என் மலர்
கிருஷ்ணகிரி
- நீர்வள நிலவளத் திட்ட இயக்குனருமான தென்காசி ஜவகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
- தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் மற்றும் கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்தில் நீர்வள நிலவளத்திட்டத்தின் கீழ் பொதுப்பணித்துறை (நீர்வளம்), கால்நடைத்துறை, தோட்டக்கலைத்துறை, மீன்வளத்துறை, வேளாண் வணிக ஆகிய துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளை அரசின் கூடுதல் தலைமை செயலரும், தமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்ட இயக்குனருமான தென்காசி ஜவகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நீர் வெளியேற்று கால்வாய்கள் சீரமைக்கப்பட்டுள்ளதை ஆய்வு மேற்கொண்டு, இப்பாசன கால்வாய்கள் மூலம் பாசன வசதி பெறும் பரப்பளவு குறித்தும், பாசனத்தால் தென்னை, நெல், மல்லிகை பூ உற்பத்தி செய்யும் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
பின்னர் காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம் மிட்டஅள்ளி கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் தமிழ்நாடு நீர்வளம் நிலவளத் திட்டம், கிருஷ்ணகிரி முதல் பாம்பாறு உபவடி நிலப்பகுதி திட்டத்தில் மலடு நீக்க சிகிச்சை முகாம் நடைபெறுவதை பார்வையிட்டு, கால்நடைகளுக்கு குடற்புழு நீக்க மருந்துகளை வழங்கி, கால்நடை வளர்ப்போருக்கு தாது உப்பு கலவைகளை வழங்கி, கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ வசதிகள் குறித்து விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போரிடம் கேட்டறிந்தார்.
பின்னர் ஜெகதாப் ஊராட்சியில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் நீர்நுட்ப யையம் மற்றும் பையூர் மண்டல ஆராய்ச்சி நிலையம் சார்பாக திட்டம் செயல்பாடு காற்கறிப் பயிர்களின் துல்லிய பண்ணை திட்டத்தின் கீழ் விவசாயி போர்மன்னர் நிலத்தில், காய்கறிகள் மற்றும் தக்காளி நாற்றுகள் உற்பத்தி செய்து, கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றம் இதர மாவட்ட விவசாயிகளுக்கு நாற்றுகள் வினியோகம் செய்யும் பணிகளை நேரில் பார்வையிட்டு, நாற்று உற்பத்தி பணிகள் மற்றும் மண்டல ஆராய்ச்சி நிலையம் சார்பாக வழங்கப்படும் தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர், பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகைளில் நீர்மேலாண்மை திட்ட பணிகள் குறித்து கலெக்டர் தீபக் ஜேக்கப்பிடம் ஆலோசனை மேற்கொண்டார்.
- மோதலை அங்கிருந்தவர்கள் சமரசம் பேசி அனுப்பி வைத்துள்ளர்.
- சந்தோஷ், நவீன்குமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள எருதாளம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 34). இந்த ஊரில் கோவில் திருவிழாவையொட்டி கலை நிகழ்ச்சி நடந்துள்து. அப்போது அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் (எ) ஜீவா (30) என்பவர் தானும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குறிப்பிட்ட பாடலுக்கு நடனம் ஆடுவேன் என்று தகராறு செய்துள்ளார்.
அப்போது ஆனந்துக்கும், சந்தோசுக்கும் இடையே ஏற்பட்ட மோதலை அங்கிருந்தவர்கள் சமரசம் பேசி அனுப்பி வைத்துள்ளர்.
இந்த நிலையில் நேற்று ஆனந்த் காரில் சென்றபோது, சந்தோஷ் தனது கூட்டாளிகள் முரளி, நவீன்குமார், மாதேஷ் ஆகியோருடன் வந்து வழிமறித்து சந்தோசை தாக்கினர்.
இதுகுறித்து ஆனந்த் கொடுத்த புகாரின் பேரில் கெலமங்கலம் போலீசார் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து இதில் சந்தோஷ், நவீன்குமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
- கோவிந்த அக்ரஹாரம் கிராமத்தில் கடந்த ஒரு ஆண்டாக கிளினிக் நடத்தி வருகிறார்.
- பொதுமக்கள் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி அருகே உள்ள கிட்டம்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் திருமூர்த்தி (வயது31).
இவர் பி.இ.எம்.எஸ். படித்து விட்டு ஓசூர் பேகேப்பள்ளி அருகே கோவிந்த அக்ரஹாரம் கிராமத்தில் கடந்த ஒரு ஆண்டாக கிளினிக் நடத்தி வருகிறார்.
