என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • கோடை உழவு செய்தால், களைச் செடிகள் மற்றும் அறுவடை செய்யப்பட்ட தாள்கள் அழிக்கப்பட்டு மக்கி பயிருக்கு உரமாகிறது.
    • உழவு செய்யும் போது பறவைகள் அதிகமாக வந்து, உழவின் போது வெளியே வரும் புழு மற்றும் முட்டைகளை உணவாக உட்கொள்ளுகின்றன.

    கிருஷ்ணகிரி,

    இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் முகமதுஅஸ்லம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இதனை பயன்படுத்தி அனைத்து விவசாயிகளும் தங்கள் நிலங்களில் மழை நீரை சிறிதும் வீணாகாமல் கோடை உழவினை மேற்கொள்ள வேண்டும். பெரும்பாலும் மானாவரி நிலங்களில், மண் மிகவும் கடினமாக இருக்கும். கோடை உழவு செய்வதன் மூலம் மண்ணின் இறுக்கம் குறைகிறது. மண்ணை புழுதிபட உழுவதால் மண்ணின் தன்மை மாறுபடுகிறது. மண்ணை துகள்களாக மாற்றுவதால், மண்ணில் காற்றோடம் அதிகரிக்கிறது. மண்ணில் காற்றோட்டம் அதிகரிப்பதால், மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் நன்கு வளர்ச்சி அடைகிறது. இதனால் நிலத்தில் உள்ள செடிகள், கழிவுகள் நன்கு மக்கி உரமாக மாற்றப்படுகிறது. மேலும், களைக்கொல்லி மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் வீரியம் வெகுவாக குறைந்து, மண்ணின் விசத்தன்மை குறைகிறது. கோடை உழவினால் மண் நன்றாக நயமாகிறது. இதனால் நீர் ஊடுருவிச் செல்லும் தன்மை அதிகரிக்கிறது. நீர் வேர் மண்டலம் வரை சென்று பயிருக்கு நீர் உறிஞ்சும் தன்மை அதிகரிக்கிறது.

    நிலத்தின் சரிவுக்கு குறுக்காக வயலை நன்கு பல முறை புழுதிபட உழ வேண்டும். இப்படி உழுவதால் மழை நீர் மண்ணுக்கு அடியில் 10 செ.மீ முதல் 15 செ.மீ ஆழத்திற்கு உட்செல்லும். இதனால் நீர் ஆவியாவதை தடுப்பதோடு வறட்சி காலங்களில் பயிருக்கு தேவையான அளவு நீர் கிடைக்க ஏதுவாகிறது. ஆழச்சால் அகலப்பாத்தி 4 அடி அகல பாத்திகளாகவும், ஒரு அடி அகலம் உள்ள 15 செ.மீ ஆழம் உள்ள சால்களாகவும் அமைப்பது மிகவும் நல்லது. இதனால் நீர் பிடிப்புத் தன்மை அதிகரிப்பதோடு, நீர் ஓட்டத்தை தடுத்து, சத்துள்ள மண் வீணாவதையம் தடுக்கலாம். மழை நீர் சால்களில் தேங்கி நின்று மண்ணின் அடிப்பகுதிக்கு சென்றடைகிறது.

    பயிர் அறுவடை செய்த பின்னர், பயிரின் தாள்கள் நிலத்தில் தேங்கி விடுகிறது. இது பெரும்பாலான பூச்சிகளுக்கு உணவாகவும், நல்ல தங்குமிடமாகவும் முட்டைகள் இட்டு பாதுகாக்கும் இடமாகவும் இருக்கிறது. அதனால் கோடை உழவு செய்தால், களைச் செடிகள் மற்றும் அறுவடை செய்யப்பட்ட தாள்கள் அழிக்கப்பட்டு மக்கி பயிருக்கு உரமாகிறது. களைகளின் விதைகள், கோடை உழவின் போது மண்ணுக்கு மேலே வந்து சூரிய வெப்பத்தால் அழிந்துவிடுகிறது. இதனால் களை விதைகள் உற்பத்தி தடுக்கப்பட்டு களைகளின் தொந்தரவு குறைக்கப்படுகிறது. பூச்சிகளின் முட்டைகளும், கூண்டுப்புழுக்களும் அழிக்கப்படுகின்றன. உழவு செய்யும் போது பறவைகள் அதிகமாக வந்து, உழவின் போது வெளியே வரும் புழு மற்றும் முட்டைகளை உணவாக உட்கொள்ளுகின்றன. இதனால் பூச்சிகளின் தாக்கம் குறைகிறது. தாவர கழிவுகளின் மட்கும் தன்மை அதிகரித்து மண் வளம் பெருகுகிறது. மழை நீர் சிறிதும் வீணாகாமல் பயிருக்கு கிடைக்க ஏதுவாகிறது. இதனால் மழைநீர் சேகரிப்புத் திறன் அதிகரிக்கிறது.

