என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • கடைக்கு வந்த மர்ம கும்பல் காவலாளிகள் 2 பேரை கடுமையாக தாக்கியுள்ளனர்.
    • கடைக்குள் புகுந்து காவலாளியை தாக்கி ஜவுளிகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பழனி:

    திண்டுக்கல் மாவட்டம் பழனி இந்திரா நகரைச் சேர்ந்தவர் ஜோதி கணேஷ் (வயது 35). இவர் பழனி-திண்டுக்கல் சாலையில் பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் 2 காவலாளிகள் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இன்று அதிகாலை கடைக்கு வந்த மர்ம கும்பல் காவலாளிகள் 2 பேரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் அவர்கள் மயக்கமடைந்து விட்டனர். அதன் பிறகு கடையை உடைத்து உள்ளே புகுந்த அந்த கும்பல் கடைக்குள் இருந்த அனைத்து ஜவுளிகளையும் எடுத்துக் கொண்டு சென்று விட்டனர்.

    அதன் பிறகு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மயக்கமடைந்து கிடந்த காவலாளிகளை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் இது குறித்து ஜோதி கணேசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அவர் கடைக்கு வந்து பார்த்தபோது கடையில் இருந்த ரூ.2 கோடிக்கும் மேல் மதிப்பிலான ஜவுளிகள் அனைத்தும் திருடு போனதாக தெரிவித்தார். மேலும் முன் விரோதம் காரணமாக தனது கடையை உடைத்து சிலர் திருடிச் சென்றிருக்கலாம் என அவர் பழனி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கடையை உடைத்த நபர்கள் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர். நகரின் மையப்பகுதியில் உள்ள கடைக்குள் புகுந்து காவலாளியை தாக்கி ஜவுளிகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • நத்தம் சுற்று வட்டார பகுதியில் அடிக்கடி நடந்து வரும் கொலை சம்பவங்களால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள காசம்பட்டியைச் சேர்ந்த கணேசன் மகன் ஜோதி (வயது 27). விவசாயி. இவருக்கு சொந்தமான தோட்டத்து வீடு அதே பகுதியில் உள்ளது.

    இரவு நேரங்களில் இந்த வீட்டில் ஜோதி தங்கி இருப்பது வழக்கம். அதன்படி நேற்று இரவு தோட்டத்து வீட்டுக்கு சென்றவர் இன்று காலை நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்தனர்.

    அப்போது ஜோதியின் கழுத்தில் அரிவாளால் வெட்டப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்து இறந்து கிடந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் நத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். மேலும் மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன், ஏ.எஸ்.பி. அருண் கபிலன் ஆகியோரும் பார்வையிட்டனர். கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

    பெண் பிரச்சினையில் இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். கொலை செய்யப்பட்ட ஜோதியின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நத்தம் சுற்று வட்டார பகுதியில் அடிக்கடி நடந்து வரும் கொலை சம்பவங்களால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். எனவே போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.

    இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • பட்டாளங்காடு பிரிவு பகுதியில் சென்ற போது அந்த வழியாக வந்த சரக்கு வேன் எதிர்பாராத விதமாக பள்ளி வேன் மீது மோதியது.
    • வேனில் சென்ற 10 மாணவ-மாணவிகள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

    பெரும்பாறை:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மலை பண்ணைக்காட்டில் தனியார் பள்ளி உள்ளது. அந்த பள்ளிக்கு மாணவ-மாணவிகள் தினமும் வேனில் வந்து செல்கின்றனர்.

    இந்த நிலையில் நேற்று மாலையில் பள்ளி முடிந்ததும் மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டு பள்ளி வேன் புறப்பட்டது. பின்னர் தாண்டிக்குடி பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகளை இறக்கி விட்டுவிட்டு, மங்களம்கொம்பு நோக்கி வேன் சென்று கொண்டிருந்தது.

    பட்டாளங்காடு பிரிவு பகுதியில் சென்ற போது அந்த வழியாக வந்த சரக்கு வேன் எதிர்பாராத விதமாக பள்ளி வேன் மீது மோதியது. இதில் வேனில் சென்ற 10 மாணவ-மாணவிகள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இது குறித்து தாண்டிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    மலைச்சாலையில் அதிக வேகத்தில் வாகனங்கள் செல்வதால் பள்ளி வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றன. எனவே மலைச்சாலையில் ஆபத்தான வளைவுகளை குறிக்கும் வகையில் குவியாடி லென்ஸ் பொருத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் ஒவ்வொரு ஆண்டும் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.
    • இதற்காக 1200-மலர் படுகைகள் உருவாக்கப்பட்டு பல்வேறு வகைகளைச் சேர்ந்த ஒரு லட்சம் மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் ஒவ்வொரு ஆண்டும் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். அதன்படி வருகிற மே மாதம் 60-வது மலர் கண்காட்சி நடத்தப்பட உள்ளது.

