என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • 3 வடமாநில தொழிலாளர்கள் விரட்டி வந்ததாக கூறப்படுகிறது
    • கிராம மக்களால் கட்டி வைத்திருந்த வடமாநில இளைஞர்களை மீட்டு காவல் நிலையத்திற்க்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியை அடுத்த சூளேப்பள்ளி கிராமத்தில் ஸ்டீல் பைப் தயாரிக்கும் கம்பெனி செயல்பட்டு வருகிறது. இங்கு பெரும்பாலும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் சூளேப்பள்ளி கிராம வழியாக வீட்டிற்கு நடந்து சென்ற 2 உள்ளூர் இளம்பெண்களை தொழிற்சாலையில் வேலை செய்து வந்த 3 வடமாநில தொழிலாளர்கள் விரட்டி வந்ததாக கூறப்படுகிறது.

    வடமாநில இளைஞர்கள் உள்ளூர் இளம் பெண்களை துரத்தி சென்றபோது அந்த இளம் பெண்கள் கூச்சலிட்டவாறு பயந்து ஓடிச் சென்றுள்ளனர்.

    இளம் பெண்களின் அலறல் சத்தம் கேட்ட அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் கிராம மக்கள் இணைந்து பெண்களை துரத்தி வந்த 3 வடமாநில இளைஞர்களை பிடித்து, அந்த தொழிற்ச்சாலை வளாகத்தில் அமைந்துள்ள மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்துள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து கிராம மக்கள் சூளகிரி போலீ சாருக்கு தகவல் அளித்தனர். அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலீசார் அங்கு கிராம மக்களால் கட்டி வைத்திருந்த வடமாநில இளைஞர்களை மீட்டு காவல் நிலையத்திற்க்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆந்திர மாநில எல்லையையொட்டி உள்ள சோதனை சாவடிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • அரிசி கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

    கிருஷ்ணகிரி,

    தமிழக உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. காமினி உத்தரவின் பேரில் கோவை மண்டல போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி மேற்பார்வையில், சேலம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணவேணி, திபாகர மற்றும் போலீசார் அரிசி கடத்தலை தடுக்க தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    அவர்கள் 2 குழுக்களாக பிரிந்து மாநில எல்லைகளான கர்நாடக மாநில எல்லையை ஒட்டி உள்ள சோதனைச்சாவடி மற்றும் ஆந்திர மாநில எல்லையையொட்டி உள்ள சோதனை சாவடிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    இது குறித்து உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கூறுகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக பக்கத்து மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுகிறதா? என்று தீவிரமாக கண்காணித்து வருகிறோம். அரிசி கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

    • கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டாடப்பட்டது.
    • இதையொட்டி லண்டன்பேட்டை பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.

    கிருஷ்ணகிரி,

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பிறந்த நாள் விழா கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி லண்டன்பேட்டை பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

    இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட துணைத் தலைவர் ரகமத்துல்லா தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் அப்சல் வரவேற்றார். நகர தலைவர் லலித் ஆண்டனி, மனித உரிமை பிரிவு மாவட்ட தலைவர் நாகராஜ், டாக்டர் தகி, மாவட்ட செயலாளர் சக்கரவர்த்தி, ராகுல பேரவை மாவட்ட தலைவர் குட்டி என்கிற விஜயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் மாநில பொதுச் செயலாளர் ஏகாம்பவாணன், முன்னாள் மாவட்ட தலைவர் நாராயணமூர்த்தி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்கள். இதில் மாவட்ட செயலாளர் சரவணன், நிர்வாகிகள் ஷாநவாஸ், ஹாஜித் பாஷா, சதாம், அஜிசுல்லா உள்பட பலர் கலந்து

    கொண்டனர்.

    • ஊட்டச்சத்து குறைபாடுள்ள, 1,136 குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கப்படுகிறது.
    • பிஸ்கட்டுகள் மாதத்தில் ஒன்று அல்லது 2 முறை வீட்டிற்கே எடுத்து செல்லும் வகையில் வழங்கப்பட உள்ளது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம் வெங்கடாபுரம் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தில், ஆறு மாதம் முதல், ஆறு வயதுக்குட்பட்ட ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கும் திட்டத்தை கலெக்டர் சரயு நேற்று தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தமுள்ள, 10 வட்டாரங்களில், 1,796 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இதில், ஊட்டச்சத்து குறைபாடுள்ள, 1,136 குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கப்படுகிறது.

    செறிவூட்டப்பட்ட பிஸ்கட்டில் கோதுமை மாவு 30 சதவீதம், மைதா 10 சதவீதம், வேர்க்கடலை துருவல் 4 சதவீதம், கோழ்வரகு மாவு 7 சதவீதம், சுத்திகரிக்கப்பட்ட தாவர எண்ணெய் 24.74 சதவீதம், சர்க்கரை 23 சதவீதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கலவை 1 சதவீதம், சமையல சோடா 0.26 என மொத்தம் 100 சதவீத மூலப்பொருட்களால் தயார் செய்யப்பட்டுள்ளது.

    செறிவூட்டப்பட் பிஸ்கட்டில் புரத சத்து, இரும்பு சத்து, கால்சியம், வைட்டமின் ஏ, பி1, பி2, நியோசின், போலிக் அமிலம் உள்ளிட்ட சத்துக்கள் குழந்தைகளுக்கு கிடைக்கிறது.

    செறிவூட்டப்பட்ட பிஸ்கட் நாள் ஒன்றுக்கு 6 மாதம் முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 60 கிராம் அளவும், 2 வயது முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 30 கிராம் அளவும் கொடுக்க வேண்டும். ஒரு பிஸ்கட் சுமார் 15 கிராம் வீதும் ஒரு பாக்கெட்டில் 50 பிஸ்கட்டுகள் இருக்கும். பிஸ்கட்டுகள் மாதத்தில் ஒன்று அல்லது 2 முறை வீட்டிற்கே எடுத்து செல்லும் வகையில் வழங்கப்பட உள்ளது.

    ஆகவே 6 வயதிற்கு உட்பட குழந்தைகள் செறிவூட்டப்பட்ட பிஸ்கட்டுகளை உட்கொண்டு ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், ராஜேஷ், தாசில்தார் சம்பத், புள்ளியல் ஆய்வாளர் சீனிவாசன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி வட்டார அலுவலர் பத்மாவதி, ஊராட்சி மன்ற தலைவர் ராஜா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • மாநிலக்குழு உறுப்பினர் கண்ணு, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர்கள் ராமமூர்த்தி, சக்கரவர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    • மா விவசாயிகளுக்கு தரமான மருந்துகளை மானிய விலையில் அரசே வழங்கிட வேண்டும்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை எதிரில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்டத் தலைவர் சிவராஜ் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் கண்ணு, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர்கள் ராமமூர்த்தி, சக்கரவர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பழனி, மாவட்ட துணைச் செயலாளர் சின்னசாமி ஆகியோர் விளக்க உரையாற்றினார்கள்.

    ஆர்ப்பாட்டத்தில், மா விவசாயத்தை பாதிக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகளை கண்டறிந்து அரசு தடை செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மா விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 50 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும். மா உற்பத்தி செய்யும் விவசாயிகளிடமிருந்து வாங்கும் மாங்காய்களுடன் டன் ஒன்றுக்கு 50 ஆயிரம் ரூபாய் விலை நிர்ணயம் செய்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும்.

    மா விவசாயிகளுக்கு தரமான மருந்துகளை மானிய விலையில் அரசே வழங்கிட வேண்டும். மா விவசாயிகளுக்கு மருந்து தெளிக்கும் விசை தெளிப்பான் முழு மானியத்தில் வழங்கிட வேண்டும். தமிழ்நாடு அரசு சார்பில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மாங்கூழ் உற்பத்தி மற்றும் பதனிடும் தொழிற்சாலை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

    • மின்சார வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 247 மனுக்களை வழங்கினார்கள்.
    • 4 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.35 ஆயிரத்து 400 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கே.எம்.சரயு தலைமையில் நேற்று நடந்தது. இதில் பொதுமக்கள் வீட்டு மனை பட்டா, விலையில்லா தையல் எந்திரம், சலவை பெட்டி, முதியோர் உதவி தொகை, சாலை வசதி, மின்சார வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 247 மனுக்களை வழங்கினார்கள்.

    மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் அதன் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து மாற்றுததிறனாளிகள் நலத்துறை சார்பில் 4 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.35 ஆயிரத்து 400 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் பத்மலதா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
    • தண்ணீர் பற்றாக்குறை இருப்பின் அவற்றினை தற்போது அணைக்கு வரும் நீர்வரத்து மற்றும் எதிர்வரும் மழை நீரைக் கொண்டு சரி செய்யலாம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அணையில் இருந்து 2023- 24-ம் ஆண்டு முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் கிருஷ்ணகிரி அணை செயற்பொறியாளர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு உதவி செயற்பொறியாளர் அறிவொளி தலைமை தாங்கினார்.

    இதில், வருவாய்த்துறை அலுவலர்கள், வேளா ண்மைத் துணை அலுவ லர்கள், நீர்வளத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரநிதிகள், முன்னாள் பாசன சங்கத் தலைவர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில், டெல்டா பகுதி விவசாயிகளுக்கு வழங்கப்படும் குறுவைத் தொகுப்பை, இப்பகுதி விவசாயிகளுக்கும் வழங்க அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும். கே.ஆர்.பி., அணை இடது மற்றும் வலது புற கால்வாய்களை உடனே தூர்வார வேண்டும். அதன்பின்னர் முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து, கிருஷ்ணகிரி அணையில் இருந்து முதல்போக சாகுபடிக்கு வருகிற ஜூலை 3-ந் முதல் 130 நாட்களுக்கு தண்ணீர் திறக்க அரசை கேட்டுக் கொள்வது.

    வலது மற்றும் இடதுபுற கால்வாயில் உள்ள 9012 ஏக்கரில் கிருஷ்ணகிரி அணையில் பாசன வசதி பெறும் புஞ்சை நிலங்களை நஞ்சை நிலமாக மாற்றித்தருமாறு கேட்டுக் கொள்வது.

    தண்ணீர் பற்றாக்குறை இருப்பின் அவற்றினை தற்போது அணைக்கு வரும் நீர்வரத்து மற்றும் எதிர்வரும் மழை நீரைக் கொண்டு சரி செய்யலாம். மேலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டால், விவசாயிகளே பொறுப்பேற்றுக் கொள்வது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டால் அவர்களுக்கு தொகுப்பூதியம், 2,000 ரூபாய் வழங்க வேண்டும்.
    • டேங்க் ஆபரேட்டர்களுக்கு தொகுப்பூதியம் வழங்கி கடந்த, 2017-ம் ஆண்டு உத்தரவிட்டார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம், தேன்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி ஆப்பரேட்டர்கள் செல்வராஜ், முருகேசன், சித்தரன் சின்ன கவுண்டர், குமார் உள்ளிட்டோர் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    கடந்த, 2000-ம் ஆண்டிற்கு பிறகு ஊராட்சிகளில் மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டால் அவர்களுக்கு தொகுப்பூதியம், 2,000 ரூபாய் வழங்கவும் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு பணியில் சேர்க்கவும் அரசு உத்தரவிட்டது.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அப்பகுதியில் உள்ள டேங்க் ஆபரேட்டர்களுக்கு தொகுப்பூதியம் வழங்கி கடந்த, 2017-ம் ஆண்டு உத்தரவிட்டார். ஆனால் கெலமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், அப்பகுதியில் உள்ள தண்ணீர் டேங்க் ஆபரேட்டர்களுக்கு தொகுப்பூதியம் வழங்காமல், மாதம், 250 ரூபாய் மட்டுமே வழங்கி வருகிறார்கள்.