    மேலும், ஏக்கருக்கு 100 முதல் 150 கிலோ வேப்பம் புண்ணாக்கு இட்டு, உழவு பணி மேற்கொள்ளலாம். முக்கிய வேளாண் தொழில்நுட்பமான கோடை உழவினை அனைத்து விவசாயிகளும் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் வேளாண்மை இணை இயக்குநர் முகமது அஸ்லம் தெரிவித்துள்ளார்.

    • முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டி தலைமை தாங்கி, கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார்.
    • ஓசூர் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடைகளும் வழங்கினார்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க.சார்பில், கட்சியின் பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

    ஓசூர்-பாகலூர் ஹட்கோ பகுதியில் உள்ள மேற்கு மாவட்ட அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு, மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டி தலைமை தாங்கி, கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார்.

    தொடர்ந்து, ஓசூர் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடைகளும் வழங்கினார்.

    விழாவிற்கு பகுதி செயலாளர்கள் அசோகா, வாசுதேவன், மஞ்சுநாத், ராஜி மற்றும் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட துணை செயலாளர் மதன் வரவேற்றார். மேலும் இதில், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் ராமு, கூட்டுறவு வீட்டு வசதி சங்க தலைவர் நடராஜன், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற தலைவர் சந்திரன், துணை செயலாளர் சாக்கப்பா, மாவட்ட சிறுபான்மை பிரிவு நிர்வாகிகள் சாச்சு, அரப்ஜான் மற்றும் மாவட்ட ,மாநகர, ஒன்றிய நிர்வாகிகள் கட்சியினர் திரளாக கலந்துகொண்டனர்.

    • விவசாய நிலத்திற்குள் புகுந்த காட்டு யானை அங்கு 2 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்களை கால்களால் மிதித்து சேதப்படுத்தியது
    • அந்த பகுதியில் சில விவசாயிகளின் நிலத்திலும் நுழைந்து நெற் பயிர்களை சேதப்படுத்தியது.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பேரண்டபள்ளி வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டு யானை சுற்றித்திரிகிறது. பகல் நேரங்களில் வனப்பகுதியில் உலா வரும் இந்த யானை இரவு நேரங்களில் வனப்பகுதியையொட்டி உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விளை நிலங்களில் விவசாயிகள் சாகுபடி செய்த பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

    நேற்று முன்தினம் நள்ளிரவு சூளகிரி அருகே சுண்டட்டி கிராமத்தில் பாபு (வயது30) என்பவரின் விவசாய நிலத்திற்குள் புகுந்த காட்டு யானை அங்கு 2 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்களை கால்களால் மிதித்து சேதப்படுத்தியது.

    மேலும் அந்த பகுதியில் சில விவசாயிகளின் நிலத்திலும் நுழைந்து நெற் பயிர்களை சேதப்படுத்தியது. இந்த நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    இதனால் அப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். எனவே தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மருத்துவ துறையில் செவிலியர்களின் மகத்தான பங்களிப்பு குறித்து எடுத்து கூறினார்.
    • நிகழ்ச்சியில் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி டி.சி.ஆர். மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினத்தை முன்னிட்டு செவிலியர் தின விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு டி.சி.ஆர்.மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் சவுந்தரராஜன் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசும் போது மருத்துவ துறையில் செவிலியர்களின் மகத்தான பங்களிப்பு குறித்து எடுத்து கூறினார்.

