என் மலர்
கிருஷ்ணகிரி
- கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
- மூன்று குடும்பங்களை ஊரை விட்டு தள்ளி வைத்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அடுத்த சின்ன அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரியங்கா (வயது 30), அவரது கணவரும் ராணுவ வீரருமான செந்தில்குமார் (41) மற்றும் அவரது உறவினர்கள் உட்பட பதினைந்துக்கும் மேற்பட்டோர், கட்டப்பஞ்சாயத்து செய்து தங்களை ஊர் பிரமுகர்கள் ஊரை விட்டு தள்ளி வைத்துள்ளதாக நேற்று கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி அடுத்த சின்ன அக்ரஹாரத்தை சேர்ந்த சிலர் எங்கள் குடும்பத்தை ஊரைவிட்டு தள்ளி வைப்பதாக கட்டப்பஞ்சாயத்து நடத்தி அறிவித்தனர். இதுகுறித்து அப்போதே கே.ஆர்.பி. அணை போலீசில் புகார் அளித்தோம்.
இதையடுத்து கட்டப் பஞ்சாயத்துகாரர்களை, போலீசார் எச்சரித்து அனுப்பினர். ஆனாலும் அவர்கள் எங்கள் குடும்பம் உள்பட, மூன்று குடும்பங்களை ஊரை விட்டு தள்ளி வைத்தனர்.
தற்போது, ஊர் பொங்கல் பண்டிகைக்காக குடும்பத்திற்கு தலா, 500 வசூல் செய்தனர். இதில், எங்கள் குடும்பத்தார் மற்றும் உறவினர்களை தவிர்த்து விட்டனர். இது குறித்து கேட்டதற்கு உங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளோம், வேண்டுமானால் போலீசில் புகார் கூறுங்கள் எனக் கூறினார்கள்.
திருமணம், துக்க நிகழ்ச்சிகளுக்கு சென்றாலும் நாங்கள் செல்லும்போது அவர்கள் எழுந்து சென்று விடுகின்றனர். எங்கள் குழந்தைகளுடன் மற்ற குழந்தைகள் பள்ளிகளில் கூட பேசுவதில்லை. பொது குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்க விடுவதில்லை.
எங்கள் குடும்பத்தினர், எல்லையிலிருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்காக ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர். ஆனால் எங்கள் குடும்பங்களை ஊரைவிட்டு தள்ளி வைத்துள்ளனர். சமூக விரோத செயலில் ஈடுபடும் கட்டப்பஞ்சாயத்துகாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- 2 கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிளில் சுமார் 10 பேர் கொண்ட கும்பல் வந்து காரை மறித்துள்ளனர்.
- புகாரின் பேரில் சக்தி உள்ளிட்ட கும்பல் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
சேலம் மாவட்டம், குகை பகுதியை சேர்ந்தவர் விஜயபாஸ்கரன் (வயது45). இவரது தம்பி கவுரிசங்கரன் (42). இவர்கள் 2 பேரும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூர் பகுதியில் குறைந்த விலைக்கு நிலம் உள்ளதாகவும், நேரில் வந்து பேசி முடித்து கொள்ளலாம் என்று சக்தி (ஏ) சத்தியராஜ் என்பவர் அழைத்துள்ளார்.
இதையடுத்து விஜயபாஸ்கரனும் அவரது தம்பியும் காரில் புறப்பட்டு கிருஷ்ணகிரி சென்றுள்ளனர். அங்கு சக்தி, தனது கூட்டாளிகளான செல்வகுமார், பன்னீ ர்செல்வம் ஆகியோருடன் காத்திருந்துள்ளனர். பின்னர் அங்கிருந்து நிலத்தை பார்க்க போகலாம் என்று கூறி புறப்பட்டுள்ளனர்.
அப்போது செல்லும் வழியிலேயே சக்தி யாருக்கோ செல்போன் மூலம் பேசி வர சொல்லியுள்ளார். இதையடுத்து 2 கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிளில் சுமார் 10 பேர் கொண்ட கும்பல் வந்து காரை மறித்துள்ளனர்.
அந்த கும்பலுடன் சக்தியும் சேர்ந்து விஜயபாஸ்கரனையும் அவரது தம்பி கவுரி சங்கரனையும் மிரட்டி ரூ.15 லட்சம் பணம் கொடுத்தால்தான் விடு வோம். இல்லையென்றால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.
பின்னர் விஜயபாஸ்கரன், கவுரிசங்கரன் அணிந்திருந்த ரூ.60 ஆயிரம் மதிப்பிலான தங்க சங்கிலிகள், ரூ.8 ஆயிரம் பணம் முதலியவற்றை பறித்து கொண்டு வெற்று பத்திரத்தில் 2 பேரிடமும் கையெழுத்து வாங்கியுள்ளனர்.
