என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • நெடுஞ்சாலை பணிகளுக்காக ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது.
    • கொத்தடிமைகளாக தொழிலாளர்களாக பணிக்கு அமர்த்திய 4 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

    ராயக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே உள்ள உடையாண்டஅள்ளி பகுதியில் நெடுஞ்சாலை பணிகளுக்காக ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டுள்ளதாகவும்,

    அவர்கள் தகரத்தால் ஆன கொட்டகைகளில் தங்க வைக்கப்பட்டு விருப்பத்திற்கு மாறாக வேலை செய்ய நிர்பந்திக்கப்பட்டுள்ளதாக ஓசூர் உதவி கலெக்டர் சரண்யாவுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து புகார் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டார். அதன் பேரில் உடையாண்டஅள்ளி கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் குழுவினர் அங்கு அதிரடியாக சென்று தேசிய நெடுஞ்சாலை பணிகளில் ஈடுபட்டவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    அதில் அவர்கள் ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும், கல் உடைக்கும் வேலை செய்து கொண்டிருந்ததும், அவர்கள் கொத்தடிமைகள் போல நடத்தப்பட்டதும் தெரியவந்தது.

    இதையடுத்து 5 பெண்கள் உள்பட 10 பேரை அதிகாரிகள் மீட்டனர். பின்னர் அவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இதுதொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் ராயக்கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் ராயக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் விசாரணை நடத்தி கொத்தடிமைகளாக தொழிலாளர்களாக பணிக்கு அமர்த்திய தெலுங்கானா மாநிலம் வானபருதி மாவட்டம், எத்லா கிராமத்தை சேர்ந்த சீனிவாசன்,

    கங்காதரன், ஷிதுளு மற்றும் தொழிலாளர்களை அழைத்து வந்த பொறுப்பாளர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பாரப்பா (58) ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் மீது கொத்தடிமைகள் தடுப்பு சட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • குடும்பத் தகராறு காரணமாக இவருடைய மனைவி மற்றும் குழந்தையை பிரிந்து பிரிந்து குமரேசன் தனியாக வாழ்ந்து வந்தார்.
    • மனம் உடைந்து காணப்பட்ட குமரேசன் விஷம் குடித்து தற்கொலை செய்தார்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள செஞ்சி நாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன் (வயது48). கூலி தொழிலாளி.

    இந்த நிலையில் குடும்பத் தகராறு காரணமாக இவருடைய மனைவி மற்றும் குழந்தையை பிரிந்து பிரிந்து குமரேசன் தனியாக வாழ்ந்து வந்தார்.

    இதனால் மனம் உடைந்து காணப்பட்ட குமரேசன் கடந்த 17ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.

    இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் இவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஊத்தங்கரை அருகே உள்ள குள்ளவேடம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் உத்திரன் (வயது 46). இவருக்கு நீண்ட நாட்களாக குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் இவருக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    சம்பவத்தன்று மன விரக்தி அடைந்த உத்திரன் வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அக்கம் பக்கத்தினர் இவரை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி உத்திரன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பள்ளி பருவத்தில் ஒழுக்கம், கல்வி கற்றல், ஒற்றுமை மற்றும் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும்
    • நன்கு படித்து பல்வேறு துறைகளில் அதிகாரியாக விளங்க வேண்டும்

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உத்தன ப்பள்ளியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் போதை தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உத்தனப்பள்ளி காவல் உதவி ஆய்வாளர் குமுதா மற்றும் காவலர்கள் போதை தடுப்பு குறித்த விழிப்புணர்வை பற்றி எடுத்து கூறினர்.

    இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார். மேலும் பள்ளி பருவத்தில் ஒழுக்கம், கல்வி கற்றல், ஒற்றுமை மற்றும் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என எடுத்துரைத்தார். இந்த கல்வி பருவத்தில் போதை மற்றும் பல்வேறு குற்றங்களில் ஈடுபடாமல், நன்கு படித்து பல்வேறு துறைகளில் அதிகாரியாக விளங்க வேண்டும் என அறிவுறை கூறினார்.

