என் மலர்
கிருஷ்ணகிரி
- குருபரப்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
- காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மின் வாரிய செயற்பொறியாளர் பவுன்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
குருபரப்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை குருபரப்பள்ளி, குப்பச்சிப்பாறை, விநாயகபுரம், கக்கன்புரம், கங்கசந்திரம், பிச்சுகொண்ட பெத்தனப்பள்ளி, ஜூனூர், ஜிஞ்சுப்பள்ளி, சின்னகொத்தூர், ஆவல்நத்தம், கங்கோஜி கொத்தூர், பதிமடுகு, நல்லூர், நேரலகிரி, தீர்த்தம், மணவாரனப்பள்ளி, நாச்சிகு ப்பம், வேப்பனப்பள்ளி, மாதேப்பள்ளி, நரணிகுப்பம், முஸ்லீம்பூர், தடத்தாரை, சாதனப்பள்ளி, நெடுசாலை, சென்னசந்திரம், இ.ஜி.புதூர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சுதந்திர போராட்ட தியாகி சி.எம்.மரிசாமி கவுடா, ஐ.என்.டி.யு.சி.கொடியேற்றிவைத்தார்.
- மத்திய போக்குவரத்து தர்மபுரி மண்டல நிர்வாகிகள் மணிமொழி, தங்கவேல், ரமேஷ் ஆகியோர் தலைமை தாங்கினர்.
ஓசூர்,
ஓசூரில், மே தினத்தை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு, 103 வயதான சுதந்திர போராட்ட தியாகி சி.எம்.மரிசாமி கவுடா, ஐ.என்.டி.யு.சி.கொடியேற்றிவைத்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு, மத்திய போக்குவரத்து தர்மபுரி மண்டல நிர்வாகிகள் மணிமொழி, தங்கவேல், ரமேஷ் ஆகியோர் தலைமை தாங்கினர். ஓய்வு பெற்ற நடத்துனர் சோமசேகரன், காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் நீலகண்டன், ஓசூர் மாநகராட்சி கவுன்சிலர் இந்திராணி மற்றும் ஜவஹர்லால் நேரு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவையொட்டி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. முடிவில், சுந்தரம் நன்றி கூறினார்.
- யானைகள் உணவு , தண் ணீர் தேடி அருகில் உள்ள கிராமங்களுக்குள் யானைகள் நுழைகிறது.
- காட்டாற்றில் பெருக்கெடுத்த தண்ணீரில் யானை ஒன்று குளித்து கும்மாளமிட்டது.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டம் காவரி வன உயிரின சரணாலயத்திற்குட்பட்ட தேன்கனிக்கோட்டை, ஓசூர், அஞ்செட்டி, ஜவளகிரி, உரிகம் வனப்பகுதியில் 300-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. உணவு , தண் ணீர் தேடி அருகில் உள்ள கிராமங்களுக்குள் யானைகள் நுழைவதும், அதனை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடிப்ப தும் வழக்கமாக உள்ளது.
கடந்த இரண்டு மாதங்களாக கோடை வெயில் வாட்டியெடுப்பதால்,வனப்பகுதிகளில் மரங்கள் காய்ந்து உணவு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் யானைகள் ஊருக்குள் வருவது அதிகரித்துள்ளது. யானைகளை தடுக்க வனப்பகுதிகளில் ஆங்காங்கே தண்ணீர்,தொட்டி அமைத்து, தண்ணீர் நிரப்பி வருகின்றனர்.
இந்நிலையில் அஞ்செட்டி பகுதியில் பெய்த மழையால், காட்டாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து தொட்டல்லா ஆற்றில் பாய்ந்தோடியது. அஞ்செட்டி அருகே வண்ணாத்திப்பட்டி என்னுமிடத்தில் காட்டாற்றில் பெருக்கெடுத்த தண்ணீரில் யானை ஒன்று குளித்து கும்மாளமிட்டது. அதை பார்த்த அப்பகுதி மக்கள் மற்றும் சாலையில் இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் சென்றவர்கள், அப்பகுதியில் திரண்டனர்.
இது குறித்து தகவலறிந்த அஞ்செட்டி வனத் துறையினர் விரைந்து சென்று யானையை அடந்த வனப்பகுதிக்குள் விரட்டினர் யானை மழை தண்ணீரில் அங்கும், இங்கும் செல்வதை சிலர் செல்போன்களில் படம் பிடித்து, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.
- பருவத்திற்கு பொருந்தாத ரகங்களை விற்பனை செய்வதை முற்றிலும் தவிர்க்கவும்.