பின்னர் விஜயபாஸ்கரன் வந்த காரிலேயே அவர்களை சேலம் நோக்கி அழைத்து வந்த சக்தி உள்ளிட்ட கும்பல் ஓமலூர் அருகே கருப்பூர் சுங்க சாவடி அருகே 2 பேரையும் இறக்கிவிட்டு அதே காரில் தப்பி சென்று விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து சேலம் போலீசில் விஜய பாஸ்கரன் புகார் செய்தார். இந்த புகார் பாகலூர் போலீசாருக்கு மாற்றப்பட்டது. அந்த புகாரின் பேரில் சக்தி உள்ளிட்ட கும்பல் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- ஆண்டு தோறும் கோவில் திருவிழா மற்றும் மாட்டு திருவிழா நடைபெறுவது வழக்கம்.
- 5 கோடி ரூபாய்க்கு மேல் மாடுகள் விற்பனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓசூர்,
ஓசூர் கெலவரப்பள்ளி அணை அருகே திம்மசந்திரம் கிராமத்தில் மிகவும் பழைமை வாய்ந்த ஸ்ரீ சப்ளம்மாதேவி கோவில் உள்ளது.
இங்கு ஆண்டு தோறும் கோவில் திருவிழா மற்றும் மாட்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா, நேற்று தொடங்கியது.
முன்னதாக, சப்ளம்மா கோயில் அறக்கட்டளை தலைவர் கஜேந்திர மூர்த்தி தலைமையில் அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும், கோ பூஜை செய்யப்பட்டது.
இதில், துணைத் தலைவர் தியாகராஜ், நிர்வாகிகள் ராஜா ரெட்டி, கிருஷ்ணப்பா, கெம்பண்ணா, மகேஷ், பாலகிருஷ்ணப்பா, கிருஷ்ணப்பா, சீனப்பா, புட்டப்பா மற்றும் ஒன்றிய கவுன்சிலர் ராதா கஜேந்திரமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர், கஜேந்திரமூர்த்தி நிருபர்களிடம் கூறுகையில், விழாவையொட்டி, மாட்டுத் திருவிழாவிற்கு, இந்தாண்டு சுமார் 1,000 ஜோடி மாடுகள் வரவுள்ளன.
இதன் மூலம், சுமார் 5 கோடி ரூபாய்க்கு மேல் மாடுகள் விற்பனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விழாவிற்கு வரும் சிறப்பு மாடுகளுக்கு வருகிற 29-ம் தேதி நடைபெறும் விழாவில், முதல் பரிசாக, 10,001- , இரண்டாம் பரிசு ரூ.9,001- ,3- ஆம் பரிசு, ரூ 8,001- , 4-ஆம் பரிசு ரூ. 7,001- , 5 ஆம் பரிசு ரூ. 6,001-, 6-ம் பரிசு ரூ. 5,001- , 7-வது பரிசு ரூ.4,001- , 8-வது பரிசு ரூ.3,001- மற்றும் , 9-வது பரிசாக ரூ 2,001- வழங்கப்படும்.
மேலும், நல்ல நாட்டு பசு மாடுகளுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்படவுள்ளது. இந்த விழாவில், தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களிலிருந்து விவசாயிகள் வியாபாரிகள் அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்டு, மாடுகளை விற்பனை செய்தும், வாங்கியும் செல்வார்கள்.
இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார்.
- புதிதாக கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படவுள்ளது.
- பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
ஓசூர்,
ஒசூர் சட்டமன்ற தொகுதி, ஒசூர் ஒன்றியம் தொரப்பள்ளி ஊராட்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் நிதியிலிருந்து மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் அனிதாமுனிராஜ் ஏற்பாட்டில் சுமார் 7 லட்சம் மதிப்பில் புதிதாக கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படவுள்ளது.
இதையொட்டி நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஒசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ் கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
இதில் துணை மேயர் ஆனந்தய்யா, ஊராட்சி மன்ற தலைவர் சாந்தம்மா, மற்றும் ராமமூர்த்தி, வார்டு உறுப்பினர்கள், கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- ரமேஷ் என்பவர் மரக்கட்டையால் மாதம்மாளை சரமாரியாக தாக்கினார்.
- அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகேயுள்ள சந்தம்பட்டியை சேர்ந்தவர் மாதம்மாள் (வயது 56). இவரது கணவர் கோவிந்தராஜ். இவர் இறந்து விட்டார்.
