என் மலர்
கிருஷ்ணகிரி
- உதவி கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்றை வழங்கினர்.
- ஓசூர் பகுதியில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும்.
கிருஷ்ணகிரி,
ஓசூர் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜனதா சார்பில் மாவட்ட செயலாளர் பிரவீன்குமார் தலைமையில்உதவி கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்றை வழங்கினர்.
அவருடன் துணைத்தலைவர் முருகன், பொருளாளர் சீனிவாசன், கிழக்கு பகுதி தலைவர் மணிகண்டன், ஆலய மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் ஓம் மற்றும் நிர்வாகிகள் உடன் சென்றனர்.
அந்த மனுவில் ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில் தேரோட்டம் வருகிற 7-ந்தேதி நடைபெறுகிறது. அன்று, ஒரு நாள் உள்ளூர் விடுமுறை வழங்க வேண்டும்.
மேலும் தேரோட்டம் அன்றும், மறுநாள் (8-ந்தேதி) நடைபெறும் பல்லக்கு உற்சவம் மற்றும் அடுத்த நாள் (9-ந் தேதி) தெப்ப உற்சவம் நடக்கிறது.
இந்த 3 நாட்களிலும், ஓசூர் பகுதியில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மூன்று நாட்கள் இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது.
- விருப்பமுள்ள பயனாளிகள் இதில் கலந்து கொண்டு பயனடையலாம்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூரில் நாளை (1ம் தேதி) முதல் 3 நாட்கள், நவீன ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு முறைகள் குறித்த இலவச பயிற்சி நடக்கிறது. இது குறித்து தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மைய உதவி பேராசிரியர் சோமு.சுந்தரலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-
மீன் உற்பத்தியைப் பெருக்கும் நோக்கில், மத்திய மற்றும் மாநில அரசுகளின் தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டம் 2021-22-ம் ஆண்டு நிதி உதவியின் கீழ், பாரூரில் அமைந்துள்ள மீன்வளப் பல்கலைக்கழகத்தின் வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மையத்தில், நவீன ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு முறைகள் குறித்து நாளை (மார்ச் 1ம் தேதி) முதல் 3-ம் தேதி வரை மூன்று நாட்கள் இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இதில் குளம் அமைத்தல், பராமரிப்பு, திலேப்பியா மீன் வளர்ப்பு, தீவன தயாரிப்பு மற்றும் மேலாண்மை, நவீன ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு முறைகள், மீன் வளர்ப்பில் அரசின் நிதி உதவி திட்டங்கள் மற்றும் பல்வேறு செயல்முறை விளக்கங்கள் அளிக்கப்பட உள்ளன.
மேலும், பயிற்சியாளர்கள் தற்போது வெற்றிகரமாக மீன் வளர்த்துக் கொண்டிருப்பவர்களின் பண்ணைகளுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர். எனவே, விருப்பமுள்ள பயனாளிகள் இதில் கலந்து கொண்டு பயனடையலாம்.
இவ்வாறு உதவி பேராசிரியர் சோமு.சுந்தரலிங்கம் தெரிவித்துள்ளார்.
- பூக்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
- பூக்களின் விலை சரிவால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் ஆண்டு முழுவதும் சீரான தட்பவெப்ப நிலை நிலவுகிறது.
இதனால், காய்கறிகள் மற்றும் பூக்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ஓசூர் பகுதியில் மட்டும் சுமார் 2500 ஏக்கரில் ரோஜா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆயிரம் ஏக்கரில் செண்டுமல்லி பயிரிடப்பட்டுள்ளது. தற்போது, சந்தைக்கு பூக்கள் வரத்து அதிகரித்துள்ள நிலையில், சுபநிகழ்ச்சிகள் இல்லாததால் விலை சரிந்துள்ளது.
கடந்த வாரம் கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்ட பட்டன் ரோஸ் திடீரென ரூ.40 வரையிலும் சரிந்தது. சாமந்தி ரூ.60-க்கும், அரளி ரூ.60-க்கும், செண்டுமல்லி ரூ.20-க்கும் விற்பனையானது. பூக்களின் விலை சரிவால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ஓசூரில் தினந்தோறும் 100 டன் பூக்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு 150 டன் வரை அனுப்பப்பட்டு வருகிறது. தற்போது, விசேஷ நாட்கள் இல்லாததால், பூக்களின் விலை குறைந்துள்ளது. விசேஷ நாட்கள் வந்தால் தான் பூக்கள் விலை கூடும் என்று கூறினர்.
