என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • பொதுமக்கள் அந்த கடையில் பலகாரங்களை வாங்கி செல்வர்.
    • 10 வயது சிறுமி பார்சலில் வடைகளை வாங்கினாள்.

    சின்னாளப்பட்டி :

    திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் விற்பனை செய்யப்பட்ட உளுந்த வடையில், பல்லி கிடந்த சம்பவம் சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் நேற்று சின்னாளப்பட்டியில் உள்ள டீக்கடையில் வாங்கிய பருப்பு வடைக்குள் சுண்டெலி கிடந்த சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-

    திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி பூஞ்சோலை பகுதியில் டீக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் உளுந்த வடை, பருப்பு வடை, போண்டா உள்ளிட்ட பலகாரங்கள் விற்பனை சூடு பிடிப்பது வழக்கம்.

    சின்னாளப்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அந்த கடையில் பலகாரங்களை வாங்கி செல்வர். அதன்படி நேற்று அந்த கடையில், பூஞ்சோலை பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி பார்சலில் வடைகளை வாங்கினாள்.

    வீட்டுக்கு சென்றதும் சிறுமி பார்சலை ஆர்வமுடன் பிரித்தாள். அதில் இருந்த பருப்பு வடையை பிய்த்து சாப்பிட முயன்றாள். அப்போது, வடைக்குள் சுண்டெலி ஒன்று கருகிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தாள்.

    இதனை தனது பெற்றோரிடம் சிறுமி காண்பித்தாள். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், சுண்டெலியுடன் கூடிய வடையை டீக்கடைக்கு எடுத்து சென்றனர். பின்னர் இதுதொடர்பாக டீக்கடைக்காரரிடம் கேட்டனர்.

    அப்போது இனிவருங்காலத்தில் இதுபோன்று தவறு நடக்காமல் பார்த்து கொள்வதாகவும், இந்த விஷயத்தை வெளியே யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றும் கேட்டு கொண்டதாக தெரிகிறது.

    பருப்பு வடைக்காக அரைத்து வைக்கப்பட்டிருந்த மாவுக்குள் சுண்டெலி தவறி விழுந்திருக்கலாம். அதனை கவனிக்காமல், அப்படியே மாவுடன் பிசைந்து எண்ணெயில் போட்டு எடுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    இதற்கிடையே பருப்பு வடைக்குள் சுண்டெலி கிடந்த புகைப்படம் வாட்ஸ்-அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூர் தாலுகா உணவு பாதுகாப்பு அதிகாரி ஜாபர் சாதிக், சின்னாளப்பட்டி பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் கணேசன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் சம்பந்தப்பட்ட டீக்கடைக்கு விரைந்தனர். பின்னர் அவர்கள், அந்த கடையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது திறந்தவெளியில் பலகாரங்கள் தயாரிப்பதையும், பலமுறை பயன்படுத்திய எண்ணெயை வைத்து பலகாரங்கள் தயார் செய்வதையும் சுகாதாரத்துறையினர் கண்டுபிடித்தனர். இதனையடுத்து அந்த கடைக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் இனிவருங்காலத்தில், சுகாதாரமற்ற முறையில் உணவுப்பொருட்களை தயார் செய்தால் டீக்கடைக்கு 'சீல்' வைக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.

    • திண்டுக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்விற்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்து வருகிறது.
    • சிறு தொழில் தொடங்க ரூ.5000 முதல் ரூ.25,000 வரை குறைந்த சதவீதம் வட்டியில் கடன் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்விற்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சிறுதொழில் கடன் வழங்கிட திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கியின் 34 கிளைகள், நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் 198 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாகவும், கடன் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    தொழில் தொடங்கிட விருப்பமுள்ள மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பத்தினை முழுமையாக பூர்த்தி செய்து இதர ஆவணங்களுடன் இணைத்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர் அலுவலகம், அருகில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியின் 34 கிளைகளிலும், நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் மாவட்டத்திலுள்ள 198 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் வழங்கி பயன் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    நபர் பிணையம் என்பது அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் உறுப்பினர்கள், நகர கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்கள், மத்திய வங்கி இணை உறுப்பினர்கள் அல்லது மத்திய வங்கியில் இட்டு வைப்புதாரர்கள் ஆகியோர் ஆவர்.

    கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட மகளிர்களுக்கான கடன்:-

    திண்டுக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 34 கிளைகள் மூலம் சிறு தொழில் தொடங்க ரூ.5000 முதல் ரூ.25,000 வரை குறைந்த சதவீதம் வட்டியில் கடன் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விருப்பமுள்ள நபர்கள் அருகிலுள்ள மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் அதற்கான படிவத்தை உரிய இணைப்புகளுடன் பூர்த்தி செய்து வழங்கி பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

    • கடைகளில் கிறிஸ்துமஸ் ஸ்டார் மற்றும் மரம், குடில் அமைப்பதற்கான பொம்மைகள் போன்றவை அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளது.
    • பியானோ, சாக்சபோன் வாசிப்பது போலவும், நடனமாடுவது போலவும், பரிசுகள் வழங்குவது போன்ற பொம்மைகளும் குழந்தைகளை வெகுவாக கவர்ந்துள்ளன.

    திண்டுக்கல்:

    உலகம் முழுவதும் வருகிற 25-ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஏசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூறும் வகையில் பல்வேறு நாடுகளில் ஒரு மாதமாகவே கிறிஸ்துமஸ் விழா களைகட்டி வருகிறது.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகளால் வழிபாட்டுக்குகூட தடைவிதிக்கப்பபட்டிருந்தது. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் பண்டிகையை உற்சாகமாக கொண்டாட தயாராகி வருகின்றனர்.

    கடைகளில் கிறிஸ்துமஸ் ஸ்டார் மற்றும் மரம், குடில் அமைப்பதற்கான பொம்மைகள் போன்றவை அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளது. அதனை வாங்கிச்செல்லும் மக்கள் தங்கள் வீடுகளில் பல வண்ண விளக்குகளால் அலங்கரித்து குடில் அமைத்தும், நட்சத்திரங்களை தொங்கவிட்டும் அலங்காரம் செய்துள்ளனர்.

    குழந்தைகளை கவரும் வகையில் விதவிதமான சாண்டாகிளாஸ் பொம்மைகளும் விற்பனைக்கு வந்துள்ளன. பியானோ, சாக்சபோன் வாசிப்பது போலவும், நடனமாடுவது போலவும், பரிசுகள் வழங்குவது போன்ற பொம்மைகளும் குழந்தைகளை வெகுவாக கவர்ந்துள்ளன. இதேபோல் வீடுகள் மற்றும் பேக்கரிகளில் விதவிதமான கேக்குகள் தயாரிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

    கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா நகரங்களில் இரவு நேர வழிபாட்டிற்கும், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி அனைத்து தேவாலயங்களிலும் மின்விளக்குகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

    • திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாடுகள் சாலையில் சுற்றித்திரிவதால் அடிக்கடி விபத்துகள் நடந்து வந்தது.
    • சாலையில் சுற்றித்திரிந்த 22 மாடுகள் பிடிக்கப்பட்டன. இன்று 2-வது நாளாக 4 மாடுகள் பிடிக்கப்பட்டன.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாடுகள் சாலையில் சுற்றித்திரிவதால் அடிக்கடி விபத்துகள் நடந்து வந்தது. எனவே தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் கடைபிடிக்கப்படும் நடைமுறை போல சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து ஏலம் விடவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.

    இதனைதொடர்ந்து மாநகராட்சி சார்பில் கால்நடைகள் வளர்ப்போருக்கு இறுதி எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டது. கடந்த 15-ந்தேதி முதல் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள் மாநகராட்சியால் பறிமுதல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று ஆர்.எம்.காலனி, மருதாணிக்குளம், பிள்ளையார்பாளையம், ஒய்.எம்.ஆர்.பட்டி, சிலுவத்தூர்ரோடு, ரவுண்டுரோடுபுதூர், சிறுமலைசெட், நாகல்நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் சுற்றித்திரிந்த 22 மாடுகள் பிடிக்கப்பட்டன. இன்று 2-வது நாளாக 4 மாடுகள் பிடிக்கப்பட்டன.