- விதைகளை பைகளில் இருந்தோ அல்லது பாக்கிங்கில் இருந்தோ பிரித்து விற்பனை செய்யக்கூடாது.
ஓசூர்,மே.4-
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட விதை விற்பனையாளர்கள் தரமான விதைகளை வினியோகிக்க வேண்டும் என்று அதிகாரி சங்கர் கூறினார்.
ஓசூரில், விதை விற்பனையாளர்களுக்கான விழிப்புணர்வு ஒரு நாள் பயிற்சி நேற்று நடந்தது. இதற்கு தருமபுரிமாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் சங்கர் தலைமை தாங்கி பேசியதாவது:-
தருமபுரிமற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட விதை விற்பனையாளர்கள் விவசாயிகளுக்கு தரமான விதைகளை வினியோகிக்க வேண்டும். கடையின் முகப்பில் உள்ள விலை விவரப்பட்டியலில் விதைகளின் விலையை தவறாமல் ஒவ்வொரு நாளும் அன்றைய தேதியிட்டு தெளிவாக தெரியும்படி பதிவு செய்ய வேண்டும்.
அனைத்து விதைகளையும், பூச்சிக் கொல்லி மருந்துகள் மற்றும் உரசிப்பத்திலிருந்து தனிமைப்படுத்தி முளைப்புத் திறனுக்கு குந்தகம் இல்லாமல் முறையாக பராமரிக்க வேண்டும். கடந்த 1-ற் தேதி முதல் புதிய இருப்புப் பதிவேடு முறையாக பராமரிக்க வேண்டும். விதை இருப்புப் பதிவேட்டினை தினமும் கழித்து சரிபார்த்து முறையாக பராமரிக்க வேண்டும். விதை உரிமத்தினை பார்வையில் படும்படி வைக்க வேண்டும்.
அனைத்து விதை கொள்முதலுக்கும் கொள்முதல் பட்டியல், பதிவுச்சான்று முளைப்புத்திறன் சான்று ஆகியவை அவசியம். தனித்தனி கோப்பாக பராமரிக்க வேண்டும். கொள்முதல் பட்டியலில் உள்ள குவியல் எண்ணும் விதை பாக்கெட்டில் உள்ள குவியல் எண்ணும் ஒன்றே என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டியது தங்களது முழு பொறுப்பு. விவசாயிகளுக்கு பயிர் மற்றும் ரகத்தின் பெயர், குவியல் எண், காலாவதி தேதி, பாக்கெட்டின் எடை, விலை, விவசாயின் பெயர், ஊர், தொலைபேசி எண் மற்றும் விவசாயி மற்றும் கடைக்காரரின் கையொப்பமிட்ட ரசீதை வழங்க வேண்டும். குறிப்பிட்ட பருவத்திற்கு உகந்த ரகங்களை மட்டுமே விற்க வேண்டும்.
பருவத்திற்கு பொருந்தாத ரகங்களை விற்பனை செய்வதை முற்றிலும் தவிர்க்கவும். விதை வினியோகஸ்தர்கள் அனைத்து குவியல்களுக்கும் பணி விதை மாதிரிகள் எடுத்து பகுப்பாய்வு அறிக்கை பெறப்பட்டு தரத்தினை உறுதிபடுத்திய பின்னரே விற்பனையாளருக்கு அனுப்ப வேண்டும். அதிகபட்ட விலைக்கு மிகாமல் விற்பனை செய்ய வேண்டும். விதைகளை பைகளில் இருந்தோ அல்லது பாக்கிங்கில் இருந்தோ பிரித்து விற்பனை செய்யக்கூடாது. காலாவதியான எந்த விதைகளையும் கடையில் வைத்திருந்தாலோ அல்லது விற்பனை செய்வதோ சட்டப்படி குற்றமாகும். எனவே அனைத்து விதை விற்பனையாளர்களும் கவனத்துடன் விவசாயிகள் நலன் சார்ந்து விதை விற்பனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில், 50-க்கும் மேற்பட்ட விதை விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர்.
- முனீஸ்வரன் கோவில் பக்கமாக முனியப்பன் நடந்து சென்று கொண்டிருந்தார்.
- முனியப்பாவை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா தோரிப்பள்ளி பக்கமுள்ள கானலட்டியை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 63). கூலித் தொழிலாளி. கடந்த 1-ந் தேதி செக்கார்லு மலை பகுதியில் முனீஸ்வரன் கோவில் பக்கமாக முனியப்பன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தேனீக்கள் அவரை கொட்டியது. இதில் பலத்த காயம் அடைந்த முனியப்பாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் முனியப்பன் இறந்தார். இது குறித்து சூளகிரி போலீசார் விசா––ரணை நடத்தி வருகிறார்கள்.
