search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மத்திய அரசின் குடிநீர் திட்டத்தில் முறைகேடு புகார்
    X

    மத்திய அரசின் குடிநீர் திட்டத்தில் முறைகேடு புகார்

    • பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
    • இதுநாள் வரை ஒரு சொட்டு குடிநீர்கூட வந்தது இல்லை என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

    மத்தூர்,

    மத்திய அரசின் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் அனைத்து கிராம ஊராட்சிக்குட்பட்ட குக்கிராமங்களில் பயன்பாட்டில் உள்ள வீடுகளில் தனி நபர் ஒருவருக்கு 55 லிட்டர் அளவில் முழுமையாக குடிநீர் தேவையினை பூர்த்தி செய்யும் பொருட்டு ஜல் ஜீவன் மிஷன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த சாலாமரத்துபட்டி ஊராட்சியில் ரூ.74.85 லட்சம் மதிப்பில் 1122 புதிய வீட்டு குழாய் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

    குறிப்பாக சாலாமரத்துப்பட்டி, சாலாமரத்துப்பட்டி காலணி பொடார், பாப்ரிகானூர் ஆகிய கிராமங்களுக்கு 15-வது மானிய குழு நிதியிலிருந்து ரூ.29.69 லட்சம் மதிப்பில் போடப்பட்ட 320 வீட்டு குழாய் இணைப்புகள் அனைத்தும் போலியானவை என்றும், பெயரளவிற்கு வீட்டிற்கு ஒன்று அல்லது இரண்டு இணைப்புகளை கொடுக்கப்பட்டு நிதி எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கின்றனர்.

    15-வது மானிய குழு நிதியிலிருந்து போடப்பட்ட வீட்டு குழாய்கள் தரமற்று இருப்பதாகவும், இணைத்து ஒரு வருட காலமாகியும் இதுநாள் வரை ஒரு சொட்டு குடிநீர்கூட வந்தது இல்லை என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

    சாலாமரத்துப்பட்டி கிராமத்தில் ஏற்கனவே உள்ள குடிநீர் குழாயில் போதிய குடிநீர் வந்துக்கொண்டிருக்கையில் புதிய இணைப்பு எதற்கு என மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், குழாய்கள் அமைத்தபின் பரிசோதனை கூட செய்யாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. அவை முழுவதும் உடைந்து சேதமாகி ஆங்காங்கே பைப்புகள் தொங்கியவாறும், பைப் அமைக்க பயன்படுத்திய தூண்கள் மட்டுமே காட்சி பொருளாக உள்ளது.

    இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் மதியழகனிடம் கேட்டதற்கு, சாலமரத்துப்பட்டி பகுதியில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட குழாய்கள் தான் போடப்பட்டது. ஆனால் கிராம மக்கள் வேண்டுமென்றே ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் போடப்பட்ட பைப்புகளை பிடுங்கி எரிந்து விட்டதாக தெரிவித்தார். மேலும் ஓலைப்பட்டி பகுதியில் உள்ள குழாய்களுக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து இன்னும் இணைப்புகள் வழங்கவில்லை என்றும் உடனடியாக வழங்கி விடுவதாக தெரிவித்தார்.

    இது குறித்து மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் துரைசாமியிடம் கேட்டதற்கு, ஜல்ஜீவன் திட்டத்தில் முறைகேடு நடப்பதற்கு வாய்ப்பில்லை. விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து உதவி பொறியாளர் ஜமுனாவிடம் கேட்டதற்கு, நான் பணியில் பொறுப்பேற்ற பிறகு ஜி.ஐ. பைப்புகளும், பித்தளை டேப்-களும் பொருத்தப்பட்டுள்ளது, நான் வருவதற்கு முன்பு நடநத்து பற்றி எனக்கு தெரியாது என தெரிவித்தார். எனினும் கடந்த ஓராண்டாக தண்ணீரே வரவில்லை என கேட்டதற்கு, தண்ணீர் வருகிறது என தெரிவித்தார்.

    Next Story
    ×