    16 மாடுகள் மற்றும் 10 கன்றுகள் மலைக்கோட்டை பின்புறம் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான நுண்ணுயிர் செயலாக்க மையத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

    மாநகராட்சி ஆணையாளர் சிவசுப்பிரமணியன் உத்தரவின்பேரில் நகர்நல அலுவலர் இந்திரா, சுகாதார ஆய்வாளர் பாலமுருகன், ரங்கராஜ், கலிபா, சுரேஷ்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் கால்நடைகளை பிடிக்கும் முயற்சியில் இறங்கி தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    கால்நடை உரிமையாளர்கள் அபராதம் செலுத்தி தங்கள் மாடுகளை பிடித்து செல்லலாம் எனவும் மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று 2 பேர் மாநகராட்சி அறிவித்த அபராத தொகையை கட்டி உறுதி மொழி பத்திரமும் எழுதி கொடுத்தனர். அதில் இனிமேல் நாங்கள் மாடுகளை தெருவில் மேயவிடமாட்டோம். எங்களது இடத்தில் வைத்து பராமரித்து ெகாள்வோம் என எழுதி கொடுத்தனர்.

    தற்போது மாநகராட்சியால் பறிமுதல் செய்யப்பட்ட மாடுகளை பராமரிக்க 2 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கால்நடைகளுக்கு தேவையான தீவனங்கள் மற்றும் தண்ணீர் கொடுத்து வருகின்றனர். இன்னும் ஓரிரு நாட்களில் உரிமையாளர்கள் தங்கள் மாடுகளை வாங்கி கொள்ளாவிட்டால் ஏலம் விடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • உதயநிதி ஸ்டாலின் வரும் 23-ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை தந்து, நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
    • இதற்கான ஏற்பாடுகள் நடைபெறும் இடங்களை, திண்டுக்கல் (கிழக்கு) மாவட்ட செயலாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ., பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கொடைரோடு:

    தி.மு.க இளைஞரணி செயலாளரும், இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வரும் 23-ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை தந்து, நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். மேலும் விழா கின்னஸ் சாதனைக்காக 6 லட்சம் மரக்கன்றுகள் நடும் விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கின்றார்.

    விழா ஏற்பாடுகளை அமைச்சர்கள் இ.பெரியசாமி, அர.சக்கரபாணி ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    திண்டுக்கல் மாவட்ட இளைஞரணி சார்பில் நடைபெற உள்ள எளியோர் எழுச்சி நாள் விழா மற்றும் அன்பழகன் நூற்றாண்டு விழா கொடியேற்று நிகழ்ச்சிகளில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார். இதனை அடுத்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் 50அடி உயர கொடிக்கம்பத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க கொடியினை ஏற்றி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

    இதற்கான ஏற்பாடுகள் நடைபெறும் இடங்களை, திண்டுக்கல் (கிழக்கு) மாவட்ட செயலாளர்செந்தில்குமார் எம்.எல்.ஏ., பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து கொடைரோடு சுங்கசாவடி அருகே 50 அடி உயரம் கொண்ட தி.மு.க கொடி ஏற்றுதல், வரவேற்பு நிகழ்ச்சி 22-ந்தேதி நடைபெறுகிறது. அந்த இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவர் அங்கிருந்த நிர்வாகிகளுடன் விழா நடப்பது குறித்து ஆலோசனையும் மேற்கொண்டார்.

    • தபால் அலுவலகங்களில் தங்க சேமிப்பு பத்திரம் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் டிசம்பர் 23 முதலீடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • வாரிசு நியமனத்துக்கு வாரிசு தாரரின் வங்கிகணக்கு எண் அடையாள ஆவணங்களையும் வழங்க வேண்டும்.