    • சட்டப்பேரவையில் நேற்று தொழிலாளர்களுக்கு எதிரான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
    • 8 மணி நேரம் வேலை என்பது தொழிலாளர்களின் உரிமை. அதனை பறிக்கும் வகையில் 12 மணி நேர வேலை என ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே அருணாபதியில் நடந்த ஆணவ படுகொலையை கண்டித்தும், தமிழகத்தில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் சாதிய ஆணவ படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று விடுதலை கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் நடந்தது.

    இந்த ஆர்ப்பாட்டத்தின் போது நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஆணவ கொலைகள் தொடர்ந்து நடக்கிற மாவட்டமாக உள்ளது. ஏற்கனவே சுவாதி-நந்திஸ் இருவரும் ஆணவக்கொலை செய்யப்பட்டார்கள். அண்மையில் கிருஷ்ணகிரி அருகே ஒரே சமூகத்தைச் சேர்ந்த ஜெகன்-சரண்யா இருவர் ஒரு சமூகத்திற்கு உள்ளே உச்சாதிக்குள் அடிப்படையில் ஜெகன் பட்டபகலில் படுகொலை செய்யப்பட்டார்.

    ஊத்தங்கரை அருகே காதல் திருமணம் செய்து கொண்ட சுபாஷ் ஆணவப்படுக்கொலை செய்யப்பட்டார். அதனை தடுக்க முயன்ற அவரது தாயார் கண்ணம்மாள் ஆகிய இருவரையும் சுபாஷின் தந்தை தண்டபாணி வெட்டி படுகொலை செய்தார். இதில் படுகாயம் அடைந்த அனுசியா சிகிச்சை பெற்று வருகிறார். இந்த மூன்று சம்பவங்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்துள்ளது.

    இந்திய அரசு ஆணவ கொலை தடுப்புச் சட்டத்தை ஏற்ற வேண்டுமென தொடர்ந்து குரல் ஒலித்து வருகிறது.

    ஆனால் இந்திய அரசு சட்டம் இயற்றுவதில் தேக்கம், தயக்கம், இருந்து வருகிறது. உச்சநீதிமன்றம் ஆணவக் கொலைகளை கொடூரமான கொலைகள் அதனை தடுக்க வேண்டும் என அதற்கான வழிகாட்டுதலை வழங்கி உள்ளது.

    ஆனால் ஆணவ கொலை தொடர்பான உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்றுவதில்லை. தொடர்ந்து நடைபெறும் ஆணவக் கொலைகள் அதிர்ச்சி அளிக்கிறது.

    ஆணவப்படுக்கொலை தடுப்புச் சட்டம் வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தற்போது தி.மு.க. அரசு ஆணவ கொலை எதிரான தடுப்புச் சட்டத்தை கொண்டுவரவேண்டும் என தோழமைக் கட்சி என்கிற முறையில் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்.

    சட்டப்பேரவையில் நேற்று தொழிலாளர்களுக்கு எதிரான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. 8 மணி நேரம் வேலை என்பது தொழிலாளர்களின் உரிமை. அதனை பறிக்கும் வகையில் 12 மணி நேர வேலை என ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

    இந்த சட்ட மசோதாவிற்கு காங்கிரஸ் இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க. தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி போன்ற தோழமைக் கட்சிகளின் எதிர்ப்பை மீறி சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

    இந்த நிலைப்பாடு தி.மு.க.வின் தொழிலாளர் நலனுக்கும், கொள்கைக்கு, எதிராக இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழக முதல்வர் உடனடியாக நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

    இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். 12 மணி நேரம் வேலை தொழிலாளர்கள் விரும்பினால் சூழல் அடிப்படையில் தொழிலாளர்களிடம் இருந்து தனியார் நிறுவனங்கள் பெறுவதற்கு ஏதுவாக ஒரு சட்ட மசோதா இருப்பது தொழிலாளர் சமூகத்திற்கு எதிரானது.

    இந்த சட்டம் திமுக மீதான நம்பகத் தன்மைக்கு எதிராக அமையும், நன்மதிப்பிற்கு ஊர் விளைவிக்கும், ஆகவே முதலமைச்சர் இந்த தொழிலாளர் விரோத சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.

