என் மலர்
கிருஷ்ணகிரி
- வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
- 17 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், நேற்று வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கி,
பொதுமக்களிடம் வீட்டுமனைப் பட்டா, விலையில்லா தையல் இயந்திரம், சலவைப் பெட்டி, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, மின் இணைப்பு போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 319 மனுக்களை பெற்றார்.
அந்த மனுக்களை உரிய துறை அதிகாரிகளிடம் வழங்கி, தகுதியான மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தகுதியில்லாத மனுக்களுக்கு உரிய விளக்கத்தினை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
பின்னர், மாவட்ட கலெக்டர், சமூக பாதுகாப்பு திட்டம் சார்பாக போச்சம்பள்ளி வட்டத்தை சார்ந்த 6 பயனாளிகளுக்கு இந்திராகாந்தி தேசிய முதியோர் ஓய்வூதியம், 4 பயனாளிகளுக்கு ஆதரவற்ற விதவை பெண்கள் ஓய்வூதியம், ஒரு பயனாளிக்கு தற்காலிக இயலாமைக்கான உதவித்தொகை, 6 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளி உதவித்தொகை என மொத்தம் 17 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார்.
முன்னதாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊரக வாழ்வாதாரம் மற்றும் மகளிர் திட்டம் மூலம் மகளிர் சுய உதவிக்குழுவினரின் கைவினைப் பொருட்கள் மற்றும் பாரம்பரிய சிறுதானிய உணவு விற்பனை கண்காட்சியை பார்வையிட்டார்.
- கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
- எங்கள் வீட்டிற்கு வந்து எங்களை தாக்கினர். இதில், என் தந்தையின் கை உடைந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சாப்பரம் பஞ்சாயத்திற்குட்பட்ட புங்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாது(வயது 48). சாலை பணியாளர்.
இவருக்கு சதீஷ்(28), கார்த்திகேயன்(25) என்ற இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் ராணுவத்தில் பணிபுரிந்து வருகின்றனர். ராணுவ வீரர் சதீஷ், குடும்பத்தினருடன் நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- ராணுவ வீரரான நான் விடுமுறைக்கு ஊருக்கு வந்துள்ளேன். எங்கள் வீட்டருகே வசிப்பவர் முருகேசன். அவர் எங்கள் தந்தையிடம் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு ரூ.25 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். கடனை திருப்பித் தரவில்லை.
இது குறித்து கேட்டபோது முருகேசன், அவர் மனைவி சீதா, அவர் தம்பி விஜி உள்ளிட்ட ஏழு பேர் கும்பல் கடந்த 3-ந் தேதி இரவு எங்கள் வீட்டிற்கு வந்து எங்களை தாக்கினர். இதில், என் தந்தையின் கை உடைந்தது.
இது குறித்து காவேரிப்பட்டினம் போலீசில் புகார் அளித்தோம். வழக்கு பதியப்பட்ட நிலையில், முருகேசன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. தொடர்ந்து எங்கள் குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுக்கும் முருகேசன் மீது நடவடிக்கை எடுத்து, எங்கள் உயிர்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
- 2000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
- முன்னாள் எம்.எல்.ஏ.கோவிந்தராஜ் தொடங்கி வைத்தார்.
காவேரிபட்டினம்,
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டினம் அங்கா ளம்மன் திருவிழாவை முன்னிட்டு ப்ளூ ஸ்டார் கேபிள் நெட்வொர்க் நிறுவனரும் அ.தி.மு.க. மாவட்ட மீனவரணி செயலாளருமான சின்னசாமி தலைமையில் 2000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியை அ.தி.மு.க. மாவட்ட செயலாளரம், முன்னாள் எம்.எல்.ஏ. வுமான கோவிந்தராஜ் தொடங்கி வைத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் வக்கீல் ராதா கார்த்திக், ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், ஊராட்சி மன்ற தலைவர் பிரேம்குமார் மற்றும் ராமசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- இன்ஸ்பெக்டர் பங்கஜம் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- அபிமானு கானார் (வயது 30), கிருஷு சந்திர கானார் (37) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜுஜுவாடி சோதனை சாவடியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பங்கஜம் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த வட மாநில வாலிபர்கள் 2 பேரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அவர்கள் வைத்திருந்த பையில் 8 ஆயிரத்து 200 கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அபிமானு கானார் (வயது 30), கிருஷு சந்திர கானார் (37) ஆகிய அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.
இதேபோல கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் சரகத்தில் பாப்பாரபட்டி அன்ன நகர் பகுதியில் லாட்டரி விற்ற மணிகண்டன் (41), பெத்தம்பட்டி பகுதியில் லாட்டரி விற்ற முனியப்பன் (34) ஆகிய 2 பேரையும் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் கைது செய்தனர்.
- எதிர்பாராத விதமாக சக்தி தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
- அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சக்தி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகேயுள்ள பாபு கோட்டை பகுதியை சேர்ந்தவர் சக்தி (வயது 35). கட்டிட தொழிலாளி. இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த 19-ந்தேதி அன்று வேலை பார்த்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சக்தி தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சக்தி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி யுவராணி கொடுத்த புகாரின்பேரில் மத்திகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மற்றொரு சம்பவத்தில் தளி கொத்தநூர் பகுதியை சேர்ந்த நாசம்மா (74) என்பவர் விபத்தில் சிக்கி நடக்க முடியாததால் மனவேதனையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மகன் முத்தப்பா கொடுத்த புகாரின்பேரில் தளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- சலங்கை விழாவில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
- மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அதியமான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சலங்கை விழாவில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சீனி.திருமால் முருகன் தலைமை தாங்கினார். பின்னர் அதியமான் கல்வி நிறுவனங்களின் செயலர் ஷோபா திருமால் முருகன், அதியமான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் சீனி.கலைமணி சரவணகுமார், துணை முதல்வர் அபிநயா கணபதி ராமன் மற்றும் அதியமான் பப்ளிக் பள்ளி முதல்வர் லீனா ஜோஸ் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றினார்கள்.
இறுதியாக பரத நிகழ்சியில் பங்குபெற்ற மாணவிகளுக்கு அதியமான் கல்வி நிறுவனங்க ளின் நிர்வாக அலுவலர் கணபதி ராமன் நினைவு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். இவ்விழாவில் ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். முடிவில் பரதநாட்டிய ஆசிரியர் ஸ்ரீதரன் நன்றி கூறினார்.
- மற்றொரு தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
- அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள மதகொண்டப்பள்ளி அக்ரஹாரத்தை சேர்ந்தவர் முரளி (வயது 31). இவர் தளியில் ஓட்டல் கடை நடத்தி வந்தார். இவருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு உளிவீரனப்பள்ளி அருகே முரளி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து காரில் வந்த மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிள் மீது மீது மோதினர்.
இதில் முரளி நிலை தடுமாறி கீழே விழுந்தார். பின்னர் காரில் இருந்து இறங்கிய நபர்கள் முரளியை அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் அந்த நபர்கள் காரில் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து மத்திகிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து முரளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மா்ம நபா்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்நிலையில் கொலை செய்யப்பட்ட முரளியின் தந்தை ராஜண்ணா என்பவர் போலீசில் கொடுத்துள்ள புகாரின்பேரில் இந்த கொலை சம்பவத்தின் பின்னணியில் மத்திகிரி அருகேயுள்ள உளிவீரனபள்ளி பகுதியை சேர்ந்த சந்தீப் என்பவருக்கு தொடர்பு இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார். அதன் பேரிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மருத்துவர்கள் அனுப்பப்படுவதில்லை என குற்றாச்சாட்டு இருந்தது.
- மருத்துவ பணி தொய்வு ஏற்படாமல் தொடர்ந்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி, பிப்.21-
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர். ராஜஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்ட ஆயுதப்படை காவலர் குடியிருப்புக்கு மருத்துவர்கள் அனுப்பப்படுவதில்லை என குற்றாச்சாட்டு இருந்தது.
எனவே, ஆயுதப்படை காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மருத்துவ பணி மேற்கொள்ள கடந்த 16-ந் தேதி முதல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் டாக்டர் செல்வி, டாக்டர்கள் ராஜலட்சுமி ஆகியோர் வாரத்திற்கு 2 நாட்கள், ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் வெளிநோயாளர் பிரிவுக்கு சென்று, காவலர் மற்றும் காவலர்களின் குடும்பத்தினருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே, ஆயுதப்படை காவலர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவ பணி தொய்வு ஏற்படாமல் தொடர்ந்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை ஆயுத படை காவலர்கள் மற்றும் குடும்பத்தினர் பயன்படுத்தி கொள்ள கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜஸ்ரீ தெரிவித்துள்ளார்.
- விபசாரம் செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- பிரகாஷ் (வயது 46) என்பவரிடம் விசாரணை நடத்திய போலீசார் அவரை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் அழகு நிலையம் என்ற பெயரில் இளம்பெண்களை வைத்து விபசாரம் செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஓசூர் வைஷ்ணவி நகர் பகுதியிலும், மாருதி நகர் பகுதியிலும் செயல்பட்டு வரும் 2 அழகு நிலையங்களில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த அழகு நிலையங்களை நடத்தி வரும் ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (வயது 46) என்பவரிடம் விசாரணை நடத்திய போலீசார் அவரை கைது செய்தனர்.
பிரகாசுக்கு உடந்தையாக இருந்த கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகேயுள்ள நா கசெட்டிஹள்ளி பகுதியை சேர்ந்த தீபிகா (32) என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அழகு நிலையம் என்ற பெயரில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தி வந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இந்தித் தேர்வுகள் நடந்தன.
- இந்தித் தேர்வை மொத்தம் 505 மாணவ, மாணவியர் எழுதினர்.
கிருஷ்ணகிரி,
திருச்சி இந்தி பிரச்சார சபா சார்பில், கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இந்தித் தேர்வுகள் நடந்தன.
இதில், காலை 10 மணி முதல் பகல் 12:30 மணி வரை நடந்த பிராத்தமிக் தேர்வை, 286 மாணவ, மாணவியர் எழுதினர். காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை முதல் தாள், இரண்டாம் தாள் என நடந்த மத்தியமா தேர்வை, 109 மாணவ, மாணவியர் எழுதினர்.
இத்தேர்வுகள் பள்ளியின் தலைமை ஆசிரியர் சேரலாதன் மேற்பார்வையில் நடந்தன. இதே போல், குந்தாரப்பள்ளி ஸ்ரீசரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் நடந்த பிராத்மிக் தேர்வை, 100 மாணவ, மாணவியரும், மத்தியமா தேர்வை 20 மாணவ, மாணவியரும் எழுதினர். இத்தேர்வுகள் பள்ளியின் முதல்வர் சர்மிளா மேற்பார்வையில் நடந்தன. தேர்வுகளை பள்ளியின் நிறுவனர் அன்பரசன் பார்வையிட்டார். கி
ருஷ்ணகிரியில் இரண்டு இடங்களில் நடந்த இந்தித் தேர்வை மொத்தம் 505 மாணவ, மாணவியர் எழுதினர்.
- விளையாட்டு மைதானத்தை வேறு பயன்பாட்டிற்கு தருவதையும் தவிர்க்க வேண்டும்.
- கலெக்டர் மற்றும் கல்வித்துறை அலுவலர்களிடம் மனு அளித்துள்ளதாக தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் புதிய கட்டிடங்கள் கட்டுவதை, வேறு பயன்பாட்டிற்கு மைதானத்தை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என பள்ளி மேலாண்மைக்குழு வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மேலாண்மை குழுவினர் கூறும்போது, இப்பள்ளியில் உள்ள விளையாட்டு மைதானம், 400 மீட்டர் ஓடுகளத்துடன் இருந்தது.
இங்கு கால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து, கோ-கோ, ஹாகி உள்ளிட்ட அனைத்து விளையாட்டுக்களுக்கும் பயன்படுத்தி மாணவர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்திய விளையாட்டு மைதானம் ஆகும்.
இந்த விளையாட்டு மைதானத்தில் அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவனை கட்டிடங்கள், மாணவியர் விடுதிகளுக்கு இடம் ஒதுக்கப்பட்டு, கட்டிடங்களும் கட்டப்பட்டுள்ளது. இதனால் 400 மீட்டர் ஓடுதளம் குறுகியது. இதே போல் தடகளப்போட்டிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்த முடியாத அளவிற்கு சுருங்கிவிட்டது.
இதனால் மாணவர்களின் விளையாட்டுத்திறன் கேள்விக்குறியாக உள்ளது. இதே போல், காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொண்ட நிலையில், தற்போது அதுவும் குனறந்துவிட்டது.
எனவே, இனிவரும் காலங்களில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் வேறு புதிய கட்டிடங்கள் கட்ட அனுமதியளிக்க கூடாது. விளையாட்டு மைதானத்தை வேறு பயன்பாட்டிற்கு தருவதையும் தவிர்க்க வேண்டும்.
மேலும், மாணவர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் வகையில் மைதானத்தை சீரமைத்து தர வேண்டும். இது தொடர்பாக கலெக்டர் மற்றும் கல்வித்துறை அலுவலர்களிடம் மனு அளித்துள்ளதாக தெரிவித்தனர்.
- ரேஷன் கடையில் வழங்கப்பட்ட அரிசியில் பிளாஸ்டிக் அரிசி இருந்ததாக பொதுமக்கள் கூறியதால் அதிர்ச்சி ஏற்பட்டது.
- அரிசியை வேக வைக்கும் போது பசை போல் பொங்கி வருவதாகவும், ஒரு சிலருக்கு உடல் உபாதைகள் ஏற்படுவதாக அப்பகுதி பெண்கள் தெரிவித்தனர்.
கெலமங்கலம்:
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே ஜக்கேரி ஊராட்சியில் உள்ள ஒரு ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு ரேஷன் அரிசி வழங்கப்பட்டது.
இந்நிலையில் குடும்ப அட்டைதாரருக்கு 20 முதல் 35 கிலோ வரை அரிசி வழங்கும் நிலையில் அதில் 5 கிலோ முதல் 8 கிலோ வரை பிளாஸ்டிக் அரிசி கலந்து இருப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
அந்த அரிசியை அடுப்பில் வைத்து வேக வைக்கும் போது பசை போல் பொங்கி வருவதாகவும், இதனால் ஒரு சிலருக்கு உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் அப்பகுதி பெண்கள் தெரிவித்தனர். ரேஷன் கடையில் வழங்கப்பட்ட அரிசியில் பிளாஸ்டிக் அரிசி இருந்ததாக பொதுமக்கள் கூறியதால் அதிர்ச்சி ஏற்பட்டது.
இது குறித்து தேன்கனிக்கோட்டை வட்ட வழங்கல் அதிகாரி கூறியபோது மக்களுக்கு வழங்கப்படும் அரிசியானது பிளாஸ்டிக் அரிசி அல்ல.
அவை செறிவூட்டப்பட்ட அரிசி. அந்த அரிசியில் இரும்பு சத்து, பி-12 மற்றும் போலிக ஆசிட் உள்ளடக்கிய சத்துக்கள் அதிகம் உள்ளது.
இதனால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. இந்த செறிவூட்டப்பட்ட அரிசியை பள்ளி மாணவர்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.






