என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • காத்திருப்பு போராட்ட த்தில் ஈடுப்பட்டு வந்த விவசாயிகளிடம் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தனர்.
    • தற்காலிகமாக போராட்டத்தை கைவிடுவதாகவும் தங்களது கோரிக்கைக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கூறினர்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த உத்தனப்பள்ளி, அயர்னப்பள்ளி, நாகமங்கலம் ஆகிய 3 - ஊராட்சிகளில் தமிழக அரசு 5-வது சிப்காட் அமைப்பதற்காக விளைநிலங்களை கையகப்படுத்துவதை கண்டித்து விவசாயிகள் பல்வேறு போராட்டங்கள் செய்து வந்தனர்.இவர்களுக்கு பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்து வந்தனர்.

    மேலும் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என வருவாய்துறையினர் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர்.

    ஆனால் தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட போவதில்லை என தொடந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்தனர்.

    இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓசூர் தி.மு.க. எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ் காத்திருப்பு போராட்ட த்தில் ஈடுப்பட்டு வந்த விவசாயிகளிடம் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார்.

    இதன் பின்னர் போராட்டத்தை கைவிட விவசாயிகள் கலந்து பேசி முடிவெடுப்பதாக கூறினர்.

    நேற்று 166-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்ற நிலையில் தி.மு.க. எம்.எல்.ஏ. பிரகாஷ், மேயர் சத்யா மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் முன்னிலையில் தற்காலிகமாக போராட்டத்தை கைவிடுவதாகவும் தங்களது கோரிக்கைக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

    இதனையடுத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட விவசாயிகளுக்கு பிரகாஷ் எம்.எல்.ஏ. ஜூஸ் கொடுத்து போராட்டத்தை முடித்து வைத்தார்.

    இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ் எம்.எல்.ஏ. விவசாயிகள் 3 கோரிக்கை வைத்துள்ளனர். அந்த 3 கோரிக்கைகளையும் விரைவில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்ப்பதாக கூறினார் என்றார்.

    • காலை எழுந்து பார்த்தபோது திடீரென்று மோட்டார் சைக்கிளை காணவில்லை.
    • செல்வராஜ் (40) என்பவர் வாசீமின் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் ஜீவா நகரைச் சேர்ந்தவர் வாசீம் (வயது26). இவர் சம்பவத்தன்று இரவு வீட்டின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார். காலை எழுந்து பார்த்தபோது திடீரென்று மோட்டார் சைக்கிளை காணவில்லை.

    இதுகுறித்து வாசீம் பாகலூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். இதில் பாகலூர் ராஜீவ் நகரைச் சேர்ந்த செல்வராஜ் (40) என்பவர் வாசீமின் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்தனர்.

    • கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு மேம்பாலப் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும்.
    • எண்ணேகொல்- படேதலாவ் ஏரி கால்வாய் திட்டப்பணிகளை விரைந்து முடித்து விவசாயிகள் பயனடைய செய்ய வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி பா.ம.க. மத்திய மாவட்டம், மேற்கு ஒன்றியத்தின் சார்பாக ஒன்றிய செயலாளர் புலியரசி ரமேஷ் தலைமையில் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் இளங்கோ மற்றும் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் அருள் முன்னிலையிலும் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

    அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு மேம்பாலப் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும். சுங்கச் சாவடியை சின்னாறு என்ற இடத்திற்கு இடம் மாற்றம் செய்ய வேண்டும். எண்ணேகொல்- படேதலாவ் ஏரி கால்வாய் திட்டப்பணிகளை விரைந்து முடித்து விவசாயிகள் பயனடைய செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஜூன்.19- போதிய நாற்காலி வசதிகள் இல்லாததால், கிருஷ்ணகிரி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அசோக்குமாரிடம் மேசை, நாற்காலி கேட்டு மனு அளித்திருந்தனர்.
    • கடந்த 2 ஆண்டுகளில் ஆயிரம் மாணவ, மாணவிகள் அமரக்கூடிய வகையில் 250 செட் மேசை, நாற்காலிகளை அரசுப் பள்ளிக்கு வழங்கி உள்ளது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி ஒன்றியம் பெல்லாரம்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் 174 மாணவ, மாணவிகள் கல்வி படித்து வருகிறார்கள்.

