என் மலர்
கிருஷ்ணகிரி
- எங்கள் பகுதி மேடாக உள்ளதால் குடிநீர் சீராக வருவதில்லை.
- சாக்கடைக் கால்வாயை தூர்வாரி 5 ஆண்டுகள் ஆகிறது.
கிருஷ்ணகிரி,
சீராக குடிநீர் வழங்காததை கண்டித்து காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி புதுப்பேட்டை ராசுவீதி திருவண்ணாமலை சாலை, முதல் கிராஸ் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இவர்களுக்கு நகராட்சி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த 8 நாட்களாக இப்பகுதிக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் குடிநீர் இன்றி சிரமத்திற்குள்ளான பொதுமக்கள் ஆத்திரம் அடைந்து நேற்று மதியம் திருவண்ணாமலை சாலையில் காலிக்குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த கிருஷ்ணகிரி டவுன் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினார்கள்.
மேலும் நகராட்சி ஊழியர்கள் அங்கு வந்து உடனே குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் சாலை
மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
எங்கள் பகுதி மேடாக உள்ளதால் குடிநீர் சீராக வருவதில்லை. எங்களுக்கு தனியாக கேட் வாழ்வு அமைத்துத்தர வேண்டும் என்று பல முறை கோரிக்கை
வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குடிநீர் வால்வை திறப்பவர் அடிக்கடி மது குடித்து விட்டு தண்ணீர் திறப்பதில்லை. இதனால் குடிநீர் சீராக கிடைப்பதில்லை. மேலும் குடிநீர் குழாய் அனைத்தும் சாக்கடைக் கால்வாயில் அமைத்துள்ளது. இதனால் சாக்கடைக் கால்வாயில்தான் தொடர்ந்து குடிநீர் பிடித்து பயன்படுத்தி வருகிறோம். சாக்கடைக் கால்வாயை தூர்வாரி 5 ஆண்டுகள் ஆகிறது.
ஆகவே கால்வாயை தூர்வாரி, குடிநீர் குழாயை சுகாதாரமான இடத்தில் அமைத்து, கேட் வால்வு ஒன்றையும் அமைத்துத்தர வேண்டும். மேலும் சீராக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- தேர் நகரின் முக்கிய சாலைகளின் வழியாக சுற்றி கொண்டு வந்து நிலை நிறுத்தப்பட்டது.
- மாலையில் உற்சவமூர்த்திகளை ஊஞ்சலில் அமர வைத்து தாலாட்டு பாடல்களை பாடி சிறப்பு பூஜைகள் நடந்தது.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே தல்சூர் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் கோவிலில் ஸ்ரீராம நவமியை முன்னிட்டு தேர்திருவிழா நடந்தது.
முன்னதாக சீதா, ராமா, ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு அபிசேகம் நடந்தது.சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சீதா ராமா, ஆஞ்சநேயர் சுவாமிகளை அலங்கரிக் கப்பட்ட தேரில் அமர்த்தி பூஜைகள் செய்து வேதமந்திரங்கள் ஒலிக்க மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் ராமா, ராமா என கோசமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் கோயிலை சுற்றி கொண்டு வந்து நிலை நிறுத்தினர்.
இதே போல், தேன்கனிக்கோட்டை எஸ்ஆர்ஒ தெருவில் உள்ள பழமை, வாய்ந்த ஆஞ்சநேயர் கோயிலில் மூலவருக்கு அதிகாலையில் சிறப்புஅபிசேகம் செய்யப்பட்டது.
சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் சீதா ராம லட்சுமன உற்சவ மூர்த்திகளை அலங்கரிக்கப்பட்ட தேரில் அமர வைத்து வேதமந்திரங்கள் ஒலிக்க ெசண்ைட மேளங்கள் முழங்க பக்தி கோசங்கள் விண்ணை பிளக்க பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் நகரின் முக்கிய சாலைகளின் வழியாக சுற்றி கொண்டு வந்து நிலை நிறுத்தப்பட்டது. மாலையில் உற்சவமூர்த்திகளை ஊஞ்சலில் அமர வைத்து தாலாட்டு பாடல்களை பாடி சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டு அருள்பெற்றனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கபட்டது.
- வெடிகுண்டு வைத்து கொன்றுவிடுவதாக அஸ்வத்தை வெங்கட்ரமணப்பா போதையில் மிரட்டியுள்ளார்.