    இதற்காக பிரையண்ட் பூங்காவில் முதற்கட்டமாக மலர் நாற்று சாகுபடி தொடங்கியது. எதிர்வரும் மலர் கண்காட்சியை காண வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் மலர் நாற்றுகள் நடும் பணியும் தொடங்கி உள்ளது.

    இதற்காக 1200-மலர் படுகைகள் உருவாக்கப்பட்டு பல்வேறு வகைகளைச் சேர்ந்த ஒரு லட்சம் மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டது. சால்வியா, டெல்பீனியம்,பிங்க் ஆஸ்டர், வெள்ளை ஆஸ்டர், ஆர் நித்தோகேலம்,பெல் பெர்சியா, லில்லியம், டேலியா போன்ற மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டது.

    இந்நிகழ்வில்கொடைக்கானல் தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் பெருமாள் சாமி,பூங்கா மேலாளர் சிவபாலன் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • படிப்பாதை, யானைப்பாதை வழியாகவும், ரோப்கார், மின் இழுவை ரெயில் மூலமாகவும் பக்தர்கள் கூட்டம் அலை மோதி வருகிறது.
    • பக்தர்கள் பசியோடு மலையேறும் போது அவர்களுக்கு களைப்பு தெரியாமல் இருக்க கோவில் நிர்வாகம் சார்பில் சுக்கு காபி இலவசமாக வழங்கப்படுகிறது.

    பழனி:

    பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு தற்போது பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. சபரிமலை சீசனாக உள்ளதால் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் அதிகாலையிலேயே வந்து விடுகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாது அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்படும் போது, பழனி முருகனை தரிசனம் செய்து செல்கின்றனர்.

    இதனால் படிப்பாதை, யானைப்பாதை வழியாகவும், ரோப்கார், மின் இழுவை ரெயில் மூலமாகவும் பக்தர்கள் கூட்டம் அலை மோதி வருகிறது. இவ்வாறு வரும் பக்தர்கள் பசியோடு மலையேறும் போது அவர்களுக்கு களைப்பு தெரியாமல் இருக்க கோவில் நிர்வாகம் சார்பில் சுக்கு காபி இலவசமாக வழங்கப்படுகிறது.

    இடும்பன் கோவில் அருகே காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை ஒருவருக்கு 100 மில்லி சுக்கு காபி வீதம் தினமும் 5 ஆயிரம் பக்தர்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளனர். பக்தர்கள் வருகை அதிகரிக்கும் சமயம் கூடுதலாக வழங்கப்படும் என்றும் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சாமிநாதபுரம் பகுதியில் தனியார் பேப்பர் மில் மற்றும் மற்றும் நூற்பாலை நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பழனி:

    பழனி அருகே திண்டுக்கல்-திருப்பூர் மாவட்ட எல்லை பகுதியான சாமிநாதபுரம் பகுதியில் தனியார் பேப்பர் மில் மற்றும் மற்றும் நூற்பாலை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிறுவனத்தின் ஒரு பிரிவாக நூல்களுக்கு சாயம் ஏற்றும் பிரிவு ஆலை இயங்கி வருகிறது.

    இன்று காலை 7 மணி அளவில் பாய்லர் பிரிவு பகுதியில் வைக்கப்பட்டிருந்த ஆயில்களில் திடீரென தீப்பிடிக்கத் தொடங்கியது. இதைப்பார்த்த பணியாளர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் ஆயில் என்பதால் தீயை அணைக்க இயலவில்லை. உடனடியாக தொழிற்சாலையில் இருந்த பணியாளர்கள் அனைவரும் விரைவாக வெளியேற்றப்பட்டனர்‌.

    இந்நிலையில் ஆயிலில் தீப்பற்றி எரியத்தொடங்கியதும் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக மாறியது. தீ வேகமாக மளமளவென பரவி அருகிலுள்ள பாய்லரிலும் தீப்பிடித்தது. பின்னர் சில நிமிடங்களில் பயங்கர சத்தத்துடன் பாய்லர் வெடித்தது.

