search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜோதிமணிக்கு கரூர் கிடைப்பதில் சிக்கல்: தி.மு.க.-காங்கிரஸ் எம்.பி.க்கள் தொகுதி மாறி போட்டியிட முடிவு
    X

    ஜோதிமணிக்கு கரூர் கிடைப்பதில் சிக்கல்: தி.மு.க.-காங்கிரஸ் எம்.பி.க்கள் தொகுதி மாறி போட்டியிட முடிவு

    • ஜோதி மணி தொகுதி பக்கம் வருவதில்லை என்ற புகார் பகிரங்கமாகவே கிளம்பி இருக்கிறது.
    • விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதி எம்.பி.யாக இருக்கிறார்.

    தேர்தல் நெருங்கி வரும்போது தொகுதிகளை கணிக்கும் வேலையில் கட்சிகள் ஈடுபட்டாலும் இந்த முறை எந்த தொகுதியில் போட்டியிடலாம் என்று எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் காய் நகர்த்துவார்கள்.

    அந்த வகையில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் தொகுதிகளை அலசும் வேலையில் இப்போதே இறங்கி விட்டார்கள். இதில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியில் தற்போது எம்.பி.க்களாக இருக்கும் சிலர் தொகுதி மாறுவார்கள் என்று தெரிய வந்துள்ளது.

    கரூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யாக இருக்கும் ஜோதிமணிக்கும் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும் இடையேயான லடாய் எல்லோரும் அறிந்ததே.

    இந்த நிலையில் ஜோதி மணி தொகுதி பக்கம் வருவதில்லை என்ற புகார் பகிரங்கமாகவே கிளம்பி இருக்கிறது. இதை சாக்காக வைத்து வருகிற தேர்தலில் அவருக்கு இந்த தொகுதி வழங்கப்பட மாட்டாது என்று தெரிய வந்துள்ளது.

    முன்பு அ.தி.மு.க. எம்.பி. தம்பித்துரை தொகுதி பக்கம் வருவதில்லை என்பதை சொல்லித்தான் ஜோதி மணியை வெற்றி பெற செய்தோம்.

    இப்போது அதே போல் ஜோதிமணியும் தொகுதி பக்கம் வராமல் இருக்கிறார். எனவே மீண்டும் அவருக்கு வாய்ப்பு கொடுத்தால் தி.மு.க. ஒரு தொகுதியை இழக்க நேரிடும். எனவே இந்த தேர்தலில் கரூர் தொகுதியை தி.மு.க.வுக்கு ஒதுக்க வேண்டும் என்று தி.மு.க.வினர் தீர்மானமே போட்டுள்ளனர்.

    இதற்கிடையில் இந்த தொகுதி தி.மு.க.வுக்குதான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் கரூரில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் உதய சூரியனுக்கு வாக்களியுங்கள் என்று பேசியது உறுதிப்படுத்தி உள்ளது.

    விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதி எம்.பி.யாக இருக்கிறார். கடந்த தேர்தலில் மிக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றார்.

    எனவே சென்னையை ஒட்டியிருக்கும் திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட விரும்புவதாக கூறப்படுகிறது. தற்போது இந்த தொகுதி காங்கிரஸ் வசம் உள்ளது. அதை விடுதலை சிறுத்தைக்கு விட்டுக்கொடுக்க வற்புறுத்துவார்கள் என்று கூறப்படுகிறது.

    விருதுநகர் காங்கிரஸ் எம்.பி.யாக இருக்கும் மாணிக்கம் தாகூர் சிவகங்கை தொகுதிக்கு மாற விரும்புகிறார். காரணம் விருதுநகர் தொகுதியை ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கவும் அந்த தொகுதியில் வைகோ மகனை போட்டியிட வைக்கவும் வேலைகள் விறுவிறுப்பாக நடக்கிறது.

    எனவே காங்கிரசுக்கு சாதகமான சிவகங்கையை மாணிக்கம் தாகூர் குறி வைப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தொகுதியின் 'சிட்டிங்' எம்.பி.யான கார்த்தி சிதம்பரம் விட்டுக் கொடுப்பாரா? என்பது தெரியவில்லை. ஆனால் ராகுல் காந்திக்கு கார்த்தி சிதம்பரம் மீது நல்ல அபிப்ராயம் இல்லாததால் தனக்கு கிடைக்க ராகுல் உதவுவார் என்று நம்புகிறார்.

    ஆனால் ப.சிதம்பரம் சோனியாவிடம் செல்வாக்குடன் இருப்பவர். எனவே யார் கை ஒங்குமோ அதை பொறுத்தே இந்த தொகுதியின் வேட்பாளரும் முடிவாகும்.

    Next Story
    ×