என் மலர்
காஞ்சிபுரம்
- வாலாஜாபாத் ஒன்றியம் ஏனாத்தூர் ஊராட்சிமில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
- 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு கர்ப்பிணி பெண்கள் செல்லுகின்ற நிலை உள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
வாலாஜாபாத் ஒன்றியம் ஏனாத்தூர் ஊராட்சிமில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் செயல்பட்டு வரும் துணை சுகாதார நிலைய கட்டடம் மிகுந்த சேதம் அடைந்து காணப்படுகிறது. மேலும் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி நீந்தி செல்லும் அவல நிலை உள்ளது. துணை சுகாதார நிலையத்தை சுற்றிலும் அடர்ந்த முட்புதர்களாக காட்சி அளிக்கிறது. இதனால் துணை சுகாதார நிலையத்துக்கு வர பொதுமக்கள் அச்சப்படுவதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக ஏனாத்தூர் பகுதியில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு கர்ப்பிணி பெண்கள் செல்லுகின்ற நிலை உள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
கடந்த தேர்தலின் போது இந்த துணை சுகாதார நிலையத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டித் தருவதாக திமுகவினர் வாக்குறுதி அளித்த நிலையில் பல மாதங்கள் கடந்தும் துணை சுகாதார நிலையத்தை சீரமைக்க மாவட்ட நிர்வாகமோ அல்லது மாவட்ட சுகாதாரத்துறையே எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை ஏன்? என்று அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
- கியாஸ் சிலிண்டர் கிடங்குகள், பெட்ரோல் நிலையம் அருகே பட்டாசு கடைகள் நடத்த அனுமதியில்லை.
- பட்டாசுகளை கையாளும் முறைகள் தெரிந்த அடிப்படை பயிற்சி பெற்றவர்களை மட்டுமே பணிக்கு அமர்த்தியிருக்க வேண்டும்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் பஸ் நிலையம் அருகே பட்டாசுக்கடை உரிமையாளர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட தீயணைப்பு அலுவலர் பிரியதர்ஷினி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் பிரியதர்ஷினி பேசியதாவது:-
அரசு அனுமதி பெற்று பட்டாசு கடைகள் நடத்தினாலும் அங்கு எந்த காரணத்தை முன்னிட்டும் வேறு பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது. முக்கியமாக பொதுமக்கள் அதிகமாக கூடக்கூடிய இடங்களில் பட்டாசு கடைகள் நடத்த கூடாது.
கியாஸ் சிலிண்டர் கிடங்குகள், பெட்ரோல் நிலையம் அருகே பட்டாசு கடைகள் நடத்த அனுமதியில்லை. பட்டாசு கடைகளில் புகைப்பிடிக்க கூடாது என்று எழுதப்பட்ட வாசகம் அவசியம் இருக்க வேண்டும். பட்டாசுகளை கையாளும் முறைகள் தெரிந்த அடிப்படை பயிற்சி பெற்றவர்களை மட்டுமே பணிக்கு அமர்த்தியிருக்க வேண்டும். பொதுமக்கள் பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாட அனைவரது ஒத்துழைப்பும் அவசியம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் பட்டாசுக்கடை உரிமையாளர்கள் சங்க தலைவர் எம்.சம்பத், செயலாளர் துளசிநாதன், பொருளாளர் நரேந்திரன் உள்பட பட்டாசு கடை உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- கியாஸ் சிலிண்டர் குடோனில் கடந்த மாதம் 28-ந்தேதி திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
- 12 பேரும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
படப்பை:
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த தேவரியம்பாக்கம் பகுதியில் தனியார் கியாஸ் சிலிண்டர் குடோனில் வீட்டுக்கு பயன்படுத்தும் கியாஸ் சிலிண்டர்கள் வைக்கப்பட்டிருந்தது.
