என் மலர்
காஞ்சிபுரம்
துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்தவர் சீனிவாசன் (28) இவர் இன்று காலை மோட்டார் சைக்கிளில் துரைப்பாக்கத்தில் இருந்து பாரிமுனை நோக்கி சென்றார். பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி நகர் காமராஜர் சாலையில் சென்ற போது எதிரே வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் சீனிவாசன் சம்பவ இடத்திலேயே இறந்தார். விபத்து நடந்தவுடன் லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
இது குறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டுக்கு ஹவாலா பணம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்று இரவு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். சிங்கப்பூர், இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளுக்கு செல்லும் பயணிகளை தீவிர சோதனை செய்தனர்.
நள்ளிரவு 1.30 மணிக்கு சிங்கப்பூர் புறப்படும் விமானத்தில் ஏற வந்த சென்னையைச் சேர்ந்த அப்துல்சலாம், அப்துல் ரசாக் ஆகியோர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களிடம் சிங்கப்பூர் செல்ல சுற்றுலா விசா இருந்தது.
அவர்கள் வைத்திருந்த அட்டை பெட்டியை சோதனை செய்தபோது முறுக்கு, மிக்சர் பாக்கெட்டுகள் இருந்தன. அவைகளை உடைத்து பார்த்தபோது அமெரிக்க டாலர், யூரோ பணம் இருந்தன. இதன் மதிப்பு ரூ.40 லட்சமாகும். இருவரும் வெளிநாட்டு பணத்தை கடத்தி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
இதேபோல். ராமநாதபுரத்தைச் சேர்ந்த கான் என்பவர் சிங்கப்பூர் செல்ல வந்தார். அவர் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள் தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர்.
இதில் அவர் உள்ளாடையில் யூரோ பணத்தை மறைத்து கடத்தி சென்றது தெரிய வந்தது. அவரிடமிருந்து ரூ.15 லட்சம் மதிப்புள்ள யூரோ கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவரை போலீசார் கைது செய்தனர்.
3 பேரும் சிங்கப்பூரில் உள்ள ஒருவரிடம் வெளிநாட்டு பணத்தை கொடுக்க சென்றது தெரிய வந்தது. இவர்களிடம் பணத்தை கொடுத்து அனுப்பியது யார் என்று விசாரித்து வருகிறார்கள்.
ஆலந்தூர்:
டெல்லி செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க. பொதுக்குழுவை கூட்டி தேர்வு செய்த சசிகலா தலைமையில் அ.தி.மு.க. ஒன்றாக செயல்பட்டு வருகிறது. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் ஒன்றுபட்டு தான் உள்ளோம். அ.தி.மு.க. கட்சிக்குள் பிளவுகள் இல்லை.
இரட்டை இலை சின்னம் எங்களுக்குதான். அந்த இரட்டை இலை சின்னத்தில் தினகரன் போட்டியிட்டு வெற்றி பெறுவார். எம்.ஜி.ஆர். ஆரம்பித்த கட்சி. ஜெயலலிதாவின் நல்லாட்சி தொடரும். அ.தி.மு.க.வின் அனைத்து தொண்டர்களும் ஒன்று பட்டு தான் இருக்கிறோம்.

எங்களுடைய ஒரே குறிக்கோள் தி.மு.க. ஆட்சிக்கு வர கூடாது. இதே காரணத்தால் தான் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா எதிர்த்து நின்றார்கள். அந்த உணர்வு, கொள்கை அ.தி.மு.க. தொண்டர்களிடையே உள்ளது.
இந்த 4 ஆண்டுகள் மட்டும் இல்லை. எந்த தேர்தல் வந்தாலும் நாங்கள் வெற்றி பெறுவோம்.
இவ்வாறுஅவர் கூறினார்.
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மொத்தம் 2 அணு உலைகள் உள்ளன. இதில் தலா 200 மெகாவாட் வீதம் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் 75 சதவீத மின்சாரம் தமிழக தேவைக்காக வழங்கப்படுகிறது.
முதல் அணுஉலையில் உள்ள ரியாக்டரின் ஆயுட் காலம் 25 ஆண்டுகள் மட்டுமே. இருப்பினும் அதனை புதுப்பித்து கடந்த 35 ஆண்டுகளாக பராமரித்து இயக்கி வருகிறார்கள்.