    இதைதொடர்ந்து தீயணைப்புத் துறையினருக்கு ஆலை நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பழனி தீயணைப்புத் துறையினர் உடனடியாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீ அணைக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இருந்தபோதும் பெரும்பாலான பொருட்கள் தீயில் எரிந்து கருகியது. இது குறித்து சாமிநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழகம் முழுவதும் 2-ம் நிலை காவலர், சிறைத்துறை காவலர், தீயணைப்புத்துறை காவலர் தேர்வு நடைபெற்றது.
    • திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்தில் இளைஞர்களும், பெண்களும் ஆர்வத்துடன் தேர்வு எழுதினர்.

    திண்டுக்கல்:

    தமிழகம் முழுவதும் 2-ம் நிலை காவலர், சிறைத்துறை காவலர், தீயணைப்புத்துறை காவலர் தேர்வு நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த தேர்வு 6 மையங்களில் நடைபெற்றது. இதில் ஆண்கள் 9741 பேர், பெண்கள் 2072 பேர் மற்றும் ஒரு திருநங்கை என மொத்தம் 11814 பேர் தேர்வு எழுத அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது.

    திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ, பார்வதீஸ், ஜி.டி.என், என்.பி.ஆர், எஸ்.எஸ்.எம் கல்லூரிகளிலும், அவர்லேடி பள்ளியிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுக்கு நுழைவு சீட்டு பெற்றுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களும் அவர்களது புகைப்படம் ஒட்டிய நுழைவுசீட்டுடன் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்திற்குள் உரிய நேரத்தில் அடையாள அட்டையுடன் தேர்வு மையத்தில் ஆஜராக வேண்டும்.

    கருப்பு அல்லது நீலநிற பந்துமுனை எழுதுபொருள் மற்றும் நுழைவுச்சீட்டு, எழுதுஅட்டை இவைகளை தவிர வேறு எந்த பொருட்களும் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டாது என அறிவுறுத்தப்பட்டது.

    தேர்தல் பார்வையாளர், தொழில்நுட்ப காவல்துறை தலைவர் பாபு மற்றும் மாவட்ட எஸ்.பி பாஸ்கரன் மேற்பார்வையில் தேர்வுகள் நடைபெற்றது. தேர்வு மையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தேர்வர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.

    நுழைவு சீட்டு மற்றும் பேனா மட்டுமே அனுமதிக்கப்பட்டது. டிஜிட்டல் வாட்ச், கால்குலேட்டர் உள்பட எலக்ட்ரானிக் சாதனங்கள் அனுமதிக்கப்படவில்லை. முககவசத்திற்கும் தடை விதிக்கப்பட்டதால் தேர்வு மையத்திற்கு வந்த தேர்வர்கள் முககவசத்தை அகற்றும்படி அறிவுறுத்தப்பட்டது. இதனால் தேர்வு மையத்திற்கு செல்லும் முன்பு முககவசத்தை அகற்றி சென்றனர்.

    தேனி மாவட்டத்தில் 13 தேர்வு மையங்களில் 9432 ஆண்கள், 1300 பெண்கள், ஒரு திருநங்கை உள்பட 10,733 பேருக்கு ஹால்டிக்கெட் அனுப்பப்பட்டது. மேலும் தேர்வு எழுத வருபவர்கள் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். இதில் ஏராளமான இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

    • பனிப்பொழிவு இருந்தாலும் பகல் பொழுதில் இதமான சீதோஷ்ணம் நிலவி வருவதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
    • கடந்த சில நாட்களாக ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவியதால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தே காணப்பட்டது.

    தற்போது பனிப்பொழிவு இருந்தாலும் பகல் பொழுதில் இதமான சீதோஷ்ணம் நிலவி வருகிறது. இதனை அனுபவிக்க விடுமுறை நாளான இன்று பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். குறிப்பாக கேரளாவில் இருந்து அதிகளவு சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

    இதனால் வியாபாரிகள், தங்கும் விடுதி, ஓட்டல் உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வெள்ளிநீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் முன்பு உற்சாகமாக புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    பசுமை பள்ளத்தாக்கு, பில்லர்ராக், மோயர்பாயிண்ட், ரோஜா பூங்கா, பிரையண்ட் பூங்கா, செட்டியார்பூங்கா, கோக்கர்ஸ்வாக், வட்டக்காணல் அருவி, பாம்பார் அருவி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. ஒரே நேரத்தில் அதிகளவு சுற்றுலா வாகனங்கள் வந்ததால் ஏரிச்சாலை, கலையரங்கம், செவன்ரோடு, லாஸ்காட் சாலை, அப்சர்வேட்டரி உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்ஏற்பட்டது. போலீசார் இதனை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    கடந்த சில நாட்களாக ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே கொடைக்கானலில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பி.எம்.கிசான் இணையதளத்தில் தங்களது ஆதார் எண்ணை உறுதி செய்த பயனாளிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என மத்திய அரசு உறுதியாக தெரிவித்துள்ளது.
    • கைபேசியில் உள்ள இணையதள வசதியை பயன்படுத்தி இணையதளத்தில் சென்று ஆதார் எண்ணை உறுதி செய்யலாம்.

