என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பொதுமக்கள் அதிகம் கூடக்கூடிய இடங்களில் பட்டாசுக்கடைகள் நடத்த கூடாது- தீயணைப்பு அலுவலர் அறிவிப்பு
- கியாஸ் சிலிண்டர் கிடங்குகள், பெட்ரோல் நிலையம் அருகே பட்டாசு கடைகள் நடத்த அனுமதியில்லை.
- பட்டாசுகளை கையாளும் முறைகள் தெரிந்த அடிப்படை பயிற்சி பெற்றவர்களை மட்டுமே பணிக்கு அமர்த்தியிருக்க வேண்டும்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் பஸ் நிலையம் அருகே பட்டாசுக்கடை உரிமையாளர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட தீயணைப்பு அலுவலர் பிரியதர்ஷினி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் பிரியதர்ஷினி பேசியதாவது:-
அரசு அனுமதி பெற்று பட்டாசு கடைகள் நடத்தினாலும் அங்கு எந்த காரணத்தை முன்னிட்டும் வேறு பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது. முக்கியமாக பொதுமக்கள் அதிகமாக கூடக்கூடிய இடங்களில் பட்டாசு கடைகள் நடத்த கூடாது.
கியாஸ் சிலிண்டர் கிடங்குகள், பெட்ரோல் நிலையம் அருகே பட்டாசு கடைகள் நடத்த அனுமதியில்லை. பட்டாசு கடைகளில் புகைப்பிடிக்க கூடாது என்று எழுதப்பட்ட வாசகம் அவசியம் இருக்க வேண்டும். பட்டாசுகளை கையாளும் முறைகள் தெரிந்த அடிப்படை பயிற்சி பெற்றவர்களை மட்டுமே பணிக்கு அமர்த்தியிருக்க வேண்டும். பொதுமக்கள் பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாட அனைவரது ஒத்துழைப்பும் அவசியம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் பட்டாசுக்கடை உரிமையாளர்கள் சங்க தலைவர் எம்.சம்பத், செயலாளர் துளசிநாதன், பொருளாளர் நரேந்திரன் உள்பட பட்டாசு கடை உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.