    திண்டுக்கல்:

    தபால் அலுவலகங்களில் தங்க சேமிப்பு பத்திரம் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் டிசம்பர் 23 முதலீடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து திண்டுக்கல் கோட்ட தபால் அலுவலகங்களின் முதுநிலை கண்காணி ப்பாளர் நாகாநாயக் தெரிவித்துள்ளதாவது:-

    இந்திய தபால்துறை சார்பில் தங்க சேமிப்பு பத்திரம் குறிப்பிட்ட இடைவெளியில் மாதந்தோறும் அனைத்து தபால் நிலையங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி டிச.23-ந் தேதி வரை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தபால் அலுவலகங்களில் தங்க சேமிப்பு பத்திரம் விற்பனை செய்யப்பட உள்ளது.

    ஒரு கிராம் தங்க சேமிப்பு பத்திரம் ரூ.5409க்கு விற்பனை செய்யப்படும். இதற்கு வட்டி 2.5% வழங்கப்படும். ஒரு கிராம் முதல் 4 ஆயிரம் கிராம் வரை முதலீடு செய்யலாம். முதிர்வு காலம் 8 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்ப ட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கு பின்னும் முன் முதிர்வு செய்யலாம். தங்க சேமிப்பு பத்திரம் திட்டத்தில் சேர விரும்புவோருக்கு வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு ஆகியவை மட்டுமே அடையாள சான்றாக ஏற்றுக்கொள்ளப்படும்.

    மேலும் வங்கி கணக்கு புத்தகம் ஐ.எப்.எஸ்.சி. கோர்டு எண் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். வாரிசு நியமனத்துக்கு வாரிசு தாரரின் வங்கிகணக்கு எண் அடையாள ஆவணங்களையும் வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

    • பதவி உயர்வு பெற்று திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியில் சேர்ந்தார்.
    • குற்றப்பிரிவு போலீசார் பத்மநாபன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மாதாநகரைச் சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 60). இவர் 1985ம் ஆண்டு குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக சேர்ந்தார். அதன் பின்னர் பதவி உயர்வு பெற்று திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியில் சேர்ந்தார்.

    கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி ஓய்வு பெற்றார். அப்போது பணி ஓய்வுக்கான பணப்பலன்கள் அளிக்க சான்றிதழ், பதவி உயர்வு உள்ளிட்ட ஆவணங்களை அதிகாரிகள் சரிபார்த்தனர். அப்போது பத்மநாபன் தனது பதவி உயர்வுக்காக அளித்த 10ம் வகுப்பு கல்விச்சான்றிதழ் போலி என தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து அவரது பணி ஓய்வை நிறுத்தி வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் செல்வராணி, திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து குற்றப்பிரிவு போலீசார் பத்மநாபன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆசிட் வீசி, கார் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியதோடு, காரில் இருந்த திருவிகவை கடத்தினர்.
    • தேர்தலை முறைப்படி நடத்த வேண்டும் என விஜயபாஸ்கர் வலியுறுத்தி உள்ளார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கரூர் மாவட்ட ஊராட்சி துணைதலைவர்களுக்கான தேர்தல் இன்று ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் 12 மாவட்ட கவுன்சிலர்கள் இருக்கிறார்கள். இவர்களில் 6 மாவட்ட கவுன்சிலர் தி.மு.க. தரப்பினரும், 6 மாவட்ட கவுன்சிலர்கள் அதிமுக தரப்பினரும் இருக்கிறார்கள்.

    இந்நிலையில் அ.தி.மு.க சார்பில் திருவிக என்பவர் போட்டியிடுகிறார். இன்று இவரை முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர் தனது ஆதரவாளர்களுடன் கரூர் அழைத்து சென்றார்.

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் கரூர் தேசிய நெடுஞ்சாலையில் நாகம்பட்டி அருகே பாலம் உள்ளது. அந்த பாலம் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென்று நான்கு கார்களில் வந்த மர்ம நபர்கள் அவர்களது காரை சுற்றி வளைத்து வைத்து முன்பக்க கண்ணாடி மற்றும் பின் கண்ணாடிகள் மீது ஆசிட் வீசி, கார் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியதோடு, காரில் இருந்த திருவிகவை கடத்தி சென்றனர்.

