என் மலர்tooltip icon

    ஈரோடு

    சென்னிமலை அருகே அரசு பள்ளியில் குடிபோதையில் தகராறு செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    சென்னிமலை:

    சென்னிமலை அருகே அரசு பள்ளியில் குடிபோதையில் தகராறு செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    சென்னிமலை அருகே அம்மாபாளையம் உள்ளது. இங்கு அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி ஒரே வளாகத்தில் உள்ளது. இப்பள்ளியின் முன்பாக ஒரு வாலிபர் அப்பள்ளியில் பணி புரியும் ஆசிரியைகளிடம் குடிபோதையில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியை சென்னிமலை போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குடிபோதையில் இருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். 

    விசாரணையில் அவர் சென்னிமலையை அடுத்த கொமாரபாளையம் ஜெம் கார்டன் பகுதியை சேர்ந்த லோகநாதன் ( 27) என்பதும், குடிபோதையில் அந்தப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியைகளிடம் தகராறு செய்தது தெரியவந்தது. 

    இதையடுத்து குடிபோதையில் இருந்த லோகநாதன் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். பின்னர் லோகநாதனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    கோபிசெட்டிபாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 2 பவுன் நகை திருட்டு போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
    கோபிசெட்டிபாளையம்:

    கோபிசெட்டிபாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 2 பவுன் நகை திருட்டு போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பெரிய கரட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 43). விவசாயி. இவரது தந்தை அதே பகுதியில் தனியாக வசித்து வருகிறார்.

     அவரது தந்தைக்கு நேற்று முன்தினம் உடல்நிலை சரியல்லாததால்  ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். இதையடுத்து வெங்கடாசலம் அவரது வீட்டை பூட்டி விட்டு இரவு தந்தை வீட்டிலேயே தங்கினார். 

    இந்த நிலையில் வெங்கடாசலத்தின் வீட்டின் பூட்டை உடைத்து சிலர் வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த தங்க தாலிகொடி மற்றும் தங்க செயின் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர். 

    காலை அவர் வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டில் இருந்த தங்க நகைகள் திருடப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வெங்கடாசலம் கடத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    அந்தியூரில் இருந்து வேளாங்கண்ணி&தாளவாடிக்கு புதிய வழிதடத்தில் புதிய பஸ் இயக்கப்பட உள்ளது. இதனை அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    ஈரோடு:

    அந்தியூரில் இருந்து வேளாங்கண்ணி&தாளவாடிக்கு புதிய வழிதடத்தில் புதிய பஸ் இயக்கப்பட உள்ளது. இதனை அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    அந்தியூரில் இருந்து திருச்சி, வேளாங்கண்ணி உள்பட பல்வேறு  சுற்றுலா தலங்கள் மற்றும் கோவில்களுக்கு செல்வதற்கு நேரடியாக பஸ் வசதி செய்து தர வேண்டும் என அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்ட ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. இது தொடர்பாக தமிழக முதல்&அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோரிடம் மனுக்களை வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். 

    இந்த கோரிக்கையை ஏற்று அந்தியூரில் இருந்து வெளியூர்களுக்கு பஸ்கள் விட  நடவடிக்கை எடுக்கப் பட்டது.

    இதனையடுத்து அந்தியூரில் இருந்து பவானி, ஈரோடு, திருச்சி வழியாக வேளாங்கண்ணிக்கு பஸ் இயக்கப்பட்டது. 

    மேலும், அந்தியூரில் இருந்து அத்தாணி, சத்தி வழியாக தாளவாடிக்கு பஸ் இயக்கப்பட்டது.


    சென்னிமலை அருகே குளியலறையில் வடமாநில வாலிபர் இறந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    சென்னிமலை அருகே குளியலறையில் வடமாநில வாலிபர் இறந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பீகார் மாநிலம் நவடா பகுதியை சேர்ந்தவர் அனில் யாதவ் (வயது38). சென்னிமலை& ஊத்துக்குளி செல்லும் சாலையில் உள்ள ஒரு ஜவுளி தொழிற்சாலையில் கடந்த 10 மாதமாக வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று அனில் யாதவ் குளிப்பதற்காக குளியலறை சென்றார். ஆனால் அவர் நீண்ட நேரமாக வெளியே வராததால் அவரது நண்பர் சந்தேகம் அடைந்து குளியலறை கதவை தட்டியுள்ளார். 

    ஆனால் பதில் வராததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அனில்யாதவ் பேச்சு மூச்சு இன்றி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு  அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அனில்யாதவ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    அனில் யாதவ் குளிக்கும் போது வழுக்கி விழுந்து இறந்தாரா? அல்லது மாரடைப்பு ஏற்பட்டு இறந்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவில் விசேஷம் என்பதால் மஞ்சள் சேலை, மஞ்சள் வேட்டி, காவி கலர் துண்டு வியாபாரம் அதிக அளவில் இருந்தது. மேலும் இதற்கான ஆர்டர் அதிகளவில் வந்து இருந்தது. இதனால் வியாபாரம் விறுவிறுப்பாக இருந்தது.
    ஈரோடு:

    கோவில் விசேஷம் என்பதால் மஞ்சள் சேலை, மஞ்சள் வேட்டி, காவி கலர் துண்டு வியாபாரம் அதிக அளவில் இருந்தது. மேலும் இதற்கான ஆர்டர் அதிகளவில் வந்து இருந்தது. இதனால் வியாபாரம் விறுவிறுப்பாக இருந்தது.

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே புகழ்பெற்ற ஈரோடு ஜவுளி சந்தை (கனி மார்க்கெட்) இயங்கி வருகிறது. 

    இங்கு தினசரி கடைகளும், வார சந்தை கடைகளும் செயல்பட்டு வருகிறது. வாரச்சந்தை திங்கள்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க் கிழமை மாலை வரை நடைபெரும்.

    இந்த வாரசந்தையில் மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் ஈரோட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும்  கோவை, சேலம், கரூர், திண்டுக்கல், நெல்லை, தென்காசி போன்ற மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வருவார்கள். 

    சந்தை நாட்களில் கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெறும். விசேஷ நாட்களில் கூடுதலாக வர்த்தகம் நடைபெறும். 

    இந்நிலையில் கொரோனா தாக்கம்,  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் போன்ற காரணங்களால் வியாபாரம் பாதிக்கப்பட்டது. 

    இதனையடுத்து மாசி மாதம் தொடங்கியதால்  கோவில், திருமண விசேஷங்கள் இந்த மாதம் அதிகளவில் வருகிறது. 

    இதனால் கடந்த 2 வாரமாக ஜவுளி சந்தை வியாபாரம் விறுவிறுப்பாக நடந்து வந்தது.

    இன்று வழக்கம் போல் ஜவுளி சந்தை கூடியது. கோவில் விசேஷம் என்பதால் மஞ்சள் சேலை, மஞ்சள் வேட்டி, காவி கலர் துண்டு வியாபாரம் அதிக அளவில் இருந்தது. மேலும் இதற்கான ஆர்டர் அதிகளவில் வந்து இருந்தது. 

    ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வெளிமாநில வியாபாரிகள் வந்திருந்தனர். இதனால் மொத்த வியாபாரம் 30 சத வீதம் வரை நடைபெற்றது.

    இதேபோல் உள் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் அதிகளவில் வந்து இருந்ததால் சில்லரை விற்பனை 40 சதவீதம் நடைபெற்றதாக வியா பாரிகள் தெரிவித்தனர்.
    தடை செய்யப்பட்ட நாட்டு வெடிகளை பவானிசாகர் பகுதியில் அதிக அளவில் வைத்துக்கொண்டு வனவிலங்குகளை வேட்டையாடி வருகின்றனர்.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் வனப்பகுதியில் அடிக்கடி நாட்டுவெடிகளை வீசி வனவிலங்குகள் வேட்டையாடுவது தொடர் கதையாகி வருகிறது.

    இதையடுத்து போலீசார் அடிக்கடி தீவிர சோதனை நடத்தி நாட்டு வெடிகளை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று பவானிசாகர் போலீசாருக்கு தொப்பம்பாளையம் பகுதியில் ஒருவர் காட்டு பன்றியை வேட்டையாட நாட்டு வெடிகளை பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணித்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் சுற்றிய ஒருவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவரிடம் 10 நாட்டு வெடிகள் இருப்பது தெரிய வந்தது.

    விசாரணையில் அவர் தொப்பம்பாளையம் பகுதியை சேர்ந்த செல்வம் (59) என்பது தெரிய வந்தது. மேலும் காட்டுபன்றியை வேட்டையாட இந்த நாட்டு வெடிகளை வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    தடை செய்யப்பட்ட நாட்டு வெடிகளை பவானிசாகர் பகுதியில் அதிக அளவில் வைத்துக்கொண்டு வனவிலங்குகளை வேட்டையாடி வருகின்றனர். எனவே ஆபத்தான இந்த நாட்டு வெடி விபத்து ஏற்பட்டு மனித உயிர் இழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே நாட்டு வெடிகளை தயாரிப்பவர்கள் மற்றும் அதை வாங்கி வனவிலங்குகளை வேட்டையாடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
    ஈரோடு வழியாக கேரளா செல்லும் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயிலில் 3 கிலோ கஞ்சா சிக்கியது.
    ஈரோடு:

    ஈரோடு வழியாக கேரளா செல்லும் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயிலில் 3 கிலோ கஞ்சா சிக்கியது.

    ஜார்கண்ட் மாநிலம் தன் பாத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழாவுக்கு  ஈரோடு வழியாக எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.  இந்த ரெயிலில் கஞ்சா கடத்தப்பட்டு வருவது தொடர் கதையாகி வருகிறது. 

    இதனால் ரெயில்வே போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.  இந்நிலையில் ஈரோடு ரெயில் நிலைய நடைமேடைக்கு  அதிகாலை  ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து நின்றது.  

    ஈரோடு ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார்  ரெயிலில் ஒவ்வொரு பெட்டியாக சோதனை செய்தனர். அப்போது  ஒரு பெட்டியின் சீட் அடியில் ஒரு பை  கேட்பாரற்று கிடந்தது. 

    சந்தேகம் அடைந்த போலீசார் அந்த பையை திறந்து சோதனை செய்தனர். அப்போது அதில் 3 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. 

    இதுகுறித்து அங்குள்ள பயணிகளிடம் கேட்டபோது அது தங்களுடையது இல்லை என்று கூறிவிட்டனர். 

    விசாரணையில் போலீஸ் வருவதை கண்டு கஞ்சா கடத்தி வந்த நபர் பையை அங்கேயே போட்டு விட்டு தப்பி சென்றது தெரிய வந்தது.

    இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா கோவையில் உள்ள போதை தடுப்புபிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
    ஈரோடு மாவட்டத்தில் மது விற்ற பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஈரோடு:
     
    ஈரோடு மாவட்டத்தில் மது விற்ற பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோத மது விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். 

    இதில், கடத்தூர் கொத்துகாடு பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்டதாக அதேபகுதியை சேர்ந்த சுப்பிரமணி மனைவி மணியாள்(48) என்பவரை போலீசார் கைது செய்து 12 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். 

    மலையம்பாளையம் சந்தை பகுதியில் மது விற்றதாக கணேசன்(46) என்பவரை போலீசார் கைது செய்து 8 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். 

    அம்மாபேட்டை குதிரைக்கால்மேடு பகுதியில் மது விற்றதாக அதேபகுதியை சேர்ந்த கந்தன்(60) என்பவரை போலீசார் கைது செய்து 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். 

    இதேபோல், தாளவாடி திகினாரையில் கர்நாடகா மது விற்றதாக தொட்டகாஜனூரை சேர்ந்த சிட்டாபா(60) என்பவரை கைது செய்து 11 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    பெருந்துறை அருகேசேவல் சண்டை நடத்தியவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.

    ஈரோடு:

    பெருந்துறை அருகேசேவல் சண்டை நடத்தியவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். 
     
    பெருந்துறை அரசன் குட்டை பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாட்டம் விளையாடி வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. 

    இதன்பேரில், பெருந்துறை போலீசார் அங்கு விரைந்து சென்று சேவல் சண்டை நடத்தியவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். 

    இதில், அவர்கள் சென்னிமலை கள்ளிகாட்டு தோட்டத்தை சேர்ந்த சரவணன்(27), சிலாம்பட்டி  ஆனந்தன்(29), அனுமன்பள்ளி வெள்ளிவலசை சேர்ந்த  தாரனேஷ் ¢(21) என்பது தெரியவந்தது. 

    இதையடுத்து 3பேரையும் போலீசார் கைது செய்து, 4 சேவல்கள் மற்றும் 500 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பருவாச்சி அம்மன் பாளையத்தைச்சேர்ந்தவர் ராஜகோபால்(41) டீக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு இவர் தனது நண்பர் பருவாச்சி அண்ணா நகரைச் சேர்ந்த பழனிச்சாமி (50) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் அந்தியூரில் இருந்து பருவாச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை ராஜகோபால் ஓட்டிச் சென்றார்.

    அண்ணாமடுவு அருகே உள்ள கந்தாம்பாளையம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிரில் ஒன்றன் பின் ஒன்றாக வந்த 2 மோட்டார் சைக்கிள் மீது அடுத்தடுத்து இவர்கள் மோதினர். இந்த விபத்தில், தலையில் பலத்த அடிபட்டு ராஜகோபால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த விபத்தில் இரட்டைக்கரடு கண்ணாடி பாளையம் அருகே உள்ள போத்தநாயக்கனூரைச் சேர்ந்த சங்கர் (21), சரவணன் (16), சுதாகர் (31), ஆனந்த் (20), மோகன் (22), மணிகண்டன் (20), பழனிச்சாமி (50) ஆகிய 7 பேரும் பலத்த காயமடைந்தனர்.

    இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    பின்னர் ஆனந்த், மணிகண்டன், மோகன் ஆகியோர் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர்.

    மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பழனிச்சாமி சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை இறந்தார்.

    இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள், குழந்தைகள், பெரியவர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.  இதனால் வாகன ஓட்டிகள், குழந்தைகள், பெரியவர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.  

    காலை 7 மணி வரை  வெயிலின் தாக்கம் அவ்வளவாக தெரியவில்லை.  

    அதன்பிறகு  வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கி விடுகிறது.  குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை  வெயிலின் தாக்கம் அதிகளவில் உள்ளது.  

    இதனால் வாகன ஓட்டிகள்,  வீட்டில் இருக்கும் பொது மக்கள் வியர்வையாலும்,  அனல்காற்றாலும் அவதி அடைந்து வருகின்றனர்.  

    வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க வாகன ஓட்டிகள்  குளிர்பானங்களை அதிக அளவில் விரும்பி குடித்து வருகின்றனர். 

    குறிப்பாக கரும்பு பால், இளநீரை அதிக அளவில் விரும்பி குடிக்கின்றனர். 

    இதைப்போல் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க தர்பூசணி பழத்தை அதிக அளவில் விரும்பி சாப்பிட்டு வருகின்றனர். 

    இதற்காக கடந்த சில நாட்களாக ஈரோடு மாவட் டத்திற்கு தர்பூசணி அதிக அளவில் விற்பனைக்கு வருகிறது.  

    குறிப்பாக செங்கல்பட்டு, தர்மபுரி, திண்டிவனம் போன்ற பகுதிகளில் இருந்து நாள் ஒன்றுக்கு டன் கணக்கில் தர்பூசணி பழம் விற்பனைக்கு வருகிறது.  

    தர்பூசணி பழம் சூட்டை தணிப்பதுடன்  உடலுக்கும் குளிர்ச்சியை ஏற்படுத்தும் என்பதால்  குழந்தைகள்  முதல் பெரியவர்கள் வரை  விரும்பி சாப்பிட்டு வருகின்றனர்.   

    இதனால்  தர்பூசணி விற்பனை  விறுவிறுப்பாக  நடந்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
    சத்தியமங்கலம் பண்ணாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா மார்ச் 7-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது
    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் பண்ணாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா மார்ச் 7-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது

    சத்தியமங்கலம் அருகே  அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. 

    இந்த கோவி லுக்கு ஈரோடு மாவட்ட பக்தர்கள் மட்டு மின்றி கோவை, திருப்பூர், நீலகிரி உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும், கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    பண்ணாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா நடப்பது வழக்கம். இதில் சுமார் 2 லட்சம் பக்தர்கள்  கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து குண்டம் இறங்குவார்கள். 

    கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டு களாக குண்டம் விழா  ரத்து செய்யப்பட்டது. ஆனால் பூசாரிகள் மட்டும் குண்டம் இறங்கி வந்தனர்.

    இந்த நிலையில் 2 ஆண்டுகளு க்கு பிறகு இந்த ஆண்டு பண்ணா ரியம்மன் கோவில் குண்டம் விழா வரும் மார்ச் 7-ந் தேதி தொடங்குகிறது.  

    இதையொட்டி குண்டம் விழா நடத்துவதற்கான  ஆலோ சனைக் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை)   கோபி செட்டிபாளையம் ஆர்.டி.ஓ. பழனிதேவி தலைமையில் நடைபெற உள்ளது.

    இதில் பக்தர்களை அனுமதிப்பது குறித்து அறிவுரைகள் வழங்கப்படும் என எதிர்ப் பார்க்கப்படுகிறது. 

    இதையொட்டி  7-ந் தேதி இரவு வரம் கேட்டல் மற்றும் பூச்சாட்டுதலுடன் குண்டம் விழா தொடங்குகிறது. 

    அதனைத் தொடர்ந்து 15-ந் தேதி அம்மன் சப்பரம் திருவீதி உலாவும், திருகம்பம் சாட்டுதல் நடக்கிறது. 

    தொடர்ந்து 21-ந் தேதி இரவு தீக்குண்டம் வார்ப்பு விழாவும், 22-ந்  தேதி அதிகாலை பக்தர்கள் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. 

    ஆண்டு தோறும் லட்சக்கணக்கான  கர்நாடக, தமிழக பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தி வந்தனர். 

    கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டு விழா நடப்பதால் பக்தர்கள் அதிகளவில் கலந்து கொள்வார்கள் என எதிர்ப் பார்க் கப்படுகிறது. 

    இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    இதையொட்டி அந்த பகுதியில் பொக்லைன் எந்திரங்கள் மூலம் சுத்தப் படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
    ×