- 10 ஆண்டுகளுக்கு பின் வழக்கில் நீதிபதி ரோஸ்லின் துரை தீர்ப்பு அளித்தார்.
ஓசூர்,
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் மாலூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடரமணப்பா (55). அதேபோல், கர்நாடக மாநிலம் மாஸ்தி பகுதியை அடுத்துள்ள தொட்ட ஹள்ளள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அஸ்வத் (35). இவர்கள் இருவரும் நண்பர்கள் ஆவர்.
வெங்கட்ரமணப்பா மற்றும் அஸ்வத் ஆகிய இருவரும் சூளகிரி அருகேயுள்ள ஏனுசோனை கிராமத்தில் ரவி என்பவருக்கு சொந்தமான கோழி பண்ணையில் கூடாரம் அமைக்கும் வேலை பார்த்து வந்தனர்.
கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி, கோழிப்பண்ணையில் இருவரும் மது அருந்தியபோது, குடி போதையில் ஒருவருக்கொருவர் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.மேலும், வெடிகுண்டு வைத்து கொன்றுவிடுவதாக அஸ்வத்தை வெங்கட்ரமணப்பா போதையில் மிரட்டியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அஸ்வத், அரிவாளால் வெட்டி வெங்கடரமணப்பாவை கொலை செய்துள்ளார். இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சூளகிரி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு கொலையாளி அஸ்வத்தை கைது செய்தனர். இந்த கொலை வழக்கு, ஓசூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு பின் வழக்கில் நீதிபதி ரோஸ்லின் துரை தீர்ப்பு அளித்தார். அதில் கூலி தொழிலாளியை கொன்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அஸ்வத்துக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 1,000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
- குழந்தைகளுக்கு செல்போன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
- தனிமையில் விட வேண்டாம் மற்றும் மாதவிடாய் வேலையில் தாய்மார்கள் கண்காணிக்க வேண்டும்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு துறையின் மூலமாக வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு, பாலியல் வன்கொடுமைகளில் இருந்து குழந்தைகளுக்கு தேவையான பாதுகாப்பு பற்றிய விவரத்தை அலுவலர்கள் விளக்கினார்.
அரசு வீதிமுறைகளை கடைபிடித்து சிறுமிகளை கண்காணித்து விழிப்புடன் செயல்பட்டு நல்வழிபடுத்த வேண்டும். எந்த குழந்தைகளும் தவறான பாதையில் செல்லகூடாது. குழந்தைகளுக்கு செல்போன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். தனிமையில் விட வேண்டாம் மற்றும் மாதவிடாயாய் வேலையில் தாய்மார்கள் கண்காணிக்க வேண்டும் என்று கூறினர்.
இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவகாமி, வினோத்குமார், வட்டாரகல்வி அலுவலர்கள் வெங்கட்குமார், ஜார்ஜ், இளநிலை உதவியாளர் விமல்ராம்,வட்டார மருத்துவ ர் வெண்ணிலா, அலுவலர்கள் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சத்துணவு உமாசங்கர், சையில் லிங் ஸ்ரீதர், சுமதி, மற்றும் உதவி தொடக்க அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் தொழிலாளர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டன.
- பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஓசூர்,
ஓசூர் அருகே பேகேப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட ராஜேஸ்வரி லே-அவுட் பகுதியில், அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில், டெம்போ ஓட்டுனர்கள் சங்கத்தின் புதிய கிளை தொடங்கப்பட்டது.
விழாவிற்கு, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். பேகேப்பள்ளி ஊராட்சி தலைவர் அருண்குமார் வரவேற்றார். இதில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, அண்ணா தொழிற்சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்து, பெயர் பலகையை திறந்து வைத்தும், புதிய கிளையை தொடங்கி விழாவில் பேசினார்.
இதனைத்தொடர்ந்து அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் தொழிலாளர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டன. பின்னர் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலும் விழாவில், மாவட்ட துணை செயலாளர் மதன், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் சென்னகிருஷ்ணன், ஓசூர் மாநகராட்சி மண்டல தலைவர் ஜெயப்பிரகாஷ், பகுதி செயலாளர்கள் அசோகா, ராஜி, உள்பட பலர் பேசினர். மேலும் இதில், கட்சி நிர்வாகிகள், தொழிற்சங்கத்தினர் உள்பட பலர் கலந்துகொண்டனர், முடிவில், ஒன்றிய கவுன்சிலர் முரளி நன்றி கூறினார்.