இந்நிலையில் மாதம்மாளுக்கும், கோவிந்தராஜின் தம்பி சரவணனுக்கும் இடையே நிலத்தகராறு பிரச்சினை இருந்து வந்துள்ளது.
நேற்று இருவருக்கும் பொதுவான சுவற்றில் சரவணன் வைத்திருந்த மின் மோட்டார் இணைப்பை மாதம்மாள் துண்டித்துள்ளார்.
இது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு வந்த சரவணனின் மைத்துனர் ரமேஷ் என்பவர் மரக்கட்டையால் மாதம்மாளை சரமாரியாக தாக்கினார்.
இதில் படுகாயம் அடைந்த மாதம்மாளை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து மாதம்மாளின் மகள் மஞ்சு மத்தூர் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு ரமேசை தேடி வருகின்றனர்.
நிலத்தகராறில் பெண் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- தொழுநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெறுகிறது.
- கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.
கிருஷ்ணகிரி,
தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம் சார்பில் வருகிற 30-ந் தேதி முதல் அடுத்த மாதம் 14-ந் தேதி வரையில் தொழுநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.
இதற்கு மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமை தாங்கி பேசினார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, தனி துணை கலெக்டர் பாக்கியலட்சுமி, நலப்பணிகள் இணை இயக்குனர் பரமசிவன், மருத்துவ பணிகள் துணை இயக்குனர் புவனேஸ்வரி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- கலை நிகழ்ச்சிகள், உணவுத் திருவிழா, புத்தக கண்காட்சி உள்ளிட்டவை நடந்தது.
- உரிய விளக்கமும், விண்ணப்பக்கும் முறையும் அலுவலர்கள் விளக்கமாக கூறி உள்ளனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் 'ஓயா உழைப்பின் ஓராண்டு, கடைக்கோடி தமிழரின் கனவுகள் தாங்கி' என்கிற நிகழ்ச்சி நடந்தது. இதில், அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி, விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள், உணவுத் திருவிழா, புத்தக கண்காட்சி உள்ளிட்டவை நடந்தது.
இதன் நிறைவு விழா நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் நடந்தது. இதில், சிறப்பாக அரங்குகள் அமைத்த அனைத்து துறைகளுக்கும் கேடயங்களை வழங்கி, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி பேசியதாவது:-
அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி கடந்த 14-ந் தேதி தொடங்கி, 10 நாட்கள் நடந்தது. இதில், அனைத்து துறைகள் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் ரூ.10-க்கு மஞ்சபை வழங்கும் எந்திரம் குறித்து செயல்விளக்கம், அறிவியல் இயக்கம் சார்பில் புத்தக கண்காட்சியும், தொலைநோக்கியுடன் கூடிய வான் நோக்குதல் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
இதே போல், மாவட்ட வேலை வாய்ப்புத்துறை, மாவட்ட தொழில் மையம் சார்பில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பெறுதல், சுயத்தொழில் தொடங்குதல் குறித்த விளக்கப்பட்டது. உள்ளூரில் கிடைக்கும் சிறுதானியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. மேலும், ஒவ்வொரு துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து கண்காட்சிக்கு வந்திருந்தவர்களுக்கு உரிய விளக்கமும், விண்ணப்பக்கும் முறையும் அலுவலர்கள் விளக்கமாக கூறி உள்ளனர்.
10 நாட்கள் நடந்த கண்காட்சியை நாள்தோறும் 2 ஆயிரம் பேர் வீதம், மொத்தம் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்வையிட்டு பயன் பெற்றுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக கலைப் பண்பாட்டுத்துறை சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இந்த நிகழ்ச்சியில், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் முகம்மது அஸ்லாம், மாவட்ட சமூக நல அலுவலர் விஜயலட்சுமி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர், மாவட்ட தொழில் மைய மேலாளர் பிரசன்ன பாலமுருகன், மாவட்ட கல்வி அலுவலர் மணிமேகலை, மகளிர் மேம்பாட்டு உதவி திட்ட அலுவலர் யோகலட்சுமி, தாசில்தார் சம்பத், உதவி இயக்குனர் (வேளாண்மை) சுரேஷ், தலைமையாசிரியர் மகேந்திரன், அரசு இசைப்பள்ளி தலைமையாசிரியர் திரிவேணி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
- அர்க்கீஸ்வரர் கோவிலில் ஆய்வு மேற்கொண்டனர்.