    தோழமைக் கட்சிகள் சார்பில் முதலமைச்சரை சந்தித்து இது குறித்து கருத்துக்கள் வலியுறுத்தி உள்ளோம். அனைத்து தோழமைக் கட்சிகளும் சேர்ந்து நேரில் சந்தித்து சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கால்வாய் இணைப்பு பகுதியில் சரியாக இணைக்கபடாததால் கழிவு நீர் சீராக செல்ல முடியாமல் தேங்கி நின்றது.
    • அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கால்வாயை சீரமைத்தனர்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சிக்கு உள்பட்ட காமராஜர் நகர் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு 2000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

    இப்பகுதியில் சில வாரங்களுக்கு முன் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றது.

    இந்நிலையில் இக்கால்வாயானது மற்ற கால்வாய் இணைப்பு பகுதியில் சரியாக இணைக்கபடாததால் கழிவு நீர் சீராக செல்ல முடியாமல் தேங்கி நின்றது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

    இந்த செய்தியானது மாலை மலரில் வெளியானது. இதனையடுத்து சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விமல் ரவிக்குமார், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் நடவடிக்கை மேற்கொண்டு சிமெண்ட் குழாய் அமைத்து கழிவு நீர் வாய்க்கால்களை சீர்ப்படுத்தினர். இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.

    • நாங்கள் பரம்பரையாக 100 வருடங்களுக்கு மேலாக அப்பகுதியில் குடியிருந்து வருகிறோம்.
    • பிள்ளைகளுக்கு திருமணமானதால், ஒரே வீட்டில் இரண்டு மற்றும் மூன்று குடும்பங்கள் வசித்து வருகிறோம்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, மாரம்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட மாரம்பட்டி, நாப்பிரா ம்பட்டி, மாரங்கொட்டாய், வசந்தபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 100 -க்கும் மேற்பட்ட பொதுமக்கள், ஊத்தங்கரை தாசில்தார் அலுவலகத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு, தலைமையிடத்து துணை தாசில்தார் ஜெயபாலிடம் நேற்று மனு கொடுத்தனர்.

    அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    நாங்கள் பரம்பரையாக 100 வருடங்களுக்கு மேலாக அப்பகுதியில் குடியிருந்து வருகிறோம். பிள்ளைகளுக்கு திருமணமானதால், ஒரே வீட்டில் இரண்டு மற்றும் மூன்று குடும்பங்கள் வசித்து வருகிறோம்.

    போதிய இட வசதி இல்லாமல் குழந்தைகளுடன் தவித்து வருகிறோம். கல்லாங்குத்து அரசு புறம்போக்கு நிலத்தில், வீட்டுமனை பட்டா ஒதுக்கி, அரசு தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும் என பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். மனுக்களை பெற்ற துணை தாசில்தார் ஜெயபால் மனு மீது உரிய நடநவடிக்கை எடுப்பதாக கூறினார்.

    • ராகுல்காந்தியை தொடர் பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்படும் மத்திய அரசின் போக்கினை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
    • ராகுல்காந்தி மீதான வழக்கை திரும்ப பெற வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், காங்., கட்சி முன்னாள் தலைவர் ராகுல்காந்தியை தொடர் பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்படும் மத்திய அரசின் போக்கினை கண்டித்து, மாவட்டம் முழுவதும் பல்வேறு கட்டங்களாக தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று கிருஷ்ணகிரி லண்டன்பேட்டை பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதற்கு கிழக்கு மாவட்டத் தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்டத் தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, காசிலிங்கம், நாஞ்சில் ஜேசு, மாவட்ட துணைத்தலைவர் சேகர், விவேகானந்தன் ஆகியோர் முன்னிலை வகித்து கண்டன உரை ஆற்றினர்.