இந்த கியாஸ் சிலிண்டர் குடோனில் கடந்த மாதம் 28-ந்தேதி திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் கியாஸ் சிலிண்டர்கள் வெடிக்க தொடங்கியதில், மொத்தம் 12 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த 12 பேரும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் அவர்களில் சிகிச்சை பலனின்றி ஆமோத்குமார் (வயது 25), சந்தியா (21), ஜீவானந்தம் (50), குடவாசல் பகுதியை சேர்ந்த குணால் (22), தேவரியம்பாக்கம் பகுதியை சேர்ந்த கிஷோர் (13), சண்முகப்பிரியன் (17), கோகுல் (22), குடவாசல் பகுதியை சேர்ந்த அருண் (23), தேவரியம்பாக்கம் பகுதியை சேர்ந்த தமிழரசன் (11) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த நிலையில் தீ விபத்தில் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த தேவரியம்பாக்கம் பகுதியை சேர்ந்த பூஜா (வயது 11) என்ற சிறுமி நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில், கியாஸ் குடோன் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
- 157-வது வார்டில் குடிநீர் வாரியம் சார்பில் நடந்த பணியால் ஆங்காங்கே கல், மண் போன்ற கழிவுகள் அகற்றப்படாமல் சாலை யிலே உள்ளன.
- ஆலந்தூர் பகுதி, நேரு நெடுஞ்சாலையில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு சிலை வைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆலந்தூர்:
ஆலந்தூர் மண்டல குழு கூட்டம் மண்டலக்குழு தலைவர் என்.சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் கவுன்சிலர் நாஞ்சில் பிரசாத் பேசும்போது, 165-வது வார்டில் புதிதாக சேர்க்கப்பட்ட 7 தெருக்கள் இன்னும் என்னுடைய வார்டில் சேர்க்கப்படவில்லை. இதுகுறித்து நடந்து முடிந்த 6 மண்டல கூட்டத்திலும் பேசிவிட்டேன். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
அ.தி.மு.க. கவுன்சிலர் உஷா கூறும்போது, 157-வது வார்டில் குடிநீர் வாரியம் சார்பில் நடந்த பணியால் ஆங்காங்கே கல், மண் போன்ற கழிவுகள் அகற்றப்படாமல் சாலை யிலே உள்ளன. இதனால் ஆய்வுக்கு செல்லும்போது 2 முறை வழுக்கி விழுந்து விட்டேன் என்றார்.
இதுகுறித்து கேள்வி நேரத்தின் போது மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் தான் இதற்கு காரணம் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் சரமாரியாக குற்றச்சாட்டு கூறியதால் பரபரப்பாக இருந்தது.
இதைத்தொடர்ந்து ஆலந்தூர் பகுதி, நேரு நெடுஞ்சாலையில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு சிலை வைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மொத்தம் 20 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
- வாலாஜாபாத் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது
- ஒட்டிவாக்கம், தாங்கி, ஏகனாம்பேட்டை, கருக்குப்பேட்டை மற்றும் அவைகளை சுற்றியுள்ள கிராமங்களுக்கு மின் விநியோகம் தடைப்படும்.
காஞ்சிபுரம்:
வாலாஜாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதையடுத்து நாளை காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரையில் வாலாஜாபாத், புத்தகரம், ஊத்துக்காடு, நத்தாநல்லூர், தேவரியம்பாக்கம், வாரணவாசி, தென்னேரி, கட்டவாக்கம், புளியம்பாக்கம், சங்கராபுரம், தொள்ளாழி, களியனூர், தம்மனூர், அவளுர், அங்கம்பாக்கம், கம்பராஜபுரம், வரதராஜபுரம், வெங்குடி, பூசிவாக்கம், ஒட்டிவாக்கம், தாங்கி, ஏகனாம்பேட்டை, கருக்குப்பேட்டை மற்றும் அவைகளை சுற்றியுள்ள கிராமங்களுக்கு மின் விநியோகம் தடைப்படும்.
இந்த தகவலை செயற்பொறியாளர் பிரசாந் தெரிவித்து உள்ளார்.
- காஞ்சிபுரம் சந்தையில் அதிகமாக பூ வியாபாரம் நடைபெறுவது வழக்கம்.
