என் மலர்
திண்டுக்கல்
- தற்போதைய வளர்ச்சி கிராமத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.
- கிராமங்கள் ஒற்றுமையாக இருந்தால்தான் பிரச்சனைகளை ஒன்றாக எதிர்கொள்ளலாம்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் 36வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பிரதமர் மோடி, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றினார். அவர் பேசியதாவது:-
காந்திகிராம பல்கலைக் கழகத்தை மகாத்மா காந்தி திறந்து வைத்தார். கிராமப்புற மேம்பாடு குறித்த அவரது எண்ணங்களின் உணர்வை இங்கு காணலாம். கிராமத்தின் ஆன்மா நகரத்தின் வசதி என்பதே எங்கள் கொள்கை. காந்தியின் கொள்கையே தற்சார்பு இந்தியா திட்டம். தற்போதைய வளர்ச்சி கிராமத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. கிராமங்கள் சுயமாக செயல்பட்டால் நாடும் சுயமாக செயல்படமுடியும். கிராமங்கள் ஒற்றுமையாக இருந்தால்தான் பிரச்சனைகளை ஒன்றாக எதிர்கொள்ளலாம்.
கிராமங்களில் இணையம் அதிக அளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2 லட்சம் கிராமங்களில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. காதி பொருட்கள் உலக அளவில் கவனம் பெற்று வருகிறது, இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. தமிழ்நாடு எப்போதும் தேசிய உணர்வுமிக்கதாக இருந்து வருகிறது. காசி தமிழ் சங்கமம் விரைவில் காசியில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் தமிழகத்தின் மொழி, கலாச்சாரம் கொண்டாடப்படும். பெண் சக்தியில் தமிழகம் சிறந்து விளங்கி வருகிறது. இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களின் கையில் இருக்கிறது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
- உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார் முதல்வர் ஸ்டாலின்.
- டாக்டர் பட்டம் பெற்ற இசைஞானி இளையராஜா, உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகிலுள்ள காந்திகிராம பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட ஏராளமோனோர் பங்கேற்றனர். விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
காந்தி கூறிய கொள்கைகள் இந்தியாவை ஒழுங்குபடுத்தும் விழுமியங்களாக உள்ளன.
வட இந்தியர் அனைவரும் தமிழைக் கற்க வேண்டும் என்று சொன்னவர் மகாத்மா காந்தி.
மகாத்மா காந்தியை அரையாடை கட்டவைத்தது தமிழ் மண்.
உயர்கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.
பெண்களின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அனைத்து மாநிலங்களும் கவனிக்கும் வகையில் தமிழகத்தின் கல்வித் திட்டங்கள் உள்ளன என தெரிவித்தார்.
டாக்டர் பட்டம் பெற்ற இசைஞானி இளையராஜா, உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டுவர வேண்டும் என பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்தார்.
- காரின் கதவை திறந்து நின்றபடி, தொண்டர்களை பார்த்து கையசைத்துக்கொண்டே பிரதமர் மோடி பயணித்தார்.
- பிரதமர் வருகையை முன்னிட்டு மதுரை மற்றும் திண்டுக்கல் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திண்டுக்கல்:
தென் மாநிலங்களில் இரண்டுநாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி முதல் நாளான இன்று காலை கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பின்னர் அங்கிருந்து தனி விமானம் மூலம் இன்று பிற்பகல் மதுரை வந்தார். மதுரை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி திண்டுக்கல் வந்து, அங்கிருந்து கார் மூலம் காந்தி கிராமம் கிராமிய பல்கலைக்கழகத்திற்கு புறப்பட்டார். வழிநெடுகிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. காரின் கதவை திறந்து நின்றபடி, தொண்டர்களை பார்த்து கையசைத்துக்கொண்டே பிரதமர் மோடி பயணித்தார்.

காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்திற்கு வந்த பிரதமர் மோடியை பல்கலைக்கழக நிர்வாகிகள் சிறப்பு மரியாதை அளித்து வரவேற்றனர். பின்னர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு மதுரை மற்றும் திண்டுக்கல் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும், போலீசாரும் குவிக்கப்பட்டு உள்ளனர்.
- மூலவர் சன்னதியில் உள்ள நவபாஷான சிலை குறித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு தகவல்கள் வெளியாகின.
- எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மூலவர் சிலை ஆய்வுக்கு ஸ்தபதி குழுவினர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பழனி:
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் 14 ஆண்டுகளுக்கு மேலாக கும்பாபிஷேகம் நடைபெறாததால் விரைந்து இப்பணியை மேற்கொள்ள வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து கடந்த 2019-ம் ஆண்டு இதற்கான பாலாயபணிகள் தொடங்கியது. ஆனால் அதன்பிறகு கொரோனா ஊரடங்கால் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
இதனால் கும்பாபிஷேகத்திற்கான பணிகளும் தொடங்காமல் இருந்தது. இதனைதொடர்ந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையிலான குழுவினர் கோவிலில் ஆய்வு செய்து பழனி முருகன் கோவிலில் விரைவில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று அறிவித்தார். இதனைதொடர்ந்து அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இதற்கான கும்பாபிஷேக குழுவும் அமைக்கப்பட்டது. மூலவர் சன்னதியில் உள்ள நவபாஷான சிலை குறித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு தகவல்கள் வெளியாகின. இந்த சிலை அமைத்ததில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதனைதொடர்ந்து பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது வருகிற ஜனவரி 17-ந்தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து மலைக்கோவில் கருவறையில் உள்ள நவபாஷான சிலையை ஆய்வு செய்ய இன்று ஸ்தபதி தட்சிணாமூர்த்தி தலைமையிலான குழுவினர் வந்தனர். சிறப்பு பூஜைகளுக்கு பிறகு உள்ளே சென்ற அவர்கள் நவபாஷான சிலையின் எடை, உயரம் மற்றும் அதன் தன்மை குறித்து ஆய்வு செய்தனர்.
15 ஆண்டுகளுக்கு பிறகு மூலவர் சிலை ஆய்வு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. ஆனால் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மூலவர் சிலை ஆய்வுக்கு ஸ்தபதி குழுவினர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
- வீட்டைவிட்டு வெளியேறிய காதல்ஜோடி பழனியில் திருமணம் செய்து கொண்டு சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீசில் தஞ்சமடைந்தனர்.
- இதில் மணமகனின் சகோதரர் அவர்களை ஏற்றுக்கொண்டதால் அவருடன் காதல்ஜோடி அனுப்பி வைக்கப்பட்டனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகே சின்னாளபட்டியை சேர்ந்தவர் கார்த்திக்குமார்(22). இவர் தனது சகோதரர் பராமரிப்பில் இருந்து வருகிறார். கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பேக்கரியில் வேலைபார்த்து வருகிறார். இவருக்கும், எரியோடு அருகே உள்ள நல்லமனார்கோட்டையை சேர்ந்த தாரணிதேவி(19) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
தாரணிதேவி தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இருவரும் காதலிக்க தொடங்கினர். இந்த விபரம் அவரது பெற்றோருக்கு தெரியவரவே எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து வீட்டைவிட்டு வெளியேறிய காதல்ஜோடி பழனியில் திருமணம் செய்து கொண்டு சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீசில் தஞ்சமடைந்தனர்.
இந்த நிலையில் மகள் மாயமானதாக எரியோடு போலீசில் அவரது தந்தை புகார் அளித்திருந்தார். எனவே காதல்ஜோடி அங்கு அனுப்பி வைக்கப்பட்டனர். எரியோடு சப்-இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி இருதரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் மணமகனின் சகோதரர் அவர்களை ஏற்றுக்கொண்டதால் அவருடன் அனுப்பி வைத்தார்.
- கிழக்கு மண்டல தலைவர் கார்த்திக், மகிளா காங்கிரஸ் தலைவி ரோஜா பேகம், வட்டார தலைவர் மதுரைவீரன், அமீர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமிழகத்திற்கான திட்டங்களை முடக்குவதாகவும், எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை உடனடியாக தொடங்கவேண்டும் எனவும் கோஷம் எழுப்பினர்.
திண்டுக்கல்:
பிரதமர் மோடி திண்டுக்கல் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிர்வாகிகள் சிலரை போலீசார் கைது செய்தனர். காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு முன்னாள் தலைவர் சித்திக் தலைமையில் கட்சியினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிழக்கு மண்டல தலைவர் கார்த்திக், மகிளா காங்கிரஸ் தலைவி ரோஜா பேகம், வட்டார தலைவர் மதுரைவீரன், அமீர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமிழகத்திற்கான திட்டங்களை முடக்குவதாகவும், எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை உடனடியாக தொடங்கவேண்டும் எனவும் கோஷம் எழுப்பினர்.
மேலும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்ற எரிபொருள் விலையேற்றத்தை தடுக்க வேண்டும் எனவும் கோஷமிட்டனர். இதனைதொடர்ந்து அங்கு வந்த போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
- பட்டம் பெறும் மாணவ-மாணவிகள் அனைவரது மின்னஞ்சல் முகவரிக்கு பட்டங்கள் அனுப்பி வைக்கப்பட்டு அதனை பதிவிறக்கம் செய்து மாணவர்கள் விழாவில் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
- ஆவணங்கள் இன்றி வந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளை காவலர்கள் திருப்பி அனுப்பினர்.