அங்கு அவர் பொது மக்களுக்கு ஆங்கில முறையில் சிகிச்சை அளித்து வந்தார். இது குறித்து பொதுமக்கள் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர்.
அதன்பேரில் ஓசூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் ஞான மீனா ட்சி தலை மையில் மாவட்ட மருந்து கட்டுப் பாட்டு அலுவலர் ராஜீவ் காந்தி மற்றும் குழுவினர், கிராம நிர்வாக அலுவலர், சிப்காட் போலீசார் ஆகியோர் விரைந்து சென்று அங்கு சோதனை நடத்தினர்.
மேலும் திருமூர்த்தியிடம் மருத்துவ குழுவினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலி டாக்டர் என்பதும், பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் கிளினிக் மற்றும் மருந்து கடைக்கும் மருத்துவ குழுவினர் சீல் வைத்தனர்.
- கலெக்டர் தீபக் ஜேக்கப்பிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர்.
- நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பாரண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் தீபக் ஜேக்கப்பிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
போச்சம்பள்ளி பகுதியில் கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு 1,200 ஏக்கர் நிலங்களை சிப்காட் அமைப்பதற்காக அரசு கையகப்படுத்தியது. அதில், பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அப்பகுதியில் மீதமுள்ள நிலங்களில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் எதாரளப்பட்டி, போக்கம்பட்டி பகுதியில் உள்ள 125 ஏக்கர் தனி நபர்களின் நிலங்கள், மற்றும் வீடுகளை தனியார் நிறுவனர் சுற்றுச்சுவர் அமைப்பதற்காக விலைக்கு கேட்டு நிர்பந்தம் செய்கிறார்கள்.
நில புரோக்கர்களை வைத்து பேசுகிறார்கள். கடந்த 80 ஆண்டுகளாக விவசாயம் செய்து வரும் நாங்கள் அந்த நிலங்களை விற்க முடியாது எனக் கூறியும் நிலங்களுக்கு அதிக விலை கொடுப்பதாக கூறி நிலங்களை விற்குமாறு வற்புறுத்துகின்றனர். எங்கள் வாழ்வாதாரங்களை பறிக்க முயலும் கம்பெனிகளின் நடவடிக்கைகள் குறித்து உடனடியாக விசாரித்து, அந்த நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், தனி நபர்களுக்கு சொந்தமான நிலங்களை, தனியார் கம்பெனிகள் அத்துமீறி வாங்க அதிகாரம் இல்லை. இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் உறுதி அளித்தாக விவசாயிகள் தெரிவித்தனர்.
- கிண்டர் கார்டன் மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.
- நாட்டின் வளர்ச்சியில் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக திகழ வேண்டும் என கூறினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி பாரத் இன்டர்நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளியில் கிண்டர் கார்டன் மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது. இதற்கு பள்ளி நிறுவனர் மணி தலைமை தாங்கினார். தாளாளர் கிருஷ்ணவேணி மணி வரவேற்றார். இதில் மாவட்ட கல்வி அலுவலர் முனிநாதன் கலந்து கெண்டு பேசினார்.
அவர் பேசும் போது இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியாவின் எதிர்காலம், நமது நாட்டின் தூண்கள். மாணவர்கள் அறிவியல் மேதைகளாகவும், சிறந்த மருத்துவர்களாகவும், பொறியியல் வல்லுனர்களாகவும், கலெக்டர்களாகவும் நாட்டின் வளர்ச்சியில் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக திகழ வேண்டும் என கூறினார்.
இதில் பள்ளியில் படிக்க கூடிய கிண்டர் கார்டன் மாணவ, மாணவிகளுக்கு பட்ட மளித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். முடீவில் பள்ளியின் இயக்குனர் டாக்டர் சந்தோஷ், பள்ளி செயலாளர் உஷா சந்தோஷ் ஆகியோர் நன்றி கூறினார்கள். இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வர் ஹரிநாத் மற்றும் பள்ளியின் ஆசிரிய, ஆசிரியைகள் செய்திருந்தனர்.
- எண்ணேகொல்புதூர் கால்வாய் திட்டம் அறிவிக்கப்பட்டது.