    திண்டுக்கல்:

    தமிழ்நாட்டில் "பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி" திட்டமானது பிப்ரவரி 2019 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தபட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் சொந்தமாக விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாயக் குடும்பங்களுக்கு உதவித் தொகையாக 4 மாதத்திற்கு ஒருமுறை ரூ.2,000 வீதம் ஆண்டிற்கு ரூ.6,000-ம், 3 தவணைகளில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடிப் பணப்பரிமாற்றம் மூலமாக மத்திய அரசினால் வழங்கப்பட்டு வருகிறது.

    நடப்பாண்டில் 13-வது தவணையாக, அதாவது 2022 டிசம்பர் முதல் மார்ச் முடிய உள்ள காலத்தினை தவணைத் தொகை பி.எம்.கிசான் இணையதளத்தில் தங்களது ஆதார் எண்ணை உறுதி செய்த பயனாளிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என மத்திய அரசு உறுதியாக தெரிவித்துள்ளது.

    பயனாளிகள் பொது சேவை மையம் மூலமாகவோ அல்லது தங்களது கைபேசி மூலமாகவோ, தங்களாகவே ஆதார் எண்ணை கீழ்காணும் முறைகளில் உறுதி செய்து கொள்ளலாம்.

    பொது சேவை மையத்திற்கு சென்று தனது பெயரை பி.எம்.கிசான் இணைய தளத்தில் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசி எண்ணிற்கு வரும் ஒரு முறை கடவுச்சொல்லை பி.எம்.கிசான் இணையதளத்தில் பதிவு செய்து உறுதி செய்யலாம் அல்லது பொது சேவை மையத்தில் உள்ள கருவியில் பயனாளிகள் தங்கள் விரல் ரேகையை வைத்து பி.எம்.கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்யலாம்.

    உங்களது கைபேசியில் உள்ள இணையதள வசதியை பயன்படுத்தி இணையதளத்தில் சென்று ஆதார் எண்ணை உறுதி செய்யலாம்.

    எனவே, பி.எம்.கிசான் தவணை தொகை பெறும் பயனாளிகள் இதுநாள் வரை ஆதார் எண்ணை உறுதி செய்யாமல் இருந்தால், மேற்காணும் முறைகளில் பி.எம்.கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்திட வேண்டும் என வேளாண்மை இணை இயக்குனர் அனுசியா தெரிவித்துள்ளார்.

    • திண்டுக்கல் மாவட்டத்தில் ஆண்கள் 9741 பேர், பெண்கள் 2072 பேர் மற்றும் ஒரு திருநங்கை என மொத்தம் 11814 பேர் தேர்வு எழுத உள்ளனர்.
    • தேர்வு மையத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

    திண்டுக்கல்:

    தமிழகம் முழுவதும் 2-ம் நிலை காவலர், சிறைத்துறை காவலர், தீயணைப்புத்துறை காவலர் தேர்வு நடைபெற உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த தேர்வு 6 மையங்களில் நடைபெறுகிறது. இதில் ஆண்கள் 9741 பேர், பெண்கள் 2072 பேர் மற்றும் ஒரு திருநங்கை என மொத்தம் 11814 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

    திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ, பார்வதீஸ், ஜி.டி.என், என்.பி.ஆர், எஸ்.எஸ்.எம் கல்லூரிகளிலும், அவர்லேடி பள்ளியிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுக்கு நுழைவு சீட்டு பெற்றுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களும் அவர்களது புகைப்படம் ஒட்டிய நுழைவுசீட்டுடன் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்திற்குள் உரிய நேரத்தில் அடையாள அட்டையுடன் தேர்வு மையத்தில் ஆஜராக வேண்டும்.