- சாமந்திப்பூ மட்டும் ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் இருந்து வருகின்றன.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் பூ மார்க்கெட்டில் நகரை சுற்றி உள்ள அனைத்து கிராமங்களில் இருந்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பூக்களை வாங்கி வருகின்றனர். இதனை தவிர்த்தால் வியாபாரிகள் கோயம்பேடு மார்க்கெட் அல்லது வேலூர் பூ மார்க்கெட்டுக்கு தான் செல்ல வேண்டும்.
இதனால் காஞ்சிபுரம் சந்தையில் அதிகமாக பூ வியாபாரம் நடைபெறுவது வழக்கம். பெரும்பாலும் ஓசூர் பகுதியில் இருந்து ரோஜா பூக்கள் விற்பனைக்கு வருகிறது. இதேபோல் மல்லி, முல்லை ஆகிய பூக்கள் காஞ்சிபுரம் அருகே புரிசை, சந்தவேலுர், பிச்சிவாக்கம் உள்ளிட்ட பல கிராமங்களில் இருந்து வர வைக்கப்ப டுகிறது. சாமந்திப்பூ மட்டும் ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் இருந்து வருகின்றன.
கடந்த வாரம் ஆயுத பூஜை தினத்தன்று 1500 வரை விற்பனை செய்யப்பட்ட மல்லிகைப்பூ விலை தற்போது சரிந்து ரூ.200-க்கு விற்கப்படுகிறது. இதேபோல் ரூ.250-க்கு விற்ற சம்பங்கி பூ இன்று ரூ.20-க்கும், ரூ.400-க்கு விற்பனை செய்த சாமந்தி பூ விலை இன்று ரூ.50-க்கும் விற்கப்படுகிறது. திருமணம் மற்றும் முக்கிய விசேஷ நிகழ்ச்சிகள் இல்லாததால் தற்போது பூக்களின் விலை சரிந்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
- யாரோ மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த 3 பவுன் தங்கநகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
- வடமாநில இளைஞர் வீட்டின் பூட்டை உடைத்து செல்போனை திருடி சென்றுள்ளனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வளர்புரம் ஊராட்சி குளக்கரை தெருவை சேர்ந்தவர் அமலாராணி. இவர் ஸ்ரீபெரும்புதூர் பஜார் பகுதியில் மருந்து கடையில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது வீட்டை பூட்டி கொண்டு அவரது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். மீண்டும் வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அமலாராணி அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது யாரோ மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த 3 பவுன் தங்கநகைகளை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
அதே பகுதியில் வடமாநில இளைஞர் வீட்டின் பூட்டை உடைத்து செல்போனை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர்.
இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- 8-வது மாநில மாநாடு காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
- கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.
காஞ்சிபுரம்:
கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் 8-வது மாநில மாநாடு காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
தலைவர் தமிழரசு தலைமை தாங்கினார். 2-வது நாளாக நடைபெற்ற இந்த மாநாட்டில், தமிழகத்தில் 1200 கிளைகளுடன் செயல்பட்டு வரும் மாநில, மாவட்ட கூட்டுறவு வங்கிகளை இணைத்து தமிழ்நாடு வங்கி என உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நகர கூட்டுறவு வங்கிகளை மாவட்ட அளவில் இணைத்து பலப்படுத்த வேண்டும் .மத்திய அரசின் கொள்கை வழிகாட்டுதல்படி இந்த வங்கிகளை சிறு நிதி நிறுவனங்களாக மாற்றினால் அனைத்து வங்கிகளும் லாபம் ஈட்டும் வங்கிகளாக மாறும். கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மாநில பொதுச் செயலாளர் சர்வேசன், பொருளாளர் ஹரி கிருஷ்ணன், மாவட்ட கூட்டுறவு ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ரமணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- பெண்கள் உள்பட சுமார் 200-க்கும் மேற்பட்டோர் சாலையை சீரமைக்கக்கோரி இன்று காலை கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
- மறியல் போராட்டத்தால் கிழக்கு கடற்கரை காலையில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மாமல்லபுரம்:
கூவத்தூர் அருகே உள்ளது கானத்தூர் குப்பம். இந்த பகுதிக்கு கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து தனியாக 2கி.மீ. சாலை உள்ளது.