சின்னாளபட்டி:
காந்திகிராம பல்கலைக்கழகத்தில் இன்று 2314 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்படும் என பல்கலைக்கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் குறிப்பிட்ட மாணவர்கள் சிலருக்கு பிரதமர் மோடி பட்டம் வழங்குவார் என்றும், மற்றவர்களுக்கு அந்தந்த துறை தலைவர்கள் சார்பில் பட்டங்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்காக பட்டம் பெறும் மாணவ-மாணவிகள் அனைவரது மின்னஞ்சல் முகவரிக்கு பட்டங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. அதனை பதிவிறக்கம் செய்து மாணவர்கள் விழாவில் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் பெரும்பாலான மாணவ-மாணவிகளுக்கு இதுகுறித்த தகவல் தெரிவிக்கப்படவில்லை. மேலும் பலரது மின்னஞ்சல் முகவரிக்கு அந்த ஆவணங்கள் கிடைக்கவில்லை. இதனால் ஆவணங்கள் இன்றி வந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளை காவலர்கள் திருப்பி அனுப்பினர். கொட்டும் மழையில் விழாவிற்கு வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.
- பிரதமர் பாதுகாப்பை உறுதிசெய்யும் பொருட்டு திண்டுக்கல், அம்பாத்துரை, கொடைரோடு ரெயில் நிலையங்களில் இன்று தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.
- சந்தேகப்படும்படி நபர்கள் தெரிந்தால் அவர்கள் தனியாக அழைத்து சென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டனர்.
திண்டுக்கல்:
பிரதமர் நரேந்திரமோடி திண்டுக்கல் வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாகவே திண்டுக்கல்-மதுரை வழித்தடத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளன.
சின்னாளபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரதமர் பாதுகாப்பை உறுதிசெய்யும் பொருட்டு திண்டுக்கல், அம்பாத்துரை, கொடைரோடு ரெயில்நிலையங்களில் இன்று தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. திண்டுக்கல் இருப்புபாதை எல்லைக்குட்பட்ட மெட்டூர் ரெயில்வேபாலம் மற்றும் முருகன்பட்டி ரெயில்வே பாலங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் தனிப்பிரிவு காவலர் ராஜேஸ்குமார், போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர். 100-க்கும் மேற்பட்ட போலீசார் ரெயில்நிலையங்களுக்கு வரும் பயணிகளை சோதனை நடத்தி அவர்கள் கொண்டுவந்த உடமைகளையும் ஆய்வுக்கு உட்படுத்தினர்.
ஏதேனும் சந்தேகப்படும்படி நபர்கள் தெரிந்தால் அவர்களை தனியாக அழைத்து சென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டனர். இன்று மாலை வரை இந்த சோதனை தொடரும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
- மஞ்சள்பரப்பு கிராமத்தில் 25 வருட பழமையான அரசமரம் முறிந்து விழுந்தது.
- கோவில், வீடு சேதமானதுடன் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.
பெரும்பாறை:
கொடைக்கானல் கீழ்மலை பகுதியான பெரும்பாறை, தாண்டிக்குடி, பண்ணைக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இன்று காலையும் மழை தொடர்ந்து பெய்ததால் பல்வேறு தரப்பினரும் சிரமம் அடைந்தனர்.
மஞ்சள்பரப்பு கிராமத்தில் 25 வருட பழமையான அரசமரம் முறிந்து விழுந்ததில் அருகில் இருந்த விநாயகர் கோவில் மற்றும் இளையராஜா என்பவருக்கு சொந்தமான வீடு சேதமானது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் மணலூர் ஊராட்சி தலைவர் லதா செல்வக்குமார் விரைந்து சென்று பணியாளர்களுடன் மரத்தை அறுத்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தார். அதன்படி மரம் அகற்றப்பட்டது.
பண்ணைக்காடு பிரிவு பகுதியில் இருந்து பண்ணைக்காடு செல்லும் சாலையில் திடீரென மரம் முறிந்து விழுந்தது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து பணியாளர்கள் அதனை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
கொடைக்கானலில் பெய்து வரும் தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
- பட்டம் படித்து வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வேலை இல்லாத நிலையை உருவாக்கிய மத்திய அரசை கண்டித்து கருப்பு பட்டம் விடும் போராட்டம் மகிளா காங்கிரஸ் சார்பில் நடைபெற உள்ளது.
- இல்லத்தரசிகளின் குடும்பசுமையை ஏற்றி சமையல் எரிவாயு விலை உயர்வை உயர்த்திய பிரதமர் மோடிக்கு விறகு பரிசு கொடுக்கும் போராட்டம் இன்று காலை 9 மணிக்கு நடைபெறும்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட மாநகர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் துரை மணிகண்டன் சார்பில் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு சமூகவலைதளங்கள் மூலம் ஒரு செய்தியை அனுப்பியிருந்தார். கடந்த 2019-ம் ஆண்டு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டி இதுவரை எந்தவித பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு செங்கல் பரிசு கொடுக்கும் நூதனபோராட்டம் நடைபெற உள்ளது.