- தலைமை செயலாளர் சந்தீப்சக்சேனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே எண்ணேகொல் அணைக்கட்டு உள்ளது. இந்த அணைக்கட்டு வழியாக, தென்பெண்ணை ஆற்றில் இருந்து வெள்ளக்காலங்களில் வரும் உபரிநீரை, வலது மற்றும் இடதுபுறம் கால்வாய் அமைத்து, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வறட்சியான பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் எண்ணேகொல்புதூர் கால்வாய் திட்டம் அறிவிக்கப்பட்டது.
அதன்படி ரூ.233 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தற்போது பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இத்திட்டத்தின் கீழ், புதிய வலதுபுற பிரதான கால்வாய் 50.65 கி.மீ தூரத்திற்கும், புதிய இடதுபுற பிரதான கால்வாய் 23 கி.மீ தூரத்திற்கும் அமைய உள்ளது.
இந்த திட்டத்தில் கிருஷ்ணகிரி அணைக்கு அருகே கத்தேரி ஊராட்சியில் வலதுபுறக்கால்வாய் அமைக்கும் பணியை நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப்சக்சேனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, எண்ணேகோல்புதூர் கால்வாய் அமைக்கும் திட்டத்தின் கீழ் வலது மற்றும் இடதுபுறங்களில் கால்வாய்கள் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். இக்கால்வாய் பணிகள் துரிதப்படுத்தி, விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இப்பணிகளை விரைந்து முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது, சென்னை மண்டல தலைமை பொறியாளர் முரளிதரன், பெண்ணையாறு வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் மணிமோகன், மேல்பெண்ணையாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
- பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார்.
- போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே ஒரு கிராமத்தில் அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது- அந்த பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். அந்த பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவருக்கு அப்பள்ளியில் வரலாறு பட்டதாரி ஆசிரியராக பணிபுரியும் ராஜா (வயது 59) என்பவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதே போல் அதே வகுப்பில் படித்து வரும் மற்றொரு மாணவியை ஆய்வக உதவியாளர் நடேசன்(59) என்பவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார்.
இது குறித்து அந்த மாணவியின் பெற்றோர்கள் பள்ளிக்கு சென்று, ஆசிரியர் மற்றும் ஆய்வக உதவியாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்கள். ஆனால் பள்ளி நிர்வாகம் அவர்களை சமாதானம் செய்து அனுப்பினார்கள். இது குறித்து 3 பேர் கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்று எழுத்து பூர்வமாக புகார் அளித்தனர். இதையடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் சிவகாந்தி தலைமையிலான குழுவினர், பள்ளிக்கு சென்று நேரடி விசாரணை மேற்கொண்டனர். அதில் குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் மற்றும் ஆய்வக உதவியாளர், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது.
இதையடுத்து மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலக சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் ரகுராமன், பர்கூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் ஆசிரியர் மற்றும் ஆய்வக உதவியாளர் ஆகிய இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இது குறித்து தகவல் அறிந்த அவர்கள் இருவரும் தற்போது தலைமறைவாக உள்ளனர். இந்த நிலையில் பள்ளி நிர்வாகம், ஆசிரியர் மற்றும் ஆய்வக உதவியாளர் ஆகிய இருவரையும் தற்காலிக பணி நீக்கம் (சஸ்பெண்டு) செய்து உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அங்காள பரமேஸ்வரி கோவிலில் மகா சிவன் ராத்திரி மற்றும் மயான கொள்ளை திருவிழா நடக்கிறது.
- இரவு அம்மனை குளிக்க குளிர் கும்பம் நடைபெறுதோடு திருவிழா நிறைவடைகிறது.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் பன்னீர்செல்வம் தெருவில் அங்காள பரமேஸ்வரி கோவிலில் மகா சிவன் ராத்திரி மற்றும் மயான கொள்ளை திருவிழா இன்று வெள்ளிக்கிழமை முதல் 25 சனிக்கிழமை வரை நடைபெற உள்ளது.
நாளை மகா சிவராத்திரி முன்னிட்டு அன்று இரவு முழுவதும் கண்விழித்து பக்தர்கள் இரவு விரதம் இருந்து அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை அங்காள பரமேஸ்வரி கோவில் தங்களது நேர்த்திக்கடனாக அலகு குத்துதல், சங்கிலி இழுத்தல், எலுமிச்சம்பழம் குத்துதல், காளி வேடம், அணிந்து ஊர்வலமாக தேரோடும் வீதி வழியாக வந்து காவேரிப்பட்டணம் சுடுகாட்டில் நேர்த்திக்கடனாக வலம் வருவர்.
