என் மலர்
நீங்கள் தேடியது "26 மாடுகள் பறிமுதல்"
- திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாடுகள் சாலையில் சுற்றித்திரிவதால் அடிக்கடி விபத்துகள் நடந்து வந்தது.
- சாலையில் சுற்றித்திரிந்த 22 மாடுகள் பிடிக்கப்பட்டன. இன்று 2-வது நாளாக 4 மாடுகள் பிடிக்கப்பட்டன.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாடுகள் சாலையில் சுற்றித்திரிவதால் அடிக்கடி விபத்துகள் நடந்து வந்தது. எனவே தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் கடைபிடிக்கப்படும் நடைமுறை போல சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து ஏலம் விடவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதனைதொடர்ந்து மாநகராட்சி சார்பில் கால்நடைகள் வளர்ப்போருக்கு இறுதி எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டது. கடந்த 15-ந்தேதி முதல் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள் மாநகராட்சியால் பறிமுதல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று ஆர்.எம்.காலனி, மருதாணிக்குளம், பிள்ளையார்பாளையம், ஒய்.எம்.ஆர்.பட்டி, சிலுவத்தூர்ரோடு, ரவுண்டுரோடுபுதூர், சிறுமலைசெட், நாகல்நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் சுற்றித்திரிந்த 22 மாடுகள் பிடிக்கப்பட்டன. இன்று 2-வது நாளாக 4 மாடுகள் பிடிக்கப்பட்டன.
16 மாடுகள் மற்றும் 10 கன்றுகள் மலைக்கோட்டை பின்புறம் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான நுண்ணுயிர் செயலாக்க மையத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
மாநகராட்சி ஆணையாளர் சிவசுப்பிரமணியன் உத்தரவின்பேரில் நகர்நல அலுவலர் இந்திரா, சுகாதார ஆய்வாளர் பாலமுருகன், ரங்கராஜ், கலிபா, சுரேஷ்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் கால்நடைகளை பிடிக்கும் முயற்சியில் இறங்கி தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
கால்நடை உரிமையாளர்கள் அபராதம் செலுத்தி தங்கள் மாடுகளை பிடித்து செல்லலாம் எனவும் மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று 2 பேர் மாநகராட்சி அறிவித்த அபராத தொகையை கட்டி உறுதி மொழி பத்திரமும் எழுதி கொடுத்தனர். அதில் இனிமேல் நாங்கள் மாடுகளை தெருவில் மேயவிடமாட்டோம். எங்களது இடத்தில் வைத்து பராமரித்து ெகாள்வோம் என எழுதி கொடுத்தனர்.
தற்போது மாநகராட்சியால் பறிமுதல் செய்யப்பட்ட மாடுகளை பராமரிக்க 2 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கால்நடைகளுக்கு தேவையான தீவனங்கள் மற்றும் தண்ணீர் கொடுத்து வருகின்றனர். இன்னும் ஓரிரு நாட்களில் உரிமையாளர்கள் தங்கள் மாடுகளை வாங்கி கொள்ளாவிட்டால் ஏலம் விடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.






