என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • பாரதிராஜா அங்கிருந்து சென்றுவிட்டதால் போலீசார் இளையராஜா மீது வழக்கு பதிவு செய்வதாக கூறி போலீஸ் ஸ்டேசன் உள்ளே உட்கார வைத்துள்ளனர்.
    • போலீசார் சமரசம் செய்தும் கமலாதேவி கேட்காமல் தொடர்ந்து தர்ணாவில் ஈடுபடவே பெண் போலீசார் அவரை குண்டுகட்டாக தூக்கி காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்த, கிட்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் இளையராஜா (வயது34), இவருக்கும், இவரின் பெரியப்பா முருகன் (70), என்பவருக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் சொத்து தகராறு இருந்து வருகிறது.

    இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மீண்டும் இளையராஜா, முருகன் மற்றும் அவரின் மகன்கள் கோபால் உள்ளிட்டோருக்கு சொத்து சம்மந்தமாக காவல் நிலையத்தில் அளித்த புகாரை அடுத்து போலீசார் நேற்று விசாரணைக்கு அழைத்திருந்தனர்.

    இது சம்மந்தமாக முருகன் மற்றும் இளையராஜா இரு தரப்பிலும் விசாரித்துக் கொண்டிருந்தபோது, இளையராஜாவின் அண்ணன் பாரதிராஜா மொபைல் போனில் படம்பிடித்ததாக கூறப்படுகிறது.

    போலீசார் எதற்கு படம்பிடிக்கிறாய் என கேட்டுள்ளனர். இதையடுத்து பாரதிராஜா அங்கிருந்து சென்றுவிட்டதால் போலீசார் இளையராஜா மீது வழக்கு பதிவு செய்வதாக கூறி போலீஸ் ஸ்டேசன் உள்ளே உட்கார வைத்துள்ளனர்.

    இதை பார்த்த அவரின் மனைவி கமலாதேவி (30), கணவர் இளையராஜாவை தாக்கி போலீசார் கீழே தள்ளியதாக கூறி தனது மூன்று வயது மகள் துவாரகபிரியாவுடன் காவல் நிலையம் எதிரில், தருமபுரி–திருப்பத்தூர் சாலையில் அமர்ந்து அரை மணி நேரம் தர்ணாவில் ஈடுபட்டார்.

    போலீசார் சமரசம் செய்தும் கமலாதேவி கேட்காமல் தொடர்ந்து தர்ணாவில் ஈடுபடவே பெண் போலீசார் அவரை குண்டுகட்டாக தூக்கி காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

    அங்கு இரு தரப்பினரையும் சமாதானம் செய்து விசாரித்து முறைப்படி கோர்ட்டை அணுகி தீர்வு காணுங்கள் என கூறி போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    • ஓசூர் எம்.ஜி.ஆர் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மாணவர்கள், மது ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வினை பொதுமக்களிடத்தில் ஏற்படுத்த வேண்டும்.

    ஓசூர்,

    உலக போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு, ஓசூர் எம்.ஜி.ஆர் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    ஓசூர் பஸ் நிலையம், பத்தலப்பள்ளி மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டு, மது மற்றும் போதைக்கு அடிமையாகாமல் இருத்தலும், போதைப் பொருட்களைக் கடத்துவது குற்றம் என்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து, எம்.ஜி.ஆர் கல்லூரி வளாகத்தில் உலக போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினக்கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கு நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் முத்துமணி தலைமை தாங்கி பேசுகையில், "மாணவர்கள், மது ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வினை பொதுமக்களிடத்தில் ஏற்படுத்த வேண்டும் என்றும், போதைப் பொருள் கடத்தலுக்குத் துணைப்போகக்கூடாது என்றும் குறிப்பிட்டார்.

    இதில், ஓசூர் அட்கோ போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சபரிநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, இன்றைய சூழலில் எவ்வாறான நிலையில் போதைக்கு மக்கள் அடிமை ஆகின்றனர் என்பதையும், அதனால் ஏற்படும் துன்பங்கள் குறித்தும் விரிவாக பேசினார். இந்தக்கருத்தரங்க நிகழ்வில், நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவிகள் 100 பேர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை, திட்ட அலுவலர் லெனின் செய்திருந்தார்.

    • நேற்று வீட்டின் மேல் இருந்து தவறி விழுந்தார்.
    • அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாதேஸ் உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள தென்னமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மாதேஸ் (வயது45).

