என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • உதவித்தொகை நிறுத்தம் செய்யப்பட்டதாக செய்திவெளியானது.
    • ஆணை தனி வட்டாட்சியரால் நேரில் வழங்கப்பட்டது

    தேன்கனிகோட்டை, 

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம் பெட்டமுகிலாலம் துளுவபேட்டை கிராமத்தில் வசித்து வரும் ருத்திரன் மகன் சுபாஷ் என்பவருக்கு வழங்கப்பட்டு வந்த மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை நிறுத்தம் செய்யப்பட்டதாக 13-ம் தேதியன்று செய்திவெளியானது.

    இது தொடர்பாக, கிருஷ்ணகிரி கலெக்டர் அறிவுரையின்படி பயனாளி சுபாஷ் என்பவர் 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறனாளி என்பதினால் பெட்டமுகிலாலம், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் மற்றும் தேன்கனிக்கோட்டை தனி வட்டாட்சியர் ஆகியோரின் பரிந்துரையுடன் 15-ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான மருத்துவ கூறாய்வுக் குழுவின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

    பின்னர் மருத்துவரால் தேர்வு செய்யப்பட்டதன் அடிப்படையில், தேன்கனிக்கோட்டை வட்டம், பெட்டமுகிலாலம், துளுவபேட்டை கிராமத்தில் வசித்து வரும் சுபாஷ் என்பவருக்கு மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதற்கான ஆணை தேன்கனிக்கோட்டை (சமூக பாதுகாப்புத்திட்டம்) தனி வட்டாட்சியரால் நேரில் வழங்கப்பட்டது என கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மற்றும் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) வேடியப்பன் தெரிவித்துள்ளார்.

    • அடிக்கடி நிலப்பிரச்சினை இருந்து வந்துள்ளது.
    • 3 பெண்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    வேப்பனப்பள்ளி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள இனாம் குட்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சின்னக்கோடியப்பன் மகன் சிவக்குமார் (வயது 33). இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் சீனிவாசன் (23) என்பவருக்கும் அடிக்கடி நிலப்பிரச்சினை இருந்து வந்துள்ளது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் சிவக்குமார் மற்றும் சீனிவாசன் என்பவருடையே நிலத்தில் ஜே.சி.பி. இயந்திரம் வைத்து பயிர்களை நாசம் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டு இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர்.

    இதில் சிவகுமாரின் தம்பி சுரேஷ் மற்றும் சீனிவாசனின் தாயார் லட்சுமியம்மா இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை சிகிச்சை அனுமதிக்கப் பட்டுள்ளனர். பின்னர் இரு தரப்பினரும் வேப்பனப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் இரு தரப்பினரை சேர்ந்த சிவக்குமார் மற்றும் சீனிவாசன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் இரு தரப்பினரின் அடிதடியில் ஈடுபட்டு தலைமறைவாகியுள்ள 3 பெண்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    • பர்கூர் உள்ளிட்டபல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ராகி பயிர் செய்கின்றனர்.
    • அரசே நேரடியாக ராகியை கொள்முதல் செய்யும் பணியை தொடங்கி உள்ளது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகள் அதிகளவில் ராகி சாகுபடி யில் ஈடுபட்டு வருகின்றனர்.

    குறிப்பாக, சூளகிரி, ஓசூர், தளி, தேன்கனிக் கோட்டை, கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, பர்கூர் உள்ளிட்டபல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ராகி பயிர் செய்கின்றனர்.

    குறிப்பாக, ஜூன், ஜூலை மாதங்களிலும், டிசம்பர், ஜனவரி மாதங்களிலும் ராகி பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர்.

    மாவட்டத்தில் 45 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் ராகி சாகுபடி செய்யப்படுகிறது.

    இதில், சூளகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை வட்டத்தில் சுமார் 40 ஆயிரம் எக்டேர் சாகுபடி செய்யப்படுகிறது.

    மேலும், ராகி சாகுபடியில் எக்டேருக்கு, 1.5 டன் முதல் 2 டன் வரை மகசூல் கிடைக்கிறது. இங்கு உற்பத்தியாகும் ராகி தமிழகம் மட்டுமின்றி வட மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது.

    பிஸ்கட், நூடுல்ஸ், களி, கூழ் உள்ளிட்ட உணவுப் பண்டங்கள் தயாரிக்கவும், கோழி தீவனத்துக்கும் ராகி அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், சிறு, குறு விவசாயிகளிடம் இருந்து அரசே நேரடியாக ராகியை கொள்முதல் செய்யும் பணியை தொடங்கி உள்ளது.

    இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தற்போது நிலங்களை சீர் செய்து, ராகி நாற்று நடவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் ராகி, வாரச்சந்தைகளில் விற்பனை செய்வது வழக்கம். வெளியூர் வியாபாரிகள் நேரடியாக வந்து கொள்முதலும் செய்வர்.

    இந்நிலையில், தருமபுரி மற்றும் நீலகிரி மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக, சோதனை அடிப்படையில் ஒரு குடும்பத்துக்கு மாதம் ஒன்றுக்கு 2 கிலோ அரிசிக்கு பதிலாக ராகி சிறு தானியம் விநியோகம் செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது.

    இதற்காக சூளகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, தளியில் ராகி நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

    தற்போது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம், நீலகிரி மாவ ட்டத்தின் ஓராண்டுக்கான தேவையான 11,040 மெ.டன் ராகி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறு, குறு விவசாயிகளிடமிருந்து கொ ள்முதல் செய்யப்படுகிறது.

    மேலும், கிணறுகள், குளம், குட்டைகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் உள்ளதாலும், விவசாயிகள் ராகி பயிர் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் பாசன பரப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    • கணவனுடன் ஏற்பட்ட குடும்ப தகராறால் அனிதா மாதேபள்ளியில் மகளுடன் வந்து வசித்து வருகிறார்.
    • கந்திகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரபாகரனை கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அருகேயுள்ள மாதேபள்ளியை சேர்ந்தவர் அனிதா (வயது 32). இவருக்கும் பெங்களூரு நாராயனபுரா பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவருக்கும் திருமணமாகி இந்துபிரியா (16) என்ற மகள் உள்ளார்.

    இந்நிலையில் கணவனுடன் ஏற்பட்ட குடும்ப தகராறால் அனிதா மாதேபள்ளியில் மகளுடன் வந்து வசித்து வருகிறார். அங்கு வந்த பிரபாகரன், அனிதாவுடன் மீண்டும் தகராறில் ஈடுபட்டு கையாலும், கல்லாலும் சரமாரியாக தாக்கியுள்ளார்.

    இதில் படுகாயம் அடைந்த அனிதா கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து அவரது மகள் இந்துபிரியா கொடுத்த புகாரின்பேரில் கந்திகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரபாகரனை கைது செய்தனர்.

    • எதிர்பாரதவிதமாக தடுமாறி மரத்தில் இருந்து கீழே விழுந்தார்.
    • மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னச்சந்திரம் அருகேயுள்ள அவல்நத்தம் பகுதியை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 50).

    விவசாயியான காளியப்பன் தனக்கு சொந்தமான மரத்தில் ஏறி புளியம்பழம் பறிக்க முயன்றார்.

    அப்போது எதிர்பாரதவிதமாக தடுமாறி மரத்தில் இருந்து கீழே விழுந்தார்.இதில் படுகாயம் அடைந்த அவரை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்து பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் எல்லப்பன் கொடுத்த புகாரின்பேரில் குருபரபள்ளி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல தருமபுரி மாவட்டம் எச். கோபிநாதம்பட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி சுரேஷ் (28) என்பவர் கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் அருகேயுள்ள மல்லூரில் செல்போன் டவருக்கு குழிதோண்டும் பணியில் ஈடுபட்டார். குடிபோதையில் இருந்த சுரேஷ் அந்த குழிக்குள்ளேயே விழுந்து உயிரிழந்தார்.