    நிகழ்ச்சியில் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது. இதில் டி.சி.ஆர். மருத்துவமனையின் ஊழியர்கள், செவிலியர்கள், நர்சிங் கல்லூரி மாணவிகள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மருத்துமனை யின் செவிலியர்கள், நர்சிங் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

    • கடந்த 9-ந் தேதி மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
    • வெங்கடேஷ் தரப்பினரும் தாக்கியாதாக முனிகிருஷ்ணா மகன் எல்லப்பா போலீசில் புகார் தெரிவித்தார்.

    கிருஷ்ணகிரி

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சப்படி திருமால்கவுனிகொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (51).

    இவர் அதே பகுதியைச் சேர்ந்த முனிகிருஷ்ணா எனபவரிடம் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு 1.3 ஏக்கர் நிலம் வாங்கினார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்தநிலையில் கடந்த 9-ந் தேதி மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது முனிகிருஷ்ணா, அவரது மகன் எல்லப்பா (35), உறவினர்கள் மூர்த்தி, சிவக்குமார், கணேசன் ஆகியோர் வெங்கடேஷை தாக்கினார். இதில் காயமடைந்த வெங்கடேஷ் சூளகிரி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

    இதேபோன்று வெங்கடேஷ் தரப்பினரும் தாக்கியாதாக முனிகிருஷ்ணா மகன் எல்லப்பா போலீசில் புகார் தெரிவித்தார். இருதரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் எல்லப்பன், மூர்த்தி, சிவக்குமார், வெங்கடேஷ், லோகேஷ், சதீஸ் ஆகியோர் 6 மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் வெங்கடேசை தாக்கிய கணேசனை மட்டும் போலீசார் கைது செய்தனர்.

    • குருபரப்பள்ளி அருகே சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதியது.
    • விஜய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி, மே.12-

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பவளகொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல். இவரது மகன் விஜய் (வயது27).

    இவர் ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அப்போது அவர் குருபரப்பள்ளி அருகே சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த குரபரப்பள்ளி போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விஜயின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகனம் என்ன? விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பள்ளிகளுக்கு 43 அகன்ற ஸ்மார்ட் தொலைக்காட்சி பெட்டி வழங்கும் திட்டத்தை ஐ.வி.டி.பி நிறுவனம் முடிவு செய்துள்ளது.
    • அரசின் பங்களிப்பு நிதியை உபயோகப்படுத்தி பள்ளிகளின் பங்களிப்பாக வழங்கிய ரூ.66 லட்சத்தில் 211 ஸ்மார்ட் டி.வி.க்கள் அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டது.

    கிருஷ்ணகிரி 

    அரசுப் பள்ளிகளில் பயிலும் கிராமப் புற ஏழை எளிய மாணவ, மாணவியரின் கற்றல் திறனை மேம்படுத்தவும், ஆசிரியர்கள் தங்கள் கற்பித்தல் பணியை நவீன கால மாற்றத்திற்கேற்ப ஒலி, ஒளி வடிவில் புதுமையான முறையில் மேற்கொண்டு மாணவர்களின் கற்றல் அனுபவத்தை இனிமையாக்கும் பொருட்டு மாநிலத்திலேயே முன்னோடி திட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்படும் துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு 43 அகன்ற ஸ்மார்ட் தொலைக்காட்சி பெட்டி வழங்கும் திட்டத்தை ஐ.வி.டி.பி நிறுவனம் முடிவு செய்துள்ளது.

    அதன் முதற்கட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சார்ந்த அரசு பள்ளிகளுக்கு ஐ.வி.டி.பி நிறுவனத்தின் பங்களிப்பாக ரூ.66 லட்சம் மதிப்பிலான 211 ஸ்மார்ட் டி.வி.க்கள் இலவசமாக வழங்கப்பட்டது.

