என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • கடந்த 25-ம் தேதி எம்.எஸ்.எம்.தோட்டம் அருகே பைக்கை நிறுத்திவிட்டு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தார்.
    • சதீஷ்குமார்(27) என்பவர் திருடி செல்லும் போது அவரை பிடித்து ஊத்தங்கரை போலீசில் ஒப்படைத்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஏக்கூர் பகுதியை சேர்ந்த திருப்பதி (வயது 37) இவர் அரசு பேருந்து கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 25-ம் தேதி எம்.எஸ்.எம்.தோட்டம் அருகே பைக்கை நிறுத்திவிட்டு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது இவர் பைக்கை போச்சம்பள்ளி அருகே உள்ள அந்தேரிப்பட்டியை சேர்ந்த சதீஷ்குமார்(27) என்பவர் திருடி செல்லும் போது அவரை பிடித்து ஊத்தங்கரை போலீசில் ஒப்படைத்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • லாட்டரி விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கின்றனர்.
    • 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட போலீசார் மாவட்டம் முழுவதும் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கின்றனர்.

    இந்நிலையில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட ஓசூர் கொல்லர் தெருவை சேர்ந்த மஞ்சுநாத் (48), அலசநத்தம் முருகேஷ்(47),பர்கூர் லட்சுமணன் (45), போச்சம்பள்ளி முனியப்பன் (36), துரை (40) ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • குமாரனபள்ளி என்ற கிராமத்தில் மெடிக்கல் கடை, போலியாக வைத்தியம் பார்த்து வந்ததாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் சென்றது.
    • சோதனையில் அனைத்தும் உண்மை என தெரியவந்தது.இதையடுத்து அசோக்குமார் கைது செய்யப்பட்டார். அவரது மெடிக்கல் கடைக்கும் சீல் வைக்கப்பட்டது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்தவர் அசோக்குமார் (40). பார்மசி படித்துள்ள இவர், ஓசூர் அருகே குமாரனபள்ளி என்ற கிராமத்தில் மெடிக்கல் கடை, போலியாக வைத்தியம் பார்த்து வந்ததாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் சென்றது.

    இதையடுத்து, கலெக்டர் தீபக் ஜேக்கப் உத்தரவின் பேரில், ஓசூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் ஞானமீனாட்சி தலைமையில், மாவட்ட மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் ராஜீவ் காந்தி, குமாரனபள்ளி கிராம நிர்வாக அலுவலர் பழனி மற்றும் மத்திகிரி போலீசார் அடங்கிய குழு நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    சோதனையில் அனைத்தும் உண்மை என தெரியவந்தது.இதையடுத்து அசோக்குமார் கைது செய்யப்பட்டார். அவரது மெடிக்கல் கடைக்கும் சீல் வைக்கப்பட்டது.

    • வியாபாரிகள் யாரும் வாங்க முன்வராத காரணத்தால் பல விவசாய நிலங்களில் உள்ள முள்ளங்கி பிடுங்காமல் விளை நிலங்களிலிலேயே விட்டுள்ளனர்.
    • முள்ளங்கி கிலோ ஒன்றுக்கு ஒரு ரூபாய் விலை பேசி, அவற்றை டிராக்கர் கொண்டு ஏரியில் உள்ள மீன்களுக்கு உணவாக்கி வருகிறார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் முள்ளங்கி விளைச்சல் அதிகரிப்பு காரணமாக விலை கடுமையாக வீழ்ச்சி யடைந்துள்ளது. முள்ளங்கி விளைச்சல் நிலங்களுக்கு வியாபாரிகள் யாரும் வாங்க முன்வராத காரணத்தால் பல விவசாய நிலங்களில் உள்ள முள்ளங்கி பிடுங்காமல் விளை நிலங்களிலிலேயே விட்டுள்ளனர்.

    இதனை அறிந்த பென்டரஹள்ளி கிராமத்தில் உள்ள திப்பனாங்குட்டை ஏரியின் மீன் பிடி குத்தகைதாரர், போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதியில் உள்ள விவசாயிகளை அணுகி முள்ளங்கி கிலோ ஒன்றுக்கு ஒரு ரூபாய் விலை பேசி, அவற்றை டிராக்கர் கொண்டு ஏரியில் உள்ள மீன்களுக்கு உணவாக்கி வருகிறார்.