    இதுகுறித்து அவரது தந்தை முனுசாமி தந்த புகாரின் பேரில் பாகலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
    • பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    ஓசூர்,

    ஓசூரில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட மற்றும் மாநகர அ.தி.மு.க. சார்பில், கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரும், மறைந்த முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி, ஓசூர் பஸ் நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மேற்கு மாவட்ட எம்.ஜிஆர் மன்ற இணை செயலாளர் ஜெயப்பிரகாஷ், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் எஸ்.நாராயணன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சிட்டி ஜெகதீசன், தெற்கு பகுதி செயலாளர் பி.ஆர்.வாசுதேவன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின்போது, ஜெயலலிதா படத்துக்கு பூஜைகள் செய்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

    • பணபரிவர்த்தனையின் தாக்கம் எனும் தலைப்பில் ஒருநாள் தேசியக் கருத்தரங்கம் நடைபெற்றது.
    • வணிகமும் பொருளாதாரமும் சர்வேதச கொள்கைகளால் உலக மயமாதல், தாராளயமயமாக மாறியுள்ளது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியை அடுத்த காட்டிநாயனப்பள்ளியில் செயல்படும் கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் "வணிகவியல் மற்றும் மேலாண்மைத்துறையின் சார்பாக", இந்திய பொருளா தாரத்தில் இலக்க முறை பணபரிவர்த்தனையின் தாக்கம் எனும் தலைப்பில் ஒருநாள் தேசியக் கருத்தரங்கம் நடைபெற்றது.

    இக்கருத்தரங்கில், கல்லூரியின் தாளாளர் முன்னாள் எம்.பி. பெருமாள் தலைமை தாங்கினார். கல்லூரியின் தலைவர், மாவட்ட கவுன்சிலர் வள்ளிபெருமாள், கல்வியியல் கல்லூரி முதல்வர் அமலோற்பவம் ஆகியோர் குத்து விளக்கேற்றி கருத்தரங்கை தொடங்கி வைத்தனர். பெரியார் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் ஆறிவழகன், வணிகவியல் துறைத்தலைவர் சௌந்தர பாண்டியன் முன்னிலை வகித்தார். முதல்வர் ஆறுமுகம் கருத்தரங்கில் தொடக்க உரையாற்றினார். மேலாண்மையியல் துறைத்தலைவர் மரகதம் அனைவரையும் வரவேற்றார்.

    பெரியார் பல்கலைக்கழக வணிகவியல் துறை பேராசிரியர் பிரபாகர் ராஜ்குமார், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். தாளாளர் பெருமாள் தனது தலைமையுரையில் "மாணவர்கள், வளர்ந்து வரும் தொழில்நுட்பம், சர்வதேச சந்தைப்படுத்தும் திறன் ஆகியவற்றைப் பயன்படுத்தி நம் நாட்டின் பொருளாதாரம் தற்சார்பு நிறைந்ததாக வளர பாடுபடவேண்டும்", என வாழ்த்தினார். சிறப்பு விருந்தினர் தனது உரையில் வணிகமும் பொருளாதாரமும் சர்வேதச கொள்கைகளால் உலக மயமாதல், தாராளயமயமாக மாறியுள்ளது. வளர்ந்துவரும் தொழில்நுட்பப் புரட்சியின் காரணமாக பணமில்லாப் இலக்க பரிவர்த்தனை தற்போது நடைமுறையில் உள்ளது. விரைவில், உலகம் முழுவதும் ஒரேவித கரன்சி வருவதற்கு வாய்ப்புள்ளது. கிரிப்டோ கரன்சி அதற்கு முன் உதாரணம் ஆகும். அதன் நீட்சியாக இன்று மாணவர்கள், புதிய வியாபார உத்தி, ஆன்லைன் விளம்பரங்கள், ஆன்லைன் வணிகம், புதிய பொருட்களை சர்வதேச தரத்தில் தயாரித்தல் போன்ற முயற்சியில் ஈடுபட்டால், உலக அரங்கில் இந்தியப் பொருளாதாரத்தை புதிய உச்சத்திற்கு எடுத்துச்செல்ல இளம் மாணவர்கள் பாடுபட வேண்டும" என வாழ்த்தினார்.

