search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வாகனம் மீது தாக்குதல்: வேட்பாளர் கடத்தல்

    • ஆசிட் வீசி, கார் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியதோடு, காரில் இருந்த திருவிகவை கடத்தினர்.
    • தேர்தலை முறைப்படி நடத்த வேண்டும் என விஜயபாஸ்கர் வலியுறுத்தி உள்ளார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கரூர் மாவட்ட ஊராட்சி துணைதலைவர்களுக்கான தேர்தல் இன்று ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் 12 மாவட்ட கவுன்சிலர்கள் இருக்கிறார்கள். இவர்களில் 6 மாவட்ட கவுன்சிலர் தி.மு.க. தரப்பினரும், 6 மாவட்ட கவுன்சிலர்கள் அதிமுக தரப்பினரும் இருக்கிறார்கள்.

    இந்நிலையில் அ.தி.மு.க சார்பில் திருவிக என்பவர் போட்டியிடுகிறார். இன்று இவரை முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர் தனது ஆதரவாளர்களுடன் கரூர் அழைத்து சென்றார்.

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் கரூர் தேசிய நெடுஞ்சாலையில் நாகம்பட்டி அருகே பாலம் உள்ளது. அந்த பாலம் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென்று நான்கு கார்களில் வந்த மர்ம நபர்கள் அவர்களது காரை சுற்றி வளைத்து வைத்து முன்பக்க கண்ணாடி மற்றும் பின் கண்ணாடிகள் மீது ஆசிட் வீசி, கார் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியதோடு, காரில் இருந்த திருவிகவை கடத்தி சென்றனர்.

    இந்த கடத்தல் சம்பவம் அந்த பகுதியில் பரப்பரபை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட வேடசந்தூர் துணை கண்காணிப்பாளர் துர்காதேவி மற்றும் ஆய்வாளர் பாலமுருகன் ஆகியோர் சம்பவ இடத்தில் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் தேர்தல் நடக்கும் தருணத்தில் கடத்தல் சம்பவம் நடைபெற்றிருப்பது பெரும் பரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    இது குறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறுகையில், இது போன்ற தாக்குதல் சம்பவம் நடத்தி எங்களுடைய வேட்பாளரை கடத்தி சென்றவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த தேர்தலை முறைப்படி நடத்த வேண்டும். மேலும் இந்த ஆசிட் வீசிய சம்பவம் மற்றும் கண்ணாடிகளை உடைத்த சம்பவம் மூலம் காரில் பயணம் செய்த இருவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன, என்றார்.

    இது தொடர்பாக காவல் துறையினர் அங்குள்ள சிசிடிவி கேமிரா பதிவுகளை வைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×