இந்த நிலையில் ரியாக்டரை மீண்டும் பராமரிப்பு செய்து கூடுதலாக இயக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்கான ஆய்வு பணி தொடங்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து முதல் அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது. 2-வது அணுஉலையில் மட்டும் 200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் அருகே காரைப்பேட்டை பகுதியில் வசிப்பவர் இந்திரன். இவரது மகள் அமுதவல்லி (19). இவர் டிப்ளமோ படிப்பு முடித்துள்ளார். வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து அவரது தாய் மகேஸ்வரி காஞ்சீபுரம் தாலுக்கா போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
திருப்போரூர்:
தாம்பரத்தை அடுத்த கோவிலம்பாக்கம், காந்தி நகர் 17-வது தெருவை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் சக்திவேல் (வயது 22). செம்மஞ்சேரியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று மாலை அவர் உடன் படிக்கும் நண்பர்கள் சசிகுமார் (22), ரவிக் குமார் (21), பிரகாஷ் (22) ஆகியோருடன் மாமல்லபுரத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
2 மோட்டார் சைக்கிளில் சென்ற அவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்றனர். பின்னர் அவர்கள் இன்று அதிகாலை 4 மணி அளவில் மாமல்லபுரத்தில் இருந்து புறப்பட்டனர்.
கேளம்பாக்கம் ஜங்ஷன் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் அவர்கள் வந்து கொண்டிருந்தனர். அப்போது மரக்காணத்தில் இருந்து இளநீர் ஏற்றி வந்த சரக்கு வேன் திடீரென 2 மோட்டார் சைக்கிள்கள் மீதும் பயங்கரமாக மோதியது. இதில் பல அடி தூரத்துக்கு மோட்டார் சைக்கிள்கள் தூக்கி வீசப்பட்டன.
மோதிய வேகத்தில் சரக்கு வேனும் சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதில் பலத்த காயம் அடைந்த மாணவர்கள் சக்திவேல், ரவிக்குமார், சசிகுமார் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
பிரகாஷ் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடியபடி கிடந்தார். விபத்து நடந்ததும் கவிழ்ந்த வேனில் இருந்த டிரைவர் தப்பிச்சென்று விட்டார். அவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.
இது குறித்து கேளம்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
பலியான 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. படுகாயம் அடைந்த பிரகாசுக்கு கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பலியான ரவிக்குமாரின் சொந்த ஊர் செய்யாறு. இவரது தந்தை கருணாநிதிபொதுப்பணித்துறையில் அதிகாரியாக உள்ளார். சசிகுமாருக்கு பாளையங் கோட்டையை அடுத்த வி.எம்.சத்திரம் ஆகும். காயம் அடைந்த பிரகாசுக்கு திண்டிவனம்.
இவர்கள் 3 பேரும் செம்மஞ்சேரி அருகே தனியார் விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தனர். மாமல்லபுரத்துக்கு நண்பர் சக்திவேலுடன் சுற்றுலா சென்று திரும்பியபோது விபத்தில் சிக்கி உள்ளனர்.
இதுபற்றி அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சென்னைக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள்.
விபத்தில் 3 கல்லூரி மாணவர்கள் பலியான சம்பவம் நண்பர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் தீனன் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையாவிடம் ஒரு மனு கொடுத்தார்.
காஞ்சீபுரத்தில் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு கைத்தறி பட்டு பூங்கா சாய தொழில் கூடம் கடந்த 2010-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு துவக்கப்பட்டது. பின்பு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் பேரறிஞர் அண்ணா கைத்தறி பட்டு பூங்கா லிமிடெட் என்ற பெயரில் மாற்றம் செய்யப்பட்டு துவக்கி வைக்கப்பட்டது. ஆனால் அது இன்றுவரை செயல்படவில்லை.
மேலும் சாயத்தொழில் சுற்றுப்புற சூழலை கருத்தில் கொண்டு காஞ்சீபுரம் அடுத்த ஐயம்பேட்டை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது அவர்கள் குடி இருக்கும் வீட்டிலேயே வீட்டு மின்சாரத்தை பயன்படுத்தி தொடர்ந்து சாய தொழில் நடந்து வருகின்றனர்,
மேற்படி வீட்டில் இயங்கி வரும் தொழிற்சாலையின் கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமல் வீட்டு கழிவு நீர் வெளியேரும் டிரைனேஜ் மூலம் வெளியேறுவதால் வீட்டு இணைப்புகளில் கழிவுநீர் புகுந்து கொசு உற்பத்தியாகி தொற்று நோய், விஷ காய்ச்சல், யானைக்கால் நோய் போன்ற மனித உயிருக்கு ஆபத்தாகும் சூழ்நிலை உள்ளது.
காஞ்சீபுரம் அம்மங்காரத் தெரு, பிள்ளையார்பாயைம், வாலாஜாபாத், ஐயன் பேட்டை பகுதிகளில் சாய தொழிற்சாலைகளின் கழிவு நீர் குளங்களில் கலப்பதால் அருகில் வசிப்பவர்களுக்கும் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.
