என் மலர்
ஈரோடு
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ளது நஞ்சப்பகவுண்டன் புதூர். இந்த பகுதியில் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதற்காக கலவை ஏற்றிக் கொண்டு ஒரு வாகனம் நஞ்சப்பகவுண்டன்புதூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. கலவை வாகனத்தை தேனியை சேர்ந்த கருப்புசாமி என்பவர் ஓட்டி வந்தார்.
இந்த வாகனத்தில் பவானிசாகர் காராட்சிகோரை என்ற பகுதியை சேர்ந்த முத்தப்பன், கொத்துக்காடு பகுதியை சேர்ந்த சரவணன் ஆகியோர் வந்து கொண்டிருந்தனர்.
கலவை வாகனம் சத்தியமங்கலம்-நெகமம் பிரிவு என்ற பகுதியில் குறுகலான சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கலவை வாகனம் நடுரோட்டில் கவிழ்ந்து விபத்தானது.
இதில் கலவை வாகனத்தில் பயணித்த 3 பேரும் சிக்கி அலறினார்கள். இந்த சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். பின்னர் அவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கலவை வாகனத்தில் வந்த டிரைவர் கருப்புசாமி மற்றும் தொழிலாளர்கள் முத்தப்பன், சரவணன் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானது தெரிய வந்தது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பலியான 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஈரோடு:
ஈரோடு வழியாக தினமும் ஏராளமான ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக வட மாநிலத்திலிருந்து தினமும் 50- க்கும் மேற்பட்ட ரெயில்கள் ஈரோடு வழியாக வந்து செல்கின்றன.
இதில் நூற்றுக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் பயணம் மேற்கொண்டு ஈரோட்டுக்கு வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் செகன்திராபாத்திலிருந்து திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் கிளம்பியது.
இதில் அசோக்தாஸ் என்ற வாலிபர் முன்பதிவு செய்து பணித்துள்ளார். இவர் ஈரோட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
விடுமுறைக்கு ஊருக்கு சென்றவர் மீண்டும் ஈரோட்டுக்கு திரும்பி ரெயிலில் வந்து கொண்டிருந்தார். நேற்று ஈரோடு ரெயில் நிலையத்திற்கு அசோக்தாஸ் பயணம் செய்த ரெயில் வந்து நின்றது. அப்போது அசோக்தாஸ் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தார். இதனால் ரெயில் ஈரோட்டுக்கு வந்தது அவருக்கு தெரியவில்லை.
பின்னர் ரெயில் பயணிகளை இறக்கி விட்டு கிளம்பத் தொடங்கியது. ரெயில் கிளம்ப தொடங்கியதும் கண்விழித்து பார்த்த அசோக்தாஸ் ஈரோடு ரெயில் நிலையத்தில் ரெயில் கிளம்பியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அவசர அவசரமாக எழுந்து தனது உடமைகளை முதலில் வெளியே தூக்கி வீசினார். பின்னர் அசோக்தாஸ் ஓடும் ரெயிலில் இருந்து இறங்க முயன்றார். அப்போது அவர் தவறி நடைமேடைக்கும் ரெயிலுக்கும் இடையே அவரது ஒரு கால் சிக்கி கொண்டது. அவர் ரெயிலில் தொங்கியபடி சென்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்த தலைமை காவலர்கள் பழனிசாமி மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் துரிதமாக செயல்பட்டு அசோக்தாசை பிடித்து இழுத்து அவரை காப்பாற்றினர்.
பின்னர் அவருக்கு புத்திமதி சொல்லி அனுப்பி வைத்தனர். ரெயில்வே போலீசார் வடமாநில வாலிபரை காப்பாற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. துரிதமாக செயல்பட்டு வடமாநில வாலிபரை காப்பாற்றிய தலைமை காவலர்களை போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.
மேலும் வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் தொழில் சம்பந்தமாக பெருந்துறை பகுதிக்கு வந்து செல்கிறார்கள். இதனால் போலீசார் பெருந்துறை பகுதியில் சட்ட விரோதமாக யாராவது தங்கி உள்ளார்களா? வந்து செல்கிறார்களா? என அடிக்கடி ஆய்வு செய்தும் வருகிறார்கள்.
இந்த நிலையில் பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் மற்றும் போலீசார் பெருந்துறை பஸ் நிலையம் பகுதியில் ரோந்து சென்று ஆய்வு செய்தனர். அப்போது 2 பேர் அங்கும் இங்கும் சுற்றி கொண்டு இருந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் பேசிய மொழி போலீசாருக்கு புரியவில்லை. இதனால் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று மொழிபெயர்ப்பாளர் மூலம் விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள் நைஜீரியா அபாய பகுதியை சேர்ந்த கிராண்ட் விக்டர் கென்னா (31), லாகோசை சேர்ந்த சுக்குடி (28) என்பதும், அவர்கள் பாஸ்போர்ட் இல்லாமல் தமிழ்நாட்டுக்கு வந்ததும் தெரியவந்தது.
மேலும் அவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருப்பூர் பகுதியில் சுற்றி திரிந்ததும், தொடர்ந்து பஸ் ஏறி பெருந்துறைக்கு வந்தனர். அப்போது அவர்கள் போலீசாரிடம் சிக்கியதும் தெரிய வந்தது.
இதையடுத்து பாஸ்போர்ட் இல்லாமல் சுற்றி திரிந்ததாக நைஜீரியா வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்கள் 2 பேரும் உரிய பாஸ்போர்ட் இல்லாமலும், அடையாள அட்டை இல்லாமலும் எப்படி இந்தியாவுக்கு வந்தார்களா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
மேலும் இதே போல் வேறு யாராவது சட்ட விரோதமாக தங்கி உள்ளார்களா? என்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே கைது செய்யப்பட்ட 2 நைஜீரியா வாலிபர்களும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கள் இயக்கத்தினர் தொடர்ந்து தமிழகத்தில் கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் இன்று கள் இறக்க அனுமதி கோரி கள் இறக்கி விற்கும் போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த போராட்ட அறிவிப்புக்கு பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்திருந்தனர். இதற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்தனர்.
இந்நிலையில் கருங்கல் பாளையம் சோதனை சாவடி அருகே கள் இறக்க அனுமதி கோரி பனங்காட்டு படை கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.
இதற்காக இன்று ஏ.டி.எஸ்.பி பாலாஜி, குற்றப்பிரிவு டி.எஸ்.பி. அண்ணாதுரை தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இன்று காலை ஈரோடு பனங்காட்டு படை கட்சி மாவட்ட செயலாளர் பாலாஜி பிரபு தலைமையில் நிர்வாகிகள் கருங்கல்பாளையம் சோதனை சாவடி அருகே திரண்டு வந்து அனுமதி கொடுங்கள், அனுமதி கொடுங்கள் கள் இறக்க அனுமதி கொடுங்கள் என கோஷமிட்டவாறு திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனடியாக போலீசார் அவர்களை கைது செய்து வேனில் அழைத்துச் சென்று அருகில் உள்ள திருமண்டபத்தில் தங்க வைத்தனர்.






