என் மலர்
கிருஷ்ணகிரி
- தந்தை இறந்தது முதலே மனமுடைந்த நிலையில் கிரி இருந்து வந்துள்ளார்.
- தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கிரியை தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரிமாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள இந்துக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் கிரி (எ) கரிய கவுடா (வயது 25).
இவரது தந்தை மல்லப்பா கடந்த 25 நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். தந்தை இறந்தது முதலே மனமுடைந்த நிலையில் கிரி இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 30-ந்தேதி அன்று வீட்டை விட்டு சென்ற கிரி அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
பல்வேறு இடங்களில் தேடியும் அவர் பற்றி எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து கிரியின் உறவினர் முனிகவுடா என்பவர் கொடுத்த புகாரின்பேரில் தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கிரியை தேடி வருகின்றனர்.
ஓசூர்,
தமிழக அரசின் உத்தரவுப்படி, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வள்ளலாரின் 200-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் தொடர் அன்னதான நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் ஓசூர் ஸ்ரீசந்திரசூடேஸ்வரர் கோவில் சார்பில் தேர்பேட்டை பச்சைக்குளம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் வள்ளலாரின் 200-வது பிறந்த நாள் விழா நேற்று நடைபெற்றது.
இதில் ஓசூர் சப்- கலெக்டர் சரண்யா கலந்துகொண்டு குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். பின்னர், தொடர் அன்னதான நிகழ்ச்சியையும் அவர் தொடங்கி வைத்தார்.
முன்னதாக சந்திர சூடேஸ்வரர் கோவில் செயல் அலுவலர் சாமிதுரை வரவேற்று பேசினார். மேலும் இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் குமரேசன், செயல் அலுவலர் சின்னசாமி, ஆய்வாளர்கள் சக்தி, பூவரசன், கோவில் தலைமை அர்ச்சகர் வாசீஸ்வரன் மற்றும் சசிகுமார் உள்ளிட்ட கோவில் ஊழியர்கள் மற்றும் வள்ளலார் பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
விழாவை முன்னிட்டு வள்ளலார் அகவல் பாராயணம், அருட்பெருஞ்ஜோதியின் மகிமை சொற்பொழிவு ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. நாளை (திங்கட்கிழமை) வரை அன்னதான நிகழ்ச்சி நடைபெறும்.
- எங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை ஏற்றோம். ஆனாலும் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை.
- 20,000-க்கும் மேற்பட்டோர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஓசூர்,
ஓசூரில், கிரஷர் உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய சங்கத் தலைவர் எஸ்.ஆர்.சம்பங்கி, ஓசூர் அருகே கொரட்டகிரி என்ற கிராமத்தில் ஜல்லி கிரஷர்கள் இயங்கி வருகின்றன. 25 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பகுதியில் லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன.
தற்போது ஒருசிலரது தூண்டுதல் பேரில், கிராமத்திற்குள் லாரிகள் வந்து செல்ல முடியாமல் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் கடந்த 8 மாதங்களாக எங்களின் வாழ்வாதாரம் சிதைந்து விட்டது. கிராமத்திற்கு லாரிகள் வந்து செல்ல, எங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை ஏற்றோம். ஆனாலும் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை.
அமைச்சர், அதிகாரிகள் தலையிட்டும் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காததால், நாங்கள் நீதிமன்றத்தை அணுகினோம். நீதிமன்ற உத்தரவுப்படி, கொரட்டகிரி சாலையை திறந்து லாரிகளை கிராமத்திற்குள் இயக்க மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்.
இதையடுத்து நேற்று முன்தினம் லாரிகளை இயக்க தொடங்கிபோது, ஒரு சிலரின் தூண்டுதலின்பேரில், லாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டன. இதனால் வேறு வழியின்றி நாங்கள் இன்று முதல், உடனடியாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம்.
