என் மலர்
செய்திகள்

இடைத்தேர்தலில் த.மா.கா.வுக்கு நம்பிக்கை இல்லை: ஜி.கே.வாசன் பேட்டி
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட் தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர் சங்கர் மரணம் அடைந்துள்ளார். அவரது குடும்பத்துக்கு த.மா.கா. சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
மீனவர் பிரச்சினையில் இன்னும் சரியான முடிவு வரவில்லை. மீனவர்கள் தொடர்ந்து போராட்டம் மற்றும் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இதனால் அவர்களது வாழ் வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு உடனடியாக இலங்கை அரசிடம் பேசி ஒரு நல்ல முடிவை விரைவில் எடுக்க வேண்டும். மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு வழிவகை செய்ய வேண்டும்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கான போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் இருந்து இத்திட்டத்துக்கு ஆக்கப்பூர்வமான நல்ல முடிவு வரும் என்று தமிழகம் குறிப்பாக நெடுவாசல் பகுதி மக்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
மத்திய அரசு அப்பகுதி மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் முடிவெடுக்க வேண்டும். அத்திட்டத்தை திணிக்க கூடாது. கட்டாயப்படுத்த கூடாது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து மூத்த நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசித்து முடிவு அறிவிக்கப்படும். பொதுவாக இடைத்தேர்தலில் நம்பிக்கை இல்லை.

அதனால்தான், இடைத் தேர்தலில் த.மா.கா. போட்டியிடுவதில்லை. 5 மாநில தேர்தலில் உத்தரபிரதே சத்தை மக்கள் முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளனர். சமாஜ்வாடி-காங்கிரசை மக்கள் நிராகரித்துள்ளனர்.
மணிப்பூர் மற்றும் கோவாவில் தொங்கு சட்டசபை ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு ஆட்சியாளர்கள் மீதும், எதிர்க்கட்சிகள் மீது நம்பிக்கை இல்லாததே இதற்கு காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.






