என் மலர்
காஞ்சிபுரம்
பள்ளிக்கரணை, நெசவாளர் நகர், வள்ளலார்தெருவை சேர்ந்தவர் ரகுராஜ் (வயது 32). கட்டிட தொழிலாளி. இவர் மது குடித்து வந்து வீட்டில் ரகளையில் ஈடுபட்டார். இதனை அவரது மனைவி கண்டித்தார்.
இதனால் மனவேதனையடைந்த ரகுராஜ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பள்ளிக்கரணை போலீசார் விசாணை நடத்தி வருகிறார்கள்.
இதேபோல், கோயம்பேடு மேட்டுக்குப்பம் காந்திநகரை சேர்ந்தவர் மணிகண்டன். கொத்தனார். இவரது மனைவி சரளா. மணிகண்டன் சரியாக வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு மனைவியுடம் தகராறு செய்து வந்தார்.
நேற்று மது குடித்து விட்டு தகராறில் ஈடுபட்டார். இதை சரளா கண்டித்து திட்டினார். இதனால் மனமுடைந்த மணிகண்டன் வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
செங்கல்பட்டை அடுத்த திருமணி ஆலன் சாலையை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி மணியம்மாள். இவர்கள் இருவரும் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார்கள்.
இவர்களது மகன் லோகேஷ். 10-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்றுவிட்டனர். லோகேசுக்கு நேற்று தேர்வு இல்லாததால் வீட்டில் படித்துக் கொண்டிருந்தார். மாலை 4 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் 2 மர்ம ஆசாமிகள் அங்கு வந்தனர். அவர்கள் குடிக்க தண்ணீர் வேண்டும் என்று கேட்டு வீட்டுக்குள் சென்றனர்.
பின்னர் இருவரும் உனது தாயார் மார்க்கெட்டில் நிற்கிறார். வீட்டில் உள்ள நகை, பணத்தை வாங்கி வருமாறு எங்களை அனுப்பி வைத்தார் என்று மயக்கும் வகையில் பேசினார்.
அவர்களின் பேச்சில் மயங்கிய லோகேஷ் பீரோவை திறந்து அதில் இருந்த 36 பவுன் நகை, ரூ. 53 ஆயிரத்து 600 பணத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தார். அதை வாங்கியதும் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.
மாலையில் வேலை முடிந்து மணியும் அவரது மனைவியும் வீடு திரும்பிய போது தான் மகனை ஏமாற்றி நகை-பணத்தை கொள்ளையடித்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நிலவிவரும் கடுமையான குடிநீர் பிரச்சினையை தீர்க்க மத்திய-மாநில அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காஞ்சீபுரம் தாலுக்கா அலுவலகம் எதிரில் பா.ம. க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநில துணை பொதுச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான திருக்கச்சூர் கே.ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச் செயலாளர் பொன்.கங்காதரன், முன்னாள் எம்.எல். ஏ.வும், மாநில துணைத் தலைவருமான சக்தி கமலம்மாள் காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் மகேஷ்குமார், நிர்வாகிகள் வ.உமாபதி, செவிலிமேடு வ.செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க கோரி பல்வேறு கோஷங்கள் எழுப்பினர்.
புதுவை முதல்-மந்திரி நாராயணசாமி இன்று காலை டெல்லி செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களை சந்தித்தார்.
வெளிநாடுகளில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு வரும் சரக்குகள், புதுச்சேரி துணை துறைமுகத்திற்கு கண்டெய்னர்கள் மூலம் ஏற்றி சென்று அங்கிருந்து தென் மாநிலங்களுக்கு அனுப்புவது, மற்றும் புதுவை வரும் சரக்குகள் சென்னை துறைமுகத்திற்கு அனுப்புவது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று மத்திய அமைச்சர்கள் நிதின் கட்காரி, பொன்.ராதா கிருஷ்ணன் முன்னிலையில் கையெழுத்தாகிறது.