    விவசாய நிலத்தில் வீணாக போகும் முள்ளங்கிகளை வேறு வழியின்றி கிலோ ஒரு ரூபாய்க்கு விவசாயிகள் கொடுத்துவிடுகின்றனர்.

    • மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை மீண்டும் பெங்களுரு பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்க அறிவுறுத்தியுள்ளது.
    • 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களை மட்டும் தனியாக பிரித்து வைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

    கிருஷ்ணகிரி, 

    15 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை மீண்டும் பெங்களூரு பாரத் எலக்ட்ரானிக்ஸ நிறுவனத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

    இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 15 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை மீண்டும் பெங்களுரு பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்க அறிவுறுத்தியுள்ளது. அதன்படி கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்கு பதிவு எந்திரங்கள் மற்றும் உள்ளாட்சி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வாக்குப்பதிவு எந்திரங்களில் 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களை மட்டும் தனியாக பிரித்து வைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

    அதன்படி கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் முதல் தளத்தில் அமைந்துள்ள உள்ளாட்சி தேர்தல் வாக்கு பதிவு எந்திரங்கள் இருப்பு அறை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான தீபக் ஜேக்கப் திறந்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    இந்த கிடங்கில் இருந்து 359 சியு எந்திரங்களும் 1415 பியு எந்திரங்களும் என மொத்தம் 1774 எந்திரங்கள் 15 வருடங்களுக்கு மேலானவை என கண்டறியப்பட்டு பிரித்து வைக்கப்பட உள்ளது. இவை வருவாய்துறை வசம் ஒப்படைக்கப்பட்டு, வருகிற ஏப்ரல் 28&ந் தேதி தேதி பெங்களுரு பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.அப்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (ஊரக வளர்ச்சி) ராஜகோபால், தேர்தல் பிரிவு தாசில்தார் ஜெய்சங்கர், தாசில்தார் சம்பத், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், ராஜேஷ், பேரூராட்சி செயல் அலுவலர்கள் சாம்கிங்ஸ்டன், செந்தில்குமார் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் சந்திரமோகன், காங்கிரஸ் நகர தலைவர் லலித் ஆண்டணி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • சாலையை மறித்து சினிமா பேனர்களை வைத்துள்ளனர்.
    • மாலை மலையில் செய்தி எதிரொலியாக ரோட்டை மறித்து வைத்திருந்த பேனர்கள் உடனடியாக அகற்றிவிட்டனர்.

    காவேரிப்பட்டணம்,  

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பஸ் நிலைய மேம்பாலம் அருகில், தேசிய நெடுஞ்சாலையில், சாலையை மறித்து சினிமா பேனர்களை வைத்துள்ளனர். இதனால் அவ்வழியே செல்பவர்கள் போஸ்டரை பார்த்து செல்லும் சமயத்தில் வாகன விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என நேற்று மாலை மலர் செய்தி வெளியிட்டு இருந்தது. இதனை அடுத்து உடனடியாக அங்கு வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றப்பட்டன.

    இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும் பொழுது தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் கடைக்காரர்கள் , சினிமா தியேட்டர் ஆக்கிரமிப்பு இருப்பதாகவும், அதில் சாலையை மறித்து சினிமா பேனர்கள் வைத்துள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் என்ன நேற்று தெரிவித்திருந்தோம் . இதனை அடுத்து நேற்று மாலை மலையில் செய்தி எதிரொலியாக ரோட்டை மறித்து வைத்திருந்த பேனர்கள் உடனடியாக அகற்றிவிட்டனர். ஆனால் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வெங்கடேஸ்வரா சாமி கோவிலில் ஆண்டுதோறும் 3 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
    • ஊர் பிரமுகர்கள், ஊர் தலைவர்கள் ஊர் பொதுமக்கள் வடம் பிடித்து தேர் இழுத்து சென்றனர்.

    சூளகிரி,  

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம், தோரிப்பள்ளி ஊராட்சி, தாசனபுரம்கிராமத்தில் 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த வெங்கடேஸ்வரா சாமி கோவிலில் ஆண்டுதோறும் 3 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    இதனையொட்டி வெங்டேஷ்வரா சாமி பூக்களால் அலங்கரித்து தேர் மீது அமர்த்தி மங்கல இசை முழங்க தேரோட்டம் நடைபெற்றது.

