என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரியல் எஸ்டேட் அதிபர்களிடம் கார் நகை பறிப்பு
- 2 கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிளில் சுமார் 10 பேர் கொண்ட கும்பல் வந்து காரை மறித்துள்ளனர்.
- புகாரின் பேரில் சக்தி உள்ளிட்ட கும்பல் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
சேலம் மாவட்டம், குகை பகுதியை சேர்ந்தவர் விஜயபாஸ்கரன் (வயது45). இவரது தம்பி கவுரிசங்கரன் (42). இவர்கள் 2 பேரும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூர் பகுதியில் குறைந்த விலைக்கு நிலம் உள்ளதாகவும், நேரில் வந்து பேசி முடித்து கொள்ளலாம் என்று சக்தி (ஏ) சத்தியராஜ் என்பவர் அழைத்துள்ளார்.
இதையடுத்து விஜயபாஸ்கரனும் அவரது தம்பியும் காரில் புறப்பட்டு கிருஷ்ணகிரி சென்றுள்ளனர். அங்கு சக்தி, தனது கூட்டாளிகளான செல்வகுமார், பன்னீ ர்செல்வம் ஆகியோருடன் காத்திருந்துள்ளனர். பின்னர் அங்கிருந்து நிலத்தை பார்க்க போகலாம் என்று கூறி புறப்பட்டுள்ளனர்.
அப்போது செல்லும் வழியிலேயே சக்தி யாருக்கோ செல்போன் மூலம் பேசி வர சொல்லியுள்ளார். இதையடுத்து 2 கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிளில் சுமார் 10 பேர் கொண்ட கும்பல் வந்து காரை மறித்துள்ளனர்.
அந்த கும்பலுடன் சக்தியும் சேர்ந்து விஜயபாஸ்கரனையும் அவரது தம்பி கவுரி சங்கரனையும் மிரட்டி ரூ.15 லட்சம் பணம் கொடுத்தால்தான் விடு வோம். இல்லையென்றால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.
பின்னர் விஜயபாஸ்கரன், கவுரிசங்கரன் அணிந்திருந்த ரூ.60 ஆயிரம் மதிப்பிலான தங்க சங்கிலிகள், ரூ.8 ஆயிரம் பணம் முதலியவற்றை பறித்து கொண்டு வெற்று பத்திரத்தில் 2 பேரிடமும் கையெழுத்து வாங்கியுள்ளனர்.
பின்னர் விஜயபாஸ்கரன் வந்த காரிலேயே அவர்களை சேலம் நோக்கி அழைத்து வந்த சக்தி உள்ளிட்ட கும்பல் ஓமலூர் அருகே கருப்பூர் சுங்க சாவடி அருகே 2 பேரையும் இறக்கிவிட்டு அதே காரில் தப்பி சென்று விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து சேலம் போலீசில் விஜய பாஸ்கரன் புகார் செய்தார். இந்த புகார் பாகலூர் போலீசாருக்கு மாற்றப்பட்டது. அந்த புகாரின் பேரில் சக்தி உள்ளிட்ட கும்பல் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