    இவர்களுக்கு வகுப்பறையில் அமர்ந்து படிக்க போதிய நாற்காலி வசதிகள் இல்லாததால், கிருஷ்ணகிரி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அசோக்குமாரிடம் மேசை, நாற்காலி கேட்டு மனு அளித்திருந்தனர்.

    அதன்படி, சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 35 செட் மேசை, நாற்காலிகளை எம்.எல்.ஏ., அசோக்குமார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்.

    மேலும், கடந்த ஆண்டு பொது நிதியில் கட்டப்பட்ட சமையல் அறையையும் திறந்து வைத்தார்.

    இந்த ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன், பள்ளியின் தலைமை ஆசிரியர் மலர்கொடி, பெற்றோர் சங்கத் தலைவர் கலையரசன், ஊராட்சி மன்ற தலைவர் முருகம்மாள் சக்தி, முன்னாள் ஊராட்சி தலைவர் முருகன், முன்னாள் துணைத் தலைவர் சித்ரா சிவராஜ், சோக்காடி ஊராட்சி தலைவர் கொடிலா ராமலிங்கம், துணைத் தலைவர் ஜெயபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கடந்த 2 ஆண்டுகளில் ஆயிரம் மாணவ, மாணவிகள் அமரக்கூடிய வகையில் 250 செட் மேசை, நாற்காலிகளை அரசுப் பள்ளிக்கு வழங்கி உள்ளதாக அசோக்குமார் எம்.எல்.ஏ., தெரிவித்தார்.

    • மகன்களின் மருத்துவ செலவிற்காக வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் தவித்து வருகிறேன்.
    • வீட்டில் பசு மாடு வளர்ப்பால் கிடைக்கும் பால் வருவாயில் ரேசன் பொருட்களை வாங்கி குடும்பத்தை நடத்தி வருகிறோம்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த வீரமலை ஊராட்சிக்குட்பட்ட காவேரிநாயக்கன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது42). கூலி தொழிலாளியான இவர், கிராமத்தில் கிடைக்கும் அனைத்து விவசாய வேலைகளையும் செய்து வருகிறார்.

    இவரது மனைவி முருகம்மாள் (32), இரண்டு மாடுகளை வைத்து பராமரித்து, அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் குடும்பத்தை நடத்தி வருகின்றனர்.

    இவர்களுக்கு இளைஞன் (14), கோகுல்நாத் (12) மற்றும் ரோகித் (7) ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். மூவரும் பிரவியிலேயே பார்வை குறைபாடுடன் பிறந்துள்ளனர்.

    இவர்கள் முவரும் வீரமலை அரசு நடுநிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். இரண்டாது மகனான கோகுல்நாத் கண்பார்வை இல்லாமலும் மற்றும் சற்று மனநலம் பாதிக்கப்பட்டும் இருந்து வருகிறார். பார்வையற்ற தனது இரு மகன்களையும் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் உள்ள கண் மருத்துவமனையில் பரிசோதித்த்தில் அவர்களுக்கு பார்வை வர வாய்ப்பில்லை என மருத்துவர்கள் கை விரித்துவித்துவிட்டதாக கண்ணீர் மல்க தெரிவித்தார்.

    மூன்றாவது மகனுக்கு இதே நிலைதான் இருக்கும் என எண்ணி இதுவரை எந்த மருத்துவரிடமும் காண்பிக்காமல் இருந்து வருகிறார்.

    தமிழக அரசு மூன்று மகன்களுக்கு மருத்துவ வசதிகளையும், உதவித்தொகைகளையும் வழங்க நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    இதுகுறித்து சக்திவேல் கூறுகையில், எனது மகன்களின் மருத்துவ செலவிற்காக வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் தவித்து வருகிறேன்.

    வீட்டில் பசு மாடு வளர்ப்பால் கிடைக்கும் பால் வருவாயில் ரேசன் பொருட்களை வாங்கி குடும்பத்தை நடத்தி வருகிறோம். அரசு மூலம் பார்வையற்ற எனது மூன்று மகன்களுக்கும் இதுவரை எவ்வித சலுகையும் கிடைக்கவில்லை.