ஓசூர், பேரிகை, சூளகிரி, தேன்கனிக்கோட்டை பகுதிகளில் உள்ள 60-க்கும் மேற்பட்ட கிரஷர்கள் மூடப்பட்டு, உரிமையாளர்கள், தொழிலாளர்கள், லாரி டிரைவர்கள் என இந்த தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ள 20,000-க்கும் மேற்பட்டோர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வருகிற 2-ந் தேதிக்குள் (திங்கட்கிழமை) இந்த பிரச்சினைக்கு தீர்வு காணாவிடில், செவ்வாய்க்கிழமை (3-ந்தேதி) அன்று, நாங்கள் அனைவரும் ஒன்று திரண்டு, கொரட்டகிரி கிராமத்தில் மிகப்பெரிய போராட்டம் நடத்தவுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.
அப்போது சங்க துணைத்தலைவர் மது, பொருளாளர் ஆனந்த், நிர்வாகிகள் சர்வேஷ், பிரேம்நாத் உள்பட பலர் உடனிருந்தனர்.
- கத்தியை காட்டி மிரட்டி ரூ.4 லட்சத்து 50 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர்.
- ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சங்கர் சிங், சுரேந்தர் சிங், லட்சுமணராம் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
ராயக்கோட்டை,
ராஜஸ்தான் மாநிலம் தாளி மாவட்டம் திப்பிலிகலா கிராமத்தைச் சேர்ந்தவர் ருக்காராம். இவரது மகன் கலுராம் (வயது 32).
இவர் ராயக்கோட்டையில் உள்ள தக்காளி மண்டி அருகே எலக்ட்ரிக்கல் மற்றும் ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறார். இவரது கடை தரைதளத்தில் அமைந்துள்ளது. 2-வது தளத்தில் கலுராம் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
கடந்த 21-ந்தேதி கலுராம் கடைக்கு சென்று விட்டார். இவரது மனைவி யசோதா, குழந்தைகள் மீனா, கிருத்திகா ஆகியோர் வீட்டில் இருந்தனர். அப்போது கலுராம் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் யசோதா மற்றும் குழந்தைகளை கத்தியை காட்டி மிரட்டி ரூ.4 லட்சத்து 50 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர். இதுதொடர்பான புகாரின் பேரில் ராயக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சங்கர் சிங், சுரேந்தர் சிங், லட்சுமணராம் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.4.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
- லிப்ட் 2-வது தளத்தை அடைந்ததும் திடீரென பழுதாகி நின்றது. மேலும் லிப்ட்டின் கதவும் திறக்கவில்லை.
- போலீசார் கடப்பாரை மூலம் கதவை நெம்பி உடைத்து லிப்ட்டில் சிக்கிய பயனாளிகள் 7 பேரையும் மீட்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் விழா நேற்று நடந்தது.
அலுவலகத்தில் 2-வது தளத்தில் உள்ள அறையில் நடந்த இந்த விழாவில் பங்கேற்பதற்காக கைத்தறி துறை அமைச்சர் காந்தி, கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி மற்றும் அதிகாரிகள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள லிப்ட்டில் சென்றனர்.
அங்குள்ள மற்றொரு லிப்ட்டில் பொதுமக்கள், பயனாளிகள் உள்ளிட்டோர் சென்றனர். அந்த லிப்ட் 2-வது தளத்தை அடைந்ததும் திடீரென பழுதாகி நின்றது. மேலும் லிப்ட்டின் கதவும் திறக்கவில்லை. இதனால் லிப்ட்டில் இருந்த பயனாளிகள் 7 பேரும் அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்கள் லிப்ட்டில் இருந்தவாறு கதவை தட்டி சத்தம் போட்டனா். கதவை உடைத்தனர் இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து சென்று லிப்ட்டின் கதவை திறக்க முயன்றனர். ஆனால் நீண்ட நேரமாகியும் கதவை திறக்க முடியவில்லை.
இதையடுத்து போலீசார் கடப்பாரை மூலம் கதவை நெம்பி உடைத்து திறந்தனர். பின்னர் லிப்ட்டில் சிக்கிய பயனாளிகள் 7 பேரையும் மீட்டனர்.