    இன்று காலை 10 மணியளவில் கோவில் தலைவர் மற்றும் சூளகிரி முன்னாள் ஒன்றிய குழு தலைவருமான மது (எ) ஹேம்நாத் தலைமையில் சிறப்பு விருந்தினர்களாக ஓசூர் சப் கலெக்டர் சரண்யா மற்றும் சூளகிரி தாசில்தார் பன்னீர் செல்வி, ஊர் பிரமுகர்கள், ஊர் தலைவர்கள் ஊர் பொதுமக்கள் வடம் பிடித்து தேர் இழுத்து சென்றனர்.

    இந்நிகழ்ச்சிக்கு கர்நாடகா, ஆந்திரா மற்றும் தாசன்புரம், அத்தி முகம், பேரிகை, டோரிப்பள்ளி, அட்டகுறுக்கி, புக்காசாகரம், சூளகிரி, காமன்தொட்டி, பேரன்டப்பள்ளி, கோபசந்திரம், ஒசூர், மாலுர், மற்றும் சுற்றுவட்டாரங்களில் இருந்து பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்து சாமியை தரிசனம் செய்தனர். பிறகு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது.

    • குழந்தையை கொன்ற வழக்கில், ஆயுள் தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்
    • இந்த தண்டனைகளை அவர் ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறியுள்ளார்.

    கிருஷ்ணகிரி,  

    3 வயது பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் விரைவு கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த சானசந்திரம் கடவுள் நகரை சேர்ந்தவர் முத்து (வயது 30). இவர் கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் 12-ந் தேதி ஓசூர் பகுதியை சேர்ந்த, 3 வயது பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றார். இது குறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் ஓசூர் டவுன் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து முத்துவை கைது செய்தனர். இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுதா நேற்று தீர்ப்பு கூறினார். அதில் குற்றம் சாட்டப்பட்ட முத்துவுக்கு 3 வயது குழந்தையை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய தற்காக, 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், குழந்தையை கொன்ற வழக்கில், ஆயுள் தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.மேலும் இந்த தண்டனைகளை அவர் ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறியுள்ளார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் உமாதேவி மங்களமேரி ஆஜராகி வாதாடினார்.

    • கலெக்டர் தீபக் ஜேக்கப் திடீர் என வருகை தந்து மருத்துவமனையை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள், தினசரி நோயாளிகள் வருகை பதிவேடுகள் மற்றும் மருந்து இருப்புகளை ஆய்வு செய்தார்.

    ஓசூர்,  

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் பகுதில் உள்ள அரசு இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு, மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் திடீர் என வருகை தந்து மருத்துவமனையை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது, நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள், தினசரி நோயாளிகள் வருகை பதிவேடுகள் மற்றும் மருந்து இருப்புகளை ஆய்வு செய்தார். ஆய்வின்போது, டாக்டர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் உடன் இருந்தனர்.

    • தனிநபரிடமோ அல்லது விதை விற்பனை உரிமம் பெறாத நிறுவனத்திலோ விதைகளை வாங்க வேண்டாம்
    • விவசாயிகள் அதிக மகசூல் பெற பருவத்திற்கு ஏற்ற விதைகளை மட்டுமே பயிர் செய்ய வேண்டும்

    கிருஷ்ணகிரி,

    இணையவழி மூலம் விற்பனை செய்யப்படும் விதைகளை விவசாயிகள் வாங்க வேண்டாம் என, தருமபுரி விதை ஆய்வு துணை இயக்குனர் சங்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் காய்கறி பயிர்கள் பெருமளவில் பயிரிடப்படுகிறது. விவசாயிகள் தங்களுக்கு தேவையான விதைகளை விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்றுத்துறை மூலம் வழங்கப்படும் விதை விற்பனை உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே வாங்க வேண்டும்.