    அதுமட்டுமல்லாது ஐ.வி.டி.பியானது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஷ்வரி அனுமதியுடன் அனைத்து அரசு பள்ளி தலைமை யாசிரியர்களையும் ஊக்கப்படுத்தி அரசின் பங்களிப்பு நிதியை உபயோகப்படுத்தி பள்ளிகளின் பங்களிப்பாக வழங்கிய ரூ.66 லட்சத்தில் 211 ஸ்மார்ட் டி.வி.க்கள் அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டது.

    இவை அனைத்தின் மொத்த மதிப்பான ரூ.1.32 கோடி-யில் 422 ஸ்மார்ட் டி.வி.க்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஷ்வரி முன்னிலையில், அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கத்தோடு பள்ளி தலைமையாசிரியர்களிடம் ஐ.வி.டி.பி நிறுவனத் தலைவர் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிசால் வழங்கப்பட்டது.

    பள்ளி தலைமையாசிரியர்களிடம் ஸ்மார்ட் டி.வி.க்களை வழங்கி பேசிய நிறுவனத் தலைவர், பள்ளி மாணவ, மாணவியர், ஆசிரியர்களின் சிறப்பான வழிகாட்டுதலோடு, கல்வி விளையாட்டு ஆகியவற்றுடன் ஒழுக்கத்தில் சிறந்து விளங்கவும் ஐ.வி.டி.பி நிறுவனம் இக்கல்வி உதவிகளை வழங்கி வருவதாகத் தெரிவித்தார்.

    • நகராட்சி பகுதியில் பழுதடைந்துள்ள கழிவுநீர் கால்வாய் மற்றும் கல்வெட்டுகளை சீரமைக்க அனுமதி கூறப்பட்டது.
    • புதியதாக விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள சாலைகள் மற்றும் தெருக்களின் பெயர் பலகை ஸ்டீல் பைப் கொண்டு வடிவமைப்புகேற்ப அமைப்பது குறித்து கூறப்பட்டது.

    கிருஷ்ணகிரி 

    கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில், நகர்மன்றத்தின் சாதாரண கூட்டம் நடந்தது.

    கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் பரிதாநவாப் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் வசந்தி முன்னிலை வகித்தார். கூட்டத்தில், கிருஷ்ணகிரி நகராட்சி வார்டு எண் 25-ல், தவுலதாபாத் பகுதியில் உள்ள நகராட்சி உருது நடுநிலைப்பள்ளியில் போதிய இடவசதி இல்லாத காரணத்தால், சந்தைப்பேட்டை மார்கெட் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கூடுதல் பள்ளி கட்டிடம் கட்ட பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    அந்த கோரிக்கையை ஏற்று, சென்னை நகராட்சி நிர்வாக இயக்குனரின் ஒப்புதல் பெறப்பட்டவுடன், கூடுதல் பள்ளிக் கட்டிடம் கட்ட அனுமதி வழங்கவும், கூடுதல் பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்கு 100 சதவீதம் அரசு நிதியுதவி பெற நகராட்சி நிர்வாக இயக்குனரை கேட்டுக்கொள்வது.

    கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகளில் விடுபட்டுள்ள சாலைகள் மற்றும் தெருக்கள், புதியதாக விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள சாலைகள் மற்றும் தெருக்களின் பெயர் பலகை ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பைப் கொண்டு வடிவமைப்புகேற்ப அமைப்பது.

    மேலும் நகராட்சி பகுதியில் பழுதடைந்துள்ள கழிவுநீர் கால்வாய் மற்றும் கல்வெட்டுகளை சீரமைக்க அனுமதி வழங்குவது என்பது உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதில், நகராட்சி துணைத் தலைவர் சாவித்திரி கடலரசுமூர்த்தி மற்றும் கவுன்சிலர்கள், மற்றும் நகராட்சி உதவி பொறியாளர் அறிவழகன், இளநிலை பொறியாளர் செந்தில்குமரன், துப்புரவு அலுவலர் ராமகிருஷ்ணன், துப்புரவு ஆய்வாளர்கள் ரமணசரண், உதயகுமார், மாதேஸ்வரன், வருவாய் ஆய்வாளர் லூகாஸ், மேலாளர் நாகூர்மீரான்ஒலி மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • 24 லட்சம் ரூபாய் மதிப்பில் தூர் வாரி புனரமை க்கும் பணியை, கடந்த ஜனவரி மாதம் ஒசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ. சத்யா தொடங்கி வைத்திருந்தார்.
    • ஏரியை சீரமைத்து மாநகராட்சியிடம் ஒப்படைப்பதற்கான கடிதம் அவரிடம் வழங்கப்பட்டது.