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 2 லிப்ட்டுகளும் இதே போல அடிக்கடி பழுதாகி விடுவதாகவும், கதவுகள் திறப்பதில்லை என்றும் பொதுமக்கள் பலரும் புகார் தெரிவித்தனர்.
இந்த 2 லிப்டுகளையும் முறையாக பராமரிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
- நர்சரி தோட்டங்கள் அமைத்து மலர் செடி நாற்றுகளை உற்பத்தி செய்து வருகின்றனர்.
- கொரோனா காலத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை இழப்பை தற்போது ஈடு செய்ய முடியும் எனவும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஓசூர்,
ஓசூர் அருகே பாகலூர், பேரிகை,மற்றும் அகலக்கோட்டை, பாலதோட்டனபள்ளி,, மரகததொட்டி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில், மக்கள் நர்சரி தோட்டங்கள் அமைத்து மலர் செடி நாற்றுகளை உற்பத்தி செய்து வருகின்றனர்.
இங்கு ரோஜா, நிராபல், சென்ட்ரோஸ், கில்லி எல்லோ, கிள்ளி ஆரஞ்சு, மேங்கோ எல்லோ, மூக்குத்தி ரோஸ், தாஜ்மஹால், நோப்ளஸ் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட வகைகளில் மலர் செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இங்கு உற்பத்தி செய்யப்படும் மலர்செடி நாற்றுகள், அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கு காலத்திற்கு முன்பு, மலர் செடி நாற்று ஏற்றுமதியில் நல்ல லாபம் பெற்று வந்த உற்பத்தியாளர்களுக்கு கொரோனா ஊரடங்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது.
ரோனா ஊரடங்குக்கு பின்னர், மலர் செடிகள் விற்பனை குறைந்து விவசாயிகள் கடும் நஷ்டங்களை சந்தித்து வந்தனர். இந்த நிலையில், இந்தாண்டு பண்டிகை கொண்டாட்டங்களுக்காக மலர் செடி நாற்றுகளின் விற்பனை தற்போது சூடு பிடித்துள்ளது.
புத்தாண்டு பிறப்பு, பொங்கல், காதலர் தினம் ஆகிய விழாக்கள் அடுத்தடுத்து கொண்டா டப்படவுள்ளதால் இந்த பண்டிகைகளுக்காக வியாபாரிகள், மலர்ச்செடி நாற்றுகளை தங்கள் பகுதிகளுக்கு அதிகளவில் வாங்கிச்செல்கின்றனர். இதனால் அகலக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள நர்சரி தோட்டங்களில் மலர் செடி நாற்றுகள் விற்பனை களை கட்டியுள்ளது.
இதனால், நர்சரி தொழிலில் ஈடுபட்டு வரும் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், அண்டை மாநிலமான கேரளாவில், மக்கள் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, காதலர் தினம் உள்ளிட்ட விழாக்களை சிறப்பாக கொண்டாடுவதால் கேரள வியாபாரிகள் நாள்தோறும் அகலக்கோட்டை கிராம பகுதிகளுக்கு வந்து அதிகளவில் மலர் செடி நாற்றுகளை கொள்முதல் செய்து செல்கின்றனர்.
இது தவிர காதலர் தின கொண்டாட்டத்தில் காதலர்கள் தங்களது அன்பை பரிமாறிக்கொள்ள மலர்களை வழங்குவதற்கு பதிலாக, மலர் செடிகளை வழங்கி வருகின்றனர். இதனால் மலர் செடிகளின் விற்பனை அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. பண்டிகை கொண்டாட்டங்களுக்காக அகலக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி கிராமங்களில் மலர் செடி நாற்றுகள் அதிக அளவில் விற்பனையாகி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். கொரோனா காலத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை இழப்பை தற்போது ஈடு செய்ய முடியும் எனவும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
- டிப்பர் லாரிகளில் மாமூல் வசூல் செய்து தர வேண்டும் என கேட்டதாக கூறப்படுகிறது.