    இதனை தவிர்த்து இணையவழி மூலமாகவோ, தனிநபரிடமோ அல்லது விதை விற்பனை உரிமம் பெறாத நிறுவனத்திலோ விதைகளை வாங்க வேண்டாம். இணையவழி மூலமாக வாங்கப்படும் விதைகளினால் ஏற்படும் பயிர் பாதிப்பிற்கோ அல்லது இழப்பிற்கோ எவ்வித இழப்பீடும் பெற இயலாது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

    மேலும் தனிநபர்கள் மூலம் நேரடியாக நாற்றுப்பண்ணைகளுக்கு மற்றும் விவசாயிகளுக்கு வினியோகிக்கப்படும் விதைகளுக்கு உரிய ரசீது அளிக்கப்படாததால் இவ்விதைகள் நம்பகத்தன்மை இல்லாமல், மறைமுகமாக போலி விதைகளை வியாபாரம் செய்ய வாய்ப்புள்ளது. எனவே இதனைத் தவிர்த்து விவசாயிகளும், நாற்றுப் பண்ணை உரிமையாளர்களும் விதை உரிமம் பெற்ற நிறுவனங்களிடமிருந்து மட்டுமே விதைகளை வாங்க வேண்டும்.

    விவசாயிகள் அதிக மகசூல் பெற பருவத்திற்கு ஏற்ற விதைகளை மட்டுமே பயிர் செய்ய வேண்டும் எனவும், விவசாயிகள் விதைகளை வாங்கும்போது நாள், விவசாயியின் பெயர், பயிர், ரகம், நிலை, குவியல் எண், காலாவதி நாள் ஆகியவை அடங்கிய ரசீதை கையொப்பம் இட்டு தவறாமல் கேட்டு வாங்கிக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விழாவிற்கு ஊராட்சி தலைவர் மஞ்சுநாத் தலைமை தாங்கினார்
    • பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.

    ஓசூர்,

    ஓசூர் கல்வி மாவட்டம், கெலமங்கலம் ஒன்றியம் எச்.செட்டிப்பள்ளி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.

    விழாவிற்கு ஊராட்சி தலைவர் மஞ்சுநாத் தலைமை தாங்கினார். தலைமையாசிரியை சுஜாதா வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக, வட்டார கல்வி அலுவலர்கள் கிருஷ்ண தேஜஸ்,வேதா மற்றும் கோவிந்தப்பா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

    விழாவையொட்டி மாணவர்களின் திறமையை வெளிப்படுத்தும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.

    விழாவில் கவுன்சிலர் சம்பங்கியம்மா மல்லேஷ், பெற்றோர், ஆசிரியர் கழக தலைவர் பரமேஷ், துணைத்தலைவர் சிவராஜ், வார்டு உறுப்பினர்கள் நாகராஜ், லோகேஷ், கிருஷ்ணமூர்த்தி, மற்றும் மாணவர்களின் பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், ஆசிரியை ஹேமலதா நன்றி கூறினார்.

    • ஆணவப் படுகொலையைத் தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்
    • பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசுப் பணியும், ஜெகன் குடும்பத்திற்கு ரூ 25 லட்சம் நிவாரண வழங்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை எதிரில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், ஜனநாயக மாதர் சங்கம், அகில இந்திய விவசாய சங்கம் மற்றும் பன்னியாண்டிகள் நலச்சங்கம் சார்பில், காதல் திருமணம் செய்த ஜெகனை படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்தில், கிருஷ்ணகிரி அடுத்த கிட்டம்பட்டியைச் சேர்ந்த ஜெகன் என்ற இளைஞர், அவர் சார்ந்த சமூகத்திற்குள் காதல் திருமணம் செய்து கொண்ட ஒரே காரணத்திற்காக நடுரோட்டில் ஜெகனை ஆணவப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

    காதல் திருமணத்தை சகிக்காத பெண்ணின் தந்தை உறவினர்களுடன் சேர்ந்து மனிதநேயமற்ற வகையில் ஜெகனை நடுரோட்டில் ஆணவப் படுகொலை செய்தை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

    மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசுப் பணியும், ஜெகன் குடும்பத்திற்கு ரூ 25 லட்சம் நிவாரணமும் வழங்குவதுடன், சாதி, மதம், இன வெறியுடன் இதுபோன்று நடைபெறும் ஆணவப் படுகொலையைத் தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

    இதற்கு மாவட்டத் தலைவர் ஆனந்தகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் இருதயராஜ், ரவி, நாராயணமூர்த்தி, மாவட்ட செயலாளர் நாகேஷ்பாபு ஆகியோகர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ. டெல்லி பாபு, மாநில துணைத் தலைவர் ஆனந்தன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் நஞ்சுண்டன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேகர் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

    ×