    இந்த கடத்தல் சம்பவம் அந்த பகுதியில் பரப்பரபை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட வேடசந்தூர் துணை கண்காணிப்பாளர் துர்காதேவி மற்றும் ஆய்வாளர் பாலமுருகன் ஆகியோர் சம்பவ இடத்தில் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  கரூர் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் தேர்தல் நடக்கும் தருணத்தில் கடத்தல் சம்பவம் நடைபெற்றிருப்பது பெரும் பரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    இது குறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறுகையில், இது போன்ற தாக்குதல் சம்பவம் நடத்தி எங்களுடைய வேட்பாளரை கடத்தி சென்றவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த தேர்தலை முறைப்படி நடத்த வேண்டும். மேலும் இந்த ஆசிட் வீசிய சம்பவம் மற்றும் கண்ணாடிகளை உடைத்த சம்பவம் மூலம் காரில் பயணம் செய்த இருவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன, என்றார்.

    இது தொடர்பாக காவல் துறையினர் அங்குள்ள சிசிடிவி கேமிரா பதிவுகளை வைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

    • அய்யப்ப பக்தர்கள் மேளதாளம் வானவேடிக்கையுடன் ஊர்வலமாக, குட்டியபட்டி பிரிவில் அமைந்துள்ள மகா காளியம்மன் கோவில் முன்பு வந்தனர்.
    • அய்யப்ப பக்தர்களின் 13-ஆம் ஆண்டு மண்டல பூஜை அன்னதானம் மற்றும் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம், பித்தளைபட்டி அருகே குட்டியபட்டி பிரிவில், அய்யப்ப பக்தர்கள் சார்பாக, 13-ஆம் ஆண்டு மண்டல பூஜை நடைபெற்றது. இதனை முன்னிட்டு, பைபாஸ் அருகே உள்ள ஸ்ரீசாலை சந்தன கருப்பு சுவாமி கோவிலில் இருந்து, அய்யப்ப பக்தர்கள் மேளதாளம் வானவேடிக்கையுடன் ஊர்வலமாக, குட்டியபட்டி பிரிவில் அமைந்துள்ள மகா காளியம்மன் கோவில் முன்பு வந்தனர்.

    அங்கு அய்யப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுமார் 100-க்கும் மேற்பட்ட அய்யப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கினர். முன்னதாக, ஹரிஹரசுதன் மணிமண்டபத்தில் அன்னதானம் நடைபெற்றது.

    அய்யப்ப பக்தர்களின் 13-ஆம் ஆண்டு மண்டல பூஜை அன்னதானம் மற்றும் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியில், குட்டியபட்டி பிரிவு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை விழா கமிட்டினர் சிறப்பாக செய்தனர்.

    • உதவியாளர்கள், டாஸ்மாக்கில் வேலை செய்பவர்கள், ஆட்டோ டிரைவர்கள், ஓய்வு பெற்றவர்கள் என பலரும் சட்டபட்டத்தை வாங்கி வந்து வக்கீல்களாக செயல்படுகின்றனர்.
    • தீவிர நடவடிக்கைகள் எடுத்தால்தான் வக்கீல்கள் தொழில் மேம்படும். இல்லையென்றால் போலிகளின் கையில் சென்று விடும் அடுத்த தலைமுறைக்கு இந்த தொழில் செல்லும்போது குற்றவாளியின் கையில் வக்கீல் தொழில் இருக்கும். சமுதாயத்தை காப்பதற்கு சட்டப்படிப்பு அவசியமானது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் வக்கீல்கள் சங்கம் சார்பில் போலி வக்கீல்களை தடுப்பது குறித்து கருத்தரங்கு நடைபெற்றது. வக்கீல் சங்க தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார். செயலாளர் குமரேசன் முன்னிலை வகித்தார். ஐகோர்ட்டு மதுரை கிளை மூத்த வக்கீல் கிருஷ்ணவேணி, முன்னாள் அரசு தலைமை வக்கீல் ஜோதி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி கிருபாகரன் பேசியதாவது:-