- ராம நவமியை முன்னிட்டு, உத்தனப்பள்ளி ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தன.
- ஓசூர் நகரத்தில் 15 இடங்களில் நீர்மோர் வழங்கப்பட்டன.
கிருஷ்ணகிரி,
ராமநவமியை முன்னிட்டு மாவட்டத்தில் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ராம நவமி விழாவை முன்னிட்டு ராமர், கிருஷ்ணர், ஆஞ்சநேயர் கோவில்களில் நேற்று சிறப்ப பூஜைகள் நடந்தன. கிருஷ்ணகிரி புதுப்பேட்டை செந்தில்நகர் ஸ்ரீ உடுப்பி கிருஷ்ணா, ஸ்ரீ முக்யப்ராணா ஆஞ்சநேயா, ஸ்ரீ ராகவேந்திரா சாமி கோவிலில் 67&வது ஆண்டு ராம நவமி உற்சவம் நேற்று நடந்தது.
இதையொட்டி கடந்த 22&ந் தேதி முதல் 29 வரை நிர்மால்ய அபிேஷகம், பஞ்சாமிர்த அபிேஷகம், சத்யநாராயண பூஜை, மகா தீபாராதனை, தீபாராதனை ஆகியவை நடந்தன. ராம நவமியை முன்னிட்டு நேற்று காலை 6 மணிக்கு நிர்மால்ய அபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 10 மணிக்கு சத்யநாராயணபூஜை, வீர ஆஞ்சநேயர் பஜனா மண்டலி பஜனை, அர்ச்சனை, மகா தீபாராதனை, தீர்த்தப்பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டன. இரவு 7 மணிக்கு தீபாராதனை நடந்தன.
கிருஷ்ணகிரி பழையபேட்டை சீதாராம வீர ஆஞ்சநேய சமேத ராகவேந்திர சாமி கோவிலில், ராம நவமி விழா நேற்று முன்தினம் மாலை பூஜையுடன் தொடங்கியது. நேற்று காலை ஸ்ரீகணேஷ், ஸ்ரீ நவக்கிரஹ ஹோமம், கலச ஸ்தாபனத்துடன் ராமநவமி உற்சவம் தொடங்கியது. தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன.
இன்று (வெள்ளிக்கிழமை) மாலை லட்சார்ச்சனையும், வருகிற 3-ந் தேதி மாலை 5 மணிக்கு ஸ்ரீ சீதா திருக்கல்யாண வைபமும், மங்களாரத்தியும், 4-ந் தேதி மாலை குத்துவிளக்கு பூஜையும், 5-ந் தேதி காலை ஹோமம், காலை 11.30 மணிக்கு ஸ்ரீராமர் பட்டாபிேஷகம், மங்களாரத்தியும், மாலை சாமி நகர்வலமும் நடைபெற உள்ளன.
ராம நவமியை முன்னிட்டு, உத்தனப்பள்ளி ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தன. தொடர்ந்து நீர் மோர் பந்தல் அமைத்து பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டன. மேலும் ஓசூர் நகரத்தில் 15 இடங்களில் நீர்மோர் வழங்கப்பட்டன. மேலும் ராம நவமியை முன்னிட்டு நேற்று மாவட்டத்தில் உள்ள ஆஞ்சநேயர் மற்றும் ராமர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
- ஐ.டி.ஐ.-க்களில் படித்து வரும் மாணவர்களுக்கு வளாக பயிற்சி மற்றும் பயிற்றுநர்களுக்கான பயிற்சி வழங்க வேண்டும்.
- இளைஞர்களுக்கு உரிய திறன் பயிற்சி வழங்கி, தங்கள் நிறுவனங்களுக்கு ஏற்ற திறன் பெற்ற பணியாளர்களை தயார்படுத்த வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 3 பொறியியல் மற்றும் 15 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு நடந்து வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மாவட்ட திறன் பயிற்சி துறை சார்பாக மாவட்ட திறன் குழுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கி பேசியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்கிடும் விதமாக வேளாண்மை, எலக்ட்ரானிக்ஸ் ஹார்வேர், ஆட்டோமோடிவ், உணவு பொருட்கள் தயாரிப்பு, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட 24 துறைகளில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கிடும் விதமாக ரூ.15 கோடி மதிப்பில் தயாரிக்கப்பட்ட திட்ட அறிக்கை மாவட்ட திறன் குழுவால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மாவட்டத்தில் நான் முதல்வன் திட்தட்தின் கீழ் 3 பொறியியல் கல்லூரிகள் 15 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயின்று வரும் மாணவ, மாணவிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள், பொறியியல் கல்லூரிகள், பல்தொழில்நுட்ப கல்லூரிகள், ஐ.டி.ஐ.-க்களில் படித்து வரும் மாணவர்களுக்கு வளாக பயிற்சி மற்றும் பயிற்றுநர்களுக்கான பயிற்சி வழங்க வேண்டும்.
