search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோடு வ.உ.சி. பெரிய மார்க்கெட்டில் காய்கறி வாங்க அலை மோதிய மக்கள் கூட்டம்.
    X
    ஈரோடு வ.உ.சி. பெரிய மார்க்கெட்டில் காய்கறி வாங்க அலை மோதிய மக்கள் கூட்டம்.

    நாளை முழு ஊரடங்கு: மார்க்கெட்டில் அலைமோதிய கூட்டம்

    நாளை முழுஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதையடுத்து பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள் வாங்க வ.உ.சி.பூங்கா காய்கறி மார்க்கெட்டில் குவிந்தனர். இதனால் கூட்டம் அலைமோதியது.
    ஈரோடு:

    நாளை முழுஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதையடுத்து பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள் வாங்க வ.உ.சி.பூங்கா காய்கறி மார்க்கெட்டில் குவிந்தனர். இதனால் கூட்டம் அலைமோதியது.

    தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் ஒமைக்ரான் பாதிப்பும் சேர்ந்து அதிக அளவு பரவி வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி கடந்த 6-ந் தேதி முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

    அதைத்தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை முழுநேர ஊரடங்கு  அமல் படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 2 வாரம் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 

    இந்நிலையில் கொரோனா தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் அதை கட்டுப்படுத்தும் வகையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை)  3-வது வாரமாக மீண்டும் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

    இதன்படி நாளைய தினம் அனைத்து கடைகளும் அடைக்கப்படுகிறது. பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

    அதேசமயம் அத்தியாவசிய பொருட்களான பால், மருந்தகங்கள், ஆஸ்பத்திரிகள், பெட்ரோல் பங்குகள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நாளை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதையொட்டி இன்று வ.உ.சி பூங்கா பகுதியில் செயல்பட்டுவரும் நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் காலையிலிருந்தே மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. குறிப்பாக பெண்கள் அதிக அளவில் வந்து தேவையான காய்கறிகளை வாங்கிச் சென்றனர்.

    இதேபோல் ஈரோடு பெரியார் நகர், சம்பத் நகரில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையிலும் மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. இன்று காய்கறிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டதால் தங்களுக்கு வேண்டிய காய்கறிகளை மக்கள் வாங்கிச் சென்றனர். கொங்காலம்மன் வீதியிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    இதேபோல் ஈரோடு ஸ்டோனிபிரிட்ஜ் மீன் மார்க்கெட், கருங்கல்பாளையம் காவிரிரோடு மீன் மார்க்கெட், இறைச்சி கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. 

    கோபி, பவானி, அந்தியூர், சத்தியமங்கலம், பெருந்துறை, மொடக்குறிச்சி, கொடுமுடி என மாவட்டம் முழுவதும் காய்கறி கடை இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    ஈரோடு மாவட்டத்தில் நாளை முழு ஊரடங்கை யொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். 

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 சோதனைச்சாவடிகளிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாநகரில் மட்டும் 400-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 

    பன்னீர்செல்வம் பார்க், பஸ் நிலையம், ஜி.எச். ரவுண்டானா போன்ற பகுதிகளில் போலீசார் தடுப்புகளை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபடவுள்ளனர்.
     
    முக்கிய சாலைகள் தடுப்புகள் அடைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இதேபோல் மேம்பாலங்களும் அடைக்கப்படுகின்றன. நாளை முழு ஊரடங்கை மதிக்காமல் வெளியே சுற்றுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என போலீசார் தெரிவித்தனர். 

    அதேசமயம் மருத்துவம், திருமணம் போன்ற விசேஷமாக இருந்தால் அதற்குரிய ஆவணங்களை சம்பந்தப்பட்டவர்கள் செல்லலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×