    மேலும் முற்றுகைப் போராட்டத்தில்,மத்திய அரசின் மக்கள் விரோதபோக்கை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. அதே போல ராகுல்காந்தி மீதான வழக்கை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் நகர தலைவர்கள் லலித் ஆண்டனி, யுவராஜ், தேவநாராயணன், எஸ்.சி., எஸ்.டி., பிரிவு மாநில பொறுப்பாளர் ஆறுமுக சுப்பிரமணி, மாவட்ட செயலாளர்கள் ஹரி, சங்கர், ஜெயசீலன், சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தனியார் கல்லூரி அருகே வந்தபோது திடீரென்று டிரைவரின் கட்டுபாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • இந்த விபத்தில் ஒன்னம்மா சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்

    கிருஷ்ணகிரி,

    கர்நாடகா மாநிலம் கும்கூர் முத்துகிரி பகுதியைச் சேர்ந்தவர் ஒன்னம்மா (வயது67).

    இவர் தனது உறவினர்களான சிகேகவுடா (46), கரிகவுடா (45), லட்சும்மா (52), ஜெயம்மா(55) ஆகியோருடன் சென்னைக்கு காரில் புறப்பட்டு சென்றார். காரை உறவினர் ஒருவர் ஓட்டி சென்றார்.

    அந்த கார் கிருஷ்ணகிரி மாவட்டம் கந்தி குப்பத்தை அடுத்த ஒரப்பம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அருகே வந்தபோது திடீரென்று டிரைவரின் கட்டுபாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் ஒன்னம்மா சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் படுகாயம் அடைந்த 4 பேரை உடனே அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 4 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

    இந்த சம்பவம் குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • அங்குள்ள தியேட்டர் முன்பு நின்று கொண்டிருந்த சுவாரியிடம் 4 பேரும் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்து மோதுவது போல் வண்டியை நிறுத்தினர்
    • அவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் சுவாரியை 4 பேரும் சேர்ந்து தாக்கினர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை மத்திகிரி மிடுகாரப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது மகன் சுவாரி (வயது 25). போட்டோ கிராபர்.

    மத்திகிரி கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. சுவாரி நேற்று அந்த கோவில் திருவிழாவிற்கு சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த பழைய மத்திகிரியைச் சேர்ந்த கவுதம் (25), முரளி (21), ரஞ்சித்குமார் (20), அஜீத் (21) ஆகிய 4 பேரும் சேர்ந்து சுவாரியிடம் வாய் தகராறில் ஈடுபட்டனர். அவர்களை அங்கிருந்தவர்கள் சமாதானமப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

    பின்னர் அங்குள்ள தியேட்டர் முன்பு நின்று கொண்டிருந்த சுவாரியிடம் 4 பேரும் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்து மோதுவது போல் வண்டியை நிறுத்தினர். இதனால் அவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் சுவாரியை 4 பேரும் சேர்ந்து தாக்கினர்.

    இதுகுறித்து சுவாரி ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிவு ெசய்து முரளி, ரஞ்சித்குமார். அஜீத் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    தலைமறைவாக உள்ள கவுதமை போலீசார் தேடிவருகின்றனர்.

    • 3பேர் ராகுலை ஆபாசமாக திட்டி தாக்கியுள்ளனர்.
    • போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    ஓசூரை அடுத்த பழைய மத்தியகிரியைச் சேர்ந்தவர் ராகுல் (வயது19). இவர் அதே பகுதியில் உள்ள கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாற்கு சென்றார். அப்போது அங்கு வந்த ஒன்னல்வாடியைச் சேர்ந்த ராஜேஷ் (20), மிடிகிரியைச் ேசர்ந்த வெங்கடேஷ் (26), மகேஷ்குமார் (25) ஆகிய 3பேரும் ராகுலை ஆபாசமாக திட்டி தாக்கியுள்ளனர். இதுகுறித்து அவர் மத்திகிரி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • இந்த சுங்க சாவடியை அகற்றிட பலமுறை முயன்றும் தேசிய நெடுஞ்சாலை துறை கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறது.
    • திறமையான கிராமப்புற இளைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டு இந்த நிறுவனங்களில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்க பரிந்துரைக்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    தமிழக சட்டசபை கூட்ட தொடரில் பர்கூர் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் டி. மதியழகன் பேசியதாவது:-