- 2 செண்ட் இலவச வீட்டுமனை பட்டாவை வழங்கப்பட்டது.
- தாய், தந்தையை வீட்டை விட்டு துரத்தி விட்டனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா ஆண்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் பூங்கான் (வயது 65). இவர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: -
எனக்கு கடந்த 2010-ம் ஆண்டு மூத்த குடிமக்கள் சலுகையின்படி, அரசு சார்பில் 2 செண்ட் இலவச வீட்டுமனை பட்டாவை வழங்கப்பட்டது.
அதில் வீடு கட்டி வாழ்ந்து வந்தோம். ஆனால் எனது மகன் தமிழ்குமரன், வீட்டை அடமானம் வைத்து லோன் வாங்குவதாகக் கூறி என்னிடம் கையெழுத்து வாங்கி, எனது மருமகள் பெயரில் வீட்டின் பட்டாவை மாற்றி விட்டார்.
பின்னர் என்னையும், எனது உடல் நிலை சரியில்லாத மனைவியையும் வீட்டை விட்டு துரத்தி விட்டனர். இதனால் நாங்கள் அருகில் உள்ள மாட்டுக் கொட்டகையில் வசித்து வருகிறோம்.
அங்கும் வசிக்கக் கூடாது என்று எனது மகன் அடிக்கடி கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். எனவே எனது மருமகள் பெயரில் உள்ள வீட்டுப் பட்டாவை ரத்து செய்து மீண்டும் எனது பெயருக்கு மாற்றித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இது குறித்து பூங்கான் மேலும் கூறுகையில், முன்னாள் கலெக்டரிடம் 33 முறை இது குறித்து மனு அளித்தேன். தற்போது பொறுப்பேற்றுள்ள கலெக்டரிடம் இரண்டாவது முறையாக மனு அளித்துள்ளேன் என தெரிவித்தார்.
- சுவரில் துளைப்போட்டு உள்ளே நுழைந்திருந்தது தெரிய வந்தது.
- மதுபாட்டில்களை திருடி செல்லப்பட்டது தெரிய வந்தது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பத்தலப்பள்ளியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் ஊழியர்கள் விற்பனை முடிந்த பின்னர் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றனர்.
இதனிடையே நேற்று காலை ஊழியர்கள் கடையை திறக்க வந்தனர். அப்போது மர்ம நபர்கள் சுவரில் துளைப்போட்டு உள்ளே நுழைந்திருந்தது தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்த போது ரூ.4 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களை திருடி செல்லப்பட்டது தெரிய வந்தது.
மதுக்கடையில் பணத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ள மர்ம ஆசாமிகள் பணப்பெட்டியில் பணம் ஏதும் இ்ல்லாததால் மது பாட்டில்களை திருடி சென்றுள்ளனர்.
இந்த கொள்ளை முயற்சி சம்பவம் குறித்து, விற்பனையாளர் சுப்பிரமணி ஓசூர் அட்கோ போலீசில் புகார் செய்தார். அதன் பேரில், போலீசார் மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் இருந்தது.
- சிறப்பு தூய்மைப் பணிமேற்கொள்ளப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட 7வது வார்டில் பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, எல்.ஐ.சி. காலனி, பாலாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் இருந்தது.
இது குறித்து தகவல் அறிந்த நகர்மன்ற தலைவர் பரிதாநவாப் அப்பகுதிக்கு துப்புரவு பணியாளர்களுடன் சென்று, கழிவுநீர் கால்வாய் அடைப்பினை, நீண்ட நாட்கள் தேங்கியிருந்த குப்பைகளை அகற்றுதல், முட்புதர்களை அகற்றுதல் போன்ற சிறப்பு தூய்மைப் பணியினை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது சுகாதார அலுவலர் ராமகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் தேவேந்திரன், நகர்மன்ற உறுப்பினர்கள் ஆயிஷா முகமதுஜான், தேன்மொழி மாதேஷ் மற்றும் வட்ட பிரதிதிநி ஜெயசிம்மன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- வெயில் அடிப்பதால் செடி கொடிகள் காய்ந்து சருகாக மாறிவிட்டன.