    இவரது வீடு ஒன்றை கட்டி வருகிறார். நேற்று வீட்டின் மேல் இருந்து தவறி விழுந்தார்.

    இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாதேஸ் உயிரிழந்தார்.

    இது குறித்து தளி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியர்கள் எந்த மாதத்தில் ஓய்வு பெறுகிறார்களோ அந்த மாதத்தில் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.
    • தவறும் பட்சத்தில் அதனை தொடர்ந்து வரும் மாதத்தில் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2023-24-ம் ஆண்டிற்கான உயிர்வாழ் சான்றிதழ் கிருஷ்ணகிரி மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியர்கள் எந்த மாதத்தில் ஓய்வு பெறுகிறார்களோ அந்த மாதத்தில் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் அதனை தொடர்ந்து வரும் மாதத்தில் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.

    2 ஓய்வூதியம் பெறுபவர் எனில் ஓய்வூதியர் பணியில் இருந்து எந்த மாதத்தில் ஓய்வு பெற்றார்களோ அந்த மாதத்தில் 2 ஓய்வூதியத்திற்கும் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் அதை தொடர்ந்து வரும் மாதத்தில் உயிர் வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.

    குடும்ப ஓய்வூதியர்கள், சிறப்பு ஓய்வூதியர்கள், சிறப்பு மிகை ஓய்வூதியர்கள் மற்றும் சுதந்திர போராட்ட தியாகி ஓய்வூதியர்கள் ஆகியோர், அவர்களுடைய ஓய்வூதியம் எந்த மாதத்தில் தொடங்கப்பட்டதோ, அந்த மாதத்தில் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் அதனை தொடர்ந்து வரும் மாதத்தில் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.

    மேற்காணும் முறையில் அனுமதிக்கப்பட்ட மாதங்களுக்குள் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க தவறும் பட்சத்தில் தொடர்ந்து வரும் மாதம் முதல் ஓய்வூதியம் நிறுத்தப்படும். 2023-24-ம் நிதியாண்டிற்கு மட்டும் சிறப்பு நிகழ்வாக ஓய்வூதியம் நிறுத்தம் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நேற்று இருசக்கர வாகனத்தில் நேரலகிரி சந்திப்பு பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
    • எதிரே வந்த பைக் இவர் மீது மோதியது.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி வாலிநகர் பகுதியை சேர்ந்தவர் சின்னப்பன் (வயது44). இவர் நேற்று இருசக்கர வாகனத்தில் நேரலகிரி சந்திப்பு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த பைக் இவர் மீது மோதியது.

    இதில் சம்பவ இடத்திலேயே சின்னப்பன் உயிரிழந்தார்.

    இது குறித்து வேப்பனப்பள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முன்னதாக வரலாற்றுக்கு முற்பட்ட காலம், இடை வரலாற்றுக் காலம் மற்றும் வரலாற்றுக் காலங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
    • தமிழி என்று அழைக்கப்படும் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் பிராமி எழுத்துக்களை எழுதவும் படிக்கவும் கற்றுத் தரப்பட்டது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில், கடந்த 21-ந் தேதி முதல் 15 நாட்களுக்கு, பர்கூர் அரசு மகளிர் கலைக் கல்லூரி பி.ஏ., வரலாறு மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவிகள், காரிமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஏ., தமிழ் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவிகள் மற்றும் தர்மபுரி ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி பி.ஏ., தமிழ் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவிகள் என மொத்தம் 50 பேருக்கு, தொல்லியல் குறித்த உள்விளக்க பயிற்சி நடந்து வருகிறது.

    இதன் 5-ம் நாளான நேற்று அருங்காட்சியகத்தில் உள்ள விஜயநகரர் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றினை படியெடுத்து, படித்து பொருள் கொள்வது எப்படி என்பது குறித்து செயல் விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது.

    முன்னதாக வரலாற்றுக்கு முற்பட்ட காலம், இடை வரலாற்றுக் காலம் மற்றும் வரலாற்றுக் காலங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் தமிழி என்று அழைக்கப்படும் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் பிராமி எழுத்துக்களை எழுதவும் படிக்கவும் கற்றுத் தரப்பட்டது. பின்னர் அந்த எழுத்தில் இருந்து இன்றைய கால தமிழ் வரை எழுத்துக்களின் வளர்ச்சியை எடுத்துக்காட்டுகளுடன் விளக்கப்பட்டது.

    இனி வரும் நாட்களில் கிரந்த எழுத்துக்கள், தமிழ் எண்கள் கல்வெட்டுகளில் உள்ள ஆண்டுகளை கணக்கிடும் முறை, கோவில் கட்டடக்கலை சிற்பம் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளன. இந்த பயிற்சியை மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் அளிக்கிறார். இதற்கான ஏற்பாட்டை அருங்காட்சியக பணியாளர்கள் செல்வகுமார் மற்றும் பெருமாள் ஆகியோர் செய்துள்ளனர்.

    • பட்டியல், பழங்குடியின மாணவ, மாணவிகள் பதிவு கட்டணமாக தலா ரூ.2 செலுத்தி கல்லூரிக்கு வந்து விண்ணப்பங்களை நேரடியாக பெற்று விண்ணப்பிக்கலாம்.
    • கலந்தாய்வு வருகிற 30-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு கல்லூரியில் நடைபெறுகிறது.

    கிருஷ்ணகிரி,

    ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023-2024-ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதில் இணையம் வாயிலாக விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு இன்று (புதன்கிழமை) கல்லூரியில் நேரடியாக விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.

    பட்டியல், பழங்குடியின மாணவ, மாணவிகள் பதிவு கட்டணமாக தலா ரூ.2 செலுத்தி கல்லூரிக்கு வந்து விண்ணப்பங்களை நேரடியாக பெற்று விண்ணப்பிக்கலாம்.

    இவர்களுக்கான கலந்தாய்வு வருகிற 30-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு கல்லூரியில் நடைபெறுகிறது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • சுற்றுலா பேருந்து இருசக்கர வாகன த்தின் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
    • சின்னசாமி தலையில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள மேட்டு புளியூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 45). இவர் எழுச்சம்பள்ளம் பகுதியில் தேங்காய் மண்டி வைத்து வியாபாரம் செய்து வந்தார்.

    இந்நிலையில் இன்று காலை 6 மணியளவில் தேங்காய் மண்டியை மூடி விட்டு வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றார்.

    அப்போது விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து தருமபுரிக்கு திருமண நிகழ்ச்சிக்காக பயணிகளை ஏற்றி கொண்டு சுற்றுலா பேருந்து இருசக்கர வாகன த்தின் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் சின்னசாமி தலையில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து அந்த சாலை வழியாக சென்றவர்கள் போச்சம்பள்ளி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து விசாரணை நடத்தியதில் சுற்றுலா பேருந்தை ஓட்டி வந்தவர் பாண்டிச்சேரி மாவட்டத்தை சேர்ந்த கோபிநாத் (வயது 22) என்பது தெரிய வந்தது.

    உடனே போலீசார் கோபிநாத்தை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று காலை நடந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • தமிழ்நாடு குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கம் மற்றும் தமிழ் பழங்குடி குறவன் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • மலைவாழ் மக்கள் சங்க மாநில குழுத் தலைவர் டில்லிபாபு தலைமை தாங்கினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை எதிரில், புளியாண்டப்பட்டியைச் சேர்ந்த குறவர் இன மக்களை சித்தூர் போலீசார் தாக்கியதைக் கண்டித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், தமிழ்நாடு குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கம் மற்றும் தமிழ் பழங்குடி குறவன் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதற்கு மலைவாழ் மக்கள் சங்க மாநில குழுத் தலைவர் டில்லிபாபு தலைமை தாங்கினார்.

    தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் சண்முகம், குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்க மாநில பொதுச் செயலாளர் சண்முகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் நஞ்சுண்டன், பழங்குடி குறவன் சங்க மாநில பொதுச் செயலாளர் ரவி, மாநிலத் தலைவர் ரமேஷ், மாநில பொருளாளர் கோவிந்தராஜ், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மகாலிங்கம், வட்டச் செயலாளர் சாமு, குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்க மாவட்ட பொருளாளர் வேலு, அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் ராதா ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

    இதில் புளியாண்ட ப்பட்டியைச் சேர்ந்த குறவர் இன மக்கள், சித்தூர் போலீ சாரால் அழைத்து சென்று தாக்கியதை கண்டித்தும், பெண்கள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளா க்கப்பட்டதை கண்டித்தும், சித்தூர் மாவட்ட போலீசார் மீது கடுமையான சட்டப்பிரிவு களில் கைது செய்ய வேண்டும் எனக்கோரி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

    • மின்சாரம் இல்லாததால், இருளில் சென்ற சிறுவன், பாம்பு கடித்து இறந்துள்ளான்.
    • அதிகாரிகள் மெத்தனத்தை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தாலுகா ஜம்புகுட்டப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பழனி ஆண்டவர் நகர் பகுதியை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், பள்ளி குழந்தைகளுடன் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து அவர்கள் கூறியதாவது:-

    போச்சம்பள்ளி அடுத்த பழனி ஆண்டவர் நகரில், 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களுக்கு, மின்சாரம், பட்டா, சாதி சான்றிதழ் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை கேட்டு, கடந்த, 2005-ம் ஆண்டு முதல் போராடி வருகிறோம். இது குறித்து அனைத்து அலுவலகங்கள் முதல் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு வரை மனு அளித்துள்ளோம்.

    கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் 12-ந் தேதி சென்னை தலைமை செயலகத்துக்கே சென்று மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த பகுதியில் மின்சாரம் இல்லாததால், இருளில் சென்ற சிறுவன், பாம்பு கடித்து இறந்துள்ளான். அதன்பின்னரும் எங்கள் மீது யாரும் கருணை காட்டவில்லை. எனவே அதிகாரிகள் மெத்தனத்தை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மாவட்ட தலைமையிடத்து துணை தாசில்தார் சகாதேவன் பேச்சுவார்த்தை நடத்தினார். இன்னும் ஒரு மாதத்திற்குள், உங்கள் மனுக்களுக்கு தீர்வு காணப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

    • மின்சார வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 302 மனுக்களை பொதுமக்கள் வழங்கினார்கள்.
    • மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பில் ஈமச்சடங்கு நிதி உதவியை கலெக்டர் வழங்கினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கே.எம்.சரயு தலைமையில் நேற்று நடந்தது.

    இதில் வீட்டுமனை பட்டா, விலையில்லா தையல் எந்திரம், சலவை பெட்டி, முதியோர் உதவி தொகை, சாலை வசதி, மின்சார வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 302 மனுக்களை பொதுமக்கள் வழங்கினார்கள்.

    மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் அந்த மனுக்களின் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தலா ரூ.17 ஆயிரம் வீதம் 7 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பில் ஈமச்சடங்கு நிதி உதவியை கலெக்டர் வழங்கினார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • சிறு குழந்தைகள் தங்களுக்கு கல்வி மற்றும் ஆரோக்கியம் கிடைத்திட அம்மனுக்கு அபிஷேகம் செய்யும் நிகழ்வு நடந்து வருகிறது.
    • அரிசி மாவு பொடி, திரவிய பொடி ஆகிய ஐந்து வகையான திரவிய நீரால் அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.

    ஓசூர்,

    ஓசூர் பாரதிதாசன் நகரில் உள்ள கல்யாண காமாட்சி அம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும், வேறு எந்த கோவிலிலும் நடைபெறாத வகையில் சிறு குழந்தைகள் தங்களுக்கு கல்வி மற்றும் ஆரோக்கியம் கிடைத்திட அம்மனுக்கு அபிஷேகம் செய்யும் நிகழ்வு நடந்து வருகிறது.

    அந்த வகையில், 14 -வது ஆண்டு நிகழ்ச்சியாக, 6 மாத குழந்தை முதல் 7 வயது சிறுவர்,சிறுமியர் வரை அம்மனுக்கு அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் சிறு குழந்தைகள் முதல் 7 வயது சிறுவர்,சிறுமியர் வரை வரிசையாக நின்று அம்மனுக்கு பால், பன்னீர், மஞ்சள் பொடி, அரிசி மாவு பொடி, திரவிய பொடி ஆகிய ஐந்து வகையான திரவிய நீரால் அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். அப்போது தங்களுக்கு கல்வி ஞானம் கிடைக்க வேண்டும், ஆரோக்கியமுடன் வாழ வேண்டும் என குழந்தைகளும் அவர்களின் பெற்றோர்களும் அம்மனை வேண்டிக்கொண்டனர். அதனை தொடர்ந்து கோயிலில் குழந்தைகளுக்கு நல்ல ஆயுள் கிடைக்க வேண்டி ஆயுஷ் ஹோமம் நடைபெற்றது.

    இந்த விழாவில், ஓசூர் பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து ஸ்ரீ கல்யாண காமாட்சி அம்மனை வேண்டி வழிபாடு செய்து சென்றனர்.

    ×