    கிருஷ்ண கிரியில் - பெங்களூரு நெடுஞ்சாலையில் அமைக்கப் பட்டுள்ள சுங்க சாவடி கிருஷ்ணகிரி நகராட்சி எல்லைக்கு மிக அருகிலேயே அமைந்துள்ளது. நகர் பகுதியில் இருந்து 10 கிலோ மீட்டருக்கு அப்பால்தான் சுங்க சாவடி அமைக்க வேண்டும் என விதிகள் இருந்தும் அந்த விதிகளை கடைபிடிக்காமல் சுங்க சாவடி அமைக்கப்பட்டுள்ளதால் தினந்தோறும் பொதுமக்கள் சென்று வரக்கூடிய மாவட்ட கலெக்டர் அலுவலகம், காவல் கண்காணி ப்பாளர் அலுவலகம், மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை, வட்டார போக்குவரத்து அலுவலகம், வேளாண்மை அலுவலகம், சுகாதார அலுவலகம் மற்றும் பல்வேறு மாவட்ட அரசு அலுவலகங்கள் ஆகியவற்றிற்கு சென்று வருவதற்கு பெரும் இடையூறாக உள்ளது.

    இந்த சுங்க சாவடியை அகற்றிட பலமுறை முயன்றும் தேசிய நெடுஞ்சாலை துறை கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறது. ஆகையால் முதல்- அமைச்சர் இந்த சுங்கசாவடியை உடனடியாக அகற்றிட ஆவண செய்யவேண்டும். பர்கூர் மற்றும் போச்சம்பள்ளியில் அமைந்துள்ள சிப்காட் பகுதிகளில் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களுக்கு ஆரம்ப காலங்களில் நிலம் அளித்தவர்கள் மற்றும் உள்ளூர் பகுதியில் வசிக்கும் தகுதி வாய்ந்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகிறது. திறமையான கிராமப்புற இளைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டு இந்த நிறுவனங்களில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்க பரிந்துரைக்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மாமரங்களில் தற்போது த்ரிப்ஸ் (சிறு பூச்சிகள்) பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மாங்காய் விளைச்சல் குறைந்தது மட்டுமல்லாமல் தரமும் குறைந்து காணப்படுகிறது. ஆதலால் "மா" மற்றும் "தென்னைக்கு" சிறந்த வேளாண் விஞ்ஞானிகளை வைத்து சிறப்பு ஆராய்ச்சி மையம் அமைத்து விவசாயிகளுக்கு தேவையான பூச்சிக்கொல்லிகள், சாகுபடி மற்றும் அறுவடை பற்றிய விழிப்புணர்வை வழங்கவும், "மா" செடிக்கு காப்பீடு தொகை வழங்க ஆவணச் செய்ய வேண்டும்.

    காவேரிப்பட்டிணம் ஒன்றியத்துக்குட்பட்ட சந்தனூர் ஏரியிலிருந்து உபரிநீரை கொட்டாவூர், பாப்பாரப்பட்டி, சின்ன புளியம்பட்டி வையம்பட்டி, இருமத்தூர், காராமூர் மற்றும் சாமாண்டப்பட்டி ஆகிய ஏரிகளுக்கு தண்ணீர் வழங்க ஆவண செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாரத் இன்டர்நேஷனல் சீனியர் செகண்டரி (சி.பி.எஸ்.இ.) பள்ளியில் ரம்ஜான் விழா கொண்டாடப்பட்டது.
    • ஆசிரியர்கள் ரம்ஜானின் மகத்துவம் குறித்து கூறினார்கள்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி பாரத் இன்டர்நேஷனல் சீனியர் செகண்டரி (சி.பி.எஸ்.இ.) பள்ளியில் ரம்ஜான் விழா கொண்டாடப்பட்டது.

    விழாவிற்கு பள்ளியின் நிறுவனர் மணி தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். அவர் பேசும் போது ரம்ஜானின் நோன்பு குறித்தும் ஈகை திருநாளான ரம்ஜான் மாதத்தில் நாம் கடைபிடிக்க வேண்டிய கடமைகள் குறித்து மாணவர்களிடம் எடுத்து கூறினார்.

    ஆசிரியர்கள் ரம்ஜானின் மகத்துவம் குறித்து கூறினார்கள். விழாவில் மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. விழாவின் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ×