என் மலர்tooltip icon

    ஈரோடு

    மொடக்குறிச்சி தாலுகாவுக்குட்பட்ட அவல்பூந்துறை பேரூராட்சிக்கு ரூ.50 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகளை ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர் ஆய்வு மேற்கொண்டார்.
    மொடக்குறிச்சி:

    அவல்பூந்துறை பேரூராட்சி செயல்பட்டு வரும் பழைய கட்டிடம் போதிய வசதிகளின்றி இருந்து வந்தது. அதனை தொடர்ந்து பொது மக்களின் கோரிக்கையை ஏற்று, இடைவெளி நிரப்பும் திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, அவல்பூந்துறை சந்தை வளாகத்தில் இடம் ஒதுக்கப்பட்டு, பணிகள் துவக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

    இப்பணிகளை ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர் திடீர் ஆய்வு மேற்கொண்டு, ஆலோசனைகள் வழங்கி, விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டார்.

    இந்த ஆய்வின் போது, ஈரோடு எம்.பி. செல்வகுமார சின்னையன், அவல்பூந்துறை பேரூராட்சி தலைவர் ஆர்.பி. கதிர்வேல், மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. வி.பி. சிவசுப்பிரமணி, முன்னாள் எம்.எல்.ஏ. ச.பாலகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் பி.சி. ராமசாமி, பேரூராட்சி துணை தலைவர் பொன்னுசாமி, வார்டு உறுப்பினர் செந்தில்குமார். உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    சப்–இன்ஸ்பெக்டர் தாயிடம் தங்க சங்கிலி பறித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

    பெருந்துறை:

    அரச்சலூர் போலீஸ் நிலையத்தில் சப்– இன்ஸ் பெக்டராக பணிபுரிந்து வருபவர் தாமஸ். இவரது தாயார் ஆலீஸ் (வயது 80). பெருந்துறையை அடுத்துள்ள சிலேட்டர் நகர், சர்ச் வீதி பகுதியில் வசித்து வருகிறார்.

    இவர் நேற்று மாலை தனது வீட்டில் வளர்த்து வரும் ஆட்டுக்குட்டிகளுக்கு தழை பறிப்பதற்காக அதே பகுதியில் ரோட்டோரத்தில் உள்ள மரத்தில்  தழைகளை பறித்து கொண்டு வீட்டுக்கு திரும்பி நடந்து வந்து கொண்டிருந்தார்.

    அப்போது இவருக்கு பின்னால் நடந்து வந்த ஒரு நபர் இவரது கழுத்தில் இருந்த 2 பவுன் தங்கச்சங்கிலியை திடீரென பறித்து கொண்டு முன்னால் தயாராக நின்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி இன்னொருவருடன் தப்பி சென்று விட்டார்.

    இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை துரத்தி பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் தப்பி ஓடி விட்டனர். இதையடுத்து ஆலீஸ் பெருந்துறை போலீசில் புகார் செய்தார்.

    இதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தப்பி சென்ற மர்ம ஆசாமிகளை வலை வீசி தேடி வருகிறார்கள்.

    டி.என்.பாளையம் அருகே யானைகள் பயிர்களை மிதித்து நாசம் செய்தது.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் வனச் சரகத்தில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இவற்றில் பொதுமக்களுக்கு அதிக இடையூறு செய்வது யானை, காட்டுப்பன்றி, சிறுத்தை, கடந்த 2 மாதங்களாகவே புஞ்சை துறையம் பாளையம், கொண்டையம் பாளையம் சுண்டக்கரடு,கணக்கம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள விவசாய நிலங்களில் யானைகள் புகுந்து பயிர்களை துவம்சம் செய்வது வாடிக்கையாகி விட்டது.

    நேற்று முன் தினம் இரவு கொண்டையம் பாளையம் சுண்டக்கரடு கல்குவாரி தோட்டப் பகுதியிலுள்ள பெருமாள், கோயம்புத்தூரை சேர்ந்தவர் தோட்டம் இருவரின் தோட்டத்தில் 3 யானைகள் புகுந்து மசால் பயிர் 25 சென்ட் அளவில் செவ்வாழைகள் 500-க்கும் மேற்பட்டதை மிதித்து நாசம் செய்தது.

    இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பாதிப்படைந்த பகுதிகளை பார்வையிட்டு சேத மதிப்பை கணக்கிட்டு விண்ணப்பிக்குமாறு கூறிவிட்டு சென்று விட்டனர்.

    ஈரோடு அருகே வாலிபர் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு சூரம்பட்டி அம்பேத்கர் வீதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40). சம்பவத்தன்று இவர் நாடார் மேட்டில் உள்ள தனது தாயார் வீட்டில் இருந்தார். அப்போது அவர் யாரிடமும் சொல்லாமல் வெளியில் சென்றார். இதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அவரது நண்பர்கள், உறவினர்கள் உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் சுரேசை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    எனவே இது பற்றி சுரேசின் மனைவி சுஜிதா சூரம்பட்டி போலீசில் புகார் செய்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன சுரேசை தேடி வருகிறார்கள்.
    தமிழக ஐ.பி.எஸ். அதிகாரி மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி-க்கு விசாரணைக்கு ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ரெங்கசமுத்திரத்தை சேர்ந்தவர் சசிகுமார் (29). இவரது தந்தை குப்புசாமி நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். தாயார் மயிலாத்தாள். தங்கை கவிதா. திருமணம் ஆகி சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    சசிகுமார் சத்தியமங்கலத்தில் பள்ளி படிப்பை முடித்து சென்னை அண்ணா பல்கலை கழகத்தில் பி.ஈ எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் படித்தார். போலீஸ் அதிகாரி ஆகும் ஆர்வத்தில ஐ.பி.எஸ் படித்து தேர்வு எழுதி வெற்றி பெற்றார். 29 வயதிலேயே ஐ.பி.எஸ் அதிகாரி ஆனார்.

    தற்போது ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் பாடேறு பகுதி உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து வந்தார்.

    கடந்த 6 மாதத்துக்கு முன் பணி நியமனம் செய்யப்பட்ட அவர் ஆந்திர அரசு ஒதுக்கி இருந்த அரசு குடியிருப்பில் தங்கி இருந்தார்.

    சசிகுமார் நேற்று அதிகாலை வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு திடீரென துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. அக்கம் பக்கத்தினர் பதட்டத்துடன் ஓடிச்சென்று பார்த்தனர்.

    அங்கு படுக்கை அறையில் சசிகுமார் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு திடுக்கிட்டனர்.

    அவரது தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்திருந்தது. ஐ.பி.எஸ் அதிகாரியாக சசிகுமார் மிகவும் துடிப்பான போலீஸ் அதிகாரியாக இருந்து உள்ளார். இதற்கு முறை கர்னூல் மாவட்டத்தில் ஆலகட்டா பகுதி உதவி போலீஸ் சூப்பிரண்டாக இருந்த போது ஆந்திர மாநிலத்தில் கொடி கட்டி பறந்த செம்மரக் கடத்தல் தாதாக்களை கைது செய்து உள்ளார்.

    விசாகபட்டினத்தில் கஞ்சா கடத்தலையும் துணிச்சலுடன் தடுத்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் கூட பல கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளார். சாகுபடி செய்துள்ள கஞ்சா செடிகளை அழித்துள்ளார்.

    இந்த நிலையில்தான் சசிகுமார் தனது அறையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து மர்மமான முறையில் இறந்துள்ளார்.

    இவர் மீது ஆத்திரத்தில் உள்ள செம்மரக் கடத்தல் கும்பலோ அல்லது கஞ்சா கடத்தல் பேர்வழிகளோ அவரை சுட்டு கொலை செய்து இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

    துணிச்சலான போலீஸ் அதிகாரியாக செயல்பட்டு வந்ததால் உயர் அதிகாரிகள் பல்வேறு வழியில் நெருக்கடி கொடுத்ததாக தெரிகிறது. இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்றும் பேசப்பட்டு வருகிறது.