- போலுபள்ளியில் உள்ள தனியார் கலை கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
- மனவேதனையில் இருந்த ரூபேஷ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அருகே உள்ள தேவசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் ரூபேஷ் (வயது 19).
இவர் கிருஷ்ணகிரி போலுபள்ளியில் உள்ள தனியார் கலை கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் அவர் கல்லூரிக்கு சரியாக செல்லவில்லை என அவர் தாய் கேள்வி கேட்டுள்ளார். இதனால் மனவேதனையில் இருந்த ரூபேஷ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- கடந்த 1-ந் தேதி கிணறு அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
- எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து சின்னன்னன் நீரில் மூழ்கி பலியானார்.
பர்கூர்,
பர்கூர் தாலுகா சிந்தகம்பள்ளி அருகே உள்ள கொட்லட்டியை சேர்ந்தவர் சின்னண்ணன் (வயது 75).
இவர் கடந்த 1-ந் தேதி அந்த பகுதியில் உள்ள கிணறு அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தார்.
இதில் சின்னன்னன் நீரில் மூழ்கி பலியானார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் பர்கூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கொத்தப்பள்ளி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
- உறவினர் வீட்டில் உள்ள பிரிட்ஜ்யை திறந்த போது எதிர்பாராதமாக எலக்ட்ரிக் ஷாக் அடித்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் அருகே உள்ள கொடியாலம் பகுதியை சேர்ந்தவர் முனிராஜ். இவரது மகன் சந்தோஷ் (வயது 14).
இவர் கொத்தப்பள்ளி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார் .இந்த நிலையில் நேற்று அவரது உறவினர் வீட்டில் உள்ள பிரிட்ஜ்யை திறந்த போது எதிர்பாராதமாக எலக்ட்ரிக் ஷாக் அடித்தது.
இதில் சம்பவ இடத்திலேயே சந்தோஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பாகலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- 2 பேர் தினேசை கத்தி முனையில்மி ரட்டி பணம் பறிக்க முயன்றனர்.
- விஜயகுமார், மணிமாறனை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி லண்டன்பேட்டையை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 23). இவர் கடந்த 1-ந் தேதி இரவு பழையபேட்டை கோட்டை பகுதியில் நடந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 2 பேர் தினேசை கத்தி முனையில்மி ரட்டி பணம் பறிக்க முயன்றனர். அவர்களிடம் இருந்து தப்பித்த தினேஷ்குமார் இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட முயன்றது கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலையை சேர்ந்த மார்கோ என்கிற விஜயகுமார் (வயது 61), அவரது மகன் குல்பி என்கிற மணிமாறன் (25) என தெரிய வந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
கைதான மார்கோ, அவரது மகன் குல்பி ஆகிய 2 பேரும் ரவுடிகள் ஆவார்கள். மார்கோ மீது கிருஷ்ணகிரி டவுன் போலீசில் 2 கொலை வழக்குகள் நிலுவையில்உ ள்ளன. அதே போல குல்பி மீது 2 கொலை வழக்குகள், 3 அடிதடி வழக்குகள்நி லுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- ஐந்து அணிகளாக 20 நாட்களில் 785 ஆசிரியரியர்கள் பயிற்சி பெற்றிருக்கின்றனர்.
- பயிற்சி பயின்ற ஆசிரியர்களுக்கு மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் சான்றிதழ்களை வழங்கினார்.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், மதக்கொண்டப்பள்ளி அரசு மாதிரி பள்ளியில், பள்ளிக் கல்வித்துறை சார்பில் 'கலை செய் கற்பி" ஆசிரியர்களுக்கான கலைப் பயிற்சி முகாம் நிறைவு விழாவில் கலை பயிற்சி பயின்ற ஆசிரியர்களுக்கு மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் சான்றிதழ்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் கூறியுள்ளதாவது:-
தமிழக முதல் அமைச்சர் தலைமையிலான அரசு, அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துவதற்கென்று பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக அரசுப் பள்ளி ஆசிரியரியர்களுக்கென ஒரு கலைப் பயிற்சி முகாம் மதகொண்டப்பள்ளியில் நடந்து முடிந்திருக்கிறது.