அங்காளம்மன் திருத்தேர் தேரோடும் வீதி வழியாக வலம் வந்து சுடுகாடு சென்றடையும். அப்பொழுது பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனாக வழியெங்கும் அம்மன் தேர் மீது உப்பு, முத்துக்கொட்டைகளை வீசுவார்கள்.
இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் வெளி மாவட்டத்தில் இருந்தும் வெளி மாநிலத்திலிருந்தும் அம்மனை தரிசிக்க காவேரிப்பட்டணம் ஆண்டுதோறும் வருவார்கள். அன்று சுமார் ஒன்றரை லட்சம் பக்தர்களுக்கு மேல் காவேரிப்பட்டணத்தில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை அடுத்து அன்று இரவு சுடுகாட்டில் திருத்தேரில் அம்மனுக்கு சிறப்பு பூ அலங்காரம் செய்யப்பட்டு தேரோடும் வீதி வழியாக கோவிலுக்கு கொண்டு வரும்போது ஏராளமானோர் அம்மனை தரிசனம் செய்வார்கள்.
அடுத்த நாள் 20-ம் தேதி சிறப்பு அபிஷேகம், ஜெத்து, பாபி உற்சவம் முக்கிய வீதி வழியாக நடைபெறும் 21-ம் தேதி சாமி தென்பெண்ணை ஆற்றில் இருந்து முக்கிய வீதி வழியாக கோவிலை வந்து அக்னிகுண்டம் நடைபெற்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் இரவு திருவிளக்கு பூஜை நடைபெறும்.
22 -ம் தேதி காலை மகா அபிஷேகம் இரவு சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்
23-ம் தேதி காலை சாமிக்கு அபிஷேகம் நடைபெற்று மஞ்சள் நீராட்டு நடைபெறும் இரவு நகர் முழுவதும் சுவாமி பல்லக்கு உற்சவம் நடைபெறும். 24-ம் தேதி காலை கொடி இறக்கல் நிகழ்ச்சியும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் இரவு அம்மனை குளிக்க குளிர் கும்பம் நடைபெறுதோடு திருவிழா நிறைவடைகிறது.
- மாணவர்கள் நான்கு பேர் வாள் சண்டை போட்டியில் கலந்து கொண்டனர்.
- மூர்த்தி மாநில அளவில் 3-வது இடம் பிடித்துள்ளான்.
சூளகிரி,
சூளகிரி ஊராட்சியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப்பள்ளியில் சூளகிரி சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 1600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
22 - 23-ம் ஆண்டிற்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கடந்த 10, 11, 12, ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த போட்டிகளுக்கு சென்று சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நான்கு பேர் வாள் சண்டை போட்டியில் கலந்து கொண்டனர்.இவர்களில் மாணவன் செல்வன் மூர்த்தி மாநில அளவில் 3-வது இடம் பிடித்து பள்ளிக்கும், மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்தான்.
மாணவர்களை நாகர்கோவில் அழைத்து சென்று பதக்கத்துடன் திரும்பிய உடற்கல்வி இயக்குனர் மகேஷ்வரன், பெருமாள் முதுகலை ஆசிரியர் செந்தமிழ் செல்வன் பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர்கள் ராமசந்திரன், சதிஷ்,கோவிந்தராஜ், ஆகியோருக்கும் பாராட்டு தெரிவித்தனர்.
- சிகிச்சை பலனின்றி ராணுவ வீரர் பிரபு உயிரிழந்தார்.
- தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த வேலம்பட்டி எம்ஜிஆர் நகரை சோந்த மாதையன் மகன்கள் பிரபு(29), பிரபாகரன்(30) ஆகியோர் ராணுவத்தில் பணியாற்றி வந்தனர். அவர்கள் 2 பேரும் விடுமுறையையொட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்கள் சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.
இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி காலை, அப்பகுதியில் உள்ள தண்ணீர் டேங்க் அருகில் பிரபாகரன் துணி துவைத்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அப்பகுதி கவுன்சிலரும், அவர்களது உறவினருமான சின்னசாமி, பொதுமக்கள் குடிநீர் பிடிக்கும் இடத்தில், துணை துவைக்க வேண்டாம் என கூறினார்.