- அந்த கோவிலில் 3 கல்வெட்டுகள் காணப்படுகிறது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா மதகொண்டப்பள்ளி கிராமத்தில், பின்னமங்கலம் தலைமை ஆசிரியர் மாதேஷ் கூறியதன் அடிப்படையில், மாவட்ட அரசு அருங்காட்சியகமும், கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இணைந்து அந்த ஊரில் உள்ள அர்க்கீஸ்வரர் கோவிலில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த கோவில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை 5 அடி அளவுக்கு மண் மூடி இருந்தது. முன்னாள் தலைவர் ராஜண்ணா மற்றும் ஊர் மக்கள் அந்த மண்ணை அகற்றி கோவிலை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளனர்.
இது குறித்து அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது:-
அந்த கோவிலில் 3 கல்வெட்டுகள் காணப்படுகிறது. அதில் முதலாவது கல்வெட்டில், ஒய்சாள மன்னர் வீரவிஸ்வநாதனின் மூன்றாம் ஆட்சியாண்டான பொது ஆண்டு 1296-ல் மத்தகாமுண்டன் பள்ளி திரு அங்கநாதீஸ்வரம் கோவில் திருப்பணிக்காக குடையாளம் என்ற ஊரில் உள்ள நிலம் தானமளிக்கப்பட்ட செய்தியை இந்த கல்வெட்டு குறிப்பிடுகிறது.
இரண்டாவது கல்வெட்டு ஒய்சாள மன்னர் மூன்றாம் வல்லாளனின் ஆட்சிக்காலமான பொது ஆண்டு 1300-ல் ஊரில் நிலத்தை தானம் அளித்த செய்தியை தெரிவிக்கிறது. இந்த கல்வெட்டு தற்போதுள்ள மதகொண்டப்பள்ளி 700 ஆண்டுகளுக்கு முன்பு மத்தகாமுண்டன்பள்ளி என்பதை தெரிவிக்கிறது.
3-ம் கல்வெட்டு அங்கீஸ்வரமுடையார் கோவிலுக்கு பல வரிகள் தானமாக அளிக்கப்படும் செய்தியை காட்டுகிறது. ஓய்சாள மன்னர்கள் இந்த கோவிலை கட்டுவதற்கு முன் இந்த இடத்தில் கி.பி 1020-ல் ராஜராஜ சோழன் மகன் ராஜேந்திர சோழன் இங்கு குணநல்லூர் மகாதேவர் ஆலயத்தை கட்டி உள்ளார். காலமாற்றத்தால் அந்த கோவில் இடிந்ததால் இங்கு ஓய்சாளர்கள் அங்கீஸ்வரமுடையார் கோவிலாக கட்டியிருப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது அந்த ஊரை சேர்ந்த முன்னாள் தலைவர் ராஜண்ணா, கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு தலைவர் நாராயணமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், வரலாற்று ஆசிரியர் ரவி, செல்வகுமார் மற்றும் ஊர் மக்கள் உடனிருந்தனர்.
- மாதம்மாளுக்கும், கோவிந்தராஜின் தம்பி சரவணனுக்கும் இடையே நிலத்தகராறு பிரச்சினை இருந்து வந்துள்ளது.
- நிலத்தகராறில் பெண் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகேயுள்ள சந்தம்பட்டியை சேர்ந்தவர் மாதம்மாள். இவரது கணவர் கோவிந்தராஜ். இவர் இறந்து விட்டார். இந்நிலையில் மாதம்மாளுக்கும், கோவிந்தராஜின் தம்பி சரவணனுக்கும் இடையே நிலத்தகராறு பிரச்சினை இருந்து வந்துள்ளது.
நேற்று இருவருக்கும் பொதுவான சுவற்றில் சரவணன் வைத்திருந்த மின் மோட்டார் இணைப்பை மாதம்மாள் துண்டித்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு வந்த சரவணனின் மைத்துனர் ரமேஷ் என்பவர் மரக்கட்டையால் மாதம்மாளை சரமாரியாக தாக்கினார்.
இதில் படுகாயம் அடைந்த மாதம்மாளை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து மாதம்மாளின் மகள் மஞ்சு மத்தூர் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு ரமேசை தேடி வருகின்றனர்.
நிலத்தகராறில் பெண் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணின் உடல் அழுகிய நிலையில் இருந்தது.
- சாக்கு மூட்டையில் கட்டி ஏரிக்கரையில் வீசி சென்றுள்ளது தெரிய வந்தது.
வேப்பனப்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே ஆந்திர மாநில எல்லையானஓ.என்.கொத்தூர் கிராமம் உள்ளது. இங்குள்ள ஏரியில் நேற்று துர்நாற்றம் வீசியது.
இதையடுத்து அந்த வழியாக வந்த பொதுமக்கள் அருகில் சென்று பார்த்தனர். அப்போது ஏரிக்கரையில் மூட்டை ஒன்று கிடந்தது.