சென்னை துறைமுகத்திற்கு வரும் கப்பல்கள், கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதால் சரக்கை இறக்க 15 நாட்களுக்கு மேல் ஆகிறது. அந்த கால கெடுவை குறைக்க புதுச்சேரி துறைமுகத்தை சென்னை துறைமுகத்தின் துணை துறைமுகமாக அங்கீகரித்து இருக்கிறார்கள். இதில் வரும் வருமானம் சரிபாதியாக பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

சென்னை ஆர்.கே. நகரில் நடக்க உள்ள இடைத்தேர்தலில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி பலமாக இருக்கிறது. ஆர்.கே. நகரை பொறுத்த மட்டும் கொடுக்கப்பட்ட திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. எனவே தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு அதிகமாகவும், பிரகாசமாகவும் உள்ளது. தமிழக மாணவர் தற்கொலைக்கு பல்கலைக்கழக நிர்வாகம் தான் பொறுப்பு ஏற்க வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசு சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னையில் இருந்து புதுவைக்கு சுற்றுலா பயணிகள் சொகுசு கப்பல் திட்டம் குறித்து ஆலோசித்து வருகிறோம். அதற்கான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
செங்கல்பட்டு:
கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் ரவிச்சந்திரன்.
நேற்று இரவு கூடுவாஞ்சேரி கிழப்பாக்கத்தில் தனது மோட்டார்சைக்கிளில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார்.
அப்போது ஒரு கடையின் அருகே 2 பேர் நின்று பேசி கொண்டு இருந்தனர். ரவிச்சந்திரன் சந்தேகத்தின் பேரில் அவர்களிடம் விசாரணை நடத்தினர். 2 பேரும் செல்போன் மூலம் தனது நண்பர்களுக்கு தகவல் கொடுத்தனர்.
உடனே அங்கு 3 பேர் வந்தனர். அவர்கள் போலீஸ்காரர் ரவிச்சந்திரனிடம் தகராறு செய்தனர்.
பின்னர் 5 பேரும் சேர்ந்து ரவிச்சந்திரனை கையால் தாக்கி அவரிடம் இருந்து செல்போன்- பணத்தை பறித்து சென்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கூடுவாஞ்சேரி போலீசார் விரைந்து சென்று ரவிச்சந்திரனை மீட்டு சிகிச்சைக்காக பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய 5 பேரை தேடி வருகிறார்கள்.
தாம்பரம் பஸ் நிலையம் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொருளாளர் நாகப்பன் தலைமையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரண உதவித் தொகை வழங்க வேண்டும். விவசாயிகளின் வங்கி கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திடீரென போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பஸ் நிலையம் அருகே மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து நாகப்பன் உள்பட 25 பேரை போலீசார் கைது செய்தனர்.
தாம்பரம்:
குரோம்பேட்டையை அடுத்த அஸ்தினாபுரம், மகேஷ்வரி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 53). தொழிலாளி. இவரும் அதே பகுதியை சேர்ந்த மீன் வியாபாரி வெங்கடேசனும் நண்பர்கள்.
நேற்று இரவு இருவரும் மது அருந்த அதே பகுதியான திருமலைநகரில் உள்ள மதுக்கடைக்கு சென்றனர். மது பாட்டிலை வாங்கிவிட்டு அருகில் மறைவான இடத்தில் மது குடித்தனர்.
அப்போது வெங்கடேசனுக்கு குறைந்த அளவு மது ஊற்றியதாக தெரிகிறது. இதில் நண்பர்கள் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.
ஆத்திரம் அடைந்த வெங்கடேசன் சரமாரியாக சுப்பிரமணியை தாக்கி கீழே தள்ளினார். மேலும் அருகில் கிடந்த பெரிய கல்லை அவரது தலையில் போட்டார். இதில் சம்பவ இடத்திலேயே சுப்பிரமணி பரிதாபமாக இறந்தார்.
இதனை பார்த்து பயந்து போன வெங்கடேசன் தப்பி ஓடி விட்டார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் சுப்பிரமணி கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து சிட்லப்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இந்த நிலையில் இன்று காலை வெங்கடேசனை போலீசார் கைதுசெய்தனர்.
நேற்று இரவு நடந்த மோதலில் அவருக்கும் உடலில் பல இடங்களில் காயம் இருந்தது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர்.
திருப்போரூர்:
திருப்போரூர் கிழக்கு மாட வீதியில் வசித்து வருபவர் சண்முகம். இவர் திருப்போரூரில் உள்ள வங்கியில் அடமானம் வைத்த 4 பவுன் நகையை மீட்டு விட்டு ரூ. 44 ஆயிரம் பணத்தை எடுத்து வந்தார்.
அவற்றை தன்னுடைய மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்துக் கொண்டு தண்டலத்தில் உள்ள தனியார் ஹார்டு வேர்ஸ் கடைக்கு சென்றார். சிறிது நேரம் கழித்து மோட்டார் சைக்கிளை எடுக்க வந்த போது பெட்டி உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த நகை- பணத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.