    சசிகுமார் இறந்த செய்தி கேட்டதும் அவரது பெற்றோர் மற்றும் சென்னையில் உள்ள அவரது தங்கை கவிதா, அவரது கணவர் பத்மநாபன் ஆகியோர் விசாகப்பட்டினத்துக்கு விரைந்தனர்.

    சசிகுமாரின் உடல் விசாகப்பட்டினத்தில் உள்ள கே.ஜி.எச். ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை அவரது பெற்றோர் அங்கு வந்து சேர்ந்தனர். மகனின் உடலை பார்த்ததும் அதிர்ச்சியில் பெற்றோர் மயங்கி விழுந்தனர்.

    எம்.எல்.ஏ. ஈஸ்வரி, கலெக்டர் யுவராஜ், டி.ஐ.சி. ஸ்ரீகாந்த் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு சென்று சசிகுமாரின் உடலை பார்வையிட்டனர். பின்னர் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.

    பின்னர் சசிகுமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை முடிந்ததும் சசிகுமாரின் உடல் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

    பின்னர் இன்று மாலையில் அவரது உடல் சொந்த ஊரான சத்தியமங்கலத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

    சசிகுமார் மரணம் தொடர்பாக விசாகப்பட்டினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராகுல் தேவ் சர்மா சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்துள்ளார். அவரது தலையில் புகுந்தது 9 எம்.எம். வகை தோட்டா ஆகும்.

    இந்த தகவல் ஆந்திர மாநில உள்துறை மந்திரி சினராஜப்பாவுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் போலீஸ் அதிகாரி சசிகுமாரின் உறவினர்களுடன் பேசினார். பின்னர் சசிகுமார் மரணம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டார்.

    சசிகுமார் பிணமாக கிடந்த அறையில் இருந்த மேஜையில் கடிதம் ஒன்று இருந்தது. அதை போலீசார் கைப்பற்றினார்கள். அவரது உறவினர்கள் முன்னிலையில் அந்த கடிதத்தை பிரித்து பார்க்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    ஐ.பி.எஸ். அதிகாரி சசிகுமாருக்கு வருகிற செப்டம்பர் மாதம் 4-ந்தேதி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. இதற்காக திருமண பத்திரிகை தயார் செய்ய ஊருக்கு செல்வதற்காக 3 நாள் விடுமுறை கேட்டு சசிகுமார் உயர் அதிகாரிகளுக்கு விண்ணப்பம் செய்திருந்தார். அதற்குள் அவர் மரணம் அடைந்து விட்டார்.

    ஐ.பி.எஸ் அதிகாரி சசிகுமார் மரணம் அடைந்தது தொடர்பாக ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
    ஜீப்பை ஓட்டி வந்தவர் திடீர் மாரடைப்பால் இறந்து போனதால் அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    சென்னிமலை:

    திண்டுக்கல் மாவட்டம் அவனிப்பட்டியில் பகுதியில் வசிப்பவர் ஆறுமுகம் (வயது 40). இவர் கரூரில் உள்ள டெக்ஸ் டைல்ஸ் நிறுவனத்தில் டிராக்ஸ் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் கரூரில் இருந்து உற்பத்தி செய்த துணிகளை வாங்கி செல்ல காங்கேயம் சென்னிமலை பெருந்துறை வழியாக குன்னத்தூர் செல்வதற்காக சென்றார்.

    இவர் மட்டும் தனியாக ஜீப்பை ஓட்டி வந்துள்ளார். சென்னிமலை டவுன் காங்கேயம் ரோடு எல்லை மாகாளியம்மன் கோவில் அருகே வந்த போது தீடீர் என உடல் நிலை சரியில்லை என கூறி ஜீப்பினை நிறுத்தி விட்டு கம்பெனிக்கு போன் செய்து உடல் நிலை சரியில்லை ஒரு மணி நேரம் படுத்து இருந்து விட்டு செல்கிறேன் என்று சொல்லி விட்டு ஜீப்பில் படுத்தார். பிறகு அப்படியே மயங்கி விட்டார்.

    இதை தெரிந்து அக்கம் பக்கத்தவர்கள் பார்த்து சென்னிமலையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அதே ஜீப்பில் அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அதை அடுத்து அவரிடம் இருந்த போன் மூலம் தகவல் சொல்லி சென்னிமலையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் கொண்டு சென்றுள்ளனர்.