இதுகுறித்து அவர்கள் குடிப்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மூட்டையை பிரித்து பார்த்தனர். அதில் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணின் உடல் அழுகிய நிலையில் இருந்தது.
அவரை அடித்து க்கொலை செய்து உடலை சாக்கு மூட்டையில் கட்டி ஏரிக்கரையில் வீசி சென்றுள்ளது தெரிய வந்தது.
கொலை செய்யப்பட்ட பெண் சுடிதார் அணிந்த நிலையில் இருந்தார். உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது.
உடலில் கழுத்து உள்பட பல இடங்களில் காயங்கள் இருந்தன.இதைத் தொடர்ந்து போலீசார் அந்த உடலை மீட்டு குப்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வேப்பனப்பள்ளி அருகே மாநில எல்லையில் உடல் கிடந்ததால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் காணாமல் போன இளம்பெண்கள் பற்றிய விவரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.
மேலும் அந்த இளம்பெண்ணை கொன்று உடலை சாக்குமூட்டையில் கட்டி ஏரியில் வீசி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- தங்க நகைகள் மற்றும் 25 கிலோ வெள்ளிப்பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
- கண்காணிப்பு கேமராவையும் கொள்ளையர்கள் எடுத்து சென்றது தெரியவந்தது.
மத்தூர்,
திருப்பத்தூரை சேர்ந்தவர் சேகர் (வயது 52). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள அனுமன்தீர்த்தம் மெயின் ரோட்டில் நகை மற்றும் அடகு கடை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு விற்பனை முடிந்த பின்னர் அவர் கடையை பூட்டி விட்டு திருப்பத்தூருக்கு சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் சிலர் கடையின் சுவரில் துளை போட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து பொதுமக்கள் சேகருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர் விரைந்து வந்து கடையை திறந்து பார்த்தார். நகை, வெள்ளி கொள்ளை அப்போது கடையின் பின்புறமாக துளையிடப்பட்டு மர்மநபர்கள் உள்ளே புகுந்து அங்கிருந்த 20 பவுன் தங்க நகைகள் மற்றும் 25 கிலோ வெள்ளிப்பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
இது குறித்து சேகர் ஊத்தங்கரை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் நகைக்கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவையும் கொள்ளையர்கள் எடுத்து சென்றது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸ் மோப்ப நாய் ரேஷ்மி சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தவாறு ஆஞ்சநேயர் கோவில் வரை ஓடி விட்டு மீண்டும் திரும்பி வந்தது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் கடை மற்றும் சுவரில் இருந்த தடயங்களை பதிவு செய்தனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
- கண்காணிப்பு கேமராக்கள், அலாரம் பொருத்தி இருந்தார்.
- கொள்ளையர்கள் 3 பேரும் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடி விட்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பத்தில் கிருஷ்ணகிரி - சென்னை தேசிய நெடுஞ்சாலையை சேர்ந்தவர் கிதியோன். இவருக்கு சொந்தமாக மாடி வீடு உள்ளது.
இவர் ஓசூரில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது வீடு கடந்த 6 மாதமாக பூட்டி கிடந்தது. இதனால் அவர் வீட்டில் கண்காணிப்பு கேமராக்கள், அலாரம் பொருத்தி இருந்தார்.
மேலும் ஓசூரில் இருந்தவாறு கண்காணிப்பு கேமரா பதிவுகளை தனது செல்போன் மூலமாக பார்த்து வந்தார். இந்த நிலையில் அவரது வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் 3 பேர் நேற்று முன்தினம் இரவு மோட்டார்சைக்கிளில் அங்கு வந்தனர்.
அவா்கள் மோட்டார் சைக்கிளை அந்த பகுதியில் மறைவான இடத்தில் நிறுத்தி விட்டு பட்டாக்கத்திகளுடன் ஒருவர், பின் ஒருவராக உள்ளே வந்தனர்.
அப்போது கொள்ளை யன் ஒருவன் வீட்டின் சுற்றுச்சுவரை தாண்டி உள்ளே குதிக்க முயன்ற போது அங்கு பொருத்தப்ப ட்டிருந்த அலாரம் ஒலிக்க தொடங்கியது.
இதனால் செய்வ தறியாமல் கொள்ளையர்கள் 3 பேரும் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடி விட்டனர்.
இந்த கொள்ளை முயற்சி சம்பவம் குறித்து அறிந்த கிதியோன் கந்திகுப்பம் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர்.
மேலும் இந்த கொள்ளை முயற்சி சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள உருவத்தை வைத்து கொள்ளை யர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.