மேலும் பட்டம் படித்து வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வேலை இல்லாத நிலையை உருவாக்கிய மத்திய அரசை கண்டித்து கருப்பு பட்டம் விடும் போராட்டம் மகிளா காங்கிரஸ் சார்பில் நடைபெற உள்ளது.
இல்லத்தரசிகளின் குடும்பசுமையை ஏற்றி சமையல் எரிவாயு விலை உயர்வை உயர்த்திய பிரதமர் மோடிக்கு விறகு பரிசு கொடுக்கும் போராட்டம் இன்று(11-ந்தேதி) காலை 9 மணிக்கு நடைபெறும். எனவே காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் இந்த போராட்டத்தில் பெருந்திரளாக கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யவேண்டும் என தெரிவித்திருந்தார்.
இதனைதொடர்ந்து மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இருந்த துரை மணிகண்டன் உள்பட கட்சி நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். அப்போது அவர் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி வந்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- பிரதமர் நரேந்திரமோடி திண்டுக்கல் வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- பாதுகாப்பை உறுதிசெய்யும் பொருட்டு திண்டுக்கல், அம்பாத்துரை, கொடைரோடு ரெயில்நிலையங்களில் இன்று தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது
திண்டுக்கல்:
பிரதமர் நரேந்திரமோடி திண்டுக்கல் வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாகவே திண்டுக்கல்-மதுரை வழித்தடத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளன.
சின்னாளபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரதமர் பாதுகாப்பை உறுதிசெய்யும் பொருட்டு திண்டுக்கல், அம்பாத்துரை, கொடைரோடு ரெயில்நிலையங்களில் இன்று தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. திண்டுக்கல் இருப்புபாதை எல்லைக்குட்பட்ட மெட்டூர் ரெயில்வேபாலம் மற்றும் முருகன்பட்டி ரெயில்வே பாலங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் தனிப்பிரிவு காவலர் ராஜேஸ்குமார், போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர். 100-க்கும் மேற்பட்ட போலீசார் ரெயில்நிலையங்களுக்கு வரும் பயணிகளை சோதனை நடத்தி அவர்கள் கொண்டுவந்த உடமைகளையும் ஆய்வுக்கு உட்படுத்தினர்.
ஏதேனும் சந்தேகப்படும்படி நபர்கள் தெரிந்தால் அவர்கள் தனியாக அழைத்து சென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டன்ர. இன்று மாலை வரை இந்த சோதனை தொடரும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
- இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பிரதமர் மோடி கவுரவ டாக்டர் பட்டம் வழங்குகிறார்.
- தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரி எல்.முருகன் விழாவில் பங்கேற்கின்றனர்.
காந்தி கிராமம்:
திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமத்தில் உள்ள காந்தி கிராமிய பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழா மற்றும் காந்தி கிராம நிறுவன பவள விழா இன்று மாலை 3 மணிக்கு நடக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.
இதற்காக பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் மதியம் 2 மணிக்கு பிரதமர் மதுரை வருகிறார். பின்னர் மாலை 3 மணிக்கு மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரையில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் இறங்குதளத்திற்கு செல்கிறார். அங்கு பிரதமர் மோடியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் வரவேற்கின்றனர்.
அதன்பின்னர் அங்கு இருந்து கார் மூலம் காந்தி கிராமிய பல்கலைக்கழகத்துக்கு பிரதமர் செல்கிறார். அங்கு பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் பிரதமர், மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார்.
நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜா, மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக்கு பிரதமர் கவுரவ டாக்டர் பட்டம் வழங்குகிறார். விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தர் கே.எம்.அண்ணாமலை தலைமை தாங்குகிறார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரி எல்.முருகன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
மாலை 5 மணிக்கு பல்கலைக்கழகத்தில் இருந்து கார் மூலம் ஹெலிகாப்டர் இறங்குதளம் செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரை செல்கிறார். பின்னர் தனி விமானத்தில் பிரதமர் விசாகப்பட்டினத்திற்கு செல்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர், ஆளுநர், முதலமைச்சர் ஆகியோர் வருவதையொட்டி 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பல்கலைக்கழகம் அமைந்துள்ள காந்திகிராமம், அம்பாத்துரை, சின்னாளப்பட்டி ஆகிய பகுதிகள் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகளை நேற்று தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அம்பாத்துரை, சின்னாளப்பட்டி, காந்திகிராமம், அம்மையநாயக்கனூர், திண்டுக்கல் மாநகராட்சி ஆகிய பகுதிகளில் நேற்று காலை 10 மணி முதல் இன்று இரவு 10 மணி வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.