    பாதி தூரம் சென்ற பிறகு சில உறவினர்கள் சேர்ந்து கொண்டு சாவில் சந்தேகம் உள்ளது போலீஸ் புகார் கொடுத்து உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என கூறி இறந்தவர் உடலை மீண்டும் சென்னிமலைக்கு திருப்பி கொண்டு செல்ல வேண்டும் என கூறி உள்ளனர்.

    இதை அடுத்து ஆம் புலன்ஸ் டிரைவர் சென்னிமலை கொண்டு வந்து விட்டார். உடல் பல மணி நேரம் சென்னிமலை போலீஸ் நிலையம் முன்பு ஆம்புலன்சிலேயே இருந்தது.

    இரவு 8 மணிக்கு உறவினர்கள் சென்னிமலை போலீஸ் நிலையம் வந்து இன்ஸ்பெக்டர் வெங்காடாசல்திடம் பேசினர். அப்போது எங்களுக்கு சாவில் சந்தேகம் இல்லை இன்சூரன்ஸ் உள்ளது அதனால் முறைப்படி உடலை பிரேத பரிசோதனை செய்து பெற்று கொள்வதாக தெரிவித்தனர்.

    அதன் பின்பு மனைவி லட்சுமி கொடுத்த புகாரினை பதிவு செய்து பெருந்துறை அரசு ஆஸ்பத்திரி அனுப்பி வைத்தனர்.இறந்த ஆறுமுகத்திற்கு லோகநாத் (13), காளீஸ்வரன் (12) ஆகிய 2 மகன் உள்ளனர்.

    பள்ளி–கோவில் அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 87 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பள்ளி–கல்லூரி மற்றும் கோவில்கள் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக புகார்கள் வந்தன.

    இதையொட்டி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ருபேஷ்குமார் மீனா உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது பள்ளி– கல்லூரி மற்றும் கோவில்கள் அருகே புகையிலை, பான்மசாலா, குட்கா, சிகரெட் போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையொட்டி 87 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இதே போல பெருந்துறை டி.எஸ்.பி சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் பொது இடங்களில் புகை பிடித்தல் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக 39 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

    இதுதொடர்பாக பெருந்துறையில் 5 வழக்குகளும், வெள்ளோட்டில் 1 வழக்கும், சென்னிமலையில் 6 வழக்குகளும், காஞ்சிக்கோவிலில் 5 வழக்குகளும், அரச்சலூரில் 4 வழக்குகளும், கொடுமுடியில் 10 வழக்குகளும், சிவகிரியில் 6 வழக்குகளும், மலையம்பாளையத்தில் 2 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

    சென்னிமலை முருகன் கோவிலுக்கு வீடு கட்ட வரம் வேண்டி குவியும் பக்தர்கள் குன்று போல் கற்கள் வைத்து வழிபாடு ஈரோடு–02

    சென்னிமலை மலை மீதுள்ள முருகன் கோவில் மிக தொன்மையானது வரலாற்று சிறப்பு மிக்க கோவில் இங்கு ஈரோடு மாவட்ட பக்தர்கள் மட்டும் அல்லாமல் வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

    அதுவும் குறிப்பாக செவ்வாய்க்கிழமை மட்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் வாரம் தோறும் அதிகாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அதுமட்டும் அல்லாமல் கிருத்திகை, சஷ்டி, பவுர்ணமி, அமாவாசை நாட்களிலும் பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது.

    முருக பக்தர்கள் பலர் வேண்டும் வைத்து தொடர்ந்து 5 செவ்வாய்க்கிழமை என கணக்கு வைத்து வருகிறவர்களின் எண்ணிக்கையும் கூடி வருகிறது. குறிப்பாக சென்னிமலை முருகனிடம் குழந்தை வரம் வேண்டியும், திருமண பாக்கியம் வேண்டியும் வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருகிறது.