ஆகவே மாவட்ட நிர்வாகம் இதனை கருத்தில்கொண்டு சுற்றுப்புறச்சூழலை பாதிக்கும் இதுபோன்ற சாய தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுத்து தொற்று நோய் பரவாமல் தடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தாம்பரம்:
தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் ஆர்.எம்.கே.நகர் லால்பகதூர் சாஸ்திரி தெருவை சேர்ந்தவர் கணேஷ் (வயது 44). கொத்தனார். இவரது முதல் மனைவி தேவி.
இவர்கள் இருவருக்கும் பல வருடங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதையடுத்து தேவி கணவரை பிரிந்து விழுப்புரத்தில் தனியாக வசிக்கிறார்.
இதையடுத்து கணேஷ் கடந்த 11 வருடங்களுக்கு முன்பு சத்யா (30) என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சக்திகுமார் (10) என்ற மகன் இருக்கிறான்.
கணேசுக்கு குடிப்பழக்கம் இருந்தது. அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவி சத்யாவிடம் தகராறு செய்து வந்தார்.
கடந்த வாரம் கணேஷ் விழுப்புரத்துக்கு சென்றார். அங்கு முதல் மனைவி தேவியை சந்தித்து பேசி விட்டு வந்தார். இந்த தகவல் சத்யாவுக்கு தெரியவந்தது. முதல் மனைவியை கணேஷ் சந்தித்ததற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பாக கணவன்-மனைவி இடையே கடந்த 1 வாரமாக பிரச்சினை நடந்து வந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக கணேசும் தினமும் குடிபோதையில் வந்து மனைவியிடம் தகராறு செய்தார்.
நேற்று மாலையில் கணேஷ் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.முதல் மனைவியை இனி சந்திக்கக்கூடாது என்று சத்யா கூறினார். அதற்கு அடிக்கடி சென்று பார்ப்பேன் என்று கணேஷ் வாக்குவாதம் செய்தார். இதனால் கணவன்-மனைவி இடையே மோதல் முற்றியது.
இதற்கிடையே சத்யா வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்தார். தனது கணவர் குடிபோதையில் அம்மிக்கல் மீது விழுந்து விட்டதாகவும் தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டுவதாகவும் அக்கம் பக்கத்திரிடம் கூறினார்.
இதையடுத்து 108 ஆம்புலன்சுக்கு போன் செய்யப்பட்டது. ஆம்புலன்ஸ் வேனில் மருத்துவ ஊழியர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் கணேஷ் உடலை பரிசோதித்த போது அவர் இறந்து விட்டது தெரியவந்தது.
இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பீர்க்கரங்கரணை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் கணேசின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். மனைவி சத்யாவிடம் விசாரித்த போது முதலில் கணவர் அம்மிக்கல் மீது தவறி விழுந்து இறந்து விட்டதாக அவர் கூறினார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் எழும்பியதால் போலீசார் துருவி துருவி விசாரித்தனர். அப்போது கணவனை அடித்து கொன்றதாக சத்யா கூறினார்.
நேற்று இரவு தகராறு நடந்தபோது ஆத்திரம் அடைந்து சுத்தியலை எடுத்து கணவனின் தலையில் அடித்து கொன்றதாக சத்யா கூறினார்.இதையடுத்து சத்யாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
ஸ்ரீபெரும்புதூர்:
சென்னை போரூரை அடுத்த மதனந்தபுரத்தை சேர்ந்தவர் அமுதவள்ளி. இவர் தனது 2 மகள்களுடன் கடந்த 9-ந் தேதி அரக்கோணத்துக்கு செல்வதற்காக பூந்தமல்லி பைபாஸ் சாலையில் பஸ்சுக்காக நின்று கொண்டிருந்தார்.
அப்போது வாடகை காரில் வந்த 2 வாலிபர்கள், அமுதவள்ளியிடம் ரூ. 150 கொடுத்தால் அரக்கோணத் தில் இறக்கி விடுகிறோம் என்று கூறினர். இதையடுத்து அமுதவள்ளி மகள்களுடன் காரில் ஏறி சென்றார். ஆனால் காரை 2 வாலிபர்களும் அரக்கோணத்துக்கு செல்லாமல் வேலூர் நோக்கி ஓட்டி சென்றனர்.
இதனால் அமுதவள்ளி கூச்சல் போட்டார் உடனே அவர்களை கத்தியை காட்டி மிரட்டினர். ஆரியம் பெரும்பாக்கம் கூட்டு ரோட்டில் சென்ற போது காரில் இருந்து அமுதவள்ளியின் 2 மகள்களும் கீழே குதித்தனர்.
அதன்பின் சிறிது நேரம் சென்று காரை நிறுத்திய 2 வாலிபர்களும் அமுதவள்ளியிடம் இருந்த 20 பவுன் நகையை பறித்துவிட்டு அவரை கீழே இறங்கிவிட்டு தப்பி விட்டனர்.
இது குறித்து பாலுசெட்டி சத்திரம் போலீசில் அமுத வள்ளி புகார் செய்தனர். போலீசார் வாடகை கார் எண்ணை வைத்து விசாரணை நடத்தினர். இதில் நகை பறிப்பில் ஈடுபட்டது சென்னை பழவந்தாங்கலை சேர்ந்த அய்யனார், பெங்களூரை சேர்ந்த தர்ஷன் எனபது தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். நகை-காரை பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்:
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கோவை செல்ல வந்த போது சென்னை விமான நிலையத்தில் இன்று காலை நிருபர்களை சந்தித்தார்.
இப்போது கொடுக்கப்பட்டு இருக்கிற பட்ஜெட்டுக்கு இந்த அரசு புதிய அரசு. புதிய முதல்-அமைச்சர், புதிய நிதி அமைச்சர். எனவே இந்த பட்ஜெட்டில் புதியதாக எதுவும் வரவில்லை. இந்த பட்ஜெட்டில் பாராட்டக் கூடியது ஒன்றும் இல்லை. வழக்கமான ஒன்றாக உள்ளது.
தமிழ்நாட்டில் 90 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு வேலை இல்லாமல் உள்ளனர். அவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தக்கூடிய எந்த அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் இல்லை.
தமிழ்நாட்டுக்கு புதியதாக 10 ஆயிரம் போலீசார் எடுப்பதாக அறிவிப்பு வந்துள்ளது. அதை இந்த ஆண்டே எடுக்க வேண்டும்.

தற்போது தமிழ்நாட்டில் தண்ணீர் பிச்சினை உள்ளது. அதற்காக எந்த ஒரு நிதியையும் ஒதுக்கவில்லை.
மத்திய அரசு தர வேண்டிய வறட்சி மற்றும் வார்தா புயல் நிதியை இன்னும் தமிழ்நாட்டுக்கு தரவில்லை. அதை உடனடியாக தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இறந்த மாணவர் முத்து கிருஷ்ணனின் குடும்பத்திற்கு காங்கிரஸ் சார்பில் ரூ. 1 லட்சம் நிதி வழங்க உள்ளோம்.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தி.மு.க. - காங்கிரஸ் வேட்பாளர் நிச்சயம் வெற்றி பெறுவார். நாங்கள். தி.மு.க.வுடன் சேர்ந்து தேர்தல் பணியாற்றுவோம்.

நீட் தேர்வுக்கு தமிழ்நாட்டுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும். அதை மத்திய அரசிடமோ அல்லது உச்ச நீதிமன்றம் சென்றோ பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
இலங்கையில் தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டதை போல் அவர்களின் படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் கூறி உள்ளார். மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண சரியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மத்திய அரசின் விவசாயிகள் பயிர் காப்பீடு திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்கப்பெறுகிறது. மத்திய அரசு விவசாயிகளுக்கு நல்ல திட்டங்களை கொண்டு வருகிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். தமிழக விவசாயிகள் நெடுங்காலமாக புறக்கணிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழக அரசின் பட்ஜெட்டில் பயிர் காப்பீட்டு திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகை குறைவாக உள்ளது. விவசாயிகள் பிரச்சினையில் மாநில அரசு சரியாக அணுகுகிறதா? என்ற சந்தேகம் எழுந்து உள்ளது. விவசாயிகள் பிரச்சினையில் தமிழக அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னையை அடுத்த எண்ணூர் அருகே கடலில் கப்பல்கள் மோதி டீசல் கொட்டிய சம்பவத்தை தொடர்ந்து சென்னையில் இருந்து மாமல்லபுரம் வரை கடற்கரையில் அடிக்கடி ஆமைகள் செத்து கரை ஒதுங்குகின்றன.
இந்த நிலையில் நேற்று மாலை மாமல்லபுரம் கடற்கரை கோவில் அருகில் வியாபாரிகள் நலச் சங்க தலைவர் ராஜசேகர் நடைபயிற்சி மேற்கொண்டு இருந்தார். அப்போது ஆங்காங்கே 5 ஆமைகள் செத்து கரை ஒதுங்கி கிடந்தன. இதுகுறித்து மீனவர்களுக்கு அவர் தகவல் தெரிவித்தார். உடனே மீனவர்கள் அங்கு வந்து, இறந்த ஆமைகளை குழி தோண்டி புதைத்தனர்.
கடலில் கொட்டிய டீசல் கழிவால் கடல் வாழ் உயிரினங்கள் இறந்து வருவதாக விலங்கின ஆர்வலர்கள் தெரிவித்தனர். முன்னதாக இறந்த ஆமைகளை உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகள் சிலர் செல்போன் மூலம் படம் எடுத்து வனத்துறைக்கு அனுப்பி வைத்தனர்.