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இந்த முகாமில் பல்வேறு கலைகளைக் கற்றுக்கொண்டனர்.நாடகம், தெருக்கூத்து, கரகாட்டம், ஒயிலாட்டம், கம்பத்தாட்டம், அழிவின் உயிரிழப்பு எனும் தலைப்பில் வீணாகும் பொருட்களிலிருந்து கலைப்பொருட்கள் உருவாக்கம், குறும்பட உருவாக்கம், கதைசொல்லல், பறையிசை, சிலம்பாட்டம், பொம்மலாட்டம், பாவனை நாடகம் தற்காப்புக் கலைகள் ஆகிய கலைகளை மூன்று நாட்கள் பயிற்சி பெற்று தாங்கள் கற்றுக்கொண்டவற்றை இன்று மேடையில் அரங்கேற்றினர். இப்படி ஐந்து அணிகளாக 20 நாட்களில் 785 ஆசிரியரியர்கள் பயிற்சி பெற்றிருக்கின்றனர்.
கலைகளில் மட்டுமல்லாது ஒவ்வொரு நாளும் ஒரு கருத்தாளர் வந்து அவர்களுக்கான சிந்தனை பயிற்சியையும் அளித்தனர்.
ஆசிரியரியர்கள் கலைத்திறமையோடு இருப்பது மிகவும் முக்கியம். இப்பயிற்சி மூலம், ஆசிரியர்களுக்குள் உள்ள திறமைகள் வெளிக ்கொணரப்பட்டுள்ளது. பாடப்புத்தகத்தில் உள்ளதை மட்டும் நடத்தும் காலம் இப்போது இல்லை. இப்பயிற்சி முகாம் கற்பித்தலில் மாற்றங்களை ஏற்படுத்தும். ஆசிரியர்கள் தாங்கள் கற்றுக்கொண்ட கலைகளின் மூலம் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கற்பிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில்,ஓசூர் சார் ஆட்சியர் சரண்யா , மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி, மதக்கொண்டப்பள்ளி மாதிரி பள்ளி தாளாளர் மேரு மில்லர், திட்ட ஒருங்கிணைப்பாளர் கவிமலர், ஆசிரியர்கள் பேட்ரிக், இதயத்துல்லா மற்றம் ஆசிரிய பெருமக்கள் கலந்து கொண்டனர்.
- ஓசூர் - மாலூர் சாலையில் உளியாளம் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார்.
- பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
ஓசூர்,
தருமபுரிமாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள ஈச்சம்பாடி கீழ் தெருவை சேர்ந்தவர் ராஜா கிருஷ்ணன் (வயது 36). கூலித் தொழிலாளி.
இவர் கடந்த 1-ந் தேதி மோட்டார்சைக்கிளில் ஓசூர் - மாலூர் சாலையில் உளியாளம் பஸ் நிறுத்தம் பக்கமாக சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற லாரி ராஜா கிருஷ்ணன் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே
பலியானார். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பாகலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மர்ம நபர்களால் கார் மீது வெடி குண்டு வீசி, வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
- கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை எதிரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிருஷ்ணகிரி,
காஞ்சீபுரம் மாவட்டம், பூந்தமல்லி அடுத்த வளர்புரம் ஊராட்சி மன்றத் தலைவர் சங்கர். பா.ஜனதா கட்சியின் பட்டியல் அணியின் மாநில பொருளாளராக இருந்தார். இவர் கடந்த 27-ந் தேதி இரவு, பூந்தமல்லி பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், நசரத்பேட்டை சிக்னல் அருகே காரில் வந்து கொண்டிருந்த போது மர்ம நபர்களால் கார் மீது வெடி குண்டு வீசி, வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இதைக் கண்டித்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பா.ஜ., பட்டியல் அணி சார்பில் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை எதிரில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இதற்கு எஸ்.சி.,பிரிவு மாவட்டத் தலைவர் ரவி தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் சிவபிரகாசம் முன்னிலை வகித்தார். பொதுச் செயலாளர்கள் மீசை அர்ச்சுணன், கோவிந்தராஜ், மாவட்ட துணைத் தலைவர் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர்கள் மன்னன் சிவா, முருகேசன், எஸ்.சி., அணி மாவட்ட பார்வையாளர் திருமலை பெருமாள், பொதுச் செயலாளர் திருமுகம், உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், பா.ஜ., பட்டியல் அணி மாநில பொருளாளர் சங்கர் படுகொலை செய்யப்பட்டவை கண்டித்தும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கத் தவறியதாக தி.மு.க., அரசைக் கண்டித்தும், கொலை, கொள்ளை பெருகிவிட்டதாகவும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.






