் குடிநீர் தேவைகள் மற்றும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

    கிருஷ்ணாபுரம்,

    மழைக்காலங்களில் பெய்யும் மழை நீர் தமிழகத்தில் அனைத்து கிராமங்களிலும் தேங்கி நிற்கும் வகையில் நீர்நிலைகளான ஏரிகள், குளங்கள், குட்டைகள், தடுப்பணைகள் போன்றவற்றை அரசு ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் அருகிலுள்ள அணைகள், ஆறுகள் ஆகியவற்றின் வலது மற்றும் இடது புற வாய்க்கால்கள் மூலமும் நீர் நிலைகளுக்கு சில பகுதிகளில் தண்ணீர் விடும் திட்டம் செயல்பாட்டில் இருந்து வருகிறது.

    இந்த நீர் நிலைகளில் உள்ள நீர் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும். இதனால் அந்தந்த நீர் நிலைகளில் சுற்றி உள்ள விவசாய நிலங்களும் அருகில் உள்ள கிராமங்களும் விவசாய பணிகளுக்கும், குடிநீருக்கும் போதிய அளவில் தண்ணீர் கிடைத்து வரும். இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் முன்னேறி வருகின்ற சூழ்நிலை உள்ளது.

    இந்த நிலையில் நீர் நிலைகளில் சீமை கருவேல மரங்கள் அதிக அளவில் உள்ளதால் நீர் நிலையில் உள்ள நீரினை சீமை கருவேல மரங்கள் அதிக அளவில் உறிந்து கொள்கிறது.

    இதனால் நீர்நிலைகள் உள்ள நீர்கள் மிக வேகமாக குறைந்து விடும் சூழல் உள்ளதால் நீர் நிலைகளில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் சில ஆண்டுகளுக்கு முன்பு உத்தரவு பிறப்பித்தது.

    இதனால் தமிழகத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் நீர் நிலைகளில் இருந்த சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டன. பல நீர்நிலைகளில் அகற்ற படாமலேயே உள்ளது.

    குறிப்பாக கிருஷ்ணாபுரத்தில் 141 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பெரிய ஏரிக்கு சுமார் 15 ஆண்டுகளுக்கு பின்பு தற்போதுதான் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இந்த பெரிய ஏரியில் சீமை கருவேல மரங்களும் கருவேல மரங்களும் அடர்ந்து காணப்படுவதால் ஏரியில் உள்ள தண்ணீர் வெகுவாக உறிஞ்சி உள்ளதால் கிருஷ்ணாபுரம் பெரிய ஏரியில் உள்ள சீமை கருவேல மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும்.

    மேலும் சீமை கருவேல மரங்களை அகற்றிய நீர்நிலைகளிலும் அதை முறையாக பராமரிக்காத காரணத்தால் மீண்டும் சீமை கருவேலம் மரங்கள் மீண்டும் அடர்ந்தும், படர்ந்தும் காணப்படுகிறது.

    இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக பாதிக்கப்படுவதால் பொதுமக்களின் குடிநீர் தேவைகள் மற்றும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

    எனவே நீர் நிலைகளில் உள்ள சீமை கருவேல மரங்களை முழுமையாக அகற்ற மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கூட்டத்தில் குழு உறுப்பினர்கள் தங்கள் குறைகளை கொட்டித் தீர்த்தனர்.
    • மின்வாரியத்திற்கு முறையாக மாதந்தோறும் தவறாமல் கட்டணம் செலுத்தி வரும் மாநகராட்சிகளில் ஓசூரும் ஒன்று என்று குறிப்பிட்டார்.

    ஓசூர்,

    ஓசூர் மாநகராட்சி 1-வது மண்டல குழு கூட்டம், நேற்று நடைபெற்றது. மாநகராட்சி கூட்டரங்கில் நடந்த இக்கூட்டத்திற்கு மண்டல தலைவர் அரசனட்டி ரவி தலைமை தாங்கினார். ஆணையாளர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.

    இதில், குழு உறுப்பினர்கள் எம். அசோகா, எச். ஸ்ரீதரன், ரஜினிகாந்த், சீனிவாசலு, கிருஷ்ணப்பா, மாரக்கா, மம்தா ஆகியோர் கலந்துகொண்டு தங்கள் வார்டு பிரச்சினைகள் குறித்து பேசினார்கள்.

    கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு:-

    சீனிவாசலு (தி.மு.க): 8-வது வார்டு கவுன்சிலர்: எனது வார்டுக்குட்பட்ட திருப்பதி நகரில் 50 மீட்டர் பைப்போட்டுத்தர 4 மாதமாக கேட்டு வருகிறேன்.நடவடிக்கையே இல்லை. சின்ன, சின்ன வேலைகளை முடித்து தரக்கூட மெத்தனம் காட்டப்படுகிறது. அடுத்த மண்டல கூட்டத்திற்கு முன்பு அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படவேண்டும்.

    மாரக்கா: 11-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர்:

    பணிகள் எதுவும் நடைபெறாததால், வார்டு மக்களின் முகத்தில் முழிக்கவே முடியவில்லை". இவ்வாறாக கூட்டத்தில் குழு உறுப்பினர்கள் தங்கள் குறைகளை கொட்டித் தீர்த்தனர். தொடர்ந்து கூட்டத்தில் பேசிய ஆணையாளர் பாலசுப்பிரமணியன், "மாநகராட்சி பகுதிகளில் 439 பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஓசூர் மாநகராட்சிக்குட்ட அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியான தெரு பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டிலேயே, குடிநீர் வாரியம் மற்றும் மின்வாரியத்திற்கு முறையாக மாதந்தோறும் தவறாமல் கட்டணம் செலுத்தி வரும் மாநகராட்சிகளில் ஓசூரும் ஒன்று என்று குறிப்பிட்டார்.

    மேலும், ஓசூரில் சாலைகள் மிகவும் மோசம் என்ற தோற்றம் உருவாகி வருகிறது, இதற்கு தனி கவனம் செலுத்தி உடனுக்குடன் சீரமைத்து குண்டும் குழியுமாக இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் விநியோகம் தொடர்பான பிரச்சினைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும், அவசரமான பணிகளை முடித்து தர வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    மேலும் இதில், நகர் நல அலுவலர் அஜிதா, நகரமைப்பு அலுவலர் சீனிவாசன், மற்றும் அலுவலர்கள் சுகாதார ஆய்வாளர்கள், பணியாளர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் வைக்கப்பட்ட 24 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.

    • கிருஷ்ணகிரி மாவட்ட தொழில் மையத்தில், மாவட்ட அளவிலான விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது.
    • வங்கி மேலாளர்கள் பயனா ளிகளின் விண்ணப்பத்தை விரைந்து பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    கிருஷ்ணகிரி,

    பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட தொழில் மையத்தில், மாவட்ட அளவிலான விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது.

    இதற்கு மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரசன்ன பால முருகன் தலைமை தாங்கி பேசும் போது, இந்த திட்டத்தின் மூலம் உற்பத்தி பிரிவிற்கு அதிகபட்சமாக, 50 லட்சம் ரூபாய் மற்றும் சேவை பிரிவிற்கு, 20 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில், அதிகப்பட்ச மாக 35 சதவீதம் மானியத்து டன் கூடிய வங்கிக் கடன் பெற்று தொழில் துவங்கி பயன டையலாம் என்றார்.

    மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் மகேந்திரன் பேசுகையில், வங்கி மேலாளர்கள் பயனா ளிகளின் விண்ணப்பத்தை விரைந்து பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    மாவட்ட தொழில் மைய உதவி இயக்குனர் (தொழில்நுட்பம்) ராமமூர்த்தி, பாரதப் பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் குறித்து விரிவாக விளக்கம் அளித்தார். இந்த முகாமில் வங்கிகளின் பிரதிநிதி கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • 35 கிலோ அரிசி வழங்கப்படும் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • கலெக்டர் ரேஷன் கடைக்கு வரும் பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் பொருட்களை சரியான அளவில் வழங்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி தாலுகாவில் 135 முழுநேர ரேஷன் கடை, 119 பகுதிநேர ரேஷன்கடை என மொத்தம் 254 ரேஷன்கடைகள் உள்ளன. இவற்றில் ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 434 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.

    கிருஷ்ணகிரி தாலுகாவில் கட்டிகானப்பள்ளி ஊராட்சி, பாரதியார் நகர், அகசிப்பள்ளி ஊராட்சி, கனகமுட்லு மற்றும் பெரியமுத்தூர் ஊராட்சி அவதானப்பட்டி ரேஷன் கடைகளை கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து பொதுமக்களிடம் ரேஷன்கடைகளில் பொருட்கள் சரியான அளவில் வழங்கப்படுகிறதா என்றும், ரேஷன்கடை சரியான நேரத்திற்கு திறக்கப்படுகிறதா என கலெக்டர் பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

    முன்னதாக கட்டிகானப்பள்ளி ஊராட்சி, பாரதியார் நகர் கூட்டுறவு ரேஷன் கடை, அகசிப்பள்ளி ஊராட்சி கனகமுட்லு கிராமத்தில் கூட்டுறவு ரேஷன்கடை மற்றும் பெரியமுத்தூர் ஊராட்சி அவதானப்பட்டி கிராமத்தில் பெரியமுத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ரேஷன்கடைகளை நேரில் பார்வையிட்டு வறுமை கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் அரிசி இருப்புகள், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அரிசி இருப்பு விவரங்கள் அன்னோதயா திட்டத்தின் கீழ் 35 கிலோ அரிசி வழங்கப்படும் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் பருப்பு, சமையல் எண்ணை, அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்ணெண்ணை குறித்து பதிவேடுகள் மற்றும் மின்னனு விற்பனை முனையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் ரேஷன் கடைக்கு வரும் பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் பொருட்களை சரியான அளவில் வழங்க வேண்டும்.

    அங்காடியை சுத்தமாகவும் தூய்மையாகவும் வைத்திருக்க வேண்டும் என விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின் போது கிருஷ்ணகிரி வட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ், வட்ட வழங்கல் வருவாய் ஆய்வாளர் சத்தீஸ், வட்ட பொறியாளர் சரவணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • திருமணம் ஆகி சில வருடங்கள் ஆன நிலையில் கணவன் சண்முகத்திடம் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தந்தை வீட்டில் இருந்து வருகிறார்.
    • விவாகரத்து கேட்டு பாலக்கோடு ஜே.எம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அருகே உள்ள பி .ஆர்.ஜி மாதேப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகள் டிம்பிள் மனோ(27)

    இவருக்கு திருமணம் ஆகி சில வருடங்கள் ஆன நிலையில் கணவன் சண்முகத்திடம் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தந்தை வீட்டில் இருந்து வருகிறார். இந்த நிலையில் விவாகரத்து கேட்டு பாலக்கோடு ஜே.எம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.

    மனவேதனையில் இருந்த டிம்பிள் மனோ நேற்று யாரும் இல்லாத போது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த கந்திகுப்பம் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணம் ஆகி சில வருடங்களிலேயே இளம் பெண் தற்கொலை செய்து கொண்டதால், வழக்கை பர்கூர் டி.எஸ்.பி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • பணம் வைக்கும் மேஜையில் இருந்த கல்லாப்பெட்டியும் திறந்து கிடந்தது.
    • அடுக்கி வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களில் 3 மட்டும் மாயமாகி இருந்தது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் வரட்டனப்பள்ளி பகுதியில் மகாராஜாக்கடை சாலையில் அரசு மதுக்கடை ஒன்று இயங்கி வருகிறது.

    இந்த கடையில் விற்பனையாளர்களாக பணிபுரிந்து வரும் சண்முகம், சம்பத் ஆகியோர் வழக்கம்போல கடந்த 18-ந்தேதி இரவு கடையை பூட்டி விட்டு சென்றனர்.

    மறுநாள் வந்து பார்த்தபோது கடையின் ஷட்டர் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.அதிர்ச்சி அடைந்த இருவரும் உள்ளே சென்று பார்த்தபோது கடைக்குள் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா உடைக்கப்பட்டிருந்தது.

    மேலும் பணம் வைக்கும் மேஜையில் இருந்த கல்லாப்பெட்டியும் திறந்து கிடந்தது. அடுக்கி வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களில் 3 மட்டும் மாயமாகி இருந்தது.

    இது குறித்து கந்திகுப்பம் போலீசில் புகார் செய்தனர்.சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் இருவரிடமும் விசாரணை நடத்தினர்.

    இந்த மதுக்கடையில் சம்பவத்தன்று விற்பனையான தொகையை கடையில் வைக்காமல் விற்பனையாளர்கள் எடுத்து சென்றுவிட்டனர்.

    எனவே பணத்தை திருட வந்த கொள்ளையர்கள் ஏமாற்றத்துடன் 3 மது பாட்டில்களை மட்டும் திருடி சென்றுள்ளனர். சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர்.

    தொடர்ந்து மதுக்கடையில் புகுந்து கொள்ளை அடிக்க முயன்ற ஆசாமிகள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரேஷன் கடை கட்டுமான பணி பூமி பூஜையுடன் தொடங்கியது.
    • பிரகாஷ் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் தளி ஒன்றியம் கலுகொண்டப்பள்ளி கிராமத்தில் கனிம வளங்கள் மற்றும் குவாரிகள் திட்டத்தின் கீழ் ரூ.15.50 லட்சம் மதிப்பில் ரேஷன் கடை கட்டுமான பணி பூமி பூஜையுடன் தொடங்கியது.

    நிகழ்ச்சிக்கு தளி ஒன்றிய குழு தலைவர் சீனிவாசலு ரெட்டி தலைமை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் நாகமணி பிரபாகர் முன்னிலை வகித்தனர்.

    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

    முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சந்திரப்பா, கலு கொண்ட பள்ளி ஊராட்சி மன்ற துணைதலைவர் சைத்ரா சுரேஷ், பொதுக்குழு உறுப்பினர் முனிராஜ், ஒன்றிய கவுன்சிலர் நாராயணசாமி, மஞ்சுநாத், ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • பயிரிட உகந்த பருவம் மற்றும் பயிரிட உகந்த மாநிலம் ஆகிய விவரங்களை சரிபார்க்க வேண்டும்.
    • தரமான விதைகளை தேர்வு செய்து சாகுபடி மேற்கொள்ள வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தற்போது இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு நாற்றங்கால் தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. விவசாயி விவர அட்டையில் குறிப்பிட்டுள்ள விவரங்களை சரிபார்த்து, விதைகளை வாங்க வேண்டும். விதை விவர அட்டையில் காணப்படும் பயிரிட உகந்த பருவம் மற்றும் பயிரிட உகந்த மாநிலம் ஆகிய விவரங்களை சரிபார்க்க வேண்டும்.

    மேலும், விதைகளை வாங்கும் முன்னர், அந்த விதைக்குவியலுக்குரிய முளைப்புத் திறன் பகுப்பாய்வு அறிக்கை யினை கேட்டு சரிபார்க்க வேண்டும். விதைகளின் தரத்தினை அறிந்துக்கொள்ள விவசாயிகள், விற்பனையாளர்கள், விதை பரிசோதனை நிலையத்தில் ஒரு பணி விதை மாதிரிக்கு பரிசோதனை கட்டணமாக ரூ.80-ஐ செலுத்தி, விதைகளின் தரத்தினை அறிந்து கொள்ளலாம்.கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் ஒருங்கிணைந்த வேளாண்மை அலு வலக கட்டிடத்தில் செயல்பட்டு வரும் விதைப்பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி வைத்து, பகுப்பாய்வறி க்கையினை பெற்றிடுங்கள்.

    விதைக்குவி யல்களின் தரமறிந்து நல்ல தரமான விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்யுமாறு வேளாண்மை துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.

    • ஐம்பதுக்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்.
    • உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக பேரூராட்சி தலைவர்உறுதி அளித்தார்.

    காவேரிப்பட்டினம் 

    காவேரிப்பட்டினத்தில் சிறப்பு குறைதீர் வார முகாம் பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில்குமார் தலைமை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.

    சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், காவேரிப்பட்டினத்தில் கழிப்பிட வசதி, சாக்கடை பிரச்சனை, ஓ. ஏ .பி., மாற்றுத்திறனாளிகள், விதவைகள் உதவித்தொகை உள்ளிட்டவைகளை வலியுறுத்தி ஐம்பதுக்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்.

    பொதுமக்கள் மனுக்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில்குமார் உறுதி அளித்தார்.

    இந்நிகழ்ச்சியில் காவேரிப்பட்டினம் டவுன் வி.ஏ.ஓ., மருதுபாண்டி கவுன்சிலர்கள் நித்யா முத்துக்குமார், கவுன்சிலர்கள் அமுதா பழனி, தமிழ்ச்செல்வி சோபன்பாபு, கீதா சேகர், அமுதா சக்திவேல், கோகுல்ராஜ், வசந்தி சின்ராஜ், அபிராமி மதனகோபால், மற்றும் சுஜாதா, ஜாபர், திருமால், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஸ்ரீ வினய் குருஜி நேற்று ஓசூர் வழியாக திருச்செந்தூர் சென்றார்.
    • பள்ளி கழிப்பறைக்குள் சென்று தனது கைகளாலே சுத்தம் செய்து அனைவரையும் பிரமிக்க வைத்தார்.

    ஓசூர்,

    கர்நாடக மாநிலம் சிக்மகளூரு அருகே கவுரிகட்டே என்ற இடத்தில் உள்ள ஸ்ரீ தத்தா ஆசிரம நிறுவனரும், பிரபல ஆன்மீக குருவுமான அவதூதா ஸ்ரீ வினய் குருஜி நேற்று ஓசூர் வழியாக திருச்செந்தூர் சென்றார்.

    வழியில், ஓசூர் ஜுஜுவாடியில் உள்ள அரசு மாநகராட்சி பள்ளிக்கு வருகை தந்த அவர் பள்ளியை சுற்றி பார்வையிட்டார். மாணவர்களுக்கு தரமான கல்வி கற்பிப்பதை கண்டும், பள்ளி வளாகம், வகுப்பறைகள், கழிப்பறைகள் என அனைத்தும் சுத்தம், சுகாதாரமாக நல்ல பராமரிக்கப்பட்டு வருவதை கண்டு பாராட்டினார்.

    மேலும் இந்த பள்ளியில் பசுமைத்திட்ட செயல்பாடுகள் மற்றும் உயர்தர சுகாதார பராமரிப்பு குறித்து, தான் ஏற்கனவே அறிந்து அதனடிப்படையில் பார்வையிட வந்தததாகவும் அவர் தெரிவித்தார்.

    பின்னர், திடீரென பள்ளி கழிப்பறைக்குள் சென்று தனது கைகளாலே சுத்தம் செய்து அனைவரையும் பிரமிக்க வைத்தார். சுவாமிஜியின் இந்த செயல், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகளிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    பின்னர், மாணவ மாணவியருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து, தனது அறக்கட்டளை மூலம் உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்து சென்றார். இந்த நிகழ்வின் போது, ஓசூர் மாநகராட்சி கல்விக்குழு தலைவர் எச்.ஸ்ரீதரன், நகரமைப்பு குழு தலைவர் எம்.அசோகா மற்றும் ஆசிரிய,ஆசிரியையர், உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • பஜனை குட்டையில் நேற்று மாலை ஒற்றை யானை தண்ணீர் குடித்தது.
    • பட்டாசுகள் வெடித்தும், அதிக ஒலி எழுப்பியும் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட் டம், அஞ்செட்டி வனச் சரகத்தில் ஏராளமான யானைகள் முகாமிட்டுள்ளன. அஞ்செட்டி சாலையில் உள்ள கொண்டை ஊசி வளைவு அருகே உள்ள பஜனை குட்டையில் நேற்று மாலை ஒற்றை யானை தண்ணீர் குடித்தது.

    அங்கு, ஆனந்த குளியல் போட்டு விட்டு வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை யானை அஞ்செட்டி சாலையில் முகாமிட்டது.

    இதனால், அவ்வழியாக அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

    இது குறித்த தகவலின் பேரில், அஞ்செட்டி வனச்சரகர் சீத்தாராமன் தலைமையிலான வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் விரைந்து வந்து யானையை தாரை தப்பட்டை அடித்தும், பட்டாசுகள் வெடித்தும், அதிக ஒலி எழுப்பியும் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

    யானைகள் சாலையில் உலா வருவதால் வாகன ஓட்டிகள் செல்பி எடுக்க முயற்சி செய்யவேண்டாம். சாலையில் அதிக ஒலி எழுப்பியபடி செல்ல வேண்டும்,

    யானைகளை கல்லால் தாக்கி விரட்ட முயற்சிக்க கூடாது என வனத்துறையினர் வாகன ஓட்டிகளை அறிவுறுத்தியுள்ளனர்.

    இதனால் வன துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு தொடர்ந்து தீவிர கண்கானிப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

    ×