    இப்படி பக்தர்களின் எண்ணிக்கை கூடி வரும் நிலையில் சமீப காலமாக புதுவகையான வழிபாடும் ஏற்பட்டுள்ளது. சென்னிமலை முருகன் கோவிலில் இருந்து வள்ளி, தெய்வானை சன்னதி செல்லும் வழியில் படியின் இரு புறங்களிலும் அங்கு கிடக்கும் கற்களை எடுத்து சிறிய அளவில் குன்று போல் வைத்து வழிபட்டு செல்கின்றனர். அப்படி செய்தால் புது வீடு கட்டும் யோகம் வரும் எனவும் வீடு கட்டும் பணி, தங்கு தடையின்றி நடக்கும் என்பது ஜதீகம் ஆகி தற்போது இந்த புது வகையான விநோத வழிபாடு அதிகரித்து வருகிறது.

    இதனால் மலை பகுதியில் எங்கு பார்த்தாலும் சிறிய சிறிய வேண்டுதல் கற் குவியல் தென்படுகிறது. இதை பார்ப்பவர்களும், மேலும் புதியதாக கோவிலுக்கு வருபவர்களும் இந்த வழிபாடு பற்றி தெரிந்து கொண்டு அவர்களும் சிறிய கற் குவியல் ஏற்படுத்தி வணங்கி செல்கின்றனர்.

    இந்த புதுவகை வேண்டுதல் வழிபாடு சமீப காலத்தில் தான் பிரபலமாகி வருகிறது என்கின்றனர் கோவின் அர்ச்சகர்கள். மேலும் சிலர் இந்த வழிபாட்டில் நல்ல பலன் கிடைத்ததாக தெரிவிப்பதாகவும் கூறுகின்றனர்

    சென்னிமலை அருகே உள்ள எல்லக்காடு என்ற இடத்தில் லாரியும் மோட்டார் சைக்கிளும் கண் இமைக்கும் நேரத்தில் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் பலியானார்
    சென்னிமலை :

    சென்னிமலை அருகே உள்ள நல்லப்பாளி ஜெ.ஜெ நகரை சேர்ந்தவர் மோகன் ராஜ் (வயது 20). இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவருடன்கலைவாணி (18) என்ற பெண் வேலை பார்த்து வந்தார்.

    இவர்கள் இருவரும் கடந்த 2 வருடமாக காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் அவர்களது பெற்றோர்களுக்கு தெரிய வந்தது. முதலில் எதிர்ப்பு தெரிவித்த அவர்கள் பிறகு சமாதானம் அடைந்து மோகன்ராஜ் - கலைவாணியின் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தனர்.

    இவர்களின் திருமணம் இன்று (வியாழக்கிழமை) நடக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை இருதரப்பு பெற்றோரும் உறவினர்களும் செய்து வந்தனர்.

    இதனால் காதலர்கள் இருவரும் மிகவும் சந்தோசம் அடைந்தனர். தங்களது காதல் வெற்றி பெற்று திருமணம் நடக்கப்போவதை அறிந்து அவர்கள் பல்வேறு கனவுகளுடன் மிதந்தனர்.

    இந்த நிலையில் மோகன் ராஜும், கலைவாணியும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர். சென்னிமலை அருகே உள்ள எல்லக்காடு என்ற இடத்தில் மோட்டார் சைக்கிள் வந்து கொண்டு இருந்தது.

    அப்போது அந்தவழியாக வந்த ஒரு லாரியும் மோட்டார் சைக்கிளும் கண் இமைக்கும் நேரத்தில் மோதிக்கொண்டன.

    இதில் மோட்டார் சைக்கிள் ஒட்டி வந்த மோகன்ராஜுக்கு தலையில் பலத்த அடிபட்டது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

    பின்னால் உட்கார்ந்து இருந்த கலைவாணியும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்தார். இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் மணமகன் விபத்தில் பலியான சம்பவமும், மணமகள் படுகாயம் அடைந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் சம்பவமும் இருதரப்பு பெற்றோர் மற்றும் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விபத்து குறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    லாரியும் மோட்டார் சைக்கிளும் கண் இமைக்கும் நேரத்தில் மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே உள்ள நல்லப்பாளி ஜெ.ஜெ நகரை சேர்ந்தவர் மோகன் ராஜ் (வயது 20). இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவருடன் கலைவாணி (18) என்ற பெண் வேலைபார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர்கள் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தனர்.