மேலும், வளர்ந்து வரும் தொழிற்நுட்பங்களுக்கேற்ப அதிக வேலைவாய்ப்பு மிகுந்த துறைகளில் இளைஞர்களுக்கு உரிய திறன் பயிற்சி வழங்கி, தங்கள் நிறுவனங்களுக்கு ஏற்ற திறன் பெற்ற பணியாளர்களை தயார்படுத்த வேண்டும்.
ஓசூர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நவீன தொழிற்நுட்பத்திற்கு ஏற்ற நீண்ட கால மற்றும் குறுகிய கால திறன் பயிற்சிகள் வழங்கி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், தொழிற் நிறுவனங்கள் தொழிற் பழகுநர் பயிற்சி சட்டத்தை அமுல்படுத்தி, தொழில் பழகுநர் பயிற்சி இளைஞர்களுக்கு அதிக அளவில் வழங்கிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில், உதவி இயக்குனர் (திறன் மேம்பாடு) பன்னீர்செல்வம், ஓசூர் தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் ஜெகநாதன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரசன்ன பாலமுருகன், முன்னோடி வங்கி மேலாளர் மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- 32 அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் சுவாமி சிலைக்கு வண்ண வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
- கிராம மக்கள் ஏராளமானோர் ஆஞ்சநேயர் மற்றும் ராமரை வழிபட்டனர்.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே உள்ள எச்.செட்டிப்பள்ளி ஊராட்சி ஒசபுரம் கிராமத்தில் பழமை வாய்ந்த சீதா சமேத ராமர் மற்றும் ஆஞ்சநேயர் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஸ்ரீ ராம நவமி விழா கொண்டாடப்பட்டது.
முன்னதாக கோவில் வளாகத்தில் உள்ள 32 அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் சுவாமி சிலைக்கு வண்ண வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
பக்தர்கள் ஆஞ்சநேயரின் சிலை மீது ரோஜா மலர்களை தூவி அபிஷேகம் செய்தனர். அப்போது கிராம மக்கள் ஏராளமானோர் ஆஞ்சநேயர் மற்றும் ராமரை வழிபட்டனர். அதனைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் பிரசாதம் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் ஸ்ரீ சீதா ராமர் ஆஞ்சநேயர் சுவாமிகளை போற்றும் விதமாக ஸ்ரீ சீதா கல்யாணம் என்ற ஹரிகதா நிகழ்ச்சி கோலாரை சேர்ந்த மஞ்சுளா பாகவதாரணி யால் தெலுங்கு மொழியில் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் கலந்துக்கொண்டனர்.
- 15 கூட்டுறவு சார்பதிவாளர்கள் மற்றும் 4 முதுநிலை ஆய்வாளர்கள் ஆகியோரை கொண்டு பறக்கும் படை ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டது.
- தவறிழைத்த நியாயவிலைக் கடை விற்பனையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது விநியோகத்திட்டத்தை சிறப்பாக நடத்தும் பொருட்டு கூட்டுறவுத்துறை கட்டுப்பாட்டில் செயல்படும் நியாயவிலைக் கடைகளை ஆய்வு செய்ய மண்டல இணைப்பதிவாளர் ஏகாம்பரம் தலைமையில் பறக்கும் படை ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டது.
இதில் கிருஷ்ணகிரி செல்வம், குமார், கிருஷ்ணகிரி சரகம் முரளிகண்ணன், ஓசூர் சரகம் சுந்தரம், கிருஷ்ணகிரி வட்ட வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம் தமிழரசு, கிருஷ்ணகிரி நகர கூட்டுறவு வங்கி, கிருஷ்ணகிரி, 15 கூட்டுறவு சார்பதிவாளர்கள் மற்றும் 4 முதுநிலை ஆய்வாளர்கள் ஆகியோரை கொண்டு பறக்கும் படை ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டது.