    ஓசூர்

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அலசநத்தம் பகுதியில் உள்ள ஓட்டேரி என அழைக்கப்படும் ஏரியினை கன்சாய் நெரோலக் என்ற பெயிண்ட் நிறுவனத்தின் சி.எஸ்.ஆர் நிதியின் கீழ் 24 லட்சம் ரூபாய் மதிப்பில் தூர் வாரி புனரமை க்கும் பணியை, கடந்த ஜனவரி மாதம் ஒசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ. சத்யா தொடங்கி வைத்திருந்தார்.

    இந்த நிலையில் தற்போது அந்த ஏரி புனரைமைக்கும் பணி முடிவடைந்து, ஏரியை சுற்றிலும் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்வதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

    இதையடுத்து, ஏரியினை மாநகராட்சி வசம் ஒப்படைக்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில், மேயர் சத்யா கலந்து கொண்டு பேசினார். மேலும், ஏரியை மாநகராட்சியிடம் ஒப்படைப்பதற்கான கடிதம் அவரிடம் வழங்கப்பட்டது.

    விழாவில், தனியார் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு துறை மூத்த துணைத் தலைவர் சுதிர் பிரல்யாட் ரானே, நிறுவனத்தின் பொதுமேலாளர் தமிழ்வாணன், மனிதவள மேம்பாட்டுதுறை அதிகாரி பாபு, மாநகர துணை மேயர் ஆனந்தய்யா, ஓசூர் மக்கள் சங்க தலைவர் சரவணன் ஆகியோர் பேசினர்.

    மேலும் இதில், மாநகராட்சி கவுன்சிலர் ஆஞ்சி, தி.மு.க. நிர்வாகி மாணிக்கவாசகம், மற்றும் ஓசூர் மக்கள் இயக்க நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து ஏரியை சுற்றி மரக்கன்றுகள் நடும் பணியை மேயர் சத்யா தொடங்கி வைத்தார்.

    • பேருந்து நடைமேடை அருகே இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் ஆக்கிரமிப்பு செய்து நிறுத்தி விடுகின்றனர்.
    • நடைமேடையில் பேருந்துகளை நிறுத்தினால் எங்களுக்கு பேருந்துகளுக்குள் ஏறுவதற்கு சிரமம் இல்லாமல் இருக்கும் என கூறுகின்றனர்.

    காவேரிப்பட்டினம்

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் சுற்றிலும் நூற்றுக்கு மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் கிருஷ்ணகிரி, தருமபுரி, பெங்களூர் போன்ற ஊர்களுக்கு செல்ல காவேரிப்பட்டணம் பேருந்து பேருந்து நிலையத்திற்கு வந்து செல்ல வேண்டி உள்ளது.

    அப்படி செல்பவர்கள் மீண்டும் தங்களது கிராமத்திற்கு செல்ல காவேரிப்பட்டணம் பேருந்து நிலையத்திற்கு வந்து அரசு டவுன் பஸ்சில் செல்ல வேண்டும். அரசு டவுன் பஸ் வருவதற்கு நேரம் ஆவதால் காவேரிப்பட்டணம் பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாகத்திற்கு வந்து காத்திருக்கின்றனர் .

    அப்பொழுது வணிக வளாகத்திற்கு உள் நுழைய முடியாதவாறு பேருந்து நடைமேடை அருகே இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் ஆக்கிரமிப்பு செய்து நிறுத்தி விடுகின்றனர். குறிப்பிட்ட நேரத்திற்கு டவுன் பஸ் வரும்பொழுது பயணிகள் முண்டியடித்துக் கொண்டு அரசு டவுன் பஸ்சில் ஏறும் பொழுது பல சிரமத்திற்கு உள்ளாகின்றனர். குறிப்பாக தாய்மார்கள், கர்ப்பிணிகள் டவுன் பஸ்சில் ஏற முடியாத சூழ்நிலை உருவாகிறது.