- காய்ந்த இலைகள் செடி, கொடிகள் எரிந்து சாம்பலாகி வருகிறது.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சுற்று வட்டார பகுதியில் ஒரு மாதமாக அதிகாலையில் பனி பெய்து வருகிறது. இதற்கு நேர்மாறாக காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அதிக அளவில் வெயில் அடிப்பதால் செடி கொடிகள் காய்ந்து சருகாக மாறிவிட்டன.
சுண்டகிரி, மேலுமலை, குருபராத்தப் பள்ளி, கோப சந்திரம் மற்றும் பல பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலையின் ஒரமாக பல பகுதியில் சிலர் நெருப்பு வைத்து வருவதால் காய்ந்த இலைகள் செடி, கொடிகள் எரிந்து சாம்பலாகி வருகிறது.
தற்போது சூளகிரி பேருந்து நிலையம் நுழைவு வாயிலில் உள்ள அரசுக்கு சொந்தமான குட்டை நில பகுதியில் உள்ள முட்புதர்களுக்கு யாரோ நேற்று மாலை நெருப்பு வைத்ததால் நெருப்பு பற்றி கொளுந்து விட்டு எரிந்தது.
இங்கு அதிக குடியிருப்புகள் இருப்பதாலும், சாலையில் வாகனங்கள் அதிக அளவில் சென்று வருவதால் பொது மக்கள் அதிக அளவில் அவதிக்கு உள்ளாகினர்.
இதனையடுத்து சூளகிரியில் தீயணைப்பு நிலையம் இல்லாததால் மற்ற பகுதியில் இருந்து தீயணைப்பு வாகனங்களை வரவழைத்து இங்கேயே நிறுத்தி வைக்க வேண்டும் என ெபாதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
- பீடி பற்ற வைத்துள்ளார். பின்னர் அதனை அணைக்காமல் தூக்கி போட்டதாக கூறப்படுகிறது.
- துரைசாமி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் என்.தாசிரிபள்ளியை சேர்ந்தவர் துரைசாமி (வயது 85). விவசாயி. இவருக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருந்துள்ளது.
நொடிக்கொருமுறை பீடி பற்ற வைத்தவாறே இருப்பாராம். கடந்த 26-ந்தேதி அதிகாலை எழுந்த துரைசாமி வழக்கம்போல பீடி பற்ற வைத்துள்ளார்.
பின்னர் அதனை அணைக்காமல் தூக்கி போட்டதாக கூறப்படுகிறது. அந்த பீடியில் இருந்த தீக்கங்கு அருகே கிடந்த தென்னை ஓலைகளில் பற்றி துரைசாமி மீதும் தீப்பற்றியது.
இதில் உடல் கருகிய நிலையில் கிடந்த அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த துரைசாமி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து வேப்பனபள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- பாறை, சூரப்பன்குட்டை உள்ளிட்ட பகுதிகளில் 10 யானைகள் முகாமிட்டுள்ளன.
- பொதுமக்கள், விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனச்சகரம் பேவனத்தம் வனப்பகுதி வட்டவடிவு பாறை, சூரப்பன்குட்டை என்ற பகுதிகளில் 10 யானைகள் முகாமிட்டுள்ளன.
இந்த யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து தக்காளி, பீன்ஸ், முட்டைகோஸ் உள்ளிட்ட பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் அட்டகாசம் செய்து வருகின்றன. மேலும் நிலத்தில் உள்ள சொட்டுநீர் பாசன பைப்புகளை யானைகள் உடைத்து சேதப்படுத்தி விட்டு மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விடுகின்றன.
கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் முகாமிட்டுள்ள யானைகள் பேவநத்தம், பாளேகுளி, லட்சுமிபுரம், பச்சபனட்டி, கிரிசெட்டிபள்ளி, திம்மசந்திரம், மேகலகவுண்டனூர் பகுதிகளில் சுற்றித்திரிந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து வந்து யானைகளை வனப்பகுதிக்கு விரட்டினர். யானைகள் முகாமிட்டுள்ளதால் அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்த யானைகளை கர்நாடக வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும். சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து.
- மாவட்டம் முழுவதும் மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து. அதன்பேரில் போலீசார் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர்.
உத்தனப்பள்ளி போலீசார் ரோந்து சென்றபோது சீபம் பகுதியை சேர்ந்த ராமன் (வயது 50), கணிஞ்சூரை சேர்ந்த திலீப் (24), சாமனபள்ளியை சேர்ந்த சமீர் யாதவ் (36) ஆகியோர் பணம் வைத்து சூதாடியபோது கைது செய்யப்பட்டனர்.
