என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாலாறு-தென்பெண்ணையாறு இணையும் இடத்தில் அணை கட்ட கோரிக்கை
- விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் நடந்தது.
- தாசில்தார் அலுவலங்களில் பட்டா உட்பட பல்வேறு சான்றிதழ்கள் தாமதம் இல்லாமல், விசாரணை நடத்தி வழங்கிட வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு பேசியதாவது:-
தொடர் மழைக்கு சேதமான நெல்லுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இழப்பீடு, மானியம் வங்கிகள் மூலம் செலுத்தப்படும் நிலையில், பயனாளிகளின் வங்கி கணக்கு பதிவு செய்வதில் ஏற்படும் தவறுகளால், பாதிக்கப்படுவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைப்பதில் வெகுவாக காலதாமதம் ஏற்படுகிறது.
ஊத்தங்கரை அருகே பாவக்கல் பகுதிகளில் பாலாறு -தென்பெண்ணை ஆறு இணையும் இடத்தில் அணை கட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் கணினி மையங்கள் மூலம் சான்றிதழ்களுக்கு விண்ணப்பம் செய்தால் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தைவிட இரு மடங்கு அதிகமாக வசூலிக்கின்றனர்.
மா விவசாயிகள் கடந்த 2 ஆண்டுகளாக வருவாய் இழப்பினை சந்தித்து வரும் நிலையில், பையூரில் செயல்படும் மா ஆராய்ச்சி மையம் மூலம் எவ்வித நன்மையும் விவசாயிகளுக்கு இல்லை. மாவிவசாயிகளுக்கு பூச்சி மருந்துகளுக்கு மானியம் வழங்க வேண்டும்.
பால் விலை ரூ.1 உயர்த்தினால், தீவனத்தின் விலை ரூ.500 விலை உயர்த்துகின்றனர். தீவன விலை உயர்வை கட்டுக்குள் வைக்க வேண்டும். தென்னையில் நீரா பானம் எடுக்க வேண்டும்.
பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விவசாய நிலங்களில் மின்கம்பிகள் தாழ்வாக செல்வதை சீரமைக்க வேண்டும். அஞ்செட்டி வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் வெளியேறுவதை தடுக்க 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு மின்வேலி அமைக்க வேண்டும். மலை கிராமங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாம்புக்கடிக்கான மருந்துகள் இருப்பு இல்லை.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி பேசியதாவது:-
மக்கள் கணினி மையங்கள் நடத்து பவர்களுக்கு தாசில்தார் மூலம் பயிற்சி அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூடுதல் பணம் வசூல் மற்றும் முறைகேட்டில் ஈடுபடும் மக்கள் கணினி மையங்களுக்கு சீல் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தென்னையில் இருந்து நீராபானம் எடுப்பது தொடர்பாக விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும். அஞ்செட்டி வனப்பகுதியில் மின்வேலி அமைக்க நிதி வரபெற்றவுடன் நடவடிக்கை எடுக்கப்படும். தாசில்தார் அலுவலங்களில் பட்டா உட்பட பல்வேறு சான்றிதழ்கள் தாமதம் இல்லாமல், விசாரணை நடத்தி வழங்கிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