- சீனிவாசன் ராமசாமியை சட்டையை பிடித்து இழுத்து கையில் தாக்கியுள்ளார்.
ஓசூர்,
ஓசூர் அருகே உள்ள சேவகானப்பள்ளி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக ராமசாமி என்பவர் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், சேவகானப்பள்ளி அருகே உள்ள கொத்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் சீனிவாசன் (46) என்பவர் கிராம நிர்வாக அலுவலர் ராமசாமிக்கு போன் செய்து அங்குள்ள கல்குவாரி மற்றும் அந்த வழியாக செல்லும் டிப்பர் லாரிகளில் மாமூல் வசூல் செய்து தர வேண்டும் என கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு கிராம நிர்வாக அலுவலர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சீனிவாசன் சிட்டா அடங்கள் சம்பந்தமாக, கிராம நிர்வாக அலுவலருக்கு போன் செய்துள்ளார், அப்போது கிராம நிர்வாக அலுவலர் தான், தாசில்தார் அலுவலகத்தில் பணியில் உள்ளதாகவும், நாளை அலுவலகத்திற்கு வாருங்கள் என்றும் கூறியுள்ளார்.
அதன் பின்னர் நேற்று கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்ற சீனிவாசன், கிராம நிர்வாக அலுவலர் ராமசாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்படவே சீனிவாசன் ராமசாமியை சட்டையை பிடித்து இழுத்து கையில் தாக்கியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் ராமசாமி ஓசூர் தாசில்தார் கவாஸ்கருக்கு தகவல் தெரிவித்தார், அதனைத்தொடர்ந்து அவர் பாகலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் தி.மு.க. பிரமுகர் சீனிவாசனை கைது செய்தனர்.
- புத்தாண்டு பிறப்பு, வைகுண்ட ஏகாதசி போன்ற விழாக்களுக்காக பூக்களின் விலை உயர்ந்திருப்பது மகிழ்ச்சியை தருகிறது.
- மல்லி, முல்லை விலையை ஒப்பிடுகையில் ரோஜா பூக்களின் வலை குறைவாக உள்ளது.
கிருஷ்ணகிரி,
வடகிழக்கு பருவ மழை மற்றும் பனி காரணமாக பூக்கள் வரத்து குறைந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ கிலோ ரூ.1,500-க்கு விற்பனையாகிறது.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் விளைச்சல் குறைந்துள்ளன. இதனால் மார்க்கெட்டிற்கு வழக்கமாக வரும் சுமார் 2 டன் பூக்களுக்கு பதிலாக தற்போது சுமார் 20 ஆயிரம் கிலோ பூக்கள் மட்டுமே வருகின்றன.
விழாக் காலங்களில் பூக்களின் விலை கடுமையாக உயர்வது வழக்கம். தற்போது மார்கழி மாதம் என்பதாலும், புத்தாண்டு, சபரிமலை சீசன் போன்ற விசேஷ நாட்கள் இருப்பதாலும் பூக்களின் தேவை அதிகமாக உள்ளது. பொங்கல் பண்டிகை வரை இந்த விலை உயர்வு நீடிக்க வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
பூக்களின் விலை உயர்வு குறித்து இல்லத்தரசிகளும், பூ வியாபாரிகளும் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். அதன் விபரம் வருமாறு:-
ஓசூர் பூ வியாபாரிகள் சங்க செயலாளர் மூர்த்தி ரெட்டி கூறுகையில், கடந்த சிவ மாதங்களில் கன மழை காரணமாக மற்றும் கடும் பனிப்பொழிவு காரணமாக, பூக்கள் தோட்டத்திலேயே கருகியும், உதிர்ந்தும் விவசாயிகளுக்கு அதிக இழப்பு ஏற்பட்டது. பூ வியாபாரிகளும் பாதிப்படைந்தனர்.