    உதவித்தொகைக்காக கடந்த மூன்று ஆண்டுகளாக விண்ணப்பித்தும் பலனில்லை. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளதாகவும், தமிழக முதல்-அமைச்சர் கருணை கொண்டு மூன்று மகன்களுக்கு மருத்துவ வசதிகளையும், உதவித்தொகைகளையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

    • சித்தூரில் சட்ட விரோதமாக வைக்கப்பட்டிருந்த அவர்களில் 8 பேரை கம்யூனிஸ்டு கட்சியினரும், குறவன் சங்கத்தினரும் மீட்டனர்.
    • ஆந்திர மாநிலம் சித்தூர் போலீசார் அவர்கள் கண் மற்றும் உடலில் மிளகாய் பொடியை தூவியும், கொடூரமாக தாக்கியும் சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தாலுகா ஒட்டப்பட்டி அருகே உள்ளது புளியாண்டப்பட்டி. இந்த பகுதியை சேர்ந்த, குறவர் சமுதாயத்தை சேர்ந்த சிறுவர்கள், பெண்கள் உள்பட 10 பேரை கடந்த 11 மற்றும் 12-ந் தேதிகளில் இரவு நேரங்களில் விசாரணைக்காக ஆந்திர போலீசார் அழைத்து சென்றனர்.

    திருட்டு வழக்கில் அவர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறி ஆந்திர மாநிலம் சித்தூர் போலீசார் அழைத்து சென்றதாக கூறி, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் கலெக்டரிடமும், போலீஸ் சூப்பிரண்டிடமும் புகார் அளித்தனர்.

    அதே போல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரும், தமிழ் பழங்குடியின குறவன் சங்கம் சார்பிலும் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இந்த நிலையில் ஆந்திர மாநிலம் சித்தூரில் சட்ட விரோதமாக வைக்கப்பட்டிருந்த அவர்களில் 8 பேரை கம்யூனிஸ்டு கட்சியினரும், குறவன் சங்கத்தினரும் மீட்டனர்.

    அவர்களில் 4 பேர் பெண்கள், 2 பேர் சிறுவர்கள், 2 பேர் ஆண்கள் ஆவார்கள். அவர்கள் அனைவரும் கிருஷ்ணகிரியில் போலுப்பள்ளியில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    ஆந்திர மாநிலம் சித்தூர் போலீசார் அவர்கள் கண் மற்றும் உடலில் மிளகாய் பொடியை தூவியும், கொடூரமாக தாக்கியும் சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.

    இந்த விவகாரம் தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழரசி மற்றும் அதிகாரிகள் நேற்று கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

    மேலும் அங்கு ஏதேனும் பிரச்சினைகள் வரக்கூடாது என்பதற்காக 30-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர்.

    • விசாரணை நடத்தியதில் அவர்கள் இருவரும் தொடர் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டு திருடியதை ஒப்புக்கொண்டனர்.
    • ஒரே நாளில் மூன்று இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர்கள் 15 நாட்களுக்குள் காவல்துறையினர் துரித மாக செயல்பட்டு பிடித்தால் நகையை பறிகொடுத்தவர்கள் நிம்மதி அடைந்தனர்.

    காவேரிப்பட்டணம்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் திம்மாபுரம் அருகே இரு சக்கர வாகனத்தில் குழந்தைகளுடன் வந்த பெண் அணிந்திருந்த தாலி செயினை மர்ம நபர்கள் கடந்த 31-ந்தேதி பறித்து சென்றனர். இதேபோல் கிருஷ்ணகிரி ஜக்கப்பன் நகரில் தனியாக சென்ற பெண்ணிடம் தாலி செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றுள்ளனர்.

    மேலும் வேப்பனப்பள்ளி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் அணிந்திருந்த செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றுள்ளனர்.

    தொடர்ந்து செயின் பறிப்பு சம்பவம் குறித்து ஒரே நாளில் அந்தந்த பகுதி போலீஸ் நிலையங்களில் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுத்தனர்.

    இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் தமிழரசி மேற்பார்வையில் காவேரிபட்டினம் இன்ஸ்பெக்டர் முரளி தலைமையில் உதவி ஆய்வாளர் மோகன்ராஜ் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் முருகப்பெருமாள் மற்றும் போலீசார் கடந்த 15 நாட்களுக்கு மேலாக சிறப்பு புலனாய்வு நடத்தி தேடி வந்தனர்.

    அப்போது பெண்களிடம் நகையை பறித்துக் சென்ற வர்கள் சூளகிரி பகுதியைச் சேர்ந்த முனீர் (வயது23), வசீம் (25) ஆகிய இருவரும் என்பது தெரியவந்தது.

    உடனடியாக அவர்களை பிடித்து காவேரிப்பட்டணம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு வைத்து விசாரணை நடத்தியதில் அவர்கள் இருவரும் தொடர் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டு திருடியதை ஒப்புக்கொண்டனர். பின்னர் அவர்களிடம் இருந்து தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து கிருஷ்ணகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ஒரே நாளில் மூன்று இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர்கள் 15 நாட்களுக்குள் காவல்துறையினர் துரித மாக செயல்பட்டு பிடித்தால் நகையை பறிகொடுத்தவர்கள் நிம்மதி அடைந்தனர்.

    • சிறிது நேரத்தில் அவர் வீடு திரும்பி வந்துபார்த்தபோது மர்ம நபர் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் பணம் திருடினார்.
    • இதனை கவனித்த சபரி அந்தமர்ம நபரை கையும்களவுமாக மடக்கி பிடித்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த பேகேப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சபரி (வயது28). டிரைவரான இவரது வீட்டை சம்பவத்தன்று பூட்டிவிட்டு வெளியே சென்றார்.

    சிறிது நேரத்தில் அவர் வீடு திரும்பி வந்துபார்த்தபோது மர்ம நபர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து செல்வதை கண்டு அந்த நபரை பின்தொடர்ந்து சென்றார். அவர் பீரோவில் பணம் திருடினார். இதனை கவனித்த சபரி அந்தமர்ம நபரை கையும்களவுமாக மடக்கி பிடித்தார். இதைத்தொடர்ந்து அந்த நபரை சபரி ஓசூர் சிப்காட் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

    அவரை பிடித்து போலீசார் விசாரித்ததில் அதே பகுதியைச் சேர்ந்த கண்பத் சென்ஷா (30) என்பது தெரியவந்தது. அவர் மீது போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

    இதேபோன்று ஓசூரை அடுத்த மத்திகிரி சிப்பாய்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஷாகீத்பேகம் (42). இவரது வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று சிறிது நேரத்தில் திரும்பிவந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு மர்ம நபர் ஒருவர் உள்ளே சென்று கொண்டிருந்தார். உடனே ஷாகீத்பேகம் அந்த நபரை பின்தொடர்ந்து சென்று அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மடக்கி பிடித்து மத்திகிரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். அந்த நபரிடம் போலீசார் விசாரித்ததில் அதேபகுதியைச் சேர்ந்த ஷேக்சாதிக் (39) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    • தற்போது இருப்பில் உள்ள 7,500 டன் நெல் மூட்டைகள் பாதுகாப்பாக தார்பாலின் போட்டு வைக்கப்பட்டுள்ளது.
    • இன்னும் 3 நாட்களில், மாவட்டத்தில் உள்ள 62 அரவை முகவர்களுக்கு நெல் மூட்டைகள் விநியோகித்து அரவை செய்யப்படவுள்ளது.

    ஓசூர்,

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம், தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ரெயில்கள் மற்றும் லாரிகள் மூலமும் மற்றும் விவசாயிகளிடமிருந்தும் தருவிக்கப்பட்ட நெல் மூட்டைகள், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தளி சாலையில் உள்ள அந்திவாடி விளையாட்டு மைதானத்திற்கு பக்கத்தில், திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த நெல்மூட்டைகள் எந்தவித பாதுகாப்பும் இன்றி, திறந்த வெளியில் குவியல் குவியலாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

    தற்போது மழை காலமாக இருப்பதாலும், பருவ மழையும் தொடங்கி விட்டதாலும் இந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முழுவதுமாக சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தவிர, அங்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ள மூட்டைகளிலிருந்து நெல்மணிகள் குவியல், குவியலாக கீழே கொட்டி சிதறிக்கிடக்கின்றன.