    சென்னிமலை அருகே உள்ள எல்லக்காடு என்ற இடத்தில் வரும் போது அந்த வழியாக வந்த ஒரு லாரியும் மோட்டார் சைக்கிளும் கண் இமைக்கும் நேரத்தில் மோதிக்கொண்டன.

    இதில் மோட்டார் சைக்கிள் ஒட்டி வந்த மோகன் ராஜுக்கு தலையில் பலத்த அடிபட்டது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    பின்னால் உட்கார்ந்து இருந்த கலைவாணியும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்தார். இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார்ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள யுவராஜ் மீது பெருந்துறை, வெள்ளோடு போலீஸ் நிலையத்தில் ஆள் கடத்தல் வழக்குகளும் பதிவாகி உள்ளது. இதில் பெருந்துறை கோர்ட்டில் வரும் 5-ம்தேதி ஆஜராக கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
    பெருந்துறை:

    திருச்செங்கோடு என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள யுவராஜ் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

    ஜாமீனில் வந்து நெல்லையில் தங்கி இருக்கும் யுவராஜ் மீது ஈரோடு மாவட்டம் பெருந்துறை, வெள்ளோடு போலீஸ் நிலையத்தில் ஆள் கடத்தல் வழக்குகளும் பதிவாகி உள்ளது.

    மாவட்ட உரிமையியல் மற்றும் நீதிதுறை நடுவர் நீதிமன்றத்தில் ஆள்கடத்தல் வழக்கு நடந்து வருகிறது.

    இந்த வழக்கில் யுவராஜ் நேற்று பெருந்துறை கோர்ட்டில் ஆஜர் ஆக வேண்டும். இதையொட்டி நேற்று கோர்ட்டு முன் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. யுவராஜ் கோர்ட்டுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று யுவராஜ் கோர்ட்டில் ஆஜராகவில்லை.

    நெல்லை போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வருவதால் யுவராஜ் பெருந்துறை கோர்ட்டுக்கு வரவில்லை. அவர் பெயரில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை பெருந்துறை கோர்ட்டு ஏற்றுக்கொண்டது.

    எனினும் யுவராஜ் அடுத்த மாதம் (ஜுலை) 5-ந்தேதி பெருந்துறை கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
    உலக நலன் வேண்டி நடைபயணம் மேற்கொண்டிருக்கும் பெண் துறவிகளுக்கு ஈரோட்டில் ஜெயின் மதத்தினர் வரவேற்பு அளித்துள்ளனர்.
    ஈரோடு:

    ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஜெயின் மத பெண் துறவிகள் ஒரு தள்ளு வண்டியில் இந்தியா முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்கள்.

    இதில் வயதான பெண் துறவியான சவுடேஸ்வரி என்பவர் மட்டும் அதிக அளவில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

    இவர்கள் 3 பேரும் நடைபயணமாக ஈரோடு வருகை தந்தனர். ஈரோட்டில் வாழும் ஜெயின் மதத்தை சேர்ந்தவர்கள் அந்த பெண் துறவிகளுக்கு வரவேற்பு கொடுத்தனர். மேலும் பயணம் சிறக்க வாழ்த்தும் தெரிவித்தனர்.

    இவர்கள் உலக நலன் வேண்டி ஜெய்ப்பூரில் இருந்து நடைபயணம் மேற்கொண்டுள்ளனர். அவர்கள் கூறும்போது,

    ‘‘நாட்டில் இயற்கை சீற்றத்தால் பல விளைவுகள் ஏற்படுகிறது. இயற்கை பேரிடர்களிலிருந்து தப்பி மக்கள் நலமாக வாழ வேண்டும். ஒருவருக்கொருவர் அன்பு-பரிவு காட்டி வாழ வேண்டும். நாட்டின் வளழும் செழிக்க வேண்டும். இதற்கு கடவுள் அருள் புரிய வேண்டும்’’ என்று கூறினர்.
    ×