தற்போது கடந்த ஓரிரு நாட்களாக பூக்கள் விலை சற்று உயர்ந்துள்ளது. புத்தாண்டு பிறப்பு, வைகுண்ட ஏகாதசி போன்ற விழாக்களுக்காக பூக்களின் விலை உயர்ந்திருப்பது மகிழ்ச்சியை தருகிறது. விவசாயிகள் மற்றும் பூ வியாபாரிகளுக்கும் லாபம் கிடைத்து வருகிறது என்று கூறினார்.
வேப்பனப்பள்ளி அருகே உள்ள உண்டிகைநத்தம் கிராமத்தைச் சேர்ந்த இல்லத்தரசி பிரேமா என்பவர் கூறுகையில் ,பெண்கள் விரும்பிய பூக்களை வாங்கி சூடுவதிலும், கோவிலுக்கு வாங்கித் தருவதிலும் எந்த தவறும் இல்லை. ஆனால் விலைக்கு ஏற்றவாறும், சீசனுக்கு ஏற்ற பூக்களை வாங்கி பயன்படுத்துவதன் மூலம் பணத்தை சிக்கனப்படுத்த முடியும் என்பதுடன், அதிகளவு பூக்களை சூடவும் முடியும்,
கோவிலுக்கு வாங்கித் தரவும் முடியும். அந்தவகையில் தற்போது சாமந்தி பூ மற்றும் ரோஜாப்பூ சீசனாக இருப்பதால் அவற்றை வாங்கி பயன்படுத்தும் மனநிலைக்கு மாறிக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
தேன்கனிக்கோட்டை யைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவி சாதனா கூறியதாவது:-தற்போது பனிக்காலம் என்பதால் ஜாதி மல்லி, முல்லை பூக்கள் சீசன் இல்லை. இந்த வகை பூக்கள் முழம் ரூ.50 வரையில் விற்பனை செய்யப்படுகின்றன.
இதை அனைவராலும் வாங்க முடியாது. தேன்கனிக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் ரோஜாக்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.
மல்லி, முல்லை விலையை ஒப்பிடுகையில் ரோஜா பூக்களின் வலை குறைவாக உள்ளது. எனவே பலரும் அதை வாங்கி செல்கிறார்கள் என்று கூறினார்.
- விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் நடந்தது.
- தாசில்தார் அலுவலங்களில் பட்டா உட்பட பல்வேறு சான்றிதழ்கள் தாமதம் இல்லாமல், விசாரணை நடத்தி வழங்கிட வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு பேசியதாவது:-
தொடர் மழைக்கு சேதமான நெல்லுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இழப்பீடு, மானியம் வங்கிகள் மூலம் செலுத்தப்படும் நிலையில், பயனாளிகளின் வங்கி கணக்கு பதிவு செய்வதில் ஏற்படும் தவறுகளால், பாதிக்கப்படுவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைப்பதில் வெகுவாக காலதாமதம் ஏற்படுகிறது.
ஊத்தங்கரை அருகே பாவக்கல் பகுதிகளில் பாலாறு -தென்பெண்ணை ஆறு இணையும் இடத்தில் அணை கட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் கணினி மையங்கள் மூலம் சான்றிதழ்களுக்கு விண்ணப்பம் செய்தால் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தைவிட இரு மடங்கு அதிகமாக வசூலிக்கின்றனர்.
மா விவசாயிகள் கடந்த 2 ஆண்டுகளாக வருவாய் இழப்பினை சந்தித்து வரும் நிலையில், பையூரில் செயல்படும் மா ஆராய்ச்சி மையம் மூலம் எவ்வித நன்மையும் விவசாயிகளுக்கு இல்லை. மாவிவசாயிகளுக்கு பூச்சி மருந்துகளுக்கு மானியம் வழங்க வேண்டும்.
பால் விலை ரூ.1 உயர்த்தினால், தீவனத்தின் விலை ரூ.500 விலை உயர்த்துகின்றனர். தீவன விலை உயர்வை கட்டுக்குள் வைக்க வேண்டும். தென்னையில் நீரா பானம் எடுக்க வேண்டும்.
பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விவசாய நிலங்களில் மின்கம்பிகள் தாழ்வாக செல்வதை சீரமைக்க வேண்டும். அஞ்செட்டி வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் வெளியேறுவதை தடுக்க 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு மின்வேலி அமைக்க வேண்டும். மலை கிராமங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாம்புக்கடிக்கான மருந்துகள் இருப்பு இல்லை.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி பேசியதாவது:-
மக்கள் கணினி மையங்கள் நடத்து பவர்களுக்கு தாசில்தார் மூலம் பயிற்சி அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூடுதல் பணம் வசூல் மற்றும் முறைகேட்டில் ஈடுபடும் மக்கள் கணினி மையங்களுக்கு சீல் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தென்னையில் இருந்து நீராபானம் எடுப்பது தொடர்பாக விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும். அஞ்செட்டி வனப்பகுதியில் மின்வேலி அமைக்க நிதி வரபெற்றவுடன் நடவடிக்கை எடுக்கப்படும். தாசில்தார் அலுவலங்களில் பட்டா உட்பட பல்வேறு சான்றிதழ்கள் தாமதம் இல்லாமல், விசாரணை நடத்தி வழங்கிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மர்ம ஆசாமிகள் இருவரும் அணிந்திருந்த 15 பவுன் தங்க நகைகளை பறித்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் மார்ட்டின் ராஜா (வயது 48). இவர் தனது குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
நேற்று இரவு மார்ட்டின் ராஜா வெளியே சென்றிருந்த நிலையில் 3 மர்ம ஆசாமிகள் அவரது வீட்டுக்குள் புகுந்துள்ளனர்.அப்போது மார்ட்டின் ராஜாவின் மனைவி பாஸ்கல் ஜோஸ்வினா, மாமியார் லூர்துமேரி ஆகியோர் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர்.
அவர்களை கத்திமுனையில் மிரட்டிய மர்ம ஆசாமிகள் இருவரும் அணிந்திருந்த 15 பவுன் தங்க நகைகளை பறித்தனர்.இந்நிலையில் வெளியே சென்றிருந்த மார்ட்டின் ராஜா வீட்டுக்குள் நடப்பது தெரியாமல் உள்ளே நுழைந்தார்.
இதையடுத்து அவரை இரும்பு தடியால் தாக்கி காயப்படுத்திவிட்டு மர்ம ஆசாமிகள் 3 பெரும் தப்பி ஓடி விட்டனர்.இதில் காயமடைந்து ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள மார்ட்டின் ராஜா கொடுத்த புகாரின்பேரில் ஓசூர் ஹட்கோ போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
பறிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ.2,17,500 என்று கூறப்படுகிறது.
- பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார்.
- வள்ள லார்கள், அடிகளார்கள், ஆன்மீக பக்தர்கள், பொது மக்கள் கலந்துகொண்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அடுத்த கண்ணம்பள்ளி வெங்கட்ரமண சுவாமி கோவில் சார்பில், கிருஷ்ணகிரி எஸ்எஸ் திருமண மண்டபத்தில் வள்ளலாரின் 200-வது பிறந்த நாளையொட்டி கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு பர்கூர் எம்எல்ஏ., மதியழகன் முன்னிலை வகித்தார். துணை ஆணையர் குமரேசன் வரவேற்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சி குறித்து கலெக்டர் கூறுகையில்:-
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் சீர்மிகு நல்லாட்சியில் வள்ளல் பெருமானாரின் 200-வது பிறந்த நாளையொட்டி 2022 அக்டோபர் மாதம் முதல் 2023-ம் அண்டு வரை 52 வாரங்களுக்கு முக்கிய நகரங்களில் முப்பெரும் விழா எடுக்கப்படும் எனவும், தர்மச்சாலையை துவக்கி வைத்து, பசித்த ஏழைகளுக்கு உணவு வழங்கிய வள்ளலாரின் பெருமையை போற்றும் விதமாக கோவில்களில் ஆண்டு முழுவதும் அன்ன தானம் வழங்கப்படும் என சட்டப்பேரவை மானிய கோரிக்கையில் அறிவித்தார்.