    எங்களுக்கு பணி நிரந்தரம், தொகுப்பூதியம் வழங்க கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்படும், அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    எனவே பாதிக்கப்பட்ட தண்ணீர் டேங்க் ஆபரேட்டர்கள் வருகிற ஆகஸ்ட் 1-ந் தேதி காலை, 10 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தமிழக முதல்-அமைச்சர் அலுவலகம் கோட்டை வரை கோரிக்கை விளக்க பதாகைகளை ஏந்தி கவன ஈர்ப்பு பாதயாத்திரை மேற்கொள்ள உள்ளோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அதே பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் (32), கஜேந்திரன் (31), முருகேசன் (27), சிவா ஆகியோருக்கு தகவல் கொடுத்து வரவழைத்து நாகேஷை சரமாரியாக தாக்கி மிரட்டல் விடுத்தனர்.
    • சிவக்குமார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நாகேஷை கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த சானசந்திரம் பகுதியைச் சேர்ந்தவர் நாகேஷ் (வயது25). இவரது வீட்டின் முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர் தனது வண்டியை நிறுத்திவிட்டு ரேஷ் செய்ததால் அதிக சத்தம் எழுந்தது. அப்போது அங்கு வந்த நாகேஷ் அந்த வாலிபரை தட்டிகேட்டதால் வாய்தகராறு ஏற்பட்டது. உடனே இதுகுறித்து வாலிபர் அதே பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் (32), கஜேந்திரன் (31), முருகேசன் (27), சிவா ஆகியோருக்கு தகவல் கொடுத்து வரவழைத்து நாகேஷை சரமாரியாக தாக்கி மிரட்டல் விடுத்தனர்.

    இதில் பலத்த காயமடைந்த நாகேஷ் ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் மீது வழக்கு பதிவு செய்து சிவக்குமார், கஜேந்திரன், முருகேசன், சிவா ஆகிய 4 பேர் கைது செய்தனர். இதேபோன்று சிவக்குமார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நாகேஷை கைது செய்தனர்.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • சின்னகொத்தூர் அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக வண்டி நிலைதடுமாறி முன்னாள் சென்ற மாட்டுவண்டியின் மீது மோதியது.
    • பலத்த காயமடைந்த மண்டப்பா சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனபள்ளி அருகே தேவர்குந்தானி பகுதியைச் சேர்ந்தவர் மண்டப்பா (வயது45).

    இவரும் அதே பகுதியைச் சேர்ந்த கன்னியப்பன் (36), கரியசத்திரம் பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் ரமேஷ் ஆகிய 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் இரவு தங்கடிகுப்பம் அருகே வந்தனர்.

    அப்போது அவர்கள் கோத்தகிருஷ்ண–பள்ளி-சின்னகொத்தூர் அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக வண்டி நிலைதடுமாறி முன்னாள் சென்ற மாட்டுவண்டியின் மீது மோதியது.

    இதில் பலத்த காயமடைந்த மண்டப்பா சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். உடன் சென்ற ரமேஷ், கன்னியப்பன் ஆகிய 2 பேரும் காயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வேப்பனபள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நேற்று காலை வீட்டின் அருகே உள்ள தண்ணீர் தொட்டியை கடக்க முயன்றார்.
    • அவர் அந்த தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்தார்.

    சூளகிரி, ஜூன்.20-

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த ஏனுசோனை தியாகரசன பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சிக்கதிம்மய்யா (வயது70). இவரது மகன் ஹரீஷ். இந்த நிலையில் நேற்று காலை வீட்டின் அருகே உள்ள தண்ணீர் தொட்டியை கடக்க முயன்றார்.

    அப்போது அவர் அந்த தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்தார். தொட்டியில் தண்ணீர் இல்லாததால் கீழே விழுந்ததில் சிக்கதிம்மய்யா பலத்த காயமடைந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஹரீஷ் சூளகிரி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து சிக்கதிம்மய்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தி.மு.க. அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நாளை கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் நடைபெறுகிறது.
    • அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து கண்டன உரையாற்றுகிறார்.

    கிருஷ்ணகிரி, ஜூன்.20-

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கே.அசோக்குமார் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    கிருஷ்ணகிரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தமிழகத்தில் தொடரும் ஊழல் முறைகேடுகள், சட்டம் & ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும், அமைச்சர் செந்தில் பாலாஜியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், தி.மு.க. அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நாளை (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் நடைபெறுகிறது.

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் கே.அசோக்குமார் எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து கண்டன உரையாற்றுகிறார்.

    எனவே கட்சியின் இந்நாள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், சார்பு அமைப்பு நிர்வாகிகள், கிளை கழக பொறுப்பாளர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×