இது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் இருதரப்பினரும், ஒருவருக்குகொருவர் கடுமையாக தாக்கி கொண்டனர். சின்னசாமி, சென்னையில் ஆயுதபடை காவலராக பணிபுரியும் குருசூர்யா(35) உள்ளிட்ட 9 பேர் ராணுவ வீரர்களான பிரபு, பிரபாகரன், அவரது தாயார் கண்ணம்மாள், தந்தை மாதையன் ஆகிய 4 பேரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த 4 பேரும் ஓசூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி சிகிச்சை பலனின்றி ராணுவ வீரர் பிரபு உயிரிழந்தார். முதலில் கொலை முயற்சி வழக்காக பதிவு செய்யப்பட்ட நிலையில் அவ்வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது-. அதில் தொடர்புடைய கவுன்சிலர் சின்னசாமி, போலீஸ்காரர் குருசூர்யா உள்பட 9 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஒரு கட்சியை சேர்ந்த கவுன்சிலர், ராணுவ வீரரை கொலை செய்து விட்டதாகவும், ராணுவ வீரர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது போல சமூக வலைதளங்களில் சிலர் தகவல்களை பரப்பி வருகிறார்கள். இதில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை. தாக்கியவர்கள், காயம் அடைந்தவர்கள், ராணுவ வீரர்கள் அனைவரும் மிகவும் நெருங்கிய உறவினர்கள். சாதாரண அடிதடி சம்பவம் கொலையில் முடிந்துள்ளது.
சில அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள், இந்த சம்பவத்தை திட்டமிட்டு கொலை செய்தார்கள் என அரசியல் கண்ணோட்டத்தோடு சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். அவ்வாறு தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
- புதிய கட்டிடம் ,தானிய கிடங்கு அலுவலகம் கட்டபட்டது.
- பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று விவசாயிகள் வலியுருத்துகின்றனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் வேளாண்மை அலுவகம் 60, 70 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.
பழைய கட்டிடம் என்பதாலும் தானிய கிடங்கு சிறிய அளவு உள்ளதாலும் கடந்த அ,தி,மு,க ஆட்சியில் புதிதாக வேளாண்மை கட்டிடம் கட்ட இடம் பார்த்து வந்தனர்.
பின்பு சூளகிரியில் இருந்து உத்தனபள்ளி சாலை செல்லும் வழியில் சூளகிரி காவல் நிலையம் அருகே அரசு இடம் இருந்தது. 5 அடி பள்ளமான இடத்தில் அவசர அவசரமாக ரூ.2 கோடி மதிப்பில் ஒருங்கினைந்த வேளாண்மை விரிவாக்க மையம் கட்டிடம் ,தானிய கிடங்கு அலுவலகம் கட்டபட்டது.
பின்பு பழைய அலுவலகத்தில் இருந்து அனைத்து அலுவலக பொருட்களை ஏற்றி வந்து புதிய அலுவலகம் இயங்கி வந்தது. கழிவு நீர் கால்வாய் அருகே பள்ளத்தில் கட்ட பட்ட கட்டிடம் என்பதால் அனைத்து கழிவு நீர்களும் புதிய கட்டிட வளாகத்தில் புகுந்ததாலும், மழை வந்தால் அனைத்து மழை நீரும் வந்து சேர்வதால் அலுவலர்கள் ,விவசாயிகள் வர முடியாததாலும் மீண்டும் பழை ய அலுவலகத்திற்கு மாற்றப்பட்டு அங்கு இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று விவசாயிகள் வலியுருத்துகின்றனர்.
- மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் எதிரில்போராட்டம் நடந்தது.
- கோரிக்கைளை வலியுறுத்தி இந்த சாலை மறியல் போராட்டம் நடந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியல் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் கிருஷ்ணகிரி மின்சார வாரியத்துறை மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் எதிரில் நேற்று நடந்தது. ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு ரூ.380 தினக்கூலி வழங்கிட வேண்டும், மின் துறையை பொது துறையாக பாதுகாத்திட வேண்டும். 56 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வருகை பதிவேட்டினை உறுதி செய்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி இந்த சாலை மறியல் போராட்டம் நடந்தது.
இந்த போராட்டத்திற்கு கிருஷ்ணகிரி திட்ட தலைவர் துரை, துணைத் தலைவர் சதீஷ்குமார், திட்ட செயலாளர் கருணாநிதி ஆகியோர் தலைமை தாங்கினார்கள். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், லோகராஜ், ராஜாதேசிங்கு ஆகியோர் பேசினார்கள். இதில் நிர்வாகிகள் சாமுடி, சிவசங்கரன், ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்று, கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட 90 பேரை போலீசார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.