கெலமங்கலம் போலீசார் நடத்திய வேட்டையில் அதே பகுதியை சேர்ந்த மாதேஷ் (48), ஸ்ரீதர் (36), சந்திரசேகர் (38), ஆகியோர் பணம் வைத்து சூதாடி சிக்கினர்.
பாகலூர் பகுதியில் சிவா (32), வேலு (40), கிருஷ்ணமூர்த்தி (40) ஆகியோர் பணம் வைத்து சூதாடியபோது கைது செய்யப்பட்டனர். மாவட்டம் முழுவதும் மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
- பிஞ்சு வைக்கும் நிலையில் தற்போது மழை பொய்த்து போனது.
- தண்ணீரை விலைக்கு வாங்கி மா மரங்களுக்கு விட்டு விளைச்சலை பெருக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி சுற்று வட்டாரத்தில், நாகரசம்பட்டி, என்.தட்டக்கல், வேலம்பட்டி, சந்துார், மத்துாரில் சுமார் 5,000 ஏக்கரில் மா விவசாயம் நடக்கிறது.
கடந்தாண்டு இறுதியில் தொடர்ந்து மழை பெய்ததால், தற்போது மாஞ்செடிகளில் பூ பிடித்து, பிஞ்சு வைக்கும் நிலையில் தற்போது மழை பொய்த்து போனது. இதனால் கடும் வெயிலினால் பூக்கள் கருகி, பிஞ்சு வெதும்பி விழும் என்பதால் வேறு வழியின்றி விவசாயிகள் தண்ணீரை விலைக்கு வாங்கி மா மரங்களுக்கு விட்டு விளைச்சலை பெருக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
குறிப்பாக போச்சம்பள்ளி சுற்றுவட்டாரத்தில், மழை பொய்த்துப் போனதால் மா மரங்களில் பூக்கள் கருகி வருவதை தடுக்க விவசாயிகள் நீரை விலைக்கு வாங்கி, மாமரத்திற்கு விட்டு வருகின்றனர்.
இதுகுறித்து மோட்டூரை சேர்ந்த விவசாயி ஒருவர் கூறுகையில் வெயிலின் தாக்கத்தால் மா பூக்கள் கருகி வருகிறது.
இதனால், ஒரு டிராக்டர் தண்ணீர் 400 ரூபாய் என நாள் ஒன்றுக்கு 5 டிராக்டர்கள் வரை தண்ணீர் வாங்கி மாஞ்செடிகளுக்கு பாய்ச்சி வருகிறோம் என்றார்.
- அரசு கலை கல்லூரி வழியாக பேருந்துகளை இயக்குவதால் மாணவர்கள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
- போக்குவரத்து கழகங்கள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
கிருஷ்ணகிரி, பிப்.27-
கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜாகடையை சேர்ந்த ஜெகநாதன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், கிருஷ்ணகிரியில் இருந்து ஆந்திர மாநில எல்லையில் உள்ள குப்பம் வரை மகாராஜாகடை வழியாக தமிழ்நாடு மற்றும் ஆந்திரா மாநிலங்களின் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்க உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
42 கிலோமீட்டர் தூரமுள்ள வழத்தடத்தில் 40 கிராம மக்கள் பயனடையும் வகையில் மகாராஜாகடை வழியாக பேருந்துகளை இயக்க மட்டுமே உரிமம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அரசு கலை கல்லூரி வழியாக பேருந்துகளை இயக்குவதாக குறிப்பிட்டுள்ளார்.
ஏறத்தாழ 9 கிலோமீட்டர் தூரம் குறைகிறது என்பதற்காக, 40 கிராமங்களில் வசிக்கும் மக்கள் பேருந்து வசதி இல்லாமலும், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அரசிடம் அனுமதி பெற்ற வழித்தடத்தில் பேருந்துகளை இயக்காதது குறித்து அரசு நிர்வாகங்களிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.
எனவே கிருஷ்ணகிரியில் இருந்து குப்பம் வரை அரசிடம் அனுமதி வழங்கிய மகாராஜாகடை வழியாக மட்டுமே தமிழ்நாடு மற்றும் ஆந்திர அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து தமிழ்நாடு மற்றும் ஆந்திரா அரசு போக்குவரத்து கழகங்கள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.