இந்த சாலை முற்றிலும் சேதம் அடைந்த குண்டும் குழியுமாக மாறி உள்ளது. இதனால் வாகன போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.
பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும், வாகனங்களும் வருவதில்லை என்று தெரிகிறது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 200-க்கும் மேற்பட்டோர் சாலையை சீரமைக்கக்கோரி இன்று காலை கிழக்கு கடற்கரை சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் கூவத்தூர் போலீசார் மறியிலில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த திடீர் மறியல் போராட்டத்தால் கிழக்கு கடற்கரை காலையில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- ஆலந்தூர் ஆபிரகாம் நகர் பகுதியில் நேற்று இரவு 8.30 மணி அளவில் சுமார் 25 ரவுடிகள் திடீரென திரண்டனர்.
- ரவுடிகள் ரகளையில் ஈடுபட்டது ஏன் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
ஆலந்தூர்:
சென்னை ஆலந்தூர் ஆபிரகாம் நகர் பகுதியில் நேற்று இரவு 8.30 மணி அளவில் சுமார் 25 ரவுடிகள் திடீரென திரண்டனர். அவர்களது கையில் அரிவாள், கத்தி மற்றும் பெட்ரோல் குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தன.
ரவுடிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டு கூச்சல் போட்டபடியே அப்பகுதியில் வலம் வந்தனர். சாலையில் நடந்து சென்றவர்களை கத்தியை காட்டி மிரட்டியதுடன், சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கினர். இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்து போனார்கள்.
கையில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருந்ததால் அருகில் செல்ல பொதுமக்கள் அச்சப்பட்டனர். இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ரவுடிக் கும்பல் பயங்கர ரகளையில் ஈடுபட்டதுடன் சாலையில் நடந்து சென்ற மக்களையும் சரமாரியாக வெட்டினர்.
இதில் அப்பகுதியைச் சேர்ந்த நவீன், ஷபீக், அபுபக்கர் ஆகிய 3 பேருக்கு தலையில் வெட்டு விழுந்தது. இதில் காயம் அடைந்த 3 பேரும் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் உயர் அதிகாரிகள் போலீஸ் படையுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போதும் ரவுடிக் கும்பலை சேர்ந்தவர்கள் அடங்கவில்லை.
ஆலந்தூர் ஆபிரகாம் நகரில் உள்ள சித்தர் கோவில் அருகே காலி மைதானம் ஒன்று உள்ளது. இந்த காலி மைதானத்துக்கு சென்ற ரவுடிக்கும்பல் அங்கு பெட்ரோல் குண்டுகளையும் சரமாரியாக வீசியது. இதில் பெட்ரோல் குண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.
அப்போது அவர்களை பிடிக்க சென்ற போலீசார் மீதும் குண்டுகள் வீசப்பட்டன. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
பின்னர் ரவுடிக்கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானது.
இதற்கிடையே தனியார் ஆஸ்பத்திரி சார்பில் சிகிச்சைக்காக கூடுதல் கட்டணம் கேட்பதாக கூறி காயம் அடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் போலீசார் விைரந்து சென்று அவர்களிடம் சமாதான பேச்சு நடத்தினர். இதன் பிறகே மறியல் கைவிடப்பட்டது.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவர்களில் நவீன், அபுபக்கர் ஆகியோர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். ஷபீக் மட்டும் மேல் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ரவுடிகள் ரகளையில் ஈடுபட்டது ஏன்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் 2 ரவுடிகளுக்கிடையே ஏற்பட்ட பழைய முன் விரோதமே மோதலுக்கு முக்கிய காரணமாக அமைந்திருந்தது தெரிய வந்தது.
ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ரவுடிகளான நாகூர் மீரான், ராபின் இருவரும் எதிர் எதிர் கோஷ்டிகளாக செயல்பட்டு வந்துள்ளனர். இவர்களில் நாகூர் மீரான் கடந்த ஆண்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ராபினும் அவரது கூட்டாளிகளுமே இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக போலீஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நாகூர் மீரான் கொலைக்கு பழிக்கு பழி வாங்குவதற்காக அவனது ஆட்கள் ராபினை தேடி வந்துள்ளனர்.
அப்போது ராபினின் உறவினரான அனில் என்பவர் நாகூர் மீரானின் ஆட்களிடம் சிக்கியுள்ளார். அவரை கடத்திச்சென்ற ரவுடிகள் ராபின் இருக்கும் இடத்தை கேட்டு அடித்து உதைத்துள்ளனர். பின்னர் ஆதம்பாக்கம் பகுதிக்கு அழைத்து வந்து இறக்கி விட்டுச் சென்றுள்ளனர். இதன் தொடர்ச்சியாகவே ரவுடிகள் வெடிகுண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து ஆலந்தூர் பகுதியில் நேற்று இரவு முதல் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ரவுடிகளுக்கிடையே மோதல் சம்பவங்கள் ஏதும் நடைபெற்று விடக்கூடாது என்பதற்காக போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள். அப்பகுதி முழுவதும் போலீசார் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
சென்னை மாநகர் முழுவதும் ரவுடிகள் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பெட்ரோல் குண்டுகளை வீசி ரவுடிகள் பொதுமக்களை அச்சுறுத்தி இருப்பது போலீஸ் உயர் அதிகாரிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- துபாயில் இருந்து பயணிகள் விமானம் இரவு வந்தது. அதில் வந்த பயணிகளை, சுங்கதுறை அதிகாரிகள் சோதனை செய்தனா்.
- சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் அடுத்தடுத்து நடத்திய சோதனைகளில் ரூ.60.5 லட்சம் மதிப்புடைய 1.3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து பயணிகள் விமானம் இரவு வந்தது. அதில் வந்த பயணிகளை, சுங்கதுறை அதிகாரிகள் சோதனை செய்தனா்.
சென்னையைச் சேர்ந்த பயணி ஒருவர் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரை தனி அறையில் வைத்து சோதனை செய்தனர். அவர் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து ரூ.30.5 லட்சம் மதிப்புடைய 690 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரிந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதேப்போல் அபுதாபியில் இருந்து பயணிகள் விமானம், சென்னை விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த சிவகங்கையை சேர்ந்த பழனி முருகன் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரை நிறுத்தி சோதித்தனர்.
அவருடைய உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த 685 கிராம் தங்கத்தை சுங்கதுறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதன் மதிப்பு ரூ.30 லட்சம்.
சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் அடுத்தடுத்து நடத்திய சோதனைகளில் ரூ.60.5 லட்சம் மதிப்புடைய 1.3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
- காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக விட்டு விட்டு கன மழை பெய்து வருகிறது.
- காஞ்சிபுரம் பழைய ரெயில் நிலையம் அருகே மழை நீர் செல்ல வழியில்லாததால் தேங்கி நிற்கிறது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக விட்டு விட்டு கன மழை பெய்து வருகிறது. நேற்று இரவும் பலத்த மழை கொட்டியது. இதனால் தாழ்வான இடங்களில் மழை நீர் குளம் போல் தேங்கியது.
காஞ்சிபுரம் பழைய ரெயில் நிலையம் அருகே மழை நீர் செல்ல வழியில்லாததால் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.
இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள வந்தவாசி சாலையில் சுமார் 50 ஆண்டுகள் பழமையான புளியமரம் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. இதில் அதன் அருகில் இருந்த 5 கடைகளில் மேற்கூரை மற்றும் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த 3 மோட்டார் சைக்கிள்கள் சேதம் அடைந்தன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சரிந்து விழுந்த மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக வந்தவாசி - காஞ்சிபுரம் முக்கிய சாலை வழியாக செல்லும் வாகனங்கள் ஒரிக்கை வழியாக திருப்பி விடப்பட்டது. மரம் சரிந்து விழுந்தபோது, அருகில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பப்பட்டது.