    கல்லூரிக்கு செல்லாமல் வேறு மாநிலங்களில் இருக்கும் கல்லூரிகளில் சட்ட பட்டத்தை பணம் கொடுத்து வாங்கும் கூட்டம் இங்கு உள்ளது. உதவியாளர்கள், டாஸ்மாக்கில் வேலை செய்பவர்கள், ஆட்டோ டிரைவர்கள், ஓய்வு பெற்றவர்கள் என பலரும் சட்டபட்டத்தை வாங்கி வந்து வக்கீல்களாக செயல்படுகின்றனர்.

    தமிழகத்தில் 30 சதவீத வக்கீல்கள் போலி என தகவல்கள் வெளியாகி உள்ளது. போலி கல்லூரிகள் ஒழிய வேண்டும், சட்டக்கல்லூரிகளில் பணிபுரியும் பேராசி ரியர்கள், மாணவர்கள் குறித்த விவரங்களை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். மேலும் பயோமெட்ரிக் பதிவு மூலம் கல்லூரிக்கு முறையாக வருகிறார்களா? என கண்காணிக்க வேண்டும்.

    அப்போதுதான் போலியாக பட்டம் பெற்றவர்கள் விவரம் தெரிய வரும். தீவிர நடவடிக்கைகள் எடுத்தால்தான் வக்கீல்கள் தொழில் மேம்படும். இல்லையென்றால் போலிகளின் கையில் சென்று விடும் அடுத்த தலைமுறைக்கு இந்த தொழில் செல்லும்போது குற்றவாளியின் கையில் வக்கீல் தொழில் இருக்கும். சமுதாயத்தை காப்பதற்கு சட்டப்படிப்பு அவசியமானது. ஆனால் அது போலிகளின் கையில் சிக்கிக்கொள்ளக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்

    • தற்போது இடையக்கோட்டை நங்காஞ்சியாறு நீர்தேக்கத்திற்கு விநாடிக்கு 20 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.
    • திண்டுக்கல் மாவட்டத்தில் 2615 ஏக்கர் மற்றும் கரூர் மாவட்டத்தில் 3635 ஏக்கர் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையக்கோட்டை நங்காஞ்சி ஆற்றின் குறுக்கே நீர்தேக்கம் உள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பாச்சலூர் மலைப்பகுதியில் பெய்த மழையால் வடகாடு கிராமத்தில் உள்ள பரப்பலாறு அணை நீர்மட்டம் உயர்ந்தது. இதனைத் தொடர்ந்து அணையில் இருந்து உபரி நீர் ஆற்றில் திறக்கப்பட்டது. தற்போது இடையக்கோட்டை நங்காஞ்சியாறு நீர்தேக்கத்திற்கு விநாடிக்கு 20 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.

    முழுக்கொள்ளளவான 39.37 அடியை எட்டி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இந்த தண்ணீர் கரூர் அமராவதி ஆற்றில் சென்று கலக்கிறது. மேலும் வலது மற்றும் இடது கால்வாய் மூலம் தலா 10 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு விவசாய பாசனத்திற்கு செல்கிறது.

     இதன் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 2615 ஏக்கர் மற்றும் கரூர் மாவட்டத்தில் 3635 ஏக்கர் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    நாளை (20ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    வேடசந்தூர்:

    வேடசந்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (20ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வேடசந்தூர், லகுவணம்பட்டி, நாகம்பட்டி, தம்மணம்பட்டி, முதலியார்பட்டி, நாகக்கோணனூர், வெள்ளனம்பட்டி, காளனம்பட்டி, தட்டாரபட்டி, ஸ்ரீராமபுரம், பூத்தாம்பட்டி, புதுப்பட்டி, தெத்துப்பட்டி, சேனான்கோட்டை, சுள்ளெரும்பு, நவாமரத்துப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என உதவி செயற்பொறியாளர் ஆனந்த குமார் தெரிவித்துள்ளார்.

    ×