அதன் அடிப்படையில் கிருஷ்ணகிரி கண்ண ம்பள்ளி வெங்கட்ரமண சுவாமி கோவில் சார்பாக தற்போது அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
இன்றும் தொடர்ச்சியாக நண்பகல் 12 மணி அளவில் கிருஷ்ணகிரி எஸ்எஸ் திருமண மண்டபத்தில் 200 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக வள்ளலார், ஒரே இரவில் எழுதிய அகவல் வழிபாடு வள்ளலார் ஆன்மீக அன்பர்களால் நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் பரிதாநவாப், பிடிஏ தலைவர் நவாப், நகர்மன்ற உறுப்பினர்கள் செந்தில்குமார், பாலாஜி, வேலுமணி, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் அஸ்லம், செயல் அலுவலர் சித்ரா, ஆய்வாளர் ராமமூர்த்தி, தனி தசில்தார் ரமேஷ், இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள், வள்ள லார்கள், அடிகளார்கள், ஆன்மீக பக்தர்கள், பொது மக்கள் கலந்துகொண்டனர்.
- குட்டைகள் அமைக்கும் பணியினை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்க விட அறி வுறுத்தப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா, தொகரப்பள்ளி, பட்லப்பள்ளி, குமாரம்பட்டி, நாகம்பட்டி ஆகிய கிராமங்களில் செயல்படுத்தியுள்ள ரூ.13 லட்சத்து 99 ஆயிரம் மதிப்பிலான உலர்களங்கள், கசிவு நீர் குட்டைகள் அமைக்கும் பணியினை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, மழைநீர் சேகரிப்பு பணிகளுக்காக பல்வேறு துறைகளின் சார்பில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதனடிப்படையில், கிருஷ்ணகிரி மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் கீழ், பர்கூர், வேப்பனஹள்ளி மற்றும் தளி வட்டாரங்களில் ரூ.6 கோடியே 28 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு, நுழைவுகட்டப் பணிகள், இயற்கை வள மேம்பாட்டு பணிகள், வேளாண் உற்பத்தி திட்டப்பணிகள், சுழல்நிதி வழங்கும் பணிகள் மற்றும் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில் பர்கூர் தாலுகா தொகரப்பள்ளியில் ரூ.1 லட்சத்து 92 ஆயிரம் மதிப்பிலும், பட்லப்பள்ளியில் ரூ.1 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பிலும், கண்ணன்டஅள்ளியில் ரூ.2 லட்சம் மதிப்பிலும் கட்டி முடிக்கப்பட்டுள்ள உலர்கள பணிகளையும், குமாரம்பட்டியில் ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலும், பட்லப்பள்ளியில் ரூ.2 லட்சத்து 92 ஆயிரம் மதிப்பிலும் கட்டி முடிவுற்றுள்ள கசிவுநீர் குட்டை அமைக்கும் பணிகளையும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், மத்தூர் ஒன்றியம் கண்ணன்டஅள்ளி ஊராட்சி பெத்தான் ஏரியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் தமிப்பில் மதகுகள் அமைக்கப்பட்டு ள்ளதையும் ஆய்வு செய்யப்பட்டது.
முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூர், வேப்பனஹள்ளி, தளி ஆகிய 3 ஒன்றி யங்களில் மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை யின் கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணி களை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்க விட அறி வுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
இந்த கள ஆய்வின் போது, மாவட்ட நீர்வடிப்பகுதி வேளாண்மை துணை இயக்குநர் (நுண்ணீர் பாசனம்) ஜெகதீசன், வேளாண்மை உதவி இயக்குநர் (நீர்வடிப்பகுதி) சகாயராணி, உதவிப் பொறியாளர் பத்மாவதி மற்றும் நீழ்வடிப்பகுதி உறுப்பினர்கள் பிரபு, இனியன் ஆகியோர் உடனிருந்தனர்.