    இதனால், விவசாயிகளும், பொதுமக்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இவ்வாறு கீழே கொட்டி கிடப்பதாலும், நெல்மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைவதாலும் அரசுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கவலை அடைந்துள்ளனர்.

    இந்த நிலையில் அங்குள்ள நெல் மூட்டைகளை, மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு நேற்று மாலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    இங்கு தற்போது இருப்பில் உள்ள 7,500 டன் நெல் மூட்டைகள் பாதுகாப்பாக தார்பாலின் போட்டு வைக்கப்பட்டுள்ளது. இன்னும் 3 நாட்களில், மாவட்டத்தில் உள்ள 62 அரவை முகவர்களுக்கு நெல் மூட்டைகள் விநியோகித்து அரவை செய்யப்படவுள்ளது.

    நெல்மூட்டைகள் எதுவும் மழையால் நனைந்து சேதமடையவில்லை. மாவட்ட பொறுப்பு மற்றும் உணவுத்துறை அமைச்சரின் அறிவுறுத்தின்படி 7 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தில், நெல் சேமிப்பு கிடங்கு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் சக்தி சரள், தாசில்தார் சுப்பிரமணி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • முனீஸ்வரன் கோவில் பாறையின் குகை போன்ற பகுதியில் உள்ள பாறை ஓவியத் தொகுதியும் மாணவிகளுக்கு காட்டப்பட்டது.
    • 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூட அந்த நீர்த்தேக்க பகுதி அங்கு இருந்திருக்கக்கூடும் என்பதையே இந்த பாறை ஓவியம் விளக்குகிறது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் கடந்த 12-ந் தேதி முதல் வருகிற 26-ந் தேதி வரை, 15 நாட்கள் கல்லூரி மாணவிக்கான அருங்காட்சியகவியல் மற்றும் தொல்லியல் உள்விளக்க பயிற்சி முகாம் நடந்து வருகின்றன.

    இதில், கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக் கல்லூரி, பர்கூர் அரசு மகளிர் கலைக் கல்லூரி, மற்றும் ஊத்தங்கரை அதியமான் கல்லூரிகளில், முதுகலை இரண்டாம் ஆண்டு தமிழ் படிக்கும் மாணவிகள், 50 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன.

    அதன் ஒரு பகுதியாக, கிருஷ்ணகிரியின் வரலாற்று சிறப்புமிக்க பாறை ஓவியங்களைக் கொண்ட தாளாப்பள்ளி மலைப்பகுதிக்கு சென்றனர்.

    அங்கு ஏரிக்கரை அருகே உள்ள அமாவாசை குண்டு என்ற பாறையில் உள்ள 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வெண்சாந்து பாறை ஓவியங்கள் பற்றி மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

    பின்பு அந்த மலையின் மற்றொரு பகுதியில் உள்ள இருட்டு கவி என்ற இடத்தில் இருக்கும் பாறை ஓவியங்களை பார்வையிட்டு அதன் விளக்கங்களை அருங்காட்சிய காப்பாச்சியர் கோவிந்தராஜ் அளித்தார்.

    அதன் அருகே அனுமன் கோவில் பின்புறம் உள்ள பாறை ஓவியங்கள், அதற்கு அருகே உங்ள முனீஸ்வரன் கோவில் பாறையின் குகை போன்ற பகுதியில் உள்ள பாறை ஓவியத் தொகுதியும் மாணவிகளுக்கு காட்டப்பட்டது.

    இந்த பாறை தொகுதியில் தான், படகு போன்ற அமைப்பு உள்ளது. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூட அந்த நீர்த்தேக்க பகுதி அங்கு இருந்திருக்கக்கூடும் என்பதையே இந்த பாறை ஓவியம் விளக்குகிறது.