    இந்நிகழ்ச்சியில் மாணவர் கள், பேராசிரியர்கள், கலந்து கொண்டு தங்கள் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர். வணிகவியல் பேராசிரியர் மரினா நன்றி தெரிவித்தார். இதற்கான ஏற்பாட்டினை, வணிகவியல், மேலாண்மையில் துறை பேராசிரியர்கள், மாணவர்கள், நிர்வாக அலுவலர் சுரேஷ் ஆகியோர் செய்தனர்.

    • பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
    • இதுநாள் வரை ஒரு சொட்டு குடிநீர்கூட வந்தது இல்லை என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

    மத்தூர்,

    மத்திய அரசின் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் அனைத்து கிராம ஊராட்சிக்குட்பட்ட குக்கிராமங்களில் பயன்பாட்டில் உள்ள வீடுகளில் தனி நபர் ஒருவருக்கு 55 லிட்டர் அளவில் முழுமையாக குடிநீர் தேவையினை பூர்த்தி செய்யும் பொருட்டு ஜல் ஜீவன் மிஷன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த சாலாமரத்துபட்டி ஊராட்சியில் ரூ.74.85 லட்சம் மதிப்பில் 1122 புதிய வீட்டு குழாய் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

    குறிப்பாக சாலாமரத்துப்பட்டி, சாலாமரத்துப்பட்டி காலணி பொடார், பாப்ரிகானூர் ஆகிய கிராமங்களுக்கு 15-வது மானிய குழு நிதியிலிருந்து ரூ.29.69 லட்சம் மதிப்பில் போடப்பட்ட 320 வீட்டு குழாய் இணைப்புகள் அனைத்தும் போலியானவை என்றும், பெயரளவிற்கு வீட்டிற்கு ஒன்று அல்லது இரண்டு இணைப்புகளை கொடுக்கப்பட்டு நிதி எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கின்றனர்.

    15-வது மானிய குழு நிதியிலிருந்து போடப்பட்ட வீட்டு குழாய்கள் தரமற்று இருப்பதாகவும், இணைத்து ஒரு வருட காலமாகியும் இதுநாள் வரை ஒரு சொட்டு குடிநீர்கூட வந்தது இல்லை என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

    சாலாமரத்துப்பட்டி கிராமத்தில் ஏற்கனவே உள்ள குடிநீர் குழாயில் போதிய குடிநீர் வந்துக்கொண்டிருக்கையில் புதிய இணைப்பு எதற்கு என மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், குழாய்கள் அமைத்தபின் பரிசோதனை கூட செய்யாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. அவை முழுவதும் உடைந்து சேதமாகி ஆங்காங்கே பைப்புகள் தொங்கியவாறும், பைப் அமைக்க பயன்படுத்திய தூண்கள் மட்டுமே காட்சி பொருளாக உள்ளது.

    இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் மதியழகனிடம் கேட்டதற்கு, சாலமரத்துப்பட்டி பகுதியில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட குழாய்கள் தான் போடப்பட்டது. ஆனால் கிராம மக்கள் வேண்டுமென்றே ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் போடப்பட்ட பைப்புகளை பிடுங்கி எரிந்து விட்டதாக தெரிவித்தார். மேலும் ஓலைப்பட்டி பகுதியில் உள்ள குழாய்களுக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து இன்னும் இணைப்புகள் வழங்கவில்லை என்றும் உடனடியாக வழங்கி விடுவதாக தெரிவித்தார்.

    இது குறித்து மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் துரைசாமியிடம் கேட்டதற்கு, ஜல்ஜீவன் திட்டத்தில் முறைகேடு நடப்பதற்கு வாய்ப்பில்லை. விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து உதவி பொறியாளர் ஜமுனாவிடம் கேட்டதற்கு, நான் பணியில் பொறுப்பேற்ற பிறகு ஜி.ஐ. பைப்புகளும், பித்தளை டேப்-களும் பொருத்தப்பட்டுள்ளது, நான் வருவதற்கு முன்பு நடநத்து பற்றி எனக்கு தெரியாது என தெரிவித்தார். எனினும் கடந்த ஓராண்டாக தண்ணீரே வரவில்லை என கேட்டதற்கு, தண்ணீர் வருகிறது என தெரிவித்தார்.

