என் மலர்tooltip icon

    ஈரோடு

    பவானியில் 600 கிலோ ரேஷன் அரிசி கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து கோபி சிறையில் அடைத்தனர்.
    ஈரோடு:

    பவானியில் 600 கிலோ ரேஷன் அரிசி கடத்திய வாலிபரை  போலீசார் கைது செய்து கோபி சிறையில் அடைத்தனர்.

    ஈரோடு மாவட்டத்திலிருந்து சமீபகாலமாக கர்நாடக மாநிலத்திற்கும், ஈரோடு மாவட்டத்தில் தங்கி உள்ள வட மாநிலத்தவர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பதற்காகவும் ரேஷன் அரிசியை கடத்தி செல்லும் கும்பலை ஈரோடு குடிமை பொருள்  குற்றப்பிரிவு புலனாய்வுத்துறை போலீசார் ஆங்காங்கே வாகன சோதனை நடத்தி கைது செய்தும், வாகனங்கள் மற்றும் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தும் வருகின்றனர்.

    அதன்படி நேற்று இரவு குடிமைப்பொருள் குற்றப்பிரிவு புலனாய்வுத் துறை போலீசார் பவானி கூடுதுறை அருகே வாகன சோதனை ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். 

    அப்போது அந்த வழியாக ஆம்னி வேன் ஒன்று வந்தது. அந்த வேனை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 600 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது.

    வேனில் இருந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் சேர்ந்த விமல்குமார் (வயது 22) என்பதும், பெருந்துறையில் தங்கியுள்ள வடமாநிலத்தவர்களுக்கு கூடுதல் விலைக்கு  ரேஷன் அரிசியை விற்பதற்காக கடத்தி சென்றதும் தெரியவந்தது.

    இதையடுத்து விமல்குமாரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 600 கிலோ ரேஷன் அரிசி, வாகனங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் விமல்குமார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.
    ஞாயிற்றுக்கிழமை முழுஊரடங்கு ரத்து செய்யப்பட்டிருப்பதால் 3 வாரமாக ரத்து செய்யப்பட்ட அந்தியூர் மாட்டுசந்தை இன்று தொடங்கியது.
    அந்தியூர்:

    ஞாயிற்றுக்கிழமை முழுஊரடங்கு ரத்து செய்யப்பட்டிருப்பதால்  3 வாரமாக ரத்து செய்யப்பட்ட அந்தியூர் மாட்டுசந்தை இன்று தொடங்கியது.

    ஈரோடு மாவட்டம் அந்தியூரில் புகழ்பெற்ற வாரச்சந்தை ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை நடைபெறுவது வழக்கம்.ஞாயிற்றுக்கிழமைகளில் கால்நடை சந்தையும், திங்கட்கிழமை மளிகை காய்கறி சந்தையும் நடைபெறும்.

    அந்த வகையில் தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழக அரசு அதனை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளை விடுத்திருந்தது. 

    இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் வழிபாட்டு தலங்களில் வழிபட தடை என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருந்தது. 

    இந்த நிலையில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டிற்குள் வந்ததை அடுத்து தமிழக அரசு தளர்வுகளை அறிவித்தது. அந்த வகையில் வழிபாட்டுத்தலங்கள் இரவு நேர ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ஆகியவற்றை தளர்வு செய்தது.

    இதனை தொடர்ந்து கடந்த 3 வாரங்களாக அந்தியூர் மாட்டுச்சந்தை நடைபெறாமல் இருந்து வந்தது. ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதை அடுத்து இன்று வழக்கம் போல் அந்தியூர் கால்நடை சந்தை தொடங்கி நடைபெற்று வருகிறது. 

    இதனால் விவசாயிகளும், வியாபாரிகளும் மாடுகளை வாங்கியும், விற்பனை செய்தும் வருகின்றனர்.

    பெருந்துறை வாரச்சந்தையானது வழக்கம்போல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வந்தது. இந்நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக கடந்த சில வாரங்களாக ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு  அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதனால்  சந்தை யானது சனிக்கிழமைக்கு மாற்றப்பட்டது.  

    இந்தவாரம் முதல் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் சந்தை ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றப்பட்டு வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது.

    நாளை மறுநாள் பள்ளிகள் திறக்க உள்ளதால் பள்ளிகளில் தூய்மைபடுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
    ஈரோடு:

    நாளை மறுநாள் பள்ளிகள் திறக்க உள்ளதால் பள்ளிகளில் தூய்மைபடுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    தமிழகத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா தாக்கம் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று காரணமாக மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கியது. குறிப்பாக ஜனவரி மாதம் தொடக்கத்தில் தினசரி பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது.

    இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. தமிழக அரசு இதை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தது.

    அதன்படி கடந்த 6-ந் தேதி முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதுபோல் ஞாயிற்றுக் கிழமை அன்று முழு ஊரடங்கு அமல்படு த்தப்பட்டது.

    மற்றொரு தடுப்பு நடவடிக்கையாக முதலில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டது. பின்னர் 10 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மாணவ-மாணவிகள் மீண்டும் ஆன்லைன் மூலம் வகுப்புகளில் பங்கேற்று வந்தனர். 

    ஈரோடு மாவட்டத்திலும் மாணவ-மாணவிகள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்று வந்தனர். இதேபோல் கல்லூரி களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா தாக்கம் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. அரசின் பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக தற்போது தினமும் கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. 

    இதனையடுத்து மாணவ- மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு மீண்டும் அவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நாளை மறுநாள் முதல் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்தது. 

    இதையடுத்து அந்தந்த மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்வித்துறை மூலம் பள்ளிகளில்  கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. 

    பள்ளிவளாகங்கள் தூய்மைப்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்தப்படாமல் 100 சதவீதம் முழுமையாக நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு வ.உ.சி.பூங்கா மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து அதிகமானதால் விலை குறைந்தது.
    ஈரோடு:

    ஈரோடு வ.உ.சி.பூங்கா மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து அதிகமானதால் விலை குறைந்தது.

    கொரோனா பரவல் காரணமாக ஈரோடு ஆர்.கே.வி. ரோட்டில் செயல்பட்டு வந்த நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் தற்காலிகமாக ஈரோடு வ.உ.சி. பூங்கா பகுதியில் செயல்பட்டு வருகிறது. இங்கு 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள். 50-க்கும் மேற்பட்ட பழகடைகள் உள்ளன.

    இரவு முழுவதும் மொத்த வியாபாரமும், பகலில் சில்லரை வியாபாரம் நடைபெற்று வருகிறது. தாளவாடி, ஆசனூர், திண்டுக்கல், கர்நாடக மாநிலம் கோலார் போன்ற பகுதிகளில் இருந்து காய்கறிகள் வரத்தாகி வருகின்றன.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களாக காய்கறிகள் வரத்து குறைவாக இருந்ததால் காய்கறிகள் விலை கிடுகிடுவென உயர்ந்தது. 

    கடந்த சில நாட்களாக காய்கறிகள் வரத்து மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் காய்கறிகள் விலை குறைந்து உள்ளது. குறிப்பாக கடந்த வாரம் பீட்ரூட் கிலோ ரூ.80-க்கு விற்று வந்தது. ஆனால் இன்று மேலும் விலை குறைந்து கிலோவுக்கு ரூ.50 விற்பனை செய்யப்பட்டது. 

    கருப்பு அவரை கடந்த சில நாட்களாக கிலோவுக்கு ரூ.100 வரை விற்பனையாகி  வந்தது.தற்போது விலை குறைந்து கிலோவுக்கு ரூ.65 விற்பனை ஆனது. இதேப்போல் முள்ளங்கி, சுரைக்காய், காளிப்ளவர், பீர்க்கங்காய் போன்ற காய்கறிகள் விலை கிலோ 5 முதல் 10 வரை குறைந்துள்ளது.

    இன்று வ. உ. சி. காய்கறி மார்க்கெட்டில் காய்கறியின் விலை கிலோவில் வருமாறு:-

    கத்திரிக்காய்-70, கேரட்-50, பீன்ஸ்-40, முட்டைகோஸ்-60, பச்சை மிளகா-65, பட்ட அவரை-50 முதல் 60வரை, இஞ்சி-40, உருளைக்கிழங்கு-30, சேனைக்கிழங்கு-25, சுரைக்காய்-15, பீர்க்கங்காய்-30, முள்ளங்கி-20, பாவைக் காய்-40, முருங்கைக்காய் ஒரு கட்டு-200, சின்ன வெங்காயம்-50, பெரிய வெங்காயம்-40, தக்காளி-10 முதல் 17 வரை விற்பனையானது.

    கொரோனா காரணமாக கடந்த 3 ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. தற்போது தாக்கம் குறைய தொடங்கி உள்ளதால் இன்று முழு ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. இதனால் இன்று காலை முதலே வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது.
    டி.என்.பாளையம் அருகே தெருநாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அருகே தெருநாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டி.என்.பாளையம் அருகே உள்ள நஞ்சை புளியம்பட்டி பவானி ஆற்று பகுதியை சேர்ந்தவர்  சரவணன். இவர் தனக்கு சொந்தமான 4 ஆடுகளை வீட்டில் ஆட்டுப்பட்டி  அமைத்து வளர்த்து வருகிறார்.

    இந்நிலையில் இரவு பட்டியில் ஆடுகளை கட்டி வைத்து தூங்கு சென்றார். பின்னர் காலை பட்டிக்கு சென்று பார்த்தபோது 4 ஆடுகளும், ஒரு கோழியும் கடிபட்ட நிலையில் இறந்து கிடந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சரவணன் இது குறித்து டி.என்.பாளையம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர் சிறுத்தை, புலி  போன்ற வனவிலங்குகள் கால்தடங்கள் உள்ளதா? என ஆய்வு செய்தனர்.

    இதில் வன விலங்குகள் ஆடுகளை தாக்கியதற்கான எந்தவித அறிகுறிகளும் இல்லை. தெருநாய்கள் தாக்கியதால் 4 ஆடுகள், ஒரு கோழி பலியானதாக வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும் இது குறித்து பங்காளப்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சூளை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு தீ வைத்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் வாலிபரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி உள்ளனர்.
    ஈரோடு:

    சூளை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு தீ வைத்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் வாலிபரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி உள்ளனர்.

    ஈரோடு கனிராவுத்தர் குளம் அருகே சூளை பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. கடந்த 22-ந் தேதி இரவு பணி முடிந்ததும் ஊழியர்கள் கடையை மூடிவிட்டு சென்று விட்டனர். 

    இந்நிலையில் நள்ளிரவில் டாஸ்மாக் கடைக்கு வந்த 2 பேர்  கடையின் முன் பகுதியில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தது அங்கு பொருத்தப் பட்டு இருந்த சி.சி.டி.வி கேமிராவில் பதிவாகி இருந்தது. இதில் 400-க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் எரிந்து சேதமடைந்தன.

    இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சி.சிடி.வி கேமிரா காட்சிகளை அடிப்படையாக வைத்து விசாரணை நடத்தி வந்தனர். 

    இந்நிலையில் ஈரோடு லக்கா புரத்தை சேர்ந்த சங்கர் (24) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினார். விசாரணையில் சம்பவத்தன்று சங்கர், அவருடைய நண்பர் மணி என்கிற கருவா மணி ஆகியோர் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடைக்கு இரவு வந்துள்ளனர்.

    அப்போது டாஸ்மாக் கடையில் பணியாளர் களிடம் மதுவை கேட்டுள்ளனர். அதற்கு பணியாளர்கள் விற்பனை நேரம் முடிந்துவிட்டதால் மது கொடுக்க இயலாது என்று கூறி விட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த சங்கர் மற்றும் மணி நள்ளிரவில் அந்த டாஸ்மாக் கடைக்கு வந்து தீ வைத்துள்ளனர்.

    இதையடுத்து சங்கரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

    இந்த வழக்கில் தொடர்புடைய மணி என்கிற கருவா மணி தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். அவர் மீது ஏற்கனவே பல்வேறு  வழக்குகள் நிலுவையில் உள்ளன. மணியை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    ஞாயிற்றுக்கிழமையான இன்று முழுஊரடங்கு ரத்து செய்திருப்பதால் ஈரோட்டில் மீன்-இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
    ஈரோடு:

    ஞாயிற்றுக்கிழமையான இன்று முழுஊரடங்கு ரத்து செய்திருப்பதால் ஈரோட்டில் மீன்-இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

    தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக அரசு பல்வேறு கட்டுபாடுகள் விதித்து வருகிறது. இதே போல் இரவுநேர ஊரங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுஊரடங்கு அமல்படுத்தியது.

    இதனால் கடந்த 3 வாரமாக ஞாயிறுக்கிழமைகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. இதே போல் மீன் மற்றும் இறைச்சி கடைகளும் மூடப்பட்டு இருந்தன. 

    இதனால்  ஒரு சிலர் சனிக்கிழமைகளிலேயே இறைச்சிகளை வாங்கி சென்றனர். மேலும் பலர் இறைச்சிகள் சாப்பிடாமல் இருந்தனர். 

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஈரோடு உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. 

    இதனால் அரசு பல்வேறு தளர்வுகள் அளித்து வருகிறது. மேலும் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கை தமிழக அரசு ரத்து செய்தது.

    இதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் இன்று காலை முதல் வழக்கம் போல் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு இருந்தன.  

    மேலும் இன்று அதிகாலை முதலே ஈரோட்டி மீன் மற்றும் இறைச்சி கடைகள் திறந்திருந்தன. அதிகாலை முதலே பொதுமக்கள் பலர் வந்து அசைவ வகைகளை வாங்கி சென்றனர்.

    ஈரோடு ஸ்டோனிபிரிட்ஜ பகுதியில் உள்ள மீன் மார்க்கெட், கருங்கல் பாளையம் மீன் மார்க்கெட், வீரப்பன்சத்திரம், கொல்லம்பாளையம் உள்பட அனைத்து பகுதிகளில் உள்ள மீன் கடைகளில் காலை ஏராளமான பொதுமக்கள் வந்து தங்களுக்கு தேவையான மீன் வகைகளை வாங்கி சென்றனர். 

    3 வாரங்களுக்கு பிறகு மீன் கடைகள் திறக்கப்பட்டதால் அதிகளவு மீன் வகைகளை வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இதே போல் ஈரோடு பஸ்நிலையம் பகுதி, பெருந்துறைரோடு, சென்னிமலை ரோடு, திண்டல், பவானி ரோடு உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள மட்டன், சிக்கன் கடைகளுக்கு இன்று காலை முதலே மக்கள் அதிகளவில் வந்து இறைச்சி வகைகளை வாங்கி சென்றனர்.

    மீன் மற்றும் இறைச்சி கடைகளுக்கு வந்த மக்களிடம் மாநகராட்சி ஊழியர்கள் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். 

    முககவசம் அணிய வேண்டும் என்பன உள்பட பாதுகாப்பு வழிமுறைகளை கடை பிடிக்க வேண்டும் என ஒலி பெருக்கி மூலம் அறிவுரை கூறினர்.

    மேலும் புஞ்சைபுளியம்பட்டி சத்தியமங்கலம் ரோட்டில் உள்ள மீன் கடைகளில் இன்று அதிகளவு பொதுமக்கள் வந்து மீன்களை வாங்கி சென்றனர். மேலும் இறைச்சி கடை களிலும் மக்கள் கூட்டம் அதிகளவு இருந்தது.

    இதே போல் கோபி, சத்தியமங்கலம், அந்தியூர், கவுந்தப்பாடி, பவானி, சித்தோடு, பெருந்துறை, சென்னிமலை, மொடக்குறிச்சி, சிவகிரி, எழுமாத்தூர் உள்பட மாவட் டத்தில் உள்ள மீன் மற்றும் இறைச்சி கடைகளில் பொதுமக்கள் அதிகளவு வந்து அசைவ வகைகளை வாங்கி சென்றனர்.
    தாளவாடி- திம்பம் மலைப்பகுதிகளில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் மக்கள் அவதி அடைந்து உள்ளனர். முதியவர்கள் வெளியில் வர தயக்கமடைந்து உள்ளனர்.
    சத்தியமங்கலம்:

    தாளவாடி- திம்பம் மலைப்பகுதிகளில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் மக்கள் அவதி அடைந்து உள்ளனர்.  முதியவர்கள் வெளியில் வர தயக்கமடைந்து உள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தில் பனி பொழிவு காரணமாக கடந்த சில நாட்களாக அதிகாலை நேரத்தில் கடும் குளிர் வாட்டி வருகிறது.

    தாளவாடி, கேர்மாளம், ஆசனூர், திம்பம் உள்பட மலைப்பகுதிகளில் இன்று அதிகாலை கடும் குளிர் வாட்டியது. இதனால் அதிகாலையில் வனப்பகுதி கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சுவட்டர், குல்லா அணிந்த படியே வந்தனர்.

    மேலும் சத்தியமங்கலம், பண்ணாரி,  பவானிசாகர், சிக்கரசம்பாளையம், புளியங்கோம்பை, அரியப்பம் பாளையம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் கடும் குளிர் வாட்டியது. இதனால் முதியவர்கள் வெளியே வர முடியாமல் வீட்டுக்குள்ளே முடங்கி தவித்தனர். 

    இதே போல் அந்தியூர், பர்கூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கடும் குளிர் அடித்து வருகிறது. மேலும் வாகன ஓட்டிகள் காலை வரை முகப்பு விளக்குகளை எரிய விட்டப் படியே சென்று வருகிறார்கள்.

    இதே போல் ஈரோடு, கோபி, கவுந்தப்பாடி, பவானி, ஆப்பக்கூடல், சித்தோடு, பெருந்துறை, சென்னி மலை, மொடக் குறிச்சி மற்றும் மாவட்டம் முழு வதும் காலை நேரத்தில் கடும் குளிர் வாட்டுகிறது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகிறார் கள்.
    108 ஆம்புலன்சில் தொழிலாளியின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது.
    ஈரோடு:

    108 ஆம்புலன்சில் தொழிலாளியின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுகா பர்கூர் மலை பகுதியை அடுத்துள்ள சின்ன செங்குலம் கிராமத்தை சேர்ந்தவர் மாதவன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சித்ரா.  இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

    இந்நிலையில் சித்ராவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.இதையடுத்து தொலைபேசி மூலம் 108 ஆம்புலன்ஸ் தகவல் கொடுத்து வரவழைக் கப்பட்டது. சித்ராவை ஏற்றிக் கொண்டு ஆம்புலன்ஸ் மருத்துமனைக்கு கிளம்பி சென்றது. 

    அப்போது திடீரென சித்ராவுக்கு பிரசவ வலி அதிகமானதால் ஆம்புலன்சில் பிரசவம் பார்க்க முடிவு செய்யப்பட்டு 108 ஆம்புலன்ஸ் அவசர கால டாக்டர் சிவா பிரசவம் பார்த்தார்.

    அப்போது சித்ராவுக்கு  ஆண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமாக இருந்தனர். பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக பர்கூர் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
    சத்தியமங்கலத்தில் குடும்பத்தினரை மிரட்ட ஆற்றில் குதித்த வாலிபர் மரக்கிளையில் சிக்கியதால் தப்பினார்.
    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலத்தில் குடும்பத்தினரை மிரட்ட ஆற்றில் குதித்த வாலிபர் மரக்கிளையில் சிக்கியதால் தப்பினார்.

    சத்தியமங்கலம் அடுத்த கெம்பநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் (36). இவர் சத்தியமங்கலம் பவானி ஆற்று பாலம் பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தார்.
     
    அப்போது அவர்  பாலத்தில் இருந்து திடீரென  ஆற்றில் குதித்தார். இதில் அவர் அந்த பகுதியில் உள்ள ஒரு மரக்கிளையில் சிக்கி தவித்து கொண்டு இருந்தார். அங்கு ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தவர்கள்   இதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

    இது குறித்து அவர்கள் சத்தியமங்கலம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 2 பேர் ஆற்றுப்பாலத்தில் குதித்து ஜெயராமனை உடனடியாக மீட்டு ஆற்றங்கரைக்கு  கொண்டு வந்தனர்.

    சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் மது போதையில் குடும்பத்தி னரை மிரட்டுவதற்காக ஆற்றில் குதித்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அவரை  மீட்டு ஆம்புலன்சு மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.  ஆற்றில் குத்தித்து ஜெயராமனை மீட்ட 2 வாலிபர்களை அந்த பகுதி மக்கள் பாராட்டினர்.

    கொடுமுடி அருகே மகா மாரியம்மன் மடியில் இருந்த எலுமிச்சம்பழத்தை பழனிக் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த விவசாயி செல்வராஜ் என்ற பக்தர் ரூ.25 ஆயிரத்துக்கு ஏலத்தில் எடுத்து சென்றார்.
    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே பழனிக்கவுண்டன் பாளையத்தில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது.

    இக்கோவில் பொங்கல் திருவிழா கடந்த 18-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 20-ந் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடை பெற்றது. அன்றிலிருந்து தினமும் காலையில் பெண்கள் கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றி வழிபட்டு வந்தனர்.

    அதனை தொடர்ந்து அம்மனுக்கு அபிசேகம், அர்ச்சனை, மகா தீபாராதனை நடைபெற்றது. தினமும் கோவிலை சுற்றி அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. 25-ந் தேதி அம்மனுக்கு மாவிளக்கு எடுத்து வந்து வழிபாடு செய்தனர்.

    இதனையடுத்து 26-ந் தேதி காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி வந்த பக்தர்கள் கோவில் முன்பு அமைக்கப்பட்டு இருந்த குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். 27-ந் தேதி மதியம் பெண்கள் அனைவரும் அம்மனுக்கு பொங்கல் வைத்து படையலிட்டனர். 28-ந் தேதி மஞ்சள் நீராட்டு, மறு பூஜை நடைபெற்றது.

    விழா முடிவில் அம்மன் மடியில் வைக்கப்பட்டு இருந்த எலுமிச்சம்பழம் ஏலம் விடப்பட்டது. ஏலத்தில் பழனிக் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த விவசாயி செல்வராஜ் என்ற பக்தர் ரூ.25 ஆயிரத்துக்கு எலுமிச்சம் பழத்தை ஏலம் எடுத்து வீட்டுக்கு எடுத்து சென்றார்.

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் சென்னை குடியரசுதின அணிவகுப்பில் பங்கேற்ற தலைவர்கள் உருவத்துடன் கூடிய அலங்கார வாகனத்தை பொதுமக்கள் கண்டு ரசித்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் சென்னை குடியரசுதின அணிவகுப்பில் பங்கேற்ற தலைவர்கள் உருவத்துடன் கூடிய அலங்கார வாகனத்தை பொதுமக்கள் கண்டு ரசித்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    இந்திய குடியரசு தின விழா தமிழக அரசின் சார்பில் கடந்த 26--ந் தேதி சென்னை தீவுத்திடலில் நடந்தது. இந்த விழாவில் தியாக தலைவர்களின் உருவ சிலைகள் அமைக்கப்பட்ட 3 அலங்கார வாகனங்கள் அணிவகுப்பில் கொண்டு வரப்பட்டன.

    இந்த வாகனங்களை தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பொது மக்கள் பார்வைக்குக் காட்சிப் படுத்த தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு ள்ளார். முதற்கட்டமாக ஈரோடு, மதுரை, கோவை ஆகிய மாவட்டங்களில் இந்த வாகனங்கள் காட்சிப் படுத்தப்படுகின்றன.  

    இதற்காக வாகன பயணத்தை 3 மாவட்ட ங்களுக்கும் செல்லும் வகையில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஒரு வாகனம் மதுரைக்கும், இன்னொரு வாகனம் கோவைக்கும் செல்கிறது. 3- வது அலங்கார வாகனம் இன்று ஈரோடுக்கு வந்தது.

    இந்த அலங்கார வாகனத்தில் பெரியார், ராஜாஜி, பசும்பொன் முத்துராமலிங்க தேவர், காமராஜர், சமூக சீர்திருத்த செயல்பாட்டாளர் ரெட்டை மலை சீனிவாசன், வாஞ்சிநாதன், தீரன் சின்னமலை, கொடிகாத்த திருப்பூர் குமரன், இலக்கியவாதி வ.வே.சு.ஐயர், காயிதே மில்லத், தஞ்சை ஜோசப் கொர்னேலியாஸ் செல்ல துரை குமரப்பா, கக்கன் ஆகியோரின் புகழ் பரப்பும் உருவச்சிலைகள் அமைக்கப் பட்டுள்ளன.

    இந்த அலங்கார வாகனம்  பவானி காவிரி ஆற்றுப் பாலம், தேசிய நெடுஞ்சாலை, பவானி பவிஷ் பார்க் பகுதியில் வந்தது. கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் அந்தியூர் செல்வராஜ் எம்.பி.,  ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ., திருமகன் ஈவெரா, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன தலைவர் குறிஞ்சி என்.சிவக்குமார் ஆகியோர் முன்னிலையில் அமைச்சர் முத்துசாமி வரவேற்றார்.அதைத் தொடர்ந்து பொதுமக்கள் பார்வையிடுவதற்காக அந்த அலங் கார வாகனம் கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. 

    கலெக்டர் அலுவலகத்தில் பிற துறை அதிகாரிகள், பொதுமக்கள் அலங்கார வாகனத்தை பார்வையிட்டனர்.

    பொதுமக்கள் ஆர்வத் துடன்  அலங்கார வாகனத் தின் முன்பு நின்று செல்பி எடுத்துக் கொண்டனர். இன்று 2-வது நாளாகவும் அலங்கார வாகனத்தை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். இந்த வாகனம் வரும் 31-ந் தேதி வரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக நிறுத்தப் பட்டிருக்கும். 

    தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை பொதுமக்கள் பார்வை க்காக வைக்கப்பட்டு இருக்கும். சுதந்திர போராட்ட வீரர்களை பாராட்டும் வகையில் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படும் என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

    ×