    இது குறித்து பயணிகள் கூறும் பொழுது நாங்கள் வெளியூருக்கு சென்று திரும்பும் போது எங்கள் கிராமத்திற்கு செல்ல காவேரிப்பட்டினத்திற்கு வந்து செல்ல வேண்டி உள்ளது. அப்பொழுது காவேரிப்பட்டணம் வணிக வளாகத்திற்கு அருகே உள்ள பேருந்து நடைமேடை அருகே ஏராளமானோர் இது சக்கர வாகனங்களை நிறுத்துவதால் எங்களால் பேருந்துக்குள் ஏற முடியவில்லை.

    காவேரிப்பட்டணம் பேருந்து நடைமேடையில் பேருந்துகளை நிறுத்தினால் எங்களுக்கு பேருந்துகளுக்குள் ஏறுவதற்கு சிரமம் இல்லாமல் இருக்கும் என கூறுகின்றனர்.

    இதற்கு உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காவேரிப்பட்டணம் பேருந்து நிலையத்திற்குள் உள்ள பேருந்து நடைமேடையில் அருகில் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் பேருந்து நடைமேடையில் பேருந்து முறையாக நிறுத்தி எடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அஞ்செட்டி அருகிலுள்ள மெட்ரி அருவிக்கு, மரபு நடைப்பயணம் மேற்கொள்ள திட்டமிட ப்பட்டுள்ளது.
    • நமது மாவட்டத்தின் தொன்மை சிறப்புகளை அறியவும், பாதுகாக்கவும் வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    "காணத்தக்க கிருஷ்ண கிரி" என்ற விழிப்புணர்வு சுற்றுலாத் திட்டத்தின் கீழ் இந்த மாவட்டத்தில் காணப்படும் பல்வேறு வரலாற்று சின்னங்கள், கலாசார பெருமை கொண்ட இடங்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அனைவரும் அறிந்து கொள்ளவும்,

    அவற்றை பாதுகாக்கவும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் மாவட்ட நிர்வாகம் இந்த திட்டத்தை கடந்த மாதம் 29-ந் தேதி தொடங்கியது.

    அதைத் தொடர்ந்து வருகிற 14-ந் தேதி காலை 6.30 மணிக்கு அஞ்செட்டி அருகிலுள்ள மெட்ரி அருவிக்கு, மரபு நடைப்பயணம் மேற்கொள்ள திட்டமிட ப்பட்டுள்ளது.

    இதில் மாவட்ட கலெக்டர், உயர் அலுவலர்கள், வரலாற்று ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆர்வமுள்ள பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொள்கிறார்கள்.

    பொதுமக்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் தொடர்ந்து இத்திட்டத்தில் கலந்துகொண்டு, நமது மாவட்டத்தின் தொன்மை சிறப்புகளை அறியவும், பாதுகாக்கவும் வேண்டும் என கேட்டு க்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கிருஷ்ணகிரி, ஓசூர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 17 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா மற்றும் ஒரு ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

    கிருஷ்ணகிரி 

    கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் எங்கும் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை நடை பெறுகிறதா? என போலீசார் கண்காணித்தனர்.

    அந்த வகையில் கஞ்சா விற்றதாக ஊத்தங்கரை, கல்லாவி, பர்கூர், கந்திகுப்பம், கிருஷ்ணகிரி, ஓசூர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 17 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா மற்றும் ஒரு ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதே போல ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி பகுதியில் லாட்டரி விற்ற 3 பேரை கைது செய்த போலீசார், ரூ.500 மற்றும் 11 லாட்டரி சீட்டுக்களை பறிமுதல் செய்தனர்.

    மேலும் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்த ஊத்தங்கரை, பாரூர், ஓசூர் பகுதியை சேர்ந்த 3 பேரை கைது செய்த போலீசார் ரூ.250 மதிப்புள்ள குட்காவை பறிமுதல் செய்தனர்.

    ×