    • 27-ந் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெறுகிறது.
    • மொத்தம் 580 அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் கடந்த 7-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. வருகிற 27-ந் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெறுகிறது.

    5 பிரிவுகளில் நடந்து வரும் இந்த போட்டிகளில், பள்ளி மாணவ, மாணவிகள், கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுப்பிரிவினருக்காக விளையாட்டுப் போட்டிகள் ஏற்கனவே நடந்து முடிந்துள்ளன. நேற்று அரசு ஊழியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடந்தன.

    இதில் கைப்பந்து, கபடி, கையுந்து பந்து, இறகுப்பந்து, தடகளப் போட்டிகள் மற்றும் செஸ் ஆகிய விளையாட்டுப் போட்டிகள் ஆண், பெண் இருவருக்கும் நடத்தப்பட்டன. போட்டிகளை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் மகேஷ்குமார் தொடங்கி வைத்தார்.

    இதில், ஆண்கள் பிரிவில் 400 பேரும், பெண்கள் பிரிவில் 180 பேரும் என மொத்தம் 580 அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • ஸ்மார்ட் கார்டு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • 100-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டது.

    ஓசூர்,

    ஓசூர் அருகே பேரண்டபள்ளி ஊராட்சியில், பயனாளிகளுக்கு, தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட ஸ்மார்ட் கார்டு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பேரண்டபள்ளி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, ஊராட்சி தலைவர் மஞ்சுளா கிருஷ்ணப்பா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் நஞ்சப்பா முன்னிலை வகித்தார்.

    இதில் வார்டு உறுப்பினர்கள் தேன்மொழி சங்கர், முகமது அலி, ஊராட்சி செயலர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் போது 100-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டது.

    • பிரியங்கா குமாரிக்கு திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டது.
    • வீட்டை விட்டு சென்ற பிரியங்கா குமாரி அதன்பிறகு வீடு திரும்பவில்லை.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள பேடரபள்ளி பாரதியார் நகர் பகுதியை சேர்ந்தவர் அருள்குப்தா. இவரது மகள் பிரியங்கா குமாரி (வயது 21). இவருக்கு திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டது.

    இதையடுத்து தனது தோழிகளுக்கு திருமண பார்ட்டி வைப்பதாக கூறி வீட்டை விட்டு சென்ற பிரியங்கா குமாரி அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது அண்ணன் அபிசேக் குமார் கொடுத்த புகாரின்பேரில் ஓசூர் டவுன் போலீசார் வழக்கு பதிந்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    இதேபோல அஞ்செட்டி அருகேயுள்ள உரிகம் கிராமத்தை சேர்ந்த வேங்கடசாமி (32) என்பவர் கடந்த 18-ந்தேதி கோவிலுக்கு செல்வதாக கூறி புறப்பட்டு சென்றவர் அதன்பிறகு வீடு திரும்ப வில்லை. இது குறித்து அவரது தாய் கொடுத்த புகாரின்பேரில் அஞ்செட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

    • ஆறுமாதங்களுக்கு முன்பு பள்ளி படிப்பை நிறுத்திவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.
    • திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை என்று கூறிவந்த சந்தானா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனி கோட்டை அருகேயுள்ள மருதபள்ளி கீழ தெருவை சேர்ந்தவர் வரதராஜ். இவரது மகள் சந்தானா (வயது 18). கடந்த ஆறுமாதங்களுக்கு முன்பு பள்ளி படிப்பை நிறுத்திவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    இந்நிலையில் அவருக்கு பெற்றோர் திருமண ஏற்பாடு செய்து வந்துள்ளனர். ஆனால் தனக்கு திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை என்று கூறிவந்த சந்தானா இந்த விவகாரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அவரது தந்தை வரதராஜ் கொடுத்த புகாரின்பேரில் தேன்கனி கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல உத்தனப்பள்ளி அருகேயுள்ள பெலேட்டி கிராமத்தை சேர்ந்த உஷா (32) என்பவர் தனது கணவரின் குடி பழக்கத்தால் மனமுடைந்து தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அவரது சகோதரர் ராஜேஷ் கொடுத்த புகாரின்பேரில் உத்தனப்பள்ளி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    ×