    கருப்பு அல்லது நீலநிற பந்துமுனை எழுதுபொருள் மற்றும் நுழைவுச்சீட்டு, எழுதுஅட்டை இவைகளை தவிர வேறு எந்த பொருட்களும் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டாது. வேறு பொருட்கள் எடுத்துவரும் பட்சத்தில் மையத்திற்கு வெளியில் ஒப்படைத்துவிட்டு தேர்வு முடிந்து செல்லும்போது திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.

    தேர்தல் பார்வையாளர், தொழில்நுட்ப காவல்துறை தலைவர் பாபு மற்றும் மாவட்ட எஸ்.பி பாஸ்கரன் மேற்பார்வையில் தேர்வுகள் நடைெபறும்.

    தேர்வு மையத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

    • கொடைக்கானலில் 12 வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி பூக்கள் பல்வேறு பகுதிகளில் கடந்த 2018 ஆம் ஆண்டு பூத்துக் குலுங்கியது.
    • ஓடைக்குறிஞ்சி பூக்கள் பூத்துள்ள பகுதிகளில் செடிகள் உள்ளிட்டவை களை சேகரித்துக் கொண்டு ஆய்வுக்கு உட்படுத்தப் போவதாகவும் தெரிவித்து ள்ளனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் 12 வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி பூக்கள் பல்வேறு பகுதிகளில் கடந்த 2018 ஆம் ஆண்டு பூத்துக் குலுங்கியது. இதனை த்தொடர்ந்து 2030ம் ஆண்டு பூக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

    குறிஞ்சிப் பூக்களில் பல்வேறு வகை உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டும் 30 வகையிலான குறிஞ்சி மலர்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    தற்போது ஓடைக்குறிஞ்சி எனப்படும் வருடத்திற்கு ஒருமுறை பூக்கும் இந்த வகை பூக்கள் பல்வேறு ஓடைகளுக்கு அருகே பூத்துக் குலுங்கி வருகிறது. இதனை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என கோரிக்கை யும் விடுக்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் மற்றும் தோட்டக்கலை துறையினர் இணைந்து ஓடைக்குறிஞ்சி பூக்கள் பூத்துள்ள பகுதிகளில் செடிகள் உள்ளிட்டவை களை சேகரித்துக் கொண்டு ஆய்வுக்கு உட்படுத்தப் போவதாகவும் தெரிவித்து ள்ளனர். இந்த அரியவகை பூக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே அனை வரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 நாட்கள் மட்டுமே வெங்காய மார்க்கெட் செயல்படும். இந்த மார்க்கெட்டில் தற்போது விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
    • தற்போது வெங்காய விலையும் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதால் கவலை அடைந்துள்ளனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் வெங்காயத்திற்கென்றே பிரத்தியேக மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.

    இந்த மார்க்கெட்டுக்கு திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருச்சி, மணப்பாறை, அவினாசி, பெரம்பலூர், பழனி, துறையூர், வத்தலக்குண்டு, நிலக்கோட்டை உள்ளிட்ட ஊர்களில் இருந்தும் விவசாயிகள் வெங்காயத்தை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

    வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 நாட்கள் மட்டுமே வெங்காய மார்க்கெட் செயல்படும். இந்த மார்க்கெட்டில் தற்போது விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

    பருவமழைக்கு பின்னர் வரத்து குறைவாக இருந்த நிலையில் தற்போது பல்வேறு ஊர்களில் இரு ந்தும் அதிக அளவு வெங்காயம் கொண்டு வரப்படுகிறது.

    புது வெங்காயம் தரத்தைப்பொருத்து ரூ.30 முதல் ரூ.35 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பட்டறையில் இருப்பு வைக்கப்பட்ட பழைய வெங்காயம் ரூ.35 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெரிய வெங்காயம் கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து விற்பனைக்கு வருகிறது.

    கடந்த மாதம் ரூ.25 முதல் ரூ.35 வரை விற்பனை செய்யப்பட்ட பல்லாரி வெங்காயம் தற்போது ஒரு கிலோ ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதனால் விவசாயி களுக்கு போதிய விலை கிடைக்காததால் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஏற்கனவே தக்காளி பயிரிட்ட விவசாயிகளுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரை மட்டுமே விவசாயி களே நேரடியாக வந்து சாலையில் கூவி கூவி விற்கும் நிலை ஏற்பட்டு ள்ளது.

    மேலும் விற்பனையாகாத தக்காளிகளை சாலை யோரம் கொட்டி விட்டு செல்கின்றனர். தற்போது வெங்காய விலையும் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதால் கவலை அடைந்துள்ளனர்.

    ×