கடையில் வைக்கப்பட்டிருந்த கண்காமிப்பு கேமராவில், 2 மோட்டார் சைக்கிளில் 4 பேர் வருவதும் அதிலிருந்து கீழே இறங்கும் ஒருவன் சண்முகத்தின் மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து நகை-பணத்தை கொள்ளையடிக்கும் காட்சியும் பதிவாகி உள்ளது. இதை வைத்து திருப்போரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஸ்ரீபெரும்புதூர்:
காஞ்சீபுரம் கிழம்பியில் மாசாணியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று இரவு பவுர்ணமி திருவிழா கொண்டாடப்பட்டது.
பின்னர் சாமி மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அப்போது அதே பகுதியை சேர்ந்த சிலர் அமைதியாக சாமியை ஊர்வலமாக கொண்டு செல்லுங்கள் என்று கூறினர். அதற்கு விழா தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் 2 தரப்பினர் இடையே மோதல் உருவானது. பின்னர் உருட்டு கட்டையால் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். பின்னர் ஒரு தரப்பினர் அந்த பகுதியில் இருந்த சுமார் 20 வீடுகளை அடித்து நொறுக்கினர். அங்கிருந்த வாகனங்களையும் தாக்கினர்.
தகவல் அறிந்ததும் பால செட்டிசத்திரம் போலீசார் விரைந்து சென்றனர். போலீசை பார்த்ததும் வீடுகளை சூறையாடியவர்கள் தப்பி ஓடி விட்டனர். இந்த மோதலில் காயம் அடைந்த விழா தரப்பினர் 10 பேரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த மோதலில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், தாக்குதல் நடத்தியவர்களை உடனே கைது செய்யகோரி சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் காஞ்சீபுரம் கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு ஸ்ரீநாத் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினார். இதைதொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
துரைப்பாக்கத்தை அடுத்த கண்ணகிநகரை சேர்ந்தவர் கிட்டா என்கிற கிருஷ்ணமூர்த்தி (33). பழைய குற்றவாளி. கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலை பகுதியில் உள்ள வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து வந்தான். அவன் மீது துரைப்பாக்கம், செம்மஞ்சேரி, கண்ணகிநகர், கானாத்தூர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்த அவன் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு சாலையில் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று கொண்டிருந்தான். அப்போது ரோந்து சுற்றி வந்த செம்மஞ்சேரி போலீசார் அவனை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவனிடம் இருந்து 26 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ரேஷன் கடைகளில் உணவுப்பொருட்கள் முறையாக வழங்காததை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதே போல் காஞ்சீபுரம்- திருவள்ளூர் மாவட்டத்திலும் போராட்டம் நடைபெற்றது.
தாம்பரத்தில் உள்ள ரேஷன் கடை முன்பு இன்று தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினார்கள். ரேஷன் பொருட்கள் போன்று வரிசையாக மூட்டை கட்டி வைத்து இருந்தனர்.
அதில் சர்க்கரை, பாமாயில், துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, மண்எண்ணெய் ஆகியவை மரணம் என்று எழுதி வைத்து இறுதி சடங்கு நடத்தினார்கள். அதன் அருகில் பெண்கள் சமையல் பாத்திரத்தை அடுப்பில் வைத்து உணவு பொருட்கள் இல்லாமல் திண்டாடுவது போல போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் நகரில் பெரியகுப்பம் ரேஷன் கடை முன்பு நகர செயலாளர் சி.சு.ரவிச்சந்திரன் தலைமையிலும், நேதாஜி சாலையில் கமலக்கண்ணன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் வி.ஜி.ராஜேந்திரன்.எம்.எல்.ஏ., கலந்துகொண்டார்.
காக்களூர் ம.பொ.சி.சாலை கடை முன்பு தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ஜெயசீலன், வெள்ளியூரில் வடக்கு ஒன்றிய செயலாளர் டி.ராமகிருஷ்ணன், களாம்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன் விவசாய அணி அமைப்பாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருப்பாச்சூரில் பூண்டி மேற்கு ஒன்றிய செயலாளர் டி.கிறிஸ்டி, வெங்கத்தூரில் கடம்பத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.அரி கிருஷ்ணன், கடம்பத்தூரில் மாவட்ட அவைத்தலைவர் கே.திராவிடபக்தன், ஆர்.டி.இ.ஆதிசேஷன், கொண்டஞ்சேரியில் மேற்கு ஒன்றிய செயலாளர் மோ.ரமேஷ், ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஊத்துக்கோட்டை பழைய பஸ் நிலையம் பின்புறம் உள்ள ரேஷன் கடையில் பொதுக்குழு உறுப்பினர் அபிராமி குமரவேல், போலீஸ் நிலையம் அருகே உள்ள கடையில் நகர செயலர் அப்துல் ரஷீத் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
இதே போல ஊத்துக்கோட்டையில் மற்ற ரேஷன் கடைகளில் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ராதாகிருஷ்ணன், சும்சுதீன், அப்துல் ரகீம், சிராஜுதீன், மோகன் தலைமையில் முற்றுகை போராட்டம் நடந்தது.
கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் உள்ள 62 ரேஷன் கடைகள் முன்பு தி.மு.க.வினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
நேமலூர் ரேஷன் கடையில் ஊராட்சி ஒன்றிய செயலாளர் மனோகரன் தலைமையிலும், மாநெல்லூரில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் குணசேகரன் தலைமையிலும், கும்மிடிப்பூண்டியில் மாவட்ட செயலாளர் கி.வேணு, தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராஜன் தலைமையிலும் போராட்டம் நடந்தது.
காஞ்சீபுரம் ரெயில் ரெயில் நிலைய சாலையில் உள்ள ரேஷன் கடை முன்பு நகர செயலாளர் சண்பிராண்டு ஆறுமுகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் எழிலரசன் எம்.எல்.ஏ. உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
செங்கல்பட்டு டவுனில் 33 வார்டுகளில் உள்ள அனைத்து ரேஷன் கடைகள் முன்பும் முற்றுகை போராட்டம் நடந்தது. நகர செயலாளர் நரேந்திரன், முன்னாள் கவுன்சிலர்கள், கிருஷ்ணமூர்த்தி, சரவணன், பிரதாபன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
வண்டலூரில் உள்ள ரேஷன் கடை முன்பு வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ. தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய செயலாளர் தண்டபாணி, மாவட்ட இளைஞரணி செயலாளர் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மீஞ்சூர் நகர தி.மு.க. செயலாளர் மோகன்ராஜ் தலைமையில் மீஞ்சூர் மற்றும் நாலூர் ஆகிய பகுதிகளில் உள்ள ரேஷன் கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. 2 இடங்களிலும் 200-க்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
அத்திப்பட்டு ரேஷன் கடை முன்பு கதிர்வேல் தலைமையில் 150-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மெதூர் பகுதி ரேஷன் கடையில் தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் சுகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் 200-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் தசீஷ் தலைமையிலும், படப்பையில் குன்றத்தூர் ஒன்றிய செயலாளர் மனோகரன் தலைமையிலும், மேவலூர் குப்பத்தில் ஒன்றிய செயலாளர் கோபால் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட் தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர் சங்கர் மரணம் அடைந்துள்ளார். அவரது குடும்பத்துக்கு த.மா.கா. சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
மீனவர் பிரச்சினையில் இன்னும் சரியான முடிவு வரவில்லை. மீனவர்கள் தொடர்ந்து போராட்டம் மற்றும் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இதனால் அவர்களது வாழ் வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு உடனடியாக இலங்கை அரசிடம் பேசி ஒரு நல்ல முடிவை விரைவில் எடுக்க வேண்டும். மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு வழிவகை செய்ய வேண்டும்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கான போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் இருந்து இத்திட்டத்துக்கு ஆக்கப்பூர்வமான நல்ல முடிவு வரும் என்று தமிழகம் குறிப்பாக நெடுவாசல் பகுதி மக்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
மத்திய அரசு அப்பகுதி மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் முடிவெடுக்க வேண்டும். அத்திட்டத்தை திணிக்க கூடாது. கட்டாயப்படுத்த கூடாது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து மூத்த நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசித்து முடிவு அறிவிக்கப்படும். பொதுவாக இடைத்தேர்தலில் நம்பிக்கை இல்லை.

அதனால்தான், இடைத் தேர்தலில் த.மா.கா. போட்டியிடுவதில்லை. 5 மாநில தேர்தலில் உத்தரபிரதே சத்தை மக்கள் முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளனர். சமாஜ்வாடி-காங்கிரசை மக்கள் நிராகரித்துள்ளனர்.
மணிப்பூர் மற்றும் கோவாவில் தொங்கு சட்டசபை ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு ஆட்சியாளர்கள் மீதும், எதிர்க்கட்சிகள் மீது நம்பிக்கை இல்லாததே இதற்கு காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.