இக்குழுவினால் சூளகிரி மற்றும் வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 61 நியாயவிலைக் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் தவறிழைத்த நியாயவிலைக் கடை விற்பனையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆய்வின் போது முறைகேடுகள் கண்டறியப்பட்டால் தொடர்புடைய பொது விநியோகத்திட்ட பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தொடர்புடைய சங்க நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- குண்டு குறுக்கியில் அமைந்த தனியார் கார் நிறுவனம் சார்பில் சுமார் 200 மரக்கன்றுகளை நட்டனர்.
- தனியார் நிறுவன மேலாளர் குமார், பிரபாகரன், சதீஷ் மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி தொகுதி கோனேரிப் பள்ளி ஊராட்சி பகுதியில் குண்டுகுறுக்கி கிராமம் அமைந்துள்ளது.
இந்த கிராமத்திற்கு அருகேயுள்ள அரசு நிலத்தில் கோனேரிப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் கோபம்மா சக்கரப்பா தலைமையில் சூளகிரி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத் மற்றும் சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் விமல் ரவிக்குமார், குண்டு குறுக்கியில் அமைந்த தனியார் கார் நிறுவனம் சார்பில் சுமார் 200 மரக்கன்றுகளை நட்டனர்.
இந்நிகழ்ச்சியில் தனியார் நிறுவன மேலாளர் குமார், பிரபாகரன், சதீஷ் மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- கோவில் வளாகத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக திம்மராய பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் திருமண கோலத்தில் எழுந்தருளினார்.
- பல்வேறு வைபவ நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, அர்ச்சகர் விஷ்ணு ஸ்ரீதேவி, பூதேவிக்கு திருமாங்கல் யத்தை அணிவித்தார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த படப்பள்ளியில் உள்ள, திம்மராய சாமி கோவிலில், திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக திம்மராய பெருமாள் கோவில் உள்ளது.
ராம நவமியன்று பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம மற்றும் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதனைய டுத்து, கோவில் வளாகத்தில் அம்மன் அழைப்பு, திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி நடந்தது. கோவில் வளாகத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக திம்மராய பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் திருமண கோலத்தில் எழுந்தருளினார்.
பல்வேறு வைபவ நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, அர்ச்சகர் விஷ்ணு ஸ்ரீதேவி, பூதேவிக்கு திருமாங்கல் யத்தை அணிவித்தார்.பின்பு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அதைத்தொடர்ந்து கருட வாகனத்தில், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக திம்மராய பெருமாள் எழுந்தருளினார். இவ்விழாவில் படப்பள்ளி பட்டக்கானூர் பெருமாள் குப்பம் சுற்று வட்டார பொதுமக்கள் பங்கேற்றனர்.
- மோட்டார்சைக்கிளில் சென்ற ஜெகனை, மாமனார் சங்கர் உள்பட சிலர் சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர்.
- விசாரணைக்கு பிறகே கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்ற விவரங்கள் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி கிட்டம்பட்டியை சேர்ந்தவர் ஜெகன் (வயது 25). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவர் முழுக்கான்கொட்டாயை சேர்ந்த சரண்யா (21) என்பவரை காதலித்து கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் காதல் திருமணத்திற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் கடந்த 21-ந்தேதி கிருஷ்ணகிரி அணை சாலையில் மோட்டார்சைக்கிளில் சென்ற ஜெகனை, மாமனார் சங்கர் உள்பட சிலர் சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர்.
அந்த கொலை தொடர்பாக சங்கர், கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் அன்றே சரண் அடைந்தார். இந்த கொலை தொடர்பாக மேலும் சிலரை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் முத்தம்பட்டியை சேர்ந்த நாகராஜ் (21), ஜிஞ்சுப்பள்ளியை சேர்ந்த முரளி (20) ஆகிய 2 பேர் சேலம் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
இதையடுத்து போலீசார் ஜெகன் மாமனார் சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
இதற்காக கிருஷ்ணகிரி கோர்ட்டில் போலீசார் நேற்று மனு தாக்கல் செய்துள்ள நிலையில் காவலில் எடுத்து 3 நாட்கள் விசாரணை நடத்த அனுமதி அளித்துள்ளது.
இந்த விசாரணைக்கு பிறகே இக்கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்ற விவரங்கள் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.






