என் மலர்
செய்திகள்

தாம்பரம் அருகே கணவனை அடித்து கொன்ற 2-வது மனைவி கைது
தாம்பரம்:
தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் ஆர்.எம்.கே.நகர் லால்பகதூர் சாஸ்திரி தெருவை சேர்ந்தவர் கணேஷ் (வயது 44). கொத்தனார். இவரது முதல் மனைவி தேவி.
இவர்கள் இருவருக்கும் பல வருடங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதையடுத்து தேவி கணவரை பிரிந்து விழுப்புரத்தில் தனியாக வசிக்கிறார்.
இதையடுத்து கணேஷ் கடந்த 11 வருடங்களுக்கு முன்பு சத்யா (30) என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சக்திகுமார் (10) என்ற மகன் இருக்கிறான்.
கணேசுக்கு குடிப்பழக்கம் இருந்தது. அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவி சத்யாவிடம் தகராறு செய்து வந்தார்.
கடந்த வாரம் கணேஷ் விழுப்புரத்துக்கு சென்றார். அங்கு முதல் மனைவி தேவியை சந்தித்து பேசி விட்டு வந்தார். இந்த தகவல் சத்யாவுக்கு தெரியவந்தது. முதல் மனைவியை கணேஷ் சந்தித்ததற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பாக கணவன்-மனைவி இடையே கடந்த 1 வாரமாக பிரச்சினை நடந்து வந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக கணேசும் தினமும் குடிபோதையில் வந்து மனைவியிடம் தகராறு செய்தார்.
நேற்று மாலையில் கணேஷ் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.முதல் மனைவியை இனி சந்திக்கக்கூடாது என்று சத்யா கூறினார். அதற்கு அடிக்கடி சென்று பார்ப்பேன் என்று கணேஷ் வாக்குவாதம் செய்தார். இதனால் கணவன்-மனைவி இடையே மோதல் முற்றியது.
இதற்கிடையே சத்யா வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்தார். தனது கணவர் குடிபோதையில் அம்மிக்கல் மீது விழுந்து விட்டதாகவும் தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டுவதாகவும் அக்கம் பக்கத்திரிடம் கூறினார்.
இதையடுத்து 108 ஆம்புலன்சுக்கு போன் செய்யப்பட்டது. ஆம்புலன்ஸ் வேனில் மருத்துவ ஊழியர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் கணேஷ் உடலை பரிசோதித்த போது அவர் இறந்து விட்டது தெரியவந்தது.
இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பீர்க்கரங்கரணை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் கணேசின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். மனைவி சத்யாவிடம் விசாரித்த போது முதலில் கணவர் அம்மிக்கல் மீது தவறி விழுந்து இறந்து விட்டதாக அவர் கூறினார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் எழும்பியதால் போலீசார் துருவி துருவி விசாரித்தனர். அப்போது கணவனை அடித்து கொன்றதாக சத்யா கூறினார்.
நேற்று இரவு தகராறு நடந்தபோது ஆத்திரம் அடைந்து சுத்தியலை எடுத்து கணவனின் தலையில் அடித்து கொன்றதாக சத்யா கூறினார்.இதையடுத்து சத்யாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.