    அந்த குகையின் மற்றொரு பகுதியில் பாண்டில் விளக்குகளும், மற்றொரு பகுதியில் இரண்டு வீடுகளும், தண்ணீர் எடுத்துக் கொண்டு வரும் வகையில் வடிவமைக்கப்பட்ட மூன்று பெண்களுடைய பாறை ஓவியமும் காணப்படுகிறது.

    இவை அனைத்துமே 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வெண்சாந்து ஓவியங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த பயணத்தில், கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியக் காப்பாட்சியர் கோவிந்தராஜ், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆற்றைக் கடக்க முயன்றபோது தண்ணீரால் அடித்துச் செல்லப்பட்டார்.
    • சுமார் 24 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு சிறுவனின் உடல் சுமார் ஒரு கி.மீ. தூரம் தள்ளி கண்டெடுக்கப்பட்டது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த செல்லக்குட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சகாதேவன். இவர் பண்ணந்தூர் கிராமத்தில் பேன்சி ஸ்டோர் கடை நடத்தி வருகிறார்.

    செல்ல க்குட்டப்பட்டி கிராமத்திலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரமுள்ள பண்ணந்தூர் கிராமத்திற்கு தென்பண்ணை ஆற்றை கடந்து தினமும் சென்று வருவது வழக்கம். சில சமயங்களில் இவரது மகன் ரிஷிதரன் (7) அழைத்து செல்வது வழக்கம்.

    இந்நிலையில் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ள காரணத்தால் ஆற்றில் கூடுதலாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இதனால் தினமும் ஆற்றைக் கடந்து செல்லக்கூடிய சகாதேவன் தனது இருசக்கர வாகனத்தில் ஆற்றை சுற்றி தனது கடைக்குச் சென்றுள்ளார்.

    தந்தை கடைக்கு அழைத்துச் செல்லாத காரணத்தால் வழக்கம் போல் நேற்று முன்தினம் ரிஷிதரன் ஆற்றைக் கடக்க முயன்றபோது தண்ணீரால் அடித்துச் செல்லப்பட்டார்.

    இது குறித்து போச்சம்பள்ளி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் தேடி வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்த காரணத்தால் தற்காலிகமாக தேடும் பணி நிறுத்தப்பட்டது.

    சம்பவ இடத்தில் போச்சம்பள்ளி வட்டாட்சியர் தேன்மொழி மற்றும் பாரூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையல், நேற்று காலை முதல் மீண்டும் தேடும் பணி நடைபெற்றது.

    சுமார் 24 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு சிறுவனின் உடல் சுமார் ஒரு கி.மீ. தூரம் தள்ளி கண்டெடுக்கப்பட்டது. இச்சம்பவம் காரணமாக செல்ல குட்டப்பட்டி கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

    • லாரியை ஓட்டி சென்ற டிரைவர் எந்த ஒரு சிக்னலும் செய்யாமல் திடீரென்று பிரேக் போட்டதால் ராஜாமணி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் வேகமாக வந்து மோதியது.
    • விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரபள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ராஜாமணி என்கிற பன்னீர்செல்வம் (வயது58). இவர் ஓ.பன்னீர்செல்வம் அணியின் கிருஷ்ணகிரி மாவட்ட பொருளாளர் பதவி வகித்து வந்தார்.

    எண்ணகோள்புதூர் பகுதியைச் சேர்ந்தவரும், ஓ.பி.எஸ் அணியின் பொதுக்குழு உறுப்பினரும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான சகாதேவன் (63).

    இருவரும் நேற்று மோட்டார் சைக்கிளில் ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது அவர்கள் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் முன்பு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை ஓட்டி சென்ற டிரைவர் எந்த ஒரு சிக்னலும் செய்யாமல் திடீரென்று பிரேக் போட்டதால் ராஜாமணி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் வேகமாக வந்து மோதியது.

    இதில் ராஜாமணி என்கிற பன்னீர்செல்வம் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த சகாதேவனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் உடனே அங்கு விரைந்து வந்து விபத்தில் இறந்த ராஜாமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×