என் மலர்
நீங்கள் தேடியது "மதுக்கடையில் கைவரிசை"
- பணம் வைக்கும் மேஜையில் இருந்த கல்லாப்பெட்டியும் திறந்து கிடந்தது.
- அடுக்கி வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களில் 3 மட்டும் மாயமாகி இருந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வரட்டனப்பள்ளி பகுதியில் மகாராஜாக்கடை சாலையில் அரசு மதுக்கடை ஒன்று இயங்கி வருகிறது.
இந்த கடையில் விற்பனையாளர்களாக பணிபுரிந்து வரும் சண்முகம், சம்பத் ஆகியோர் வழக்கம்போல கடந்த 18-ந்தேதி இரவு கடையை பூட்டி விட்டு சென்றனர்.
மறுநாள் வந்து பார்த்தபோது கடையின் ஷட்டர் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.அதிர்ச்சி அடைந்த இருவரும் உள்ளே சென்று பார்த்தபோது கடைக்குள் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா உடைக்கப்பட்டிருந்தது.
மேலும் பணம் வைக்கும் மேஜையில் இருந்த கல்லாப்பெட்டியும் திறந்து கிடந்தது. அடுக்கி வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களில் 3 மட்டும் மாயமாகி இருந்தது.
இது குறித்து கந்திகுப்பம் போலீசில் புகார் செய்தனர்.சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் இருவரிடமும் விசாரணை நடத்தினர்.
இந்த மதுக்கடையில் சம்பவத்தன்று விற்பனையான தொகையை கடையில் வைக்காமல் விற்பனையாளர்கள் எடுத்து சென்றுவிட்டனர்.
எனவே பணத்தை திருட வந்த கொள்ளையர்கள் ஏமாற்றத்துடன் 3 மது பாட்டில்களை மட்டும் திருடி சென்றுள்ளனர். சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர்.
தொடர்ந்து மதுக்கடையில் புகுந்து கொள்ளை அடிக்க முயன